தொடர்க்கதை: தேவதையின் குறிப்புகள்: பாகம் 2

அப்பா கடைசிவரை கணினியில் தட்டச்சு செய்வதைப் பற்றி அக்கறை காட்டவில்லை. அவருடைய நண்பர் எழுத்தாளர் சாமிநாதன் பழகிக் கொள்ள பலமுறை தூண்டினார். அப்பாவால் தாளில் எழுதி தபாலில் அனுப்ப மட்டுமே இயன்றது. இதனால் சில பத்திரிகைகள், சந்தி போன்ற இதழ்கள்கூட அவருடைய படைப்புகளைப் பிரசுரிப்பதில் தாமதம் காட்டுவதாகச் சொல்லி அம்மாவிடம் புலம்பியதுண்டு.

அலமாரி முழுவதும் தேடினேன். அப்பா அடுக்கி வைத்திருந்த ஒவ்வொரு புத்தகங்களையும் எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். ஒவ்வொரு நூலைப் பற்றியும் சில குறிப்புகளைச் சிறிய தாளில் எழுதி நடுப்பக்கங்களில் வைத்திருந்தார். பெரும்பாலான நூல்களை அவர் வாசித்து முடித்ததற்கான அடையாளமாய் அந்தத் தாள்கள் உள்ளே இருந்தன. மயில் குட்டிப் போடுமா என்று அறிய பாடப்புத்தகங்களின் நடுப்பக்கத்தில் மயிலிறகை ஒளித்து வைக்கும் சிறுவர்களைப் போல அப்பா ஒவ்வொரு நூல்களைப் பற்றியும் தனது அபிப்பிராயங்களைப் பதுக்கி வைத்திருந்தார்.

“என்ன அத்த ஒரு கதைக்கூட அப்பா எழுதனத எங்கயும் வைக்கலயா?”

அத்தை தூங்கிப் போயிருந்தார். மிகவும் சத்தமாக ஒலித்த குறட்டை ஒலியே அவருடைய அசதியைக் காட்டிக் கொண்டிருந்தது. சன்னலுக்கு வெளியே பூச்சிகளின் இரைச்சல் அமைதியைத் துளையிட்டுக் கொண்டிருந்தது. மேல்மாடி வரைக்குமே உயர்ந்திருந்த தென்னை மரமும் அதனருகே மாமரங்களும் பின்னால் 7-8 வாழைமரங்களும் என ஒரு சிறிய காடு வீட்டுக்கு வெளியே ஜீவித்துக் கொண்டிருந்தது. அப்பாவிற்கு இயற்கை என்பது தன்னைத் தானே நோக்கும் ஓர் ஆத்ம சக்தி. பழைய லெபாய்மான் வீட்டில் பக்கத்திலேயே சிறிய காடு இருப்பதால் பல மணி நேரங்கள் அதனைப் பார்த்தப்படியே சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டிருப்பார். சட்டென எதையோ கண்டுபிடித்ததைப் போல அறைக்குள் ஓடி தாளைக் கையிலெடுத்து எதையோ எழுதத் துவங்கிவிடுவார். இதை நான் பல சமயங்களில் பார்த்திருக்கிறேன்.

அப்பா பார்க்கும் காட்டை நாங்களும் பார்த்ததுண்டு. வேலியை முட்டி மோதி திணறிக் கொண்டிருக்கும் காட்டுச் செடிகளைத் தாண்டி எதையுமே பார்க்க இயலவில்லை. அதற்கும் அப்பால் அப்பா எதையோ தன் வாழ்நாள் முழுவதும் கவனித்துக் கொண்டே இருந்திருக்கிறார். இப்பொழுது இந்த அறைக்கும் வெளியேயும் காட்டுப் பூச்சிகளின் சத்தம் நாலா பக்கமும் சூழ்ந்திருந்தது. பலகை சன்னலை இலேசாகத் திறந்துவிட்டேன். கொசு உள்ளே வராமல் இருக்க வலைக்கம்பி கட்டப்பட்டிருந்தன. குறுக்கே இருந்த இரும்புகளுக்கு வெளியே வெறும் இருள் மட்டும் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

ஒரு குவளை தேநீர் அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்திக்கப் போதுமானதாக இருக்கும் என்று நினைத்தேன். அத்தையும் இங்கே வந்துவிட்டார். வீடு ஓர் ஆழ்ந்த அமைதிக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. கீழே சென்றால் யார் பார்வையிலும் படாமல் தேநீரைச் சுயமாகத் தயாரித்துக் கொள்ள முடியுமா என்ற தயக்கமும் சேர்ந்து கொண்டது. வேறு வழியில்லை உடனே தேநீர் தேவை என்றே தோன்றியது. அப்பாவிடமிருந்து சிறுவயதிலேயே தொற்றிக் கொண்ட பழக்கம் இது.

“பொம்பள பிள்ள இந்த வயசுலே தேத்தண்ணீ குடிக்கற?” என்று அம்மா கடிந்துகொள்ளாத நாளே இல்லை. மறுநாள் வேறு வார்த்தைகளில் திட்டுவார். ஆனால், கருத்து என்னவோ ஒன்றுத்தான். பிள்ளைகள் அதுவும் பெண்பிள்ளைகள் தேநீர் அருந்தக்கூடாது எனும் கருத்தினை அம்மாவிற்கு யார் சொல்லிக் கொடுத்திருப்பார்? எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. தேநீர் கொடுக்கும் சுவையைவிட அது உருவாக்கும் ஒரு மன அமைதி வேறு எங்கும் கிடைக்காது என இன்றும் நான் பிடிப்புடன் தான் இருக்கின்றேன். மெல்ல சத்தமிடாமல் படிக்கட்டில் இறங்கினேன். பலகை படிக்கட்டு என்பதால் இலேசாக முனகியது. பழைய பலகை வீடு. வாடகை எப்படியும் 150 வெள்ளிக்குள்தான் இருக்கும். அதைக் கொடுக்க அப்பா எப்படியெல்லாம் சமாளித்திருப்பார் என்று நினைக்கும்போது மனம் பதற்றம் கொள்கிறது.

வாசலில் பினாங்கு சித்தி யாரிடமோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. சாவு வீட்டில் சத்தமாகப் பேசவோ சிரிக்கவோ கூடாது. அதனால்தான் சித்தி குரலைத் தாழ்த்திப் பேச முயன்று கொண்டிருந்தார். பேரமைதியின் முன் எத்தனை ஆழமாக குரலைத் தாழ்த்தினாலும் அதன் சத்தம் துல்லியமாக பெருகி வரும்.

“இந்த ஓடிபோன கழுதைக்கு இப்பத்தான் புத்தி வந்துச்சாம்? எங்க எந்த வெள்ளக்காரன்? அவ்ள தைரியம் இருந்தா வந்துருக்க வேண்டியதுதான? நம்ம தமிழாளுல என்ன பையனுங்களா இல்ல…?”

“ஒரு பிள்ளையாச்சு… விடறீயா?”

எதிரில் இருந்த ஓர் ஆணின் குரல் அவரைச் சமாதானப்படுத்துவதைப் போன்று மெல்ல ஒலித்தது. சித்தப்பாவின் குரல் அல்லது பாண்டியன் மாமாவின் குரலாக இருக்கக்கூடும். குரல்கள் அனைத்தும் எனக்கு ஒன்று போலவே கேட்கின்றன. யாருடையது என்று பிரித்தறிய முடியவில்லை. அல்லது அனைத்துக் குரல்களும் என்னை நோக்கி பாய்வதைப் போல தயாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் போலவும் சூழ்ந்து கெக்கெரித்துக் கொண்டிருந்தன. தலைவலி அழுத்தியது. குழாய் தண்ணீரை அள்ளி முகத்தில் தெளித்துவிட்டுத் தேநீர் கலக்க ஆய்த்தமானேன். நான் அங்கு இருப்பதைக் காட்டிவிடவே இரண்டு மூன்றுமுறை சத்தமாக இரும்பினேன்.

“அப்பன் கஸ்டம் தெரிஞ்சிருந்தா அது அதுக்குப் புத்தி இருந்திருக்கும்…”

நான் இருப்பதை அறிந்ததும் சித்தியின் குரல் உயர்ந்தது. அவருடைய குரலில் தடுமாற்றம் இல்லை. நிதானமாக வார்த்தைகளைக் கூர்மையாக்கி வெளிப்படுத்தினார். அது ஆயுதமென தெரியும். வார்த்தைகளை ஆயுதமாகக் கொண்டவர்கள் அதனைப் பிரயோகிக்கும்போது சற்றும் தடுமாறமாட்டார்கள். பினாங்கு சித்திக்கு அதெல்லாம் பழக்கப்பட்ட அரசியல் வியூகம். எனக்குக் கவனம் அவர் மீதில்லை. இன்றொரு இரவு இதனைச் சமாளித்துவிட்டால் நாளை இவர்களில் பெரும்பாலோர் இருக்க மாட்டார்கள். சித்தி அவர் மனதிலுள்ளத்தை என்னிடம் நேரில் கொட்டும் வரை ஓயமாட்டார். அதனால்தான் இன்னும் வீட்டிற்குத் திரும்பாமல் காத்திருக்கிறார். நான் தேநீர் தயாரானதும் சட்டென மீண்டும் மேலே ஏறிவிட்டேன். சித்தி அதனை எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்.

அப்பாவின் மேசையின் மீது தேநீர் குவளையை வைத்துவிட்டு அவருடைய அலமாரியின் மேல் அடுக்கில் மீண்டும் தேடலைத் துவங்கினேன். சில கோப்புகள் இருந்தன. அநேகமாக அவர் எழுதிய கதைகளின் பிரதிகளை இதனுள் வைத்திருக்கக்கூடும். அதில் ஒரு பத்து அல்லது எட்டுக் கதைகள் கிடைத்தாலும் போதும் என்றது மனம்.

“நந்தினி அப்பாவோட கத ஞாயிறு ஓசைல வந்திருக்கு… படிக்கிறீயா?”

அப்பா அன்று காய்ச்சலில் இருந்ததால். கேட்கும்போதே அவருடைய உடல் நடுக்கத்தில்தான் இருந்தது. இப்படி எப்பொழுதுதாவது அப்பா அவருடைய கதைகளைப் படிக்கச் சொல்லிக் கேட்பார். பத்திரிகையில் ஒரு பக்கத்திற்கு நீண்டிருக்கும் சிறிய எழுத்து வரிகளைப் பார்க்கும்போதே எனக்குத் தலைச்சுற்றல் எழும். தம் கட்டி படித்து முடிக்கும்போது அப்பாவின் கதைகளின் ஒரு வரிக்கூட என் நினைவில் இருக்காது.

“அந்தக் கடைசி முடிவுலத்தான் மொத்த ஆன்மாவே இருக்கு… இது எத்தன பேருக்குத் தெரியுமோ? எங்க செய்தி எங்க கருத்துன்னு கேட்பானுங்க…” எனச் சொல்லிக் கொண்டே பத்திரிகையிலுள்ள கதையைத் தனியாகக் கத்தரித்துக் கொண்டிருந்தார்.

அப்படியென்றால் அந்தக் கதைகள் கொண்ட பக்கங்கள் இந்தக் கோப்பில் இருக்க வாய்ப்புண்டு. எழுத்தாளர்கள் தம் படைப்புகள் வந்த பத்திரிகை பக்கங்களை வெட்டித் தனியாகச் சேகரித்து வைப்பத்துண்டு. அப்பழக்கம் அப்பாவிற்கும் இருந்தது. கோப்புகளை அலசினேன். அப்பாவின் மருந்து செலவுக்கான சில ரிசீதுகள், புத்தகங்கள் வாங்கிய ரிசீதுகள் என்று சில தாள்கள் மட்டுமே இருந்தன. அடுத்தடுத்த கோப்புகளைத் தேடினேன். அவருக்கு வந்த வாசகர் கடிதங்கள் சிலவற்றை சேகரித்து இரப்பர் நெகிழியில் கட்டி வைத்திருந்தார். மனம் சற்றே சலனமடைந்தது. என்னவாக இருக்கும்? அப்பாவிற்கு என்ன எழுதியிருப்பார்கள்? அந்த மணிமாறன் ஏதாவது எழுதி அப்பாவைத் திட்டியிருப்பாரா?

முதல் ஒரு கடிதம் அப்பாவிற்கு நான்காண்டுகளுக்கு முன் வந்தது.

வாசகர் கடிதம் 1

அன்பின் எழுத்தாளர் அப்புராஜ்,

வானொலியில் ஒலிப்பரப்பாகிய உங்களுடைய அவலம் சிறுகதையைக் கேட்டேன். நீங்கள் ஒருவேளை மூத்த எழுத்தாளராக இருக்கக்கூடும் என்பதை உங்களின் எழுத்தில் தெரிந்த பழைமையின் மூலம் உணர முடிந்தது. தங்களின் இல்ல முகவரியை நண்பர் ஒருவர் மூலம் கிடைக்கப் பெற்றேன். வானொலியில் அவலம் சிறுகதையின் அவலநிலையைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. தயவு செய்து இனி சிறுகதை எழுதுவதாகச் சொல்லி எங்களை இம்சிக்க வேண்டாம். அடுத்தமுறை கேட்க நேர்ந்தால் வானொலிக்குப் புகார் கடிதம் அனுப்பவும் தயங்க மாட்டேன்.

இக்கண்

மணிமாறன்.

மீண்டும் மணிமாறன் என்கிற பெயர். அதன் மீது அதீதமான கோபம் உண்டானது. இக்கடிதத்தைப் படித்த அப்பாவின் மனம் எத்தனை வேதனைக்குள்ளாகியிருக்கும்? மனம் பதறியது. அடுத்த கடிதத்தைப் பிரித்து படிக்க மனமில்லை. கைகள் நடுங்கின. ஒருவர் தன் எழுத்தை மட்டுமே ஆத்மார்த்தமாக நேசிக்கும்போது அவரை அதைக் கொண்டே தாழ்த்துவது எத்தனை கொடிய செயல் என்று பரித்தவித்தேன்.

வாசகர் கடிதம் 2

அன்புள்ள பாசமிகு எழுத்தாளர் அப்புராஜ்க்கு,

நான் யாரென்று நீங்கள் இந்நேரம் விசாரிக்கவோ தேடவோ துவங்கியிருப்பீர்கள் என்று புரிகிறது. எவ்வளவு தேடினாலும் நீங்கள் என்னைத் தேடிக் கண்டறிவதற்குள் உங்கள் ஆயுளின் விளிம்பில் இருப்பீர்கள். மரணத்தருவாயில் ஏன் இந்தத் தேடல் என்று உங்களின் கடைசி மூச்சும் உங்களை நொந்து கொள்ளும். அவ்வேதனை உங்களுக்குத் தேவையா? ஆகையால், அதை விட்டுவிட்டு உங்கள் எழுத்தைத் திருத்த முற்படுங்கள். சென்ற வாரம் தினமலரில் உங்கள் சிறுகதை ‘பாட்டி வீடு’ படித்தேன். கதையைப் புரியும்படி எழுத வேண்டும் என்பதில் உங்களுக்கு ஏதும் மனக்குழப்பமா? அல்லது போதையில் இருக்கும்போதுதான் எழுதுவீர்களா? ஏன் இத்தனை குழப்பநிலை? எழுதும்போது கை தடுமாறுகிறதா? அல்லது மூப்பின் வதையா? கை நடுங்கினால் பிறகேன் நீ எழுதுகிறாய்? மீண்டும் சொல்கிறேன், அடுத்து நீ என்ன எழுதினாலும் அது எனக்குப் பிடிக்கவில்லையெனில் என் கடிதம் உன்னைத் தேடி வரும்; அதில் இப்பொழுதுள்ள மரியாதை குறைந்திருக்க வாய்ப்புண்டு.

இக்கண்

மணிமாறன்.

கண்ணீரைத் துடைத்துவிட்டு இன்னொரு மிடறு தேநீரை அருந்தி உள்ளுக்குள் கொப்பளித்துக் கொண்டிருந்த கோபத்தை அடக்க முயன்றேன். அப்பாவின் கடந்த நான்கு வருடத்தில் அவரைப் பின் தொடர்ந்து அவருடைய படைப்பு மனத்தை வேறறுத்த அந்த மணிமாறன் யாரென்ற கேள்வி எனக்குள்ளும் அதீதமாகி கொண்டிருந்தது. அரூபமாக மட்டுமே இருக்கும் பெயரைக் கொண்டு எங்கணம் தேடுவது? மூன்றாவது வாசகர் கடிதத்தைப் பிரித்தேன்.

அன்பின் மூத்த எழுத்தாளர் அப்புராஜ் அவர்களுக்கு,

சந்தி இதழ் நான் படிக்க மாட்டேன் என்று நினைத்துவிட்டீர்களோ? ஆகையால் உங்களின் கதைகளிலே மிகவும் மோசமான ஒரு கதையை அவ்விதழில் பிரசுரித்துள்ளீர்கள். எனக்கு ஒரு கேள்வி மட்டும்தான். உங்கள் சிறுகதை எப்படி இருந்தாலும் உங்களுக்காக அதனைப் பிரசுரிக்க இந்த இதழ்களும் பத்திரிகைகளும் எப்படி இவ்வளவும் சலூகைகள் கொடுக்கிறார்கள்? நீங்கள் மூத்த எழுத்தாளர் என்பதால் உங்கள் மீது அவர்களுக்குப் பரிதாபமாக இருக்கலாமோ? இருக்கலாம், பாவம் போக வேண்டிய வயது, ஓர் எழுத்தாளனை வாழ வைத்த பெருமை தங்களைச் சேரட்டும் என்று நினைத்துவிட்டார்களோ? எனது சில வாசகர் கடிதங்களைப் பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டேன். என் பெயர், எந்த ஊர் என்று மட்டும் எழுதி அனுப்பியுள்ளேன். நான் யாரென்று அவர்களுக்கு முக்கியமல்ல. என் கடிதம் பரப்பரப்பை உண்டாக்கும் என்பதால் நிச்சயம் பிரசுரிக்கப்படும். ஆகவே, விரைவில் உன் எழுத்தின் இயலாமையைக் கிழித்தெறிகிறேன். காத்திருக்கவும்.

இக்கண்

மணிமாறன்.

அதற்கு மேல் சமாதானம் கொள்ள இயலவில்லை. இன்னும் மிச்சமிருந்த சில வாசகர் கடிதங்களும் அவன் அனுப்பியதாகத்தான் இருக்கும். இனி மேற்கொண்டு அதனைப் படித்தால் இருதயம் வெடித்துவிடக்கூடும் என்பதால் மீண்டும் கோப்பிற்குள்ளே வைத்துவிட்டேன். குவளையில் பாதி தேநீர் சூடு ஆறிப்போய் இருந்தது. மனம் சூடு தாளாமல் கொதித்துக் கொண்டிருந்தது. நாக்கு எப்பேற்பட்ட ஆயுதம் என்று அடிமனத்தில் சிந்தனைகள் எழுந்து கொண்டிருந்தன. அப்பாவின் கதைகள் மீதிருந்த ஆர்வம் குறைந்து அந்த மணிமாறனின் மீது முழு கோபமும் குவிந்தபடியே இருந்தன.

மெத்தையில் படுத்திருந்த அத்தை சட்டென எழுந்து எதையோ நினைத்து அழத் துவங்கினார்.

  • தொடரும்

கே.பாலமுருகன்

பாகம் 1ஐ வாசிக்க:https://balamurugan.org/2021/01/12/தொடர்க்கதை-தேவதைகளின்-க/

About The Author