விமர்சன யுகத்தில் வாழ்கிறோம்- தொடர் 5 : படைப்பும் விமர்சனமும் வளர்வது வாசிப்பிலேயே)

 

பெரும்பான்மையானவர்களுக்கு எதற்கு வாசிக்க வேண்டும் என்கிற கேள்வி காலம் முழுவதும் நாவின் நுனியிலும் மனத்தின் ஆழத்திலும் தொக்கிக் கிடக்கிறது. விமர்சனம் என்பதன் அவசியத்தைப் பேசிக் கொண்டிருக்கும் நாம் வாசிப்பின் தேவையை முன்வைப்பதன் மூலம் விமர்சனத்தை மேலும் கூர்மையாக்க முடியும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டியதாகிறது. விமர்சிப்பவர்களுக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. ஒன்று, படைப்பைச் செம்மைப்படுத்த வேண்டும் என்பதும் மற்றொன்று வாசகர்களின் புரிதலுக்குள் புதிய சாத்தியபாடுகளைத் திறந்துவிடுவதற்கும் ஆகும். இவையிரண்டு நோக்கமும் இணையும் புள்ளியிலிருந்து ஓர் இலக்கிய உச்சம் தோன்றுகிறது. படைப்பும் விமர்சனமும் சேர்ந்து வளர்ந்தால் மட்டுமே அங்கு வாசிப்பின் தேவை முக்கியமானதாகின்றது.

ஏன் வாசிக்க வேண்டும்?

இக்கேள்வியை யார் கேட்டாலும் உடனே எனக்கு இன்னொரு கேள்வி மனத்தில் உதிக்கும். ஏன் சுவாசிக்க வேண்டும்? உயிர்வாழ்வதற்கான ஓர் அனுபவமே சுவாசிப்பு என ஓஷோ சொல்வதைப் போல இலக்கியம் என்பது வாழ்க்கையை அனுபவமாக ஆக்க முயலும் கலையாகும். வாசிப்பின் வழி வாழ்க்கையை அனுபவப்பூர்வமாக உணரும் ஒரு வாய்ப்பை வாசகன் பெற்றுக் கொண்டே இருக்கிறான். அதற்கான சாத்தியங்களை உள்ளடக்கிப் பெற்றிருப்பதுதான் நல்ல இலக்கியமும்கூட. விமர்சனமும் இதனை முன்வைத்தே தன் தேடுதல் வேட்டையைத் துவங்குகிறது.

பாரதி உலக இலக்கியங்களின் எல்லையற்ற வெளிகளுக்குள் இருந்து  எழுதி கொண்டிருந்தனாலேயே தமிழின் முதல் நவீன படைப்பாளன் என தன் படைப்புகளினூடே அறியப்படுகிறார். உலக இலக்கியம் என ஒன்று எப்பொழுது சாத்தியமானது? அத்தகைய புரிதல் பாரதிக்கு எப்பொழுது எழுந்தது? 18ஆம் நூற்றாண்டில் உலகத்தின் எல்லைகள் உடைந்து, எல்லை கோட்பாடற்ற உலகவெளி ஒன்று உருவான காலத்தில், மெல்ல மெல்ல காலணியாதிக்கம் பெருகத் துவங்கியது. அப்பொழுதுதான் மொழிப்பெயர்ப்பு இலக்கியங்கள் பரவின. அதன் வழியே உலக இலக்கியம் என்கிற சிந்தனை வளர்ந்தது. அமெரிக்கக் குடிமகனுக்கும் இந்தியக் குடிமகனுக்கும் வாழ்வில் நிகழும் அனுபவங்கள் இலக்கியங்களின் வழி அறிந்துகொள்ள வாய்ப்புகள் பெருகின.

அனுபவங்கள் என்பது ஒரு வட்டத்திலிருந்து சுழன்று பெரும்திரளாகி எல்லைகளைத் தாண்டி வர ஆரம்பித்தன. இவற்றால் இரண்டு நுட்பமான செயல்முறைகள் பலரால் கற்றுக்கொள்ளப்பட்டன. ஒன்று நம் சொந்த வாழ்க்கையை எப்படி இலக்கியத்தில் அனுபவப்பூர்வமான கலையாக்குவது என்பதையும் ஒரு பொதுவான வாழ்க்கை அனுபவம் எத்தகைய பாதிப்புகளைக் கொடுக்கும் எனும் கற்றலையும் உலக இலக்கியத்தின் வருகைக்குப் பிறகு எல்லோரின் பிரக்ஞைக்குள்ளும் படிந்தன. இந்தச் சிந்தனையோடு பாரதி பலவிதமான அடைப்புகளை உடைத்துக் கொண்டு எழுதியதால் மட்டுமே அவருடைய படைப்புகள் இன்றும் காலத்தைத் தாண்டி நிற்கும் படைப்பாகப் போற்றப்படுகின்றன.

இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் எத்தனை படைப்பாளிகள் ஒரு நல்ல வாசகர்களாக இருக்கிறார்கள் என்பதை அவர்களின் படைப்புகளே காட்டிக் கொடுக்கும். கூர்மையான விமர்சனத்தின் வழியே அவற்றை அறிய முடியும். உலக இலக்கிய வாசிப்பு நம் அனுபவத்தை விரிவாக்குகிறது. வாசிப்பினூடாக, வாழ்ந்து அறியும் வாழ்க்கை அனுபவத்தைவிட வாசித்தறிந்து கொள்ளும் வாழ்க்கை அனுபவம் பெருகுகிறது; மேலும் நம் கலைப்பார்வையை வடிவமைக்கிறது.

நமது விரிந்தப்பட்ட வாசிப்பு என்பது வாழ்க்கையின் மீது வைக்கப்படும் ஒரு பூதக்கண்ணாடியைப் போன்று நுட்பமான மன அலசலை உண்டாக்குகிறது. வாசிப்பு, இருட்டறைக்குள் சட்டென நம் கையில் அகப்படும் கைவிளக்காகிறது. நாமே அதனை இயக்கி நமக்கு வேண்டியதைத் தேடிக்கொள்ளும் அனுபவப்பூர்வமான கலையைக் கற்றுக் கொடுக்கிறது. ஆகவே, வாசிப்பின் தேவையை அறிந்துகொண்ட சமூகத்தில் படைக்கப்படும் படைப்புகளின் மீது வைக்கப்படும் விமர்சனமும் விமர்சகர்களும் நல்ல வாசகரகளாக இருக்க வேண்டியக் கட்டாயம் நேர்கிறது. குறிப்பாக, விமர்சகர்கள் உலக இலக்கிய வாசிப்பில் தன்னை ஈடுபடுத்தியவர்களாக இருக்க வேண்டிய அவசியமும் கருத்தில் கொள்ள வேண்டும். வாசிப்பு, படைப்பையும் வளர்க்கும்; விமர்சன அறிவையும் கூர்மைப்படுத்தும்.

 

  • கே.பாலமுருகன்

About The Author