மெலாந்தி பள்ளத்தாக்கு: தொடர்க்கதை: பாகம் 2
முதல் பாகம் படிக்காதவர்கள் பின்வரும் லின்கை அழுத்தி படித்துவிட்டு இரண்டாம் பாகத்தை வாசிக்கவும்.
முதல் பாகம்: https://balamurugan.org/2020/04/03/தொடர்க்கதை-பாகம்-1-மெலாந்/
பாகம் 2
சற்று அதிர்ந்துபோன குச்சிமிட்டாய் சரவணனை ஆழ்ந்து நோக்கினான்.
“பாங்! நீங்க ரொம்ப சீரியஸ்னு நெனைச்சன். ஆனா நல்லா ஜோக் பண்றீங்க. ஏதோ சித்தர் மாதிரி பேசறீங்க?”
சரவணன் சோற்றுப் பருக்கைகளை எண்ணி எண்ணி எடுத்து உதட்டில் நிதானமாக வைத்துக் கொண்டே தூரத்தில் பேரமைதியுடன் தெரியும் பள்ளத்தாக்கைப் பார்த்தான்.
“பாங்… புருவத்துக்கு மேல செம்ம வெட்டுப் போல?”
குச்சிமிட்டாய் அப்படிக் கேட்டதும் அப்பொழுதுதான் ஞாபகம் வந்ததைப் போல புருவத்திற்கு மேல் உள்ள காயத்தின் வடுவைத் தடவினான் சரவணன்.
“இது ரெண்டு வருசத்துக்கு முன்ன நடந்த ஒரு கேங் சண்ட குச்சி. ஜொகூர்ல ஒருத்தன் தனியா சிக்கிட்டான். இறங்கி அடிச்சோம். நாங்க ஒரு மூனு பேரு. ஆனா, அவனோட ஆளுங்க அங்கத்தான் லோரோங்ல கட்டிய கைமாத்திட்டு வந்துட்டானுங்க. ஏழு பேர்கிட்ட. கூட இருந்த ரெண்டு பேரும் ஸ்போர்ட் அவுட். தனியா நிண்டு சமாளிச்சன் குச்சி. எத்தன மண்டைய பொளந்தன் தெரியல…”
சரவணன் அதனைச் சொல்லி முடிக்கும்வரை கண்கள் நிதானமாகவே இருந்தன. பள்ளத்தாக்கின் விளிம்பில் சுற்றி வளைத்திருந்த கடம்ப மரங்களில் அமர்ந்திருந்த கணகில்லா பறவைகள் சட்டென எங்கோ பறந்து சென்றன.
“குச்சி! மரம் பறக்குமா?”
“பாங்… அடுத்தவன் மண்டையத்தானே பொளந்தீங்க? ஏன் இப்படிக் கேக்குறீங்க?”
“பறக்கும் குச்சி… நீ பாக்கறது இல்ல…”
“அதை விடுங்க பாங். ஆனா ஒத்த ஆளா நிண்டு அத்தன பேரையும் அடிச்சி நொருக்கிட்டீங்க…”
குச்சிமிட்டாய் கண்கள் விரிந்து ஆர்வம் பொங்க சரவணின் கதையைக் கேட்கத் தூண்டினான்.
“இல்ல குச்சி. அப்படிலாம் செய்ய இது சினிமா இல்ல. முதுகுல 17 தையலு. மண்டைல ரெட்டு வெட்டு. முகத்துல… தோ இங்க ஒரு வெட்டு… மூனு வாரம் ஆஸ்பித்தல். அப்புறம்தான் பொழைச்சி வந்தன்…”
முகத்தில் தெரிந்த வெட்டுக் காயத்திலிருந்து இரத்தம் உறைந்து வருவதைப் போல சட்டென சரவணனுக்கு ஒரு பிரமை. துணியை எடுத்து வடுவுள்ள இடத்தைத் துடைத்தான்.
“இரத்தம்…குச்சி. ஒழுகுது…”
“ஹா!ஹா! என்ன பாங்…? மண்ட ஏதும் கொழம்பிருச்சா… இந்தக் காயம் பட்டு ரெண்டு வருசம் ஆச்சி…”
குச்சிமிட்டாய் வாயைத் தன் வலது கையால் பொத்திக் கொண்டு சிரித்தான். அவனுடைய முன் பற்கள் தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.
“குச்சி! இது காயம் இல்ல… இரத்தம் நிக்காது. ஒழுவிகிட்டே இருக்கு. அன்னாடம் துடைச்சிக்கிட்டே இருக்கேன்… உடம்பெல்லாம் இரத்தம் குச்சி…”
சரவணன் சட்டென பதற்றத்துடன் சாப்பாட்டுத் தட்டை ஓங்கித் தரையில் அடித்துவிட்டுச் சுவரோடு போய் உட்கார்ந்து கொண்டான்.
“பாங்! என்ன ஆச்சு?”
“குச்சி! குச்சி!…”
“பாங்! கொஞ்சம் நிதானமா இருங்க. ரிலேக் பண்ணுங்க. ஒன்னும் இல்ல. கொஞ்சம் தண்ணீ குடிங்க…”
குச்சிமிட்டாய் தரையில் இருந்த நீர்ப்புட்டியைச் சரவணனிடம் நீட்டினான்.
“குச்சி! என்னோட சாவு வெளில நிக்குது குச்சி. நீ சொன்னீய… எல்லாருக்கும் ஒரு சாவு வெளில காத்திருக்கு. அதை நான் பார்த்துட்டன் குச்சி. நகம்லாம் நீட்டா இருக்கு. வாயில இரத்தம் ஒழுகுது. அது என்னோட இரத்தம் குச்சி!”
சரவணன் அழத் துவங்கியதும் குச்சிமிட்டாய்க்குப் பதற்றம் கூடியது. இதுவரை இங்கு வந்து தங்கியவர்கள் போதையிலும் கோபத்திலும் மட்டும் இருப்பதைப் பார்த்த குச்சிமிட்டாய்க்குச் சரவணனின் குணாதிசயம் ஆச்சரியப்பட வைத்தது.
“பாங்! நான் ஒரு கிறுக்கன். சும்மா சொன்னன். சாவுலாம் அவ்ள சீக்கிரம் வராது. நம்மலாம் வீரப்பரம்பரை பாங்!”
சரவணன் சடாரென பயப்படுவதை நிறுத்திவிட்டுக் குச்சிமிட்டாயைப் பார்த்தான்.
“வீரமா? எதுடா வீரம்? தோ… பாரு போலிஸ்க்குப் பயந்துகிட்டு வந்து ஒளிஞ்சிருக்கனே இதுதான் உனக்கு வீரமா…?”
“பாங். இங்க வந்து ஒளிஞ்சிட்டுப் போனவங்க எல்லாம் பெரிய தலைங்க…”
“போடா டே! அதுல நாலு பேரு செத்துட்டானுங்க. ஒருத்தன் வீட்டுல கை கால் வெளங்காம மொடம்மா இருக்கான். தலைங்களாம் தலைங்க…”
குச்சிமிட்டாய்க்குச் சரவணின் நடவடிக்கைகளில் அதிருப்தி உண்டாக மெல்ல அவ்விடத்தை விட்டு விலக எத்தனித்தான்.
“சரி பாங். நீங்க உடம்ப பார்த்துக்குங்க. நான் நைட்டு சாப்பாட்டுக்கு ரெடி செஞ்சிட்டு வரேன்…”
தரையில் இடது கையை ஊன்றியவாறே எழ முயன்ற குச்சிமிட்டாயின் மீது சரவணன் அருகில் இருந்த நாற்காலியைத் தூக்கி அடித்தான். கைகளில் பலத்த அடியுடன் குச்சிமிட்டாய் தரையில் சுருண்டு விழுந்தான்.
“குச்சி! தப்பிக்கப் பார்க்கற… தப்பு குச்சி! நான் சொல்றதைல்லாம் முழுசா கேட்டுட்டுப் போ. எனக்குப் பயமா இருக்கு குச்சி. வீடுல்லாம் ஒரே இரத்தமா இருக்கு. நான் சொன்னன்ல இன்னிக்கு நான் செத்துருவன்னு. நான் செத்துட்டப் பிறகு நீ வெளில போ. சரியா?”
குச்சிமிட்டாய் அரைமயக்கத்தில் இருந்தான். சரவணன் எழுந்து சன்னல் வழியாக வெளியே பார்க்கும் காட்சி மங்களாகத் தெரிந்தது.
“குச்சி! என் சாவு வெளில நிக்குது. பார்த்தீயா விதி எவ்ள பெரிய பள்ளத்தாக்குன்னு?”
குச்சிக்கு மயக்கம் மேலும் கண்களை மறைக்க துவங்கியது. கண்கள் மூடும் முன் அவனும் சரவணனும் மட்டுமே இருக்கும் அவ்வீட்டின் அறையினோரம் ஒரு சிறுமியின் கால்கள் வந்து நிற்பதும தெரிகின்றது.
-தொடரும்
ஆக்கம்: கே.பாலமுருகன்
குறிப்பு: இத்தொடர் சிறுவர்களுக்கானது அல்ல; இருப்பினும் வாசிக்க நினைப்பவர்கள் பெற்றோர்களின் வழிகாட்டுதலுடன் வாசிக்கலாம்.
ஈஸ்வரி குணசேகரன்
வாசித்தேன். ஆர்வம் மேலிடுகிறது.