மெலாந்தி பள்ளத்தாக்கு- தொடர்க்கதை: பாகம் 3

பாகம் 3

குறிப்பு: இத்தொடர் சிறுவர்களுக்கானது அல்ல; இருப்பினும் வாசிக்க நினைப்பவர்கள் பெற்றோர்களின் வழிகாட்டுதலுடன் வாசிக்கலாம்.

 

சரவணன் மெலாந்தி பள்ளத்தாக்கு வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்.

 

தனசேகர் கனவுந்து மெலாந்தியைவிட்டு கோலாலம்பூருக்குப் போகும் முன் ஐயாவு கடையில் ஐந்து நிமிடம் நிற்கும். இரண்டு வீடுகளை உடைத்துச் செய்யப்பட்டக் கடை என்பதால் வெளியேயும் உள்ளேயும் ஆள்கள் உட்காரும்படியான அமைப்பில் வசதியாக இருக்கும்.

ஐயாவுக்கு ஒரு கால் இல்லை. வேறு வேலைக்கு வழியில்லாமல் பலநாள் வெறுமையுற்று எடுத்த முடிவுதான் இந்தச் சாப்பாட்டுக் கடை. மெலாந்தி மலைக்கு ஏறும் பாதையில் இரண்டாவது கிலோ மீட்டரிலுள்ள சாலையோரம் போடப்பட்டிருக்கும் கடை. பெரும்பாலும் மேலும் கீழும் போய்வரும் கனவுந்து ஓட்டுனர்கள்தான் ஐயாவுக்கு வாடிக்கையாளர்கள்.

கடையின் உட்பகுதியில் ஓடிக் கொண்டிருந்த சுவர் காற்றாடியின் சத்தம் போக ஒரு சில சீனர்களின் பேச்சு சத்தமும் சேர்ந்து கொண்டது. தனசேகர் உள்ளே வந்து ஐந்து நிமிடத்தில் குச்சிமிட்டாய் வந்து சேர்ந்தான்.

தனசேகர் மெலாந்திக்கு மேலே ஏறும் முன்பே குச்சிமிட்டாய் வீட்டிற்கு முன் சத்தமான ஹார்ன் ஒன்றை எழுப்பிவிட்டான். அப்படி ஹார்ன் சத்தம் எழுப்பப்பட்டால் குச்சிமிட்டாய்க்கு விவரம் புரிந்துவிடும். அடுத்த ஐந்து நிமிடத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதும் அவனுக்குப் புரியும்.

குச்சிமிட்டாய் ஏதும் நடவாததைப் போல வழக்கமாக அங்கிருந்த சிலரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே கடைக்குள் நுழைந்தான். ஐயாவு கடையைச் சுற்றி நடக்கும் எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டான். சில நேரங்களில் கடையில் ஏற்படும் சண்டைகளை மட்டும் தீர்த்து வைக்க இரண்டு பேரை வேலைக்கு வைத்துள்ளான்.

பெரும்பாலும் போதையில் இருப்பவர்களால்தான் பெரும் பரப்பரப்பு உண்டாகும். கனவுந்து ஓட்டுனர்கள் பயணத்திற்குப் பயந்து மது அருந்துவதை விரும்பமாட்டார்கள். மெலாந்தியில் உள்ள ஓட்டுனர்கள் மட்டும் ஜொகூர், கோலாலம்பூர் நடைகள் முடிந்து வீடு திரும்பும்போது பியர்களை வாங்கிக் கொண்டு போவார்கள்; சிலர் அங்கேயே உட்கார்ந்து குடித்துவிட்டு மாமா, மச்சினன் யாருடைய உதவியுடன் மலைக்கு ஏறிவிடுவார்கள்.

ஐயாவு கடையின் உட்பகுதியில் பொறுத்தியிருந்த மஞ்சள் விளக்குத் தலைக்கு மேல் ஆடிக் கொண்டிருந்தது. இருளத் துவங்குதற்கான அறிகுறியாய்  விளக்கைச் சுற்றி அல்லாடிக் கொண்டிருக்கும் ஈசல் ஒன்றை தனசேகர் கவனித்தான்.

“சொல்லு தனா! என்ன புது வேலையா?”

குச்சிமிட்டாய் தனசேகர் அமர்ந்திருந்த மேசையினருகே இருந்த இன்னொரு நாற்காலியில் யதார்த்தமாக அமர்ந்தான்.

“உனக்கு ஏதும் வேலை இல்லைன்னா எனக்குப் போன் போட்டுக் கேட்காத? புரியுதா? ஏதாச்சம் இருந்தா வழக்கமா நான் வர்ற மாதிரி வருவன். போன்லாம் இல்ல. அது செம்ம ஆபத்து. புரியுதா?”

“சரிப்பா. கோச்சிக்காத. கைக்குக் காசு வேணும்ல. காஞ்சி போச்சு. அதான்…”

“குச்சி! என்ன பீரா?”

ஐயாவு உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து குச்சிமிட்டாயைப் பார்த்துக் கத்தினான்.

“அண்ண. அதுலாம் ஒன்னும் வேணாம். ஒரு தே கோசோங் போதும்…”

அவர்கள் அமர்ந்திருந்த மேசைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த விளக்கைச் சுற்றி இப்பொழுது ஈசல்கள் மெல்ல பெருகத் துவங்கின.

“சரி! இன்னும் 14 நாளு. கணக்கு வச்சுக்கோ. பெரிய தல. மெலாந்தி வீட்டை ரெடி பண்ணிரு. சாவி உன்கிட்ட மட்டும்தான் இருக்கணும். வர்றவககிட்ட கொடுத்துராத. உன் கொண்ட்ரோல்ல இருக்கணும்… முன்ன ஒரு தடவ பண்ண கோளாற செஞ்சிறாத. அது எவ்ள பெரிய பெரச்சன ஆக்கிருச்சி தெரியுமா?”

“சரி தனா. கோச்சிக்காத. நானும் தனிக்கட்டத்தான. கம்பத்துல எவன் இருக்கான் எனக்கு. நான் பார்த்துக்கறன். இந்தத் தடவ எந்தத் தப்பும் நடக்காது. எத்தன நாளு இருப்பாக?”

ஐயாவுவின் அடியாள் ஒருவன் குச்சிமிட்டாய் கேட்ட தேநீரைக் கொண்டு வந்து மேசையில் வைத்துவிட்டு இருவரையும் உற்றுப் பார்த்துவிட்டு மீண்டும் சென்றுவிட்டான்.

கடைக்கு வெளியில் மேய்ந்து கொண்டிருந்துவிட்டு பசியுடன் கடைக்குள் நுழைந்து எதிரிலிருந்த மேசைக்கடியில் மல்லாந்து பார்த்தவாறே சொனாத்தா பூனை படுத்துக் கொண்டது. அந்த மேசையைச் சுற்றி அமைந்திருந்த சீனர்கள் ஏதாவது போடுவார்கள் என அதன் பார்வையில் இருந்த ஏக்கத்தைக் குச்சிமிட்டாய் இரசித்துக் கொண்டிருந்தான்.

“தனா! பசி கூட ஓர் அழகுத்தான் பார்த்தீயா? எப்படா நமக்கு எவனாவது ஏதாச்சம் போடுவான்னு காத்திருக்கறதுலயும் ஒரு சுகம் இருக்கு…”

“சரி, குச்சி. 14 நாள். சரியா 5.00 மணி. மெலாந்தி வீட்டுல ஒரு லோரி வரும்… இறக்கி விட்டுட்டுப் போய்ரும். அதோட உன்னோட பொறுப்பு. திரும்பவும் நான் தான் வருவன். எப்படியும் ஒரு மாசம் ஆகும்…”

“பெரிய கேஸ்தான் போல. அப்படின்னா சரி. நமக்கு அடுத்த ஐந்து மாசத்துக்கு வயிறு நெறையும். எவ்ள?”

“இந்தா… ஆறாயிரம் இருக்கு. டேய்! சொதப்பிறாத… பார்த்துக்க. முக்கியமான ஆளு…”

பணத்தை ஒரு நாளிதழில் சுற்றி தனசேகர் குச்சிமிட்டாயிடம் நீட்டினான். சீனர்கள் அமர்ந்திருந்த மேசைக்கடியில் இருந்த சொனாத்தா பூனைக்கு அப்பொழுதுதான் ஒரு மீன் முள் கிடைத்தது. எகிறி பாய்ந்து அதைக் கௌவ்வி பதுக்கிக் கொண்டது.

“ஒரு ஆளுத்தான வர்றான்?”

“குச்சி! கொஞ்சம் அடங்கு.  அவன் ஒருத்தன் தான் வர்றான். அவன் உனக்கே அப்பன். பெரிய கை. சொன்னா கேளு. பேசும்போது அடக்கமா பேசு. மண்டக் கிறுக்குப் பிடிச்சவன். பாத்துக்கோ…”

ஈசல்களின் சத்தம் கடைக்குள் ஆர்ப்பரிக்கத் துவங்கியது. ஐயாவுவின் அடியாள் ஒருவன் நாளிதழில் கருப்பெண்ணையை நனைத்து விளக்கிற்குக் கீழே கட்டிவிட்டுக் கொண்டிருந்தான். கடையின் உள்ளே இருந்த விளக்குகளின் நிழல்கள் காற்றில் கடையின் பலகை தடுப்புகளை உராய்ந்து கொண்டிருந்தன.

“கையோட பேரு என்ன?”

“சரா… சரவணன்…”

குச்சிமிட்டாய் தன்னுடைய ஆர்.சி மோட்டாரில் கடந்தாண்டு மெலாந்தி வீட்டில் நடந்ததை மீண்டும் அசைப்போட்டுக் கொண்டே இருண்டு கொண்டிருக்கும் தனது மெலாந்தி அத்தாஸ் கம்பத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தான்.

-தொடரும்

ஆக்கம்: கே.பாலமுருகன்

 

பாகம் 1-ஐ வாசிக்க:

 https://balamurugan.org/2020/04/03/தொடர்க்கதை-பாகம்-1-மெலாந்/

பாகம் 2-ஐ வாசிக்க:

https://balamurugan.org/2020/04/04/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த/

About The Author