மெலாந்தி பள்ளத்தாக்கு: தொடர்க்கதை: பாகம் 12
குறிப்பு: இப்பாகத்தில் சில வன்முறை காட்சிகள் இருப்பதால் சிறுவர்கள் வாசிப்பதைத் தவிர்த்தல் நலம். அல்லது பெற்றோர்கள் வாசித்து அதனைச் சுருக்கி சொல்லுதலும் சிறப்பு.
ஒரு வருடத்திற்கு முன்பு- மெலாந்தி வீடு
(குச்சிமிட்டாய் வீட்டின் வெளியில் இருக்கும்போது உள்ளே சத்தம் கேட்கிறது…தொடர்ச்சி)
பாகம் 12
ஆந்தையின் அலறல் ஒலி மெல்ல காட்டின் இசை போல மாறிக் கொண்டிருந்தது. குச்சிமிட்டாய் அதைக் கேட்டுப் பழகினான். கனவுந்து ஓட்டுநரின் மனைவியின் முகமே மீண்டும் மனத்தில் நிழலாடிக் கொண்டிருந்தது. உருவாக்கி அழித்து மீண்டும் உருவாக்கிப் போராடிக் கொண்டிருந்தான்.
‘குச்சி… எதுக்கு இந்த உதவி? இந்த நேரத்துல… எலி சும்மாவ ஓடும்…?’
அவனுக்குள்ளே கேள்விக் கேட்டுக் கொண்டு புரண்டு வீட்டின் முன்கதவைப் பார்த்தவாறு படுத்தான். வலது காது தரையோடு அழுந்தியிருந்தது. தரையின் குளிர்ச்சி தலைவரை ஏறிக் கொண்டிருந்தது.
மீண்டும் அதே நடக்கும் சத்தம் திடீரென சத்தமாகவும் ஓடுவதைப் போலவும் கேட்டுக் கொண்டிருந்தது. குச்சிமிட்டாய்க்குச் சட்டென கிளி பிடித்துக் கொண்டது. எழுந்து முன்கதவைத் திறந்தான். சிறுமி சமையலறையிலிருந்து ஓடி வந்தாள்.
“என்ன விளையாட்டு உனக்கு? தூங்கல…?”
ஓட்டத்தை நிறுத்திவிட்டுச் சிறுமி பயத்துடன் நடந்து குச்சிமிட்டாயின் அருகில் வந்து நின்றாள். இருளிலும் அவள் கண்களிருந்து ஒரு பயம் பளிச்சென்று மின்னியது.
“அங்கள்! தண்ணீ தாகமா இருந்துச்சி. அதான்…”
“மொததான தண்ணீ கொடுத்தன்?”
சிறுமி பயத்தையும் வார்த்தைகளையும் சேர்த்து விழுங்கி மீண்டும் பேசுவதற்குச் சொற்களை அடுக்கிக் கொண்டிருந்தாள்.
“தண்ணீ முடிஞ்சிருச்சா? தாத்தா தூங்கிட்டாரா?”
“எல்லா தூங்கிட்டாங்க, அங்கள்…”
குச்சிமிட்டாய் இலேசாகத் திறந்திருந்த கதவின் இடுக்கின் வாயிலாக உள்ளே பார்த்தான். பார்வை ஒரு மிருகமாகி அறைக்குள் நுழைந்தது.
கனவுந்து ஓட்டுநர் மெத்தையிலும், அவள் கீழே ஒரு விரிப்பிலும் படுத்திருந்தார்கள். குச்சிமிட்டாய் மீண்டும் சிறுமியைப் பார்த்தான். சட்டென மூர்த்தியின் அறைக்கதவு திறக்கப்பட்டு அவன் வெளியில் வந்தான்.
“குச்சி! இங்க வா…”
குச்சிமிட்டாய் சிறுமியை அங்கேயே நிற்கும்படி கூறிவிட்டு முர்ர்த்தியின் அறைப்பக்கம் சென்றான்.
“டேய்! வந்துருக்கறது யாரு? ஏதாச்சம் இருக்கா?”
“பாங்! என்ன பாங் சேட்டையா கேக்குறீங்க. கதயே இல்ல… ஒரு 40 வயசு இருக்கும்… எப்படி?”
“உன்ன என்னவோன்னு நெனைச்சன். ஆள் விவரமாத்தான் இருக்க… நீ குளிர்காய நான் இருக்கற இடம்தான் கிடைச்சதா? அப்புறம் விசயம் வெளில போனுச்சின்னா பெரிய கதயா ஆயிரும்… சரி, எவ்ள வேணும்?”
குச்சிமிட்டாய் சிரித்துவிட்டு அச்சிறுமியைப் பார்த்தான். கையில் குவளையுடன் நின்றிருந்தாள்.
“பாங்… தனா…தெரிஞ்சா…”
மூர்த்தி வெண்சுருட்டைப் பற்ற வைத்து ஆழமாக உள்ளிழுத்து விட்டான்.
“அவன் என்ன பெரிய தவுக்கேவா…? அவனே கூலித்தான். நான்லாம் பெரிய கை தெரியுமா? உனக்கு நான் தரன்…”
குச்சிமிட்டாய் சிறுமியை அழைத்துக் கொண்டு போய் சமையலறையிலுள்ள நாற்காலியில் உட்கார வைத்தான்.
“தோ பாரு… இங்கயே இரு. உங்க தாத்தாவுக்கு உடம்பு சரி இல்ல. இந்த அங்கள்… உதவி செய்யப் போறாரு… உனக்கு உங்க தாத்தா பிடிக்கும்தான?”
சிறுமிக்கு உறக்கம் கண்களில் மிதந்து கொண்டிருந்தது. அசந்து காணப்பட்டாள். தலையை மட்டும் அசைத்துவிட்டு மேசையில் தலையைச் சாய்த்துக் கொண்டாள்.
“பாங்… நீங்க போங்க…அந்தக் கெழவன நான் பாத்துக்கறன்…”
சிறுமிக்கு உறக்கமும் பயமும் சூழ வீடு சுழல்வதைப் போன்று இருந்தது. வெளியில் பள்ளத்தாக்கிலிருந்து கேட்ட ஆந்தையின் அலறல் கண்களை விழிக்க வைத்தது. இருளும் பனியும் காற்றுமென ஒரு விந்தையாக அனைத்தும் அசைந்து கொண்டிருந்தன.
எழுந்து சன்னலருகே நின்று கொண்டாள். விரல்களை வெளியில் நீட்டினாள். காற்றின் குளிரை உணர்ந்ததும் உடலெல்லாம் சில்லிட்டவளாய் மெல்லிய சிரிப்புடன் மீண்டும் கைகளை உடலோடு இறுக்கிக் கொண்டாள்.
தூரத்தில் ஆள்கள் கத்தும் சத்தமும் பொருள்கள் விழும் சத்தமும் கேட்டுப் பயந்தாள். மீண்டும் நாற்காலியில் அமர்ந்துகொண்டு வெளியில் இருளுக்குள் முனகி கொண்டிருக்கும் காற்றையும் பள்ளத்தாக்கையும் கவனித்தப்படியே உறங்கினாள்.
உறக்கத்தில் ஒரு பெரிய புளிய மரத்தில் மனிதர்கள் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். சிறுமி எல்லோர் கால்களையும் அசைத்து அசைத்து அழைக்கிறாள். சிறிது நேரத்தில் வார்த்தைகள் வர மறுக்கின்றன. கத்துகிறாள் ஆனால் சத்தமே இல்லை. புளிய மரம் ஒரு வீடாக மாறுகிறது. அங்குச் சிலர் கத்திகளுடன் வீட்டில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். சிறுமி அவர்களிடமிருந்து தப்பி கட்டிலுக்கடியில் அவள் வளர்க்கும் பூனையைக் காண்கிறாள். பூனையின் வயிற்றில் ஒரு சிறு வெட்டுக்காயம். அதனை அவள் தடவுகிறாள். இரத்தம் பீறிட்டடிக்க, சட்டென ஒரு குளத்தில் நீந்தத் துவங்குகிறாள். அக்குளத்தின் கரையில் தாத்தா நின்றிருக்கிறார். அவரை நோக்கி நீந்துகிறாள். கால்கள் மெல்ல சுருங்குகின்றன.
“ஏய்! ஏஞ்சிரு…”
குச்சிமிட்டாய் எழுப்பியதும் சிறுமி அரைமயக்கத்துடன் எழுந்தாள். கண்களைத் திறக்க முடியாமல் தடுமாறினாள். குச்சிமிட்டாய் கைகளைப் பிடித்து இழுத்தான். அவனுடைய இழுப்பிற்குச் சென்றாள்.
அறையைத் தாண்டும்போது தரையில் இருந்த இரத்தத் தெறிப்புகளைக் கண்டாள். பூனையின் இரத்தமாக இருக்குமோ என்று கொஞ்சம் பயத்துடன் விலகி நடந்தாள். குச்சிமிட்டாய் அதிகப்படியான பரப்பரப்புடன் இருந்தான். உடலெல்லாம் வியர்த்துக் கொட்டியது.
சிறுமியை இழுத்துக் கொண்டு வெளிவரந்தாவில் நிற்க வைத்தான். அவள் பயத்துடன் இரத்தம் சூழ்ந்திருந்த வரந்தாவைக் கவனித்தாள். ஆங்காங்கே ஏதேதோ துண்டு துண்டுகளாகச் சிதறிக் கிடந்தன.
அவற்றுல் சிலவற்றை மழைக்குருவிகள் சில வந்து கொத்திவிட்டு சிலுப்பியவாறு பயந்தோடியும் மீண்டும் வந்து கொத்தியப்படியும் இருந்தன.
- தொடரும்
ஆக்கம்: கே.பாலமுருகன்
(குறிப்பு: இத்தொடர் சிறுவர்களுக்கானது அல்ல; இருப்பினும் வாசிக்க நினைப்பவர்கள் பெற்றோர்களின் வழிகாட்டுதலுடன் வாசிக்கலாம்)
பாகம் 1-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/03/தொடர்க்கதை-பாகம்-1-மெலாந்/
பாகம் 2-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/04/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த/
பாகம் 3-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/05/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-2/
பாகம் 4-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/07/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-3/
பாகம் 5-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/09/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-4/
பாகம் 6-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/10/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-6/
பாகம் 7-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/11/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-7/
பாகம் 8-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/12/மெலாந்தி-பள்ளத்தாக்கு-8/
பாகம் 9-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/13/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-9/
பாகம் 10-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/15/மெலாந்தி-பள்ளத்தாக்கு-த-10/
பாகம் 11-ஐ வாசிக்க:
https://balamurugan.org/2020/04/16/மெலாந்தி-பள்ளத்தாக்கு-11/
காந்தி முருகன்
இந்த விடுமுறையில் நல்ல பதிவுகளை வெளியிட்டு எங்கள் நேரத்தையும் சிறப்பாக கழிக்க உதவிய உங்களுக்கு வாழ்த்துகள். இத்தொடர் கதை புத்தகமாக வெளிவருதல் சிறப்பு…