மார்க்கும் ரேச்சலும்: உமா கதிர் எனும் கதைச்சொல்லி

அகநாழிகை இதழின் ஆசிரியரும் அகநாழிகை பதிப்பகத்தின் பதிப்பாளருமான எழுத்தாளர் பொன். வாசுதேவன் அவர்கள் ஜூலை 2017ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தமிழ்ச் சிறுகதைகள் சிலவற்றை ‘அக்கரைப் பச்சை’ என்கிற தலைப்பில் தொகுத்து வெளியீட்டுள்ளார். தற்சமயம் சிங்கையில் தீவிரமாக எழுதி வரும் நண்பர்களின் பலரின் சிறுகதைகளைத் தொகுப்பில் வாசிக்கக் கிடைக்கிறது. இத்தொகுப்பை வாசிக்கும்போது சிங்கை சிறுகதை சூழலில் தற்சமயம் ஏற்பட்டிருக்கும் புதிய அலைகளையும், சிறுகதை தொடர்பான விரிவாக்கங்களையும், புதிய முயற்சிகளையும் அவற்றினூடாக இன்னமும் தேங்கி நிற்கும் சில சிக்கல்களையும் அறிந்து கொள்ள வாய்ப்புண்டு.

சமீபத்தில் சிங்கையில் வெளிவந்த இத்தொகுப்பின் வழியாக சிங்கப்பூர் நவீனத் தமிழ்ச் சிறுகதைகள் குறித்த ஒரு விரிவான விமர்சனக் கருத்தாக்கத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என நம்புகிறேன். ஒரு காலக்கட்டத்தில் ஒரு நாட்டில் வெளிவரும் இதுபோன்ற தொகுப்புகள் அக்காலக்கட்டத்தின் இலக்கியத் திறனாய்வுக்கும் விமர்சனங்களுக்கும் ஏற்புடையதாகும். குறிப்பாக, அந்நாட்டு இலக்கியப் படைப்புகளை அணுக நினைக்கும் விமர்சகர்களுக்குத் தொகுப்புகளே சிறந்த தடத்தைக் காட்டக்கூடியதாகும்.

ஆகவே, தொகுப்பாளன் என்பவர் இலக்கியத்தை மட்டும் தொகுக்கவில்லை, அந்நிலத்தின் இலக்கிய நகர்ச்சியையும் அடைவையும் சேர்த்தே தொகுக்கும் பணியை ஏற்றுக்கொள்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். தொகுப்பது என்பது கவனத்தோடும் அக்கறையோடும் செய்ய வேண்டிய பணியாகும். இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் சிலவற்றை வாசகப் பார்வையுடன் அணுகி விமர்சிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதன் வழியாக ஒரு தொகுப்பின் அவசியத்தையும் கருத்துரைக்க வாய்ப்புக் கிட்டும்.

இலக்கியத்திற்கும் விமர்சனத்திற்குமான ஓர் அத்தியாவசிய புரிதல் உருவாகியே ஆக வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் இருக்கிறோம். புதிதாகத் தமிழ் இலக்கியத்தை வாசிக்கத் துவங்கும் வாசகன் எதிர்க்கொள்ளப் போகும் இலக்கிய மதிப்பீட்டு தளங்கள் செம்மைப்படுத்தப்பட வேண்டும். விமர்சனத்தின் நிலைப்பாடுகள் குறித்த விவாதம், கலந்துரையாடல்கள், கட்டுரைகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறன. விமர்சனம் என்பது மிகையுணர்ச்சியுடன் ஒரு படைப்பைப் புகழ்ந்து பேசுவது என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கும் மனங்களிலிருக்கும் புராதன எண்ணங்களைக் களையெடுத்தல் வேண்டும்.

ஒரு தனித்த படைப்பு அல்லது ஒரு தனிமனித அகத்தின் வெளிப்பாட்டிலிருந்து உதித்து அதற்கான ஒரு கலைவடிவத்தைக் கண்டடைந்து சமூகத்தை நோக்கி வெளிப்படும் படைப்பு சமூகத்தின் மதிப்பீடுகளுக்குள்ளாகின்றது. அச்சமூகம் என்பது மிக மரபான பண்பாட்டு நிறுவனம். நுகர்வு கலாச்சாரத்தின் இயக்க நியாயங்களுடன் செயல்படும் சமூகம் என்கிற அந்நிறுவனம் கூட்டாக இயங்கும்போது, அதன் இயங்குத் தளத்திற்கு வந்து சேரும் அனைத்தையும் தராசில் வைக்கும். அதுவே மதிப்பீட்டிற்கான நிலையை அடைகிறது. வாழ்க்கையின் இயக்கத்தையும் அது சார்ந்து வெளிப்படும் கலைகளையும் அளக்கவும், சுவைக்கவும், நிறுக்கவும் சமூகம் மதிப்பீடு என்கிற ஓர் அளவுக்கோலை உருவாக்கி வைத்திருக்கிறது. பின்னர் உருவான அறிவுத்தளம் அதனை விமர்சனம் எனக் கண்டறிந்தது. பிறகு, கல்வி உலகம் அதனைத் திறனாய்வு என வகுத்துக் கொண்டது. தற்சமயம் விமர்சனம் என்பதை ஒரு நுகர்வு வெளிப்பாடாகப் புரிந்து கொள்ள இயலாது. சமூகமும் கல்வி உலகமும், விமர்சனம் குறித்து ஏற்கனவே உருவகித்து வைத்திருக்கும் அத்தனை விளக்கங்களிலிருந்தும் அதனைத் தாண்டியும் விமர்சனம் என்பதை மறுகண்டுபிடிப்பு செய்ய வேண்டியுள்ளது. இரசனை விமர்சனம் என்றுகூட சிலவற்றை வகைப்படுத்த முடியும்.

இலக்கியம் என்பது மனித உணர்ச்சிகளின் உச்சக்கணங்கள்தானே? என்று சில தீவிர விமர்சகர்கள் சொல்லியும் கேட்டிருப்போம். காலம் மாறும்போது உருவாகும் வாழ்க்கை, அரசியல், சமூகம், குடும்பம், கல்வி ஆகிய மாற்றங்கள் மதிப்பீடுகளை மாற்றுகிறது. மதிப்பீடுகளின் மாற்றங்களினால் மனித மனம் உணர்ச்சிக் கொந்தளிப்புக்குள்ளாகின்றது. அவ்வுணர்ச்சியின் ஆழத்தைப் பற்றி பேசும் வடிவமும் இலக்கியம்தான். ஆனால், அதற்குண்டான ஆதாரமாக இருப்பது மாறிக் கொண்டே இருக்கும் காலமாகும். ‘காலமாகி நிற்கும் அனைத்தைப் பற்றியும் பேசும் ஒரு மகத்தான கலைத்தான் நாவல்’ என ஜெயமோகன் சொல்வதையே ஒட்டுமொத்த இலக்கியத்திற்குமான புரிதலாக ஏற்றுக் கொள்ளலாம்.

அவ்வகையில் அக்கரைப் பச்சையில் வெளிவந்த சிறுகதைகளில் ஒரு நல்ல சிறுகதை என்பதைவிட விளிம்புநிலை மனிதர்களைக் காட்டிய சிறுகதை பற்றி  இவ்விமர்சனக் கட்டுரையில் இணைத்துள்ளேன்.

மார்க்கும் ரேச்சலும் – உமா கதிர்

உமா கதிர் அவர்கள் எழுதிய இச்சிறுகதையில் சிங்கையின் விளிம்புநிலை வாழ்க்கையையும் பெருநகர் வாழ்க்கையின் இருள்களில் சிக்கி முனங்கிக் கொண்டிருக்கும் வாழ்வை உதாசினப்படுத்தி வாழும் குரல்களையும் பதிவு செய்துள்ளார். நான் வாசித்த சிங்கை சிறுகதைகளில் தனித்துவமான ஒரு கவன ஈர்ப்பை உருவாக்கிய சிறுகதை என ‘மார்க்கும் ரேச்சலும்’ இடம் பெறுகிறது. மேலும், தீவிர வாசகராகக் கடந்தகால சிங்கை சிறுகதை வளர்ச்சியையும் நகர்ச்சியையும் வாசிப்பினூடாக மதிப்பீட்டு வரும் யாவருக்கும் இச்சிறுகதை நவீன இலக்கியத்தின் ஒரு மாற்றுக் குரலாக வாசக சாத்தியங்களை விரிவுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

கதைச்சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கும் அதே நகரில் அவர் தங்கியிருக்கும் அறைக்குப் பக்கத்திலேயே குடியிருக்கும் உணவகத்தில் தட்டுகளைக் கழுவும் ஒரு உதிரி மனிதனைப் பற்றிய கவனக் குவிப்பே இச்சிறுகதை. தன் ஒட்டு மொத்த வெளிச்சத்தையும் அக்கதைப்பாத்திரத்தின் மீது குவிக்கிறார் உமா கதிர். அம்மனிதன் வாழ்க்கையில் வெற்றிப்பெற்றவன் அல்ல; பெரிதாகத் தத்துவப் பின்னனியுடன் வாழ்க்கை குறித்த ஏகாந்த கருத்துகளைச் சொல்பவனும் அல்ல; மார்க் என்பவர் ஐம்பத்து ஏழு வயது நிரம்பிய குடும்பத்தை இழந்து, நல்ல வேலையையும் இழந்து, தான் உயிரோடிருப்பதைப் பற்றி உறவினர்களுக்குக்கூட கவலை கிடையாது என்கிற அளவிற்குப் புறக்கணிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும், வாழ்க்கைக்கு வெளியே தூக்கிவீசப்பட்ட ஒரு சாதாரண மனிதன்.

ஒரு நாள் நான்கு இலக்க எண்ணுடன் வருகிறார்; 4டீ தாளைக் கொடுத்துவிட்டுப் பணம் கேட்கிறார். பின்னர், ஒரு நாளில் கதைச்சொல்லியுடன் நட்பாகிவிடுகிறார். தனக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் தனிமையான ஒரு வாழ்விற்குள் கதைச்சொல்லியை நுழைய விடுகிறார். இருளில் வெளிச்சத் துளியைத் தேடுவதைப் போன்று மார்க்கின் வாழ்க்கையினுள் சம்பவங்களைத் தேடி அலைகிறோம். அவர் வாழ்வினுள் எல்லாமும் வரண்டு கிடக்கின்றன. ரேச்சல் என்கிற காதலியும் அவளுடன் புத்தாண்டில் ஏற்படும் சந்திப்பையும் தவிர மார்க்கிடம் வேறொன்றுமில்லை. அவளைக் கொண்டு பெரும் கனவு தேசத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ரேச்சலின் இரண்டு மலைகளுக்கு நடுவே இருக்கும் கிராமத்திற்குச் சென்று அங்கொரு புதிய வாழ்க்கையைத் துவங்குவதற்காக மார்க் கனவு கொண்டிருக்கிறார். திடீரென ஒரு நாள் மார்க் கிளம்பிப் போய்விடுகிறார். கதைச்சொல்லியைச் சந்திக்கத் திரும்பவும் வரவுமில்லை. தன் திட்டப்படி இரண்டு மலைகளுக்கு நடுவே இருக்கும் கிராமத்தில் ரேச்சலுடன் மகிழ்ச்சியாக இருக்கக்கூடும் என நினைத்துக் கதைச்சொல்லி சமாதானமாகிவிடுகிறார்.

ஒருவேளை இச்சிறுகதை இங்கேயே முடிந்திருந்தால் வாழ்வெனும் கணிக்க இயலாத முடிச்சிற்குள் வாசகனை ஆயிரம் வினாக்களுடன் விட்டுச் சென்றிருக்கும். வாழ்வெனும் காட்டாறு அப்படியாகத்தான் ஒவ்வொருநாளும் பற்பல அடுக்குகளை அடித்துத் தள்ளி உடைத்து வெற்றிடங்களை விட்டவாறும், வெற்றிடங்களில் வேறு ஊகிக்க முடியாத திருப்பங்களைக் கொண்டு சேர்த்தவாறும் பல்லாயிரம் இரகசியங்களுடன் நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு புத்தனின் தியானத்தின் முன்னே அமர்ந்து கவனிப்பதைப் போன்ற கூர்மையுடன் இவ்வாழ்க்கையைத் தரிசிக்க, மதிப்பீட, கடந்திட ஒவ்வொருநாளும் ஆயிரமாயிரம் பேர் வந்து சேர்ந்து கொண்டே இருக்கின்றனர். மார்க் என்கிற ஒரு விளிம்புநிலை மனிதனின் சிதறுண்டுபோன அகத்தின் உள்ளே கதைச்சொல்லி வந்து சேர்வதைப் போன்றே.

உமா கதிர் இச்சிறுகதையை முடித்த இடம் படிக்கும்போதே அதனை ஊகிக்க முடிந்தபடியே கொண்டு சேர்த்துள்ளார். கதைச்சொல்லி அவர் ரேச்சலில் கிராமத்தில் சென்று சேர்ந்திருப்பார் என்று சொல்லி, கதையை மேலும் தொடரும்போதே வாசகனால் அப்படி நடந்திருக்காது, ஒன்று மார்க் வேறு இடத்தில் மீண்டும் தட்டுகளைக் கழுவும் வேலையையே செய்து கொண்டிருப்பார் அல்லது மரணமடைந்திருப்பார் என்று சுலபமாக யூகித்துவிட முடிந்த ஒரு முடிவுத்தான். அதனை எழுத்தாளர் இலாவகமாகத் தேர்ந்த வாசகனையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தக்கூடிய வகையில் எழுதியிருந்தால் வாழ்க்கைக்கும் வாழ்க்கையை அளக்கும் மனங்களுக்குமிடையே கலை என்கிற மாபெரும் எழுச்சி உருவாக்கும் அதிர்வலைகளை உணர வைத்திருக்கலாம். அது ஒன்று மட்டுமே இச்சிறுகதையில்  மேம்படுத்தக்கூடியதாகப் பார்க்கிறேன்.  அதையும்கூட ஒரு கவித்துவமான முடிவு என்றும் அறிய முடியும். உமா கதிரி கதையில் இறுதியில் அதிர்ச்சி வைத்தியம் எதனையும் கொடுக்காமல் சிறுகதையை யதார்த்தமாக முடிக்கும் பொருட்டு இத்தகைய முடிவை எழுதியிருக்கலாம் என்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

உமா கதிர் இச்சிறுகதையில் கையாண்டுள்ள மொழி தனித்துவமான கவனத்திற்குரியது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். அவருடைய மொழியில் ஊடாடும் கேலியும், நகைச்சுவை உணர்வும் கதையோட்டத்தைக் கூர்ந்து கவனிக்க வைக்கிறது. மேலும், வெறுப்பின் உச்சத்தில் இருந்து கொண்டு வாழ்வை உள்பார்வையிடும் முதிர்ச்சியான மொழிநடையும் வாய்த்துள்ளது. அது சிறுகதையின் ஒருமையையும் அது சட்டென விரிவடைந்து செல்லும் அழகியலையும் வாசிப்பு முழுவதும் செம்மைப்படுத்தியப்படியே வருகிறது. உதாசினப்படுத்தப்பட்ட பெருநகர் மனிதர்கள் எத்தனையோ பேர் சிங்கை மாநகரங்களில் குவிந்து கிடக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை இருளுடன் உரையாடி பிறகு காணாமல் போகும் கணநேர சிமிட்டல் மட்டுமே. அதனை நூதனமாகக் கவனப்படுத்தி மொழியின் வழியாக நிகழ்த்திக் காட்டும் சாத்தியம் இலக்கியத்திற்குண்டு. அதனை நோக்கிய நகர்தல் நவீன சமூகத்தின் இலக்கிய விசாரணைகளுக்கு வலு சேர்க்கும் என உமா கதிரின் மார்க்கும் ரேச்சலும் உணர்த்திவிட்டுச் செல்கிறது.

 

அறிவிப்பு:

வருகின்ற செப்டம்பர் 22ஆம் நாளில் சிங்கப்பூரில் Bishan Library-யில் மாலை 7.00 மணி துவக்கம் உமா கதிரின் இச்சிறுகதை படமாக்கப்பட்டுத் திரையிடப்படவுள்ளதையும் இதன் வழி தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.பாலமுருகன்

About The Author