புதிய திட்டங்களும் பழைய நினைவுகளும் – 2016-லிருந்து 2017-க்கு

எப்பொழுதும் கடந்துபோன வருடத்தின் நினைவுகளையும் எதிர்க்கொள்ளப் போகும் வருடத்தின் திட்டங்களையும் எழுதுவது வழக்கமாகும். இன்றோடு (03.01.2017) நான் ஆசிரியர் பணிக்குள் நுழைந்து பத்தாண்டுகள் நிறைவடைகின்றன. 2016ஆம் ஆண்டு எனக்கொரு கத்திமேல் பயணம் மட்டுமே. விருதும் பதவியும் குவிந்தாலும் அதையும் மீறி புகழுக்குள் ஆழ்ந்துபோகாமல் தீமைகளால் மீட்டெடுக்கப்பட்டு நிதானமாக்கப்பட்டேன். எல்லோரும் வயதிற்குரிய வளர்ச்சி கிடையாது; எதுவுமே மெதுவாக நடக்க வேண்டும் ஆனால் உன் வாழ்க்கையில் நீ அடைந்திருப்பது வெகுசீக்கிரமான அடைவுகள் எனச் சொன்னார்கள்; அறிவுரைத்தார்கள். திரும்பிப் பார்க்கிறேன், அப்படியேதும் பெரிய சாதனைகள் எல்லாம் கிடையாது. என்னைப் பொறுத்தமட்டில் இவையாவும் எளிய முயற்சிகள் எளிய அடைவுகள் மட்டுமே.

கடந்த வருடத்தைக் காட்டிலும் வாழ்க்கையின் வேறு எந்த வருடமும் எனக்கு வாழ்க்கைக் குறித்த பக்குவத்தையும் தாங்கும் வலிமையையும் அளித்திருக்காது என்றே சொல்லலாம். என்னை வெறுப்பவர்களுக்கு மத்தியில் நான் வாழ்ந்து காட்ட வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டேன். அவ்விஷப் பரீட்சையை எதிர்க்கொண்டும் வருகிறேன். பொய்யான சிரிப்பும் பொய்யான பாராட்டும் பொய்யான ஆறுதலும் நிரம்பிய முகங்களைத் தாண்டி தாண்டி ஒரு பெரும்சிரிப்பினுள் ஆழ்ந்து கிடக்கிறேன். 2016 என்கிற எனது மிகச் சிறந்த ஆசானின் மூலமாக வாழ்க்கை அத்தனை எளிமையானதன்று என்பதை உள்ளூர உணர்ந்திருக்கின்றேன்.

வேறு என்ன சொல்வது? குடத்தில் அலம்பும் நீரைப் போன்ற மனத்துடன் விளக்கவியலாத/ சத்தமிடாத ஒரு பெரும் பாரத்தினைச் சுமந்து கொண்டு 2017ஆம் ஆண்டின் வாசலில் நிற்கிறேன். இவ்வருடம் பெரிதாகத் திட்டங்கள் இல்லையென்றாலும் ஒருசிலவற்றை தொகுத்துக் கொள்வதில் வசதியுறுகிறேன்.

நூல்கள்

இவ்வருடம் சிறுவர்களுக்கான நாவலின் மூன்றாவது பாகத்தை வெளியிட்டாக வேண்டும். இல்லையென்றால் எனது வாசக சிறுவர்கள் என்னைத் தொலைத்துவிடுவார்கள். அடுத்து, தோழி பதிப்பகத்தின் வெளியீடாக என்னுடைய ஒரு சிறுகதை தொகுப்பு விரைவில் வெளிவரவிருக்கின்றன. இதுவரை நான் எழுதிய அனைத்து சினிமா விமர்சனங்களையும் ஒரு நூலாகத் தொகுக்கு திட்டமுண்டு. இந்தாண்டின் நூல் திட்டம் இவ்வளவுத்தான். மேலும், இவ்வாண்டு மாணவர்களுக்காக 160 பக்கத்தில் கட்டுரை தொகுப்பு நூல் ஒன்றை டிசம்பரிலேயே சுடர் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டது. கடுமையான உழைப்பில் 88 மாதிரிக் கட்டுரைகளும், 10 சிறுவர் சிறுகதைகளும், சிறுகதை எழுதும் வழிமுறைகளும் கொண்ட இவ்வாண்டிற்கான ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கான சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் தமிழ்மொழிப் பயிற்சி நூல் ஒன்றினையும் எழுதி வெளியிட்டுள்ளேன்.

பயணம்

இவ்வாண்டு ஊட்டி, கொடைக்கானல் போன்ற இந்திய மலைப்பிரதேசங்களுக்குச் செல்லத் திட்டமுண்டு. மேலும், வருட இறுதியில் ஐரோப்பா நாடுகளுக்குச் செல்லும் திட்டமும் உண்டு. ஆனால், இவையாவும் கைக்கூடி வரப் பலவகைகளில் வாழ்க்கை ஒத்துழைக்க வேண்டும் அல்லவா? வழக்கம்போல யூ.பி.எஸ்.ஆர் வழிகாட்டிப் பட்டறைகள் செய்யவும் திட்டமுண்டு. ஆனால், கடந்த காலங்களைப் போல் அல்லாமல் குறைத்துக் கொள்ளவும் எண்ணியுள்ளேன். இவ்வருடம் நிச்சயம் சிங்கை சென்று ஒருசில நண்பர்களைச் சந்திக்க வேண்டும் என்கிற எண்ணமும் உண்டு.

 

நட்பு வட்டம்

தற்சமயம் நவீன சிந்தனை இலக்கியக் கள நண்பர்களுடன் மட்டுமே இலக்கிய ரீதியிலான நட்பு வட்டம் உண்டு. சுவாமி பிரம்மாநந்தா சரஸ்வதி அவர்களின் வாசிப்பின் வழியாக உருவாகியிருக்கும் நண்பர்கள் மாதம் ஒருமுறை சந்தித்து இலக்கியம் சார்ந்து உரையாடி வருகிறோம். கெடா மாநில எழுத்தாளர் நண்பர்களுடன் அவ்வப்போது சந்தித்து வருகிறேன். அதனைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டும். சுடர் பதிப்பகம், தோழி பதிப்பகம் அவர்களுடன் நூல்கள் திட்டங்களின் வழி உருவான நட்பும் தொடர்கிறது.

பல நட்புகள் மௌனத்துடன் விலகிக் கொண்டன. சில புதிய நட்புகள் வலுவான முறையில் இணைந்து கொண்டன. கடைசிவரை உடன் இருந்த நல்ல நண்பர்களை அன்போடு நினைத்துப் பார்க்கிறேன். எந்த விருப்பும் வெறுப்பும் இல்லாமல் பழகும் அவர்களின் நட்பு மட்டுமே நிலைத்திருக்கின்றன.

பிரிவுகள்

கடந்தாண்டு தங்கை புனிதாவின் பிரிவு மறக்க முடியாதது. மிகவும் நெருக்கமாக இருந்தவர். வாழ்க்கை எனக்குத் தத்துக் கொடுத்த உறவு. எதிர்ப்பாராத தருணத்தில் சட்டென பிரிந்தார். அத்துயரம் இன்றுவரை மனத்தை விட்டு நீங்கவில்லை. அதே போல நண்பரின் தந்தை, எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு, நண்பர் யோகேஸ்வரனின் தாயார் என இவர்களின் பிரிவுகள் மனத்தைத் துயரத்தில் ஆழ்த்தியது.

படைப்புகள்

தொடர்ந்து சிறுகதைகளில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளேன். உலக சிறுகதைகள் வாசித்து அதனைப் பற்றி எழுதவும் எண்ணமுண்டு. வாய்ப்பிருந்தால் வருட இறுதியில் இன்னொரு சிறுகதை தொகுப்பும் அல்லது ஒரு நாவலும் கொண்டு வரும் திட்டமுண்டு.

இப்படி அனைத்துமே திட்டங்களாக விரிகின்றன. வாழ்க்கை அதற்கேற்றாற்போல நெளிந்து வளைந்து வழிவிட்டால் மட்டுமே அது சாத்தியமாகும். வாழ்க்கை வேறு என்ன திருப்பங்களைக் கொண்டிருக்கிறது என்பதனைக் காலம்தான் காட்டும். அதை எதிர்ப்பார்த்துக் கொண்டு தொடர்ந்து பயணிக்கிறேன்.

ஆசிரியர் பணிகள்

ஒரு நல்லாசிரியராக மாணவர்களுக்கான என் பணியை இவ்வருடமும் துரிதப்படுத்த வேண்டும். வழக்கம்போல சில இலவச வகுப்புகள் செய்ய எண்ணமுண்டு. கல்வியில் பின்தங்கியிருக்கும் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் போன்றவற்றையும் கவனம் செலுத்தவுள்ளேன். உட்புற பள்ளிகளுக்கான இலவச யூ.பி.எஸ்.ஆர் பயிற்சிப் பட்டறைகள் திட்டமும் என் பட்டியலில் உண்டு.

ஒரு சிறிய வெற்றிக்காகக்கூட நான் எதிர்நீச்சல்தான் போட வேண்டும் என்பது முடிவாகிவிட்டது. வாழ்க்கை ஒரு குரங்கு வித்தையைப் போல. எவ்வளவு வலியாக இருந்தாலும் சிரிக்க வேண்டும்; சிரிப்புக் காட்ட வேண்டும். ஜோக்கர் வேடம் அணிந்து கொண்டிருப்பவன் மட்டுமே சகித்துக்கொள்ளப்படுவான்; ஏற்றுக் கொள்ளப்படுவான். ஒரு ஜோக்கருக்குள் இருக்கும் வேதனைமிக்க குரல்; உலகை நோக்கி கூவப்படும் ஒரு நம்பிக்கைமிக்க குரல் இருப்பதைப் பற்றி யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

‘ஆடி அடங்கும் பூமியிலே

நம்ம வாடி வதங்க தேவையில்ல

ஒருவாட்டி வரும் வாழ்க்கை

துணிவோமே அதை ஏற்க’

 

வழக்கம்போல இவ்வருடமும் துணிந்து நிற்கிறேன் இவ்வாழ்க்கையை ஏற்க; வாழ.

 

  • கே.பாலமுருகன்

About The Author