நேர்காணல்: சிறுகதை நூல் வெளியீட்டை முன்னிட்டு – ‘படைப்பு என்பது கணிக்கவியலாத ஓர் ஊற்று’ – கே.பாலமுருகன்

கேள்வி: எழுத்தாளன் என்பவன் எழுதியே ஆக வேண்டுமா?

கே.பாலமுருகன்: வாசிப்பு; இலக்கிய செயல்பாடு; எழுத்து என மூன்றையுமே உள்ளடக்கியவன் தான் எழுத்தாளன். ஆகவே, எழுத்தாளன் என்பவன் சில சமயங்களில் வாசிக்க மட்டுமே செய்வான். அதன் வழி அவன் தன்னைத் தானே கூர்மையாக்கிக் கொள்வான். அல்லது இலக்கியம் தொடர்பான கலந்துரையாடல்கள், நூல் வெளியீடு, விமர்சனக் கூட்டங்கள் என இயங்குவான். தன்னைச் சுற்றியுள்ள சூழலை இலக்கியமாக உருவாக்கிக் கொள்ள செயல்படுவான். இதனைத் தவிர்த்து எழுத்தாளன் தன்னை நிரூபித்துக் கொள்ள எழுதுவான். ஆக, எழுத்தாளன் என்பவன் எழுதியே ஆக வேண்டும் ஆனால், எழுதிக் கொண்டே இருப்பானா என்று கேட்டால் என் பதில் இதுதான். வாசிப்பூக்கம், செயலூக்கம், படைப்பூக்கம் ஆகியன கலந்தவனே எழுத்தாளன்.

கேள்வி: எழுத்தாளனுக்கும் கவிஞனுக்கும் விமர்சகனுக்கும் என்ன வித்தியாசம்? இதில் தாங்கள் யார்?

கே.பாலமுருகன்: நீங்கள் குறிப்பிட்ட மூவருமே படைப்பாளர்கள்தான். கவிஞன், விமர்சகன் என யாவருமே எழுத்தாளர்கள்தான். படைப்பில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை எனப் பிரிவுகள் உள்ளன. அவற்றுக்கேற்ப கவிதையை எழுதுபவனைக் கவிஞர் என்கிறோம், சிறுகதை எழுதுபவர்களைச் சிறுகதை எழுத்தாளர் என்கிறோம். இப்படியே கட்டுரைகள் எழுதுபவரைக் கட்டுரையாளர் என்றோ விமர்சகர் என்றோ குறிப்பிடுகிறோம். கவிதை, சிறுகதை, நாவல், சிறுவர் நாவல், கட்டுரைகள், பத்திகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதும் என்னை என்னவென்று அழைக்கலாம்?

கேள்வி: தன்னைக் கண்டடைவதே எழுத்தாளனின் நோக்கமாக இருக்கிறதா?

கே.பாலமுருகன்: ஆமாம். தன் படைப்புகளின் வழியாக ஒருவன் தன்னைத் தானே விசாரித்துக் கொண்டே இருக்கிறான். தன்னைச் சுய மதிப்பீடுகளுக்கு ஆளாக்குகிறான். தன்னைக் கண்டடைவது ஆன்மீகம் என்றும் சொல்கிறோம். கண்டைந்த தன்னை வெளியே கொண்டு வருவது இலக்கியம். தன்னையும் தனக்குள் இருப்பவைகளையும் படைப்பாக்கி வெளியே கொண்டு வரும் வேலையைக் கலை செய்கிறது. நீங்கள் கேட்டதைப் போல ஒவ்வொரு படைப்பிற்குள்ளும் ஒரு படைப்பாளனை வாசகராக நீங்கள் கண்டடையலாம். ஆக, ஆன்மீகமும் இலக்கியம் சில விசயங்களில் மட்டுமே வேறுபடலாமே தவிர அதன் ஆதாரம் தன்னைக் கண்டடைதலே.

கேள்வி: கருத்தைச் சொல்வதே எழுத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டுமா?

கே.பாலமுருகன்: அப்படியல்ல. வாழ்க்கையைச் சொல்வதுதான் எழுத்தின் குறிக்கோளாகும் என நான் நம்புகிறேன். சொல்வது என்பதுகூட எனக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை. காட்டுவதுதான் இலக்கியத்தின் வேலை. அதனை உள்வாங்கிக் கொண்டு அதன்பால் ஒரு கருத்தை அல்லது புரிதலை உண்டாக்கிக் கொள்வதுதான் வாசகர்களின் வேலை என நினைக்கிறேன்.

கேள்வி: மீண்டும் ஒரு வாசிப்பைக் கோரக்கூடிய எழுத்து உங்களிடம் உள்ளதா? அப்படி இருப்பின் அது ஏன்?

கே.பாலமுருகன்: எல்லாம் நல்ல எழுத்துகளும் வாசிப்பைப் பலமுறை கோரியப் படைப்புகள்தான். ஒரே வாசிப்பில் புரிந்துவிட வேண்டும் என்றால் அப்படைப்பில் ஆழமும் அகலமும் போதவில்லை என்றுத்தான் அர்த்தம். அத்தகைய எழுத்துகளை யாரும் இப்பொழுது விரும்புவதில்லை. தனக்கும் தன் புரிதலுக்கும் சவால் விடக்கூடிய ஒரு படைப்பை மட்டுமே வாசகர்கள் மீண்டும் மீண்டும் வாசிக்கவும் செய்கிறார்கள். அதுவே படைப்பாளனுடன் விவாதிக்கவும் தூண்டுகிறது. வாசகனுக்கும் படைப்பிற்கும் மத்தியில் மிக நீண்ட உரையாடலைத் துவக்கி வைக்கும் எழுத்தே தற்சமயம் சாத்தியமாகும்.

கேள்வி: மீண்டும் மீண்டும் எழுத வேண்டும் எனில் எதை எழுதுவீர்கள்?

கே.பாலமுருகன்: நிச்சயமாக சிறுகதைகள்தான் எனது தளமாகும். என்னுடைய தொடக்கமே சிறுகதைகள்தான்.

கேள்வி: தங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

கே.பாலமுருகன்: என் மீது வைக்கப்படும் விமர்சனங்களை நான் புறக்கணிக்கிறேன். என் படைப்பின் மீதான விமர்சனங்களாக இருந்தால் நிச்சயம் அதனைப் பொருட்படுத்துவேன். ஆரோக்கியமாகவே எடுத்துக் கொள்வேன். எப்படைப்பும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல.

கேள்வி: தொடர்ச்சியாக் எழுதும்போது ஒரு வரண்ட அல்லது சோர்ந்த உணர்வு ஏற்படுகிறதா?

கே.பாலமுருகன்: அப்படித் தோன்றும்போது வேறு நடவடிக்கைகளில் கவனத்தைச் செலுத்திவிடுவேன். மீண்டும் எழுத்திற்குத் திரும்புவதற்கான இடைவெளியாக அதனை உருவாக்கிக் கொள்வேன்.

கேள்வி: தங்களுடைய ஆரம்பக்கால எழுத்திற்கும் இன்றைய எழுத்திற்கும் உள்ள வித்தியாங்கள் என்ன?

கே.பாலமுருகன்: படைப்பாளன் படைப்புகளில் அலைந்து அலைந்து தனக்கான எழுத்தைக் கண்டடைகிறான். என் ஆரம்பக்கால வாசிப்பே மனுஷ்ய புத்திரன், சுந்தர ராமசாமி, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்றவர்கள் ஆகும். அதன் விளைவாகவே என்னுடைய முதல் நாவல் ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ மூன்று விருதுகள் பெற முக்கிய காரணமாகும். ஆனால், இன்றைய எழுத்தை நான் மொழி ரீதியிலும் அதன் ஆழம் தொட்டும் சிறுக சிறுக வித்தியாசப்படுத்தி வருகிறேன். இன்னமும் செம்மைப்படுத்தும் வேலை தொடரவே செய்யும். இயங்குவதும் எழுதுவதும்தான் இப்போதைய நோக்கம்.

கேள்வி: எழுத முடியாத தருணங்களில் உங்களை எப்படி மீட்டுக் கொள்வீர்கள்?

கே.பாலமுருகன்: எழுத முடியாத தருணங்கள் என்றால் மூன்று வகையாகப் பார்க்கலாம். ஒன்று, பணி அழுத்தம் காரணமாக எழுத முடியாமல் போனதுண்டு. அக்காலங்களில் பணி தொடர்பான வேலைகள் மிகுந்து இருக்கும். ஆகவே, முடிந்தவரை அச்சமயங்களில் எழுத முடியாவிட்டாலும் குறைந்தது ஒரு சிறுகதை அல்லது கவிதை, கட்டுரைகள் என வாசிப்பதை நிறுத்த மாட்டேன். அவ்வுணர்வு இலக்கியத்தோடு நெருங்கி இருக்கும் திருப்தியை அளிக்கும். படைப்பு என்பது கணிக்கவியலாத ஓர் ஊற்று. அதனை வலுக்கட்டாயமாக அடைக்கவோ அல்லது திறந்துவிடவோ முடியாது. அது தன்னியல்பு கொண்டது.

அடுத்து, தனிப்பட்ட வாழ்க்கை சிக்கல்கள் ஏற்படும்போது எழுதுவது தடைப்படலாம். அக்கணங்களில் நாம் அதுவரை வாசித்த இலக்கியம் நமக்குக் கைக்கொடுக்கும். எத்தகைய சிக்கல் வந்து நின்றாலும் அதனை மனத்திடத்துடன் கடந்து செல்ல நாம் வாசித்த இலக்கியமே அதற்குரிய பலத்தைக் கொடுக்கும். வாசிப்பு என்பது வாழ்க்கைக்கான அனுபவங்களைச் சேகரிக்குமொரு வாய்ப்பாகும் என என் வாழ்நாளில் ஒவ்வொரு கணமும் உணர்கிறேன். அச்சிக்கல்கள் கரைந்து மறைந்ததும் அதன்பின் ஏற்படும் ஊக்கம் அளவற்றது. அதனை எழுத்தாக்கும் முயற்சி பின்னர் தொடரும். ஆகவே, எழுத்தாளனுக்கு வாழ்க்கைப் பிரச்சனைகள் என்பது என்னைப் பொறுத்தவரையில் ஒரு வரம் என்றுத்தான் சொல்வேன். எழுதுவதற்கான ஊக்கி அங்கிருந்தும் கிடைக்கிறது.

மூன்றாவதாக, சில சமயங்களில் நம் எழுத்தில் ஆழமில்லாமல் போகும். எது எழுதினாலும் அது எடுப்படாமல் போகும். நன்கு உற்று கவனித்தால் நமக்குள் காரணமே இல்லாமல் ஒரு படைப்பு சோர்வு ஏற்பட்டிருக்கும். அது இரண்டு காரணங்களால் நடக்கும் என யூகிக்க முடிகிறது. ஒன்று வாசிப்பே இல்லாமல் தொடர்ந்து எழுத மட்டுமே செய்வதாலும், அடுத்து நிறுத்தாமல் அதிகம் எழுதித் தள்ளுவதினாலும் ஏற்படலாம். அத்தகைய நேரத்தில் எழுத நினைப்பதைக்கூட எழுதாமல் விட்டதுண்டு. ஒரு சிறு இடைவேளி தேவைப்படும். ஆனால், அந்த இடைவெளியை நீட்டிக்கொள்ளக்கூடாது. அது ஆபத்தானது. நம்மை மீண்டும் எழுத்துக்குள் வரவிடாமலும் செய்துவிடும். அப்படி இடைவெளி வேண்டும் என்று போனவர்களில் சிலர் மீண்டும் எழுத்துக்குள் வரவே இல்லை. எனக்கு அதுபோன்ற சமயங்களில் என் கவனத்தை உலக சினிமா பார்ப்பதில் செலுத்திவிடுவேன்; அல்லது மலை ஏறுவேன். மீண்டும் ஓரிரு வாரங்களில் நல்ல சிறுகதைகள் அல்லது நாவல்கள் வாசிப்பேன். அதன்பின் அந்தப் படைப்பு சோர்வு தானாக நீங்கியிருக்கும். இப்படித்தான் நான் எழுதாமல் போன கணங்களில் என்னை நான் மீட்டுக் கொண்டேன்.

கேள்வி: வருகின்ற செப்டம்பர் 24ஆம் திகதி நடைபெறவிருக்கும் உங்கள் சிறுகதை நூல் வெளியீடு பற்றி?

கே.பாலமுருகன்: தோழி பதிப்பகத்தின் அருமையான முயற்சி இது. சொந்த ஊரில் வெளியீடு செய்வது என்பதுதான் இன்றைய நூல் வெளியீடுகளின் பொதுத்தன்மையாக இருக்கின்றது. ஆனால், தோழி பதிப்பகம் அதனையும் தாண்டி ஈப்போ நகரில் மூன்று நூல்களின் அறிமுக விழாவைத் தொடங்கியுள்ளார்கள். இலக்கிய செயல்பாடுகள் அவசியமாகக் கருதப்படும் இச்சூழலில் எழுத்தாளர் யுவராஜன் அவர்களும் தோழி அவர்களும் இம்முயற்சிகளை முன்னெடுத்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆகவே, ஈப்போ நகரில் வாழும் இலக்கிய ஆர்வலர்கள், ஆசிரியர் நண்பர்கள் அனைவரையும் ‘மூன்று நூல்கள்’ அறிமுக விழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றேன்.

சந்திப்பு: ராஜேஸ்வரி, ஈப்போ

 

About The Author