சிறுகதை – நெருப்பு
‘பெக்கான் லாமா’ மணியம் வெண்மை படிந்திருந்த அவனது நாக்கை வெளியே நீட்டிச் சீன கடைக்கு வெளியே மேசைகளை அடுக்கிக் கொண்டிருந்த தவுக்கானிடம் காட்டிவிட்டு ‘கீகீகீகீ’ எனக் கத்திக் கொண்டே சாலையின் மறுபக்கம் தெரிந்த சந்தில் நுழைந்து ஓடினான். அந்தக் குறுகலான பாதைதான் ஜாலான் பெக்கான் லாமா. அங்குள்ள குடியிருப்புப் பகுதிப் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வாழ்பவர்களின் இடம். வீட்டின் பின்பகுதிகளை வரிசையாக அலங்கரித்து நின்ற இருப்பக்கத் தகர வெளிக்கு நடுவே ஓர் இருளில் புதைந்திருக்கும் சாலையில் மணியம் எங்குப் படுத்தாலும் யாரும் கண்டுகொள்ள வழியில்லை. தவுக்கானிடம் சாப்பாடு கேட்டு வெகுநேரம் கத்திக் கொண்டிருந்துவிட்டு பொறுமையிழந்து நாக்கை வெளியே காட்டிப் பழித்துவிட்டு மீண்டும் பசியுடன் அச்சிறிய சாலையின் இருளுக்குள் ஓடிவிட்டான். அவன் நகரத்தில் இப்படித்தான் சுற்றியலைந்துவிட்டுத் தன் ஒட்டுமொத்த வெறுமையையும் ஒரு பாவனையாக வெளிப்படுத்திவிட்டு ஓடிவிடுவான். அப்பொழுதுதான் சாப்பாட்டுக் கடை திறந்து அரை மணி நேரம் ஓடியிருந்தது.
தவுக்கான் கடைக்கு வெளியே வாசலில் தோரணம் போல வரிசை பிடித்திருக்கும் பெருநாள் அலங்கார விளக்குகளில் எரியாமல் இருக்கும் விளக்குகளை நோட்டமிட்டான். அவ்விளக்கைச் சுற்றி இருக்கும் சிவப்புக் காகித அட்டை கம்பியால் பின்னப்பட்டிருக்கும். ஏணியை எடுத்து அதற்கு மேலே நடுவில் கையைவிட்டு விளக்கைச் சுழற்றி வெளியில் எடுத்து மாற்றிவிட நினைத்தான். அப்பொழுதுதான் வினோத் கடைக்கு வெளியே மணியத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருப்பதைத் தவுக்கான் பார்த்தான். ஏதோ திட்டி அவனை உள்ளே கடைக்குள் விரட்டினான்.
வினோத் கடைக்குள் வந்து நாற்காலியில் அமர்ந்து கொண்டான். ஆச்சி கடை மெல்ல உயிர்ப்படைந்து கொண்டிருந்தது. தவுக்கானின் முகத்தில் திட்டுத் திட்டாக வெள்ளை படர்ந்திருக்கும். அது வினோத்திற்கு ஓரு ஓவியம் போலக் காட்சியளிக்கும். தவுக்கான் பேசும்போது மூக்கு அதிரும். வார்த்தைகளை உடனே அடுக்கிப் பேசமாட்டான். உளறி உளறி அதனுள் சரியான சொல்லினைத் தேர்ந்தெடுத்து மலாய்மொழியில் அவன் பேசும்போது வேடிக்கையாக இருக்கும். ஆச்சியைப் போலச் சரளமான மலாய்மொழிப் பேச்சு அவனுக்கில்லை என்பதாலே சுராயாவிடமோ வினோத்திடமோ “ஓய்ய்ய்ய்! ஓய்ய்ய்ய்க்க்க்க்!” என அதட்டி ஒலி மட்டுமே எழுப்புவான். அப்படி ஒலி எழுப்பும்போது அவனுடைய இயலாமை கண்களில் குரூரமாக மாறியிருக்கும். சொல்லத் துடித்து வெளியே வராமல் போகும் சொல்லின் காத்திர மிகுதி அது.
ஆச்சி கடையைச் சுற்றி நான்கு சிறிய கடைகள் வைத்திருப்பவர்களும் தங்களின் வியாபாரத்தைத் துவங்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். கையடக்கத்திலான சிறிய டப்பாவில் பச்சை மிளகாயை வெட்டி அதனுள் கிச்சாபை ஆச்சி ஊற்றிக் கொண்டிருந்தார். பின்னர், வினோத்தான் அதனை ஒவ்வொரு மேசையின் நடுவிலும் வைக்க வேண்டும். அவனுக்கான வேலை இன்னும் சிறிது நேரத்தில் துவங்கிவிடும் என்பதால் வேடிக்கையை விரிவுபடுத்தினான்.
சரோஜா அக்கா மீ கோரேங் பிரட்டுவதற்கு அடுப்பைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். வினோத் கருஞ்சட்டிக்குக் கீழ் ஊசலாடிக் கொண்டிருக்கும் நெருப்பையே வெகுநேரம் கவனித்துக் கொண்டிருந்தான். சுராயா அவனை வழக்கமான இடத்தில் உட்காரும்படி கூறிவிட்டுப் குழாயடிக்குப் போய்விட்டாள். அவன் ஐந்து நிமிடம் அங்கு அமர்ந்திருப்பான், பின்னர் ஆச்சி கூப்பிட்டால் போய்விட வேண்டும். அதுவரை ‘கொய் தியோ’ சமைத்துக் கொண்டிருக்கும் ஆ மேங் தாத்தா நெருப்பையும் சட்டியையும் கொண்டு இலாவகமாக விளையாடும் அதிசயத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அந்நெருப்பைக் கவனிப்பது அவனுக்கு வாடிக்கை. சட்டியிலுள்ள கொய் தியோ எகிறிக் குதித்து நெருப்புடன் விளையாடிக் கொண்டிருந்ததை உன்னிப்பாய்க் கவனித்தான். சட்டியை ஆ மேங் தாத்தா தூக்கி அதனுள் இருக்கும் கொய் தியோவை மேலெழும்ப வைத்து நெருப்பைச் சுற்றிச் சட்டியை வட்டமிட்டு மீண்டும் அடுப்பில் வைக்கும்போது ஓர் ஆச்சரியமான நடனம் முடிவடைந்ததைப் போன்று இருக்கும்.
இந்த நகரத்தில் கொய் தியோ உணவை இலாவகமாகச் சமைப்பவர்கள் பெரும்பாலும் இரண்டாம் தலைமுறைச் சீனர்கள் வந்துவிட்டார்கள். கெப்பிட்டல் திரையரங்குத்துக்குப் பின்னால் சாலையோர வண்டியில் மிகப் பிரபலம் வாய்ந்த சுவையான கொய் தியோ சமைத்துக் கொண்டிருந்த தொப்பைக் கிழவன் இறந்ததும் அவனுடைய மகன் சமைக்கும் கொய் தியோவில் அந்தப் பழைய ருசி இல்லை என்று பலரும் அங்கிருந்து ஆ மேங் தாத்தாவின் கைப்பக்குவத்தைத் தேடி இங்கு வந்துவிட்டார்கள் என்பதால் எப்பொழுதும் ஆச்சி கடையில் கூட்டம் அலைமோதும். இவருக்கும் எப்படியும் எழுபது வயதிருக்கும் என்று சுராயா சொல்லி வினோத் கேட்டதுண்டு. அதே போலச் சரோஜா அக்காவும் முன்பு கம்பத்தில் இட்லிக் கடை வைத்திருந்தவர். பக்கத்தில் இருந்த தொழிற்சாலை ஒன்றில் நிறைய தமிழர்கள் வேலை செய்ததால் காலையில் பசியாறைக்கு அவரது இட்லிதான் அவர்களுக்கு விருந்து. ஆனால், நிலப்பிரச்சனையில் அத்தொழிற்சாலை அடைப்பட்டதும் சரோஜா அக்காவின் வியாபாரம் படுத்துக் கொண்டது. பிறகுதான் ஆச்சி கடையில் வாடகைக்கு இடம் பிடித்து இப்பொழுது இந்தியர்களின் வரவையும் இக்கடைக்கு ஊக்கப்படுத்த ஓயாமல் மீ கோரேங் பிரட்டும் கைப்பக்குவத்திற்கு மாறிவிட்டார்.
வினோத்தின் அழுப்பு ஆ மேங் தாத்தாவின் உற்சாகத்தைப் பார்த்ததும் மெல்ல மறைந்துவிடும். அவனுடைய விளையாட்டுகள் ஆரம்பிக்க இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே மிச்சம் இருந்தன. நாற்காலியிலிருந்து எழுந்து கடையெங்கும் பரவியிருந்த கரண்டியும் குச்சியும் போடும் சத்தங்களைக் கூர்ந்து கேட்டான். சத்தம் அலையலையாய்க் கூடியும் சிறுத்தும் எழும்பி அவ்விடத்தை ஒரு சீன கூத்திற்குள் ஆழ்த்திக் கொண்டிருந்தது. முகமெல்லாம் வெள்ளைப் பவுடர் பூசிக் கொண்டு குறுக்கு வெட்டான நீள்தாடி வைத்திருக்கும் ஒருவர் கையில் பெரிய வட்டமான சிங்குச்சாவைக் கொண்டு வந்து இரண்டையும் ஒன்றோடொன்று இடித்து எழுப்பும் கூத்தின் இசையைப் போலக் கடை மாறிக் கொண்டிருந்தது என வினோத் நினைத்துக் கொண்டான். பெரும் பரபரப்பான சாலையோரத்திலுள்ள கடை. வாகனங்களின் ஹார்ன் சத்தமும் எப்பொழுதும் உடன் இசைத்துக் கொண்டே இருக்கும். எல்லாவற்றுக்கும் மத்தியில் கிறங்கிக் கொண்டிருக்க, அதற்குள் நான்கு அழைப்புகள் ஆச்சியிடமிருந்து வந்துவிட்டன.
வரிசை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த குண்டு விளக்குகளின் சூட்டால் முகத்தில் ஒழுகத் துவங்கிய வியர்வையை ஆள்காட்டி விரலால் வழித்து மீண்டும் அவ்விளக்குகளை நோக்கி உதறினான். பின்னர், அந்த விளக்குகளின் உள்ளே எரியும் மஞ்சள் ஒளியைக் கவனித்தான். அதுவும் ஒரு நெருப்பைப் போலத் தெரிந்தது. கடைக்குள் இடம்போதாதால் கடையை விரிவாக்கி வெளியிலும் மேசைகள் போடப்பட்டிருந்தன. ஆச்சி இம்முறை வேகமாகக் கத்தினாள். ஆள்களின் பேச்சொலிகளும் தலைக்கு மேல் இருக்கும் வெற்றிடத்தில் விசிறிக் கொண்டிருக்கும் காற்றாடிகளும் ஆ மேங் தாத்தாவின் சட்டி போடும் ஆர்பாட்டமும் என அனைத்தையும் தாண்டி இடைஞ்சல்களுக்கு மத்தியில் சுருண்டு சரியாக வினோத்தின் காதில் ஒலித்தது.
மேரி ஒரு கையில் ‘கொய் தியோ’ சூப்பையும் இன்னொரு கையில் ‘ஜப்பனிஸ் தவ்வையும்’ எடுத்துப் போகையில் ஏற்பட்ட சமன்நிலை தடுமாற்றத்தால் ‘கொய் தியோ’ சூப் இலேசாக ஊற்றி அது தரையில் வடிந்தது. அதை ஆச்சி பார்க்காததால் மேரி அக்காள் தப்பித்தாள். வினோத் ஓர் இராணுவ வீரன் தனது மேல் அதிகாரியின் முன் நிற்கும் நிகரான தோரணையில் ஆச்சியின் முன்போய் நின்றான். கையில் வைத்திருந்த ஈரத்துணியுடன் ஆச்சி முறைத்துக் கொண்டிருந்தாள். இருளடைந்த இரண்டு குண்டு விளக்குகள் அவளுடைய இரு கன்னங்களாகத் தொங்கிக் கொண்டிருந்ததையும் வினோத் கவனித்தான். அதை ஓங்கி அடித்தால் சட்டென எரியும் என்றும் யூகித்துக் கொண்டான். ஆச்சியின் சுருள் முடி விறைத்திருந்தது. அந்த முடிக்கற்றுகளின் விளிம்பில் வண்ண வண்ணக் கிளிப்புகளைக் கொண்டு அலங்கரித்திருந்தாள். அது வினோத்திற்கு நகைப்பை உண்டு செய்து கொண்டிருந்தது. வேடிக்கை பார்ப்பதும் கற்பனை செய்வதும் அவனுக்கு யாரும் கற்றுக் கொடுக்காத திறன். அவள் அதட்டும்போது முகத்திலுள்ள அனைத்து உறுப்புகளும் கழன்று விழுவதைப் போலக் குலுங்கி அதிர்ந்தன.
“பெர்கி புவாட் கெர்ஜா…!” என்கிற அவளுடைய வழக்கமான கட்டளை அக்கடைக்கு வந்த வாடிக்கையாளர்களைப் போல ஆர்ப்பரித்து அடங்கி எங்கேயோ போய் அமிழ்ந்தது. வினோத்திற்குத் தெரிந்த மலாய் வார்த்தைகளில் அவையே மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்தன. யாராவது மலாயில் ஏதாவது திட்டினாலும் உடனே “பெர்கி புவாட் கெர்ஜாலா!” எனச் சிரித்துக் கொண்டே பதில் சொல்வான். ஆச்சி அக்கடையில் வேலை செய்யும் யாவரிடமும் அச்சொற்களை மட்டுமே சொல்லிக் கொண்டே இருப்பாள். ஆகையால், அச்சொற்களுக்கு ஏதோ சக்தி இருப்பதாக வினோத் நம்பினான். ஆச்சி பார்க்காத சமயத்தில் அங்குள்ள பூனைகளிடமும் மேரி அக்காவிடம் அந்த வார்த்தையைச் சொல்லி ஆச்சியைப் போலவே கண்களைப் பெரிதாக்கிக் காட்டுவான்.
வினோத் ஈரத்துண்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு முதலில் அம்மாவைத் தேடினான். ஆள்கள் வெளியேறுவதும் உள்ளே நுழைவதும், அழைப்பதும், திட்டுவதும், சாப்பிடுவதுமாக இருந்த அக்கடையில் சுராயா எங்கிருக்கிறாள் என அவ்வப்போது தேடிக் கொள்வது அவனது முதல் விளையாட்டு. தூரத்தில் எப்பொழுதாவது சுராயா தட்டுகளை மேசையில் அடுக்குவதற்கு வருவாள். அல்லது தட்டுகளைக் கழுவியெடுத்து அதனை வைக்க சிறிது நேரம் எழுந்து நிற்பாள். கைமுட்டிவரை சவர்க்கார நுரை சில இடங்களில் வெண்பஞ்சைப் போல ஒட்டியிருக்கும். அதுவொரு அபூர்வக் காட்சி. எப்பொழுது நிகழும் என வினோத்திற்கு ஓரளவிற்குத் தெரியும்.
முகத்தில் தீப்புண் காயங்களுடன் பளிச்சென்று சிரிப்புடன் தெரியும் சுராயாவின் முகம் வினோத்திற்குத் தனித்துவமானது. எச்சத் தட்டுகளை அதிகநேரம் காக்க வைக்கக்கூடாது என்பது ஆச்சியின் கட்டளைகளுள் ஒன்று. இல்லையென்றால் மீண்டும் “பெர்கி புவாட் கெர்ஜாலா!!!” என்று சுருதி சேர்த்துக் கத்துவாள். ஆகவே, அம்மாவைப் பார்த்துக்கொள்ள இயலவில்லை என்றாலும் மேசையைத் துடைப்பதில் வினோத் உன்னிப்பாக இருப்பான்.
தட்டுகள் எடுக்கப்பட்டதும் காலியாக இருக்கும் மேசையின் மீது தோளில் உள்ள துண்டை எடுத்து இடப்பக்கம் வலப்பக்கம் என விலாசுவான். அது சுராயா வீட்டில் துணி துவைக்கும் உத்தி. அதே போலத் துணி துவைப்பதாக நினைத்து மேசையைத் துணியாள் அடிப்பதைச் சுராயா பார்த்துவிட்டாள்.
“அங்க பாரேன் என் பையன… மேசையில துணி துவைக்கறான்…”
அதனைக் கேட்டு மேரியும் சிரித்துக் கொண்டாள்.
வினோத்தின் கண்கள் சுராயாவை நோக்கி அலையவிட்டவாறு கைகள் தட்டுகளைச் சேகரிக்கும். அம்மா அவனைப் பார்த்ததும் ஒரு மெல்லிய சிரிப்புச் சிரிப்பாள். அது வினோத்திற்குக் குதூகலத்தைத் தூண்டிவிடும். சுராயா 1994இல் வீட்டு வேலைக்காக மலேசியா வந்தாள். பின்னர், முதலாளி கொடுமையால் யோவாத்தா தோழிற்சாலைக்கு ஆப்பரேட்டர் வேலைக்குப் போய்விட்டாள். அங்குத்தான் வினோத்தின் அப்பா சுப்ரமணியம் அவளுக்குப் பழக்கமானான். இரண்டு வருடத்தில் வினோத் பிறந்தான். அவனுக்கு இரண்டு வயதிருக்கும்போது சுப்ரமணியம் சிங்கப்பூருக்கு வேலைக்குப் போவதாக இருந்தது. அங்குச் சென்று ஆறு மாதங்களில் கனவுந்து மோதி இறந்துவிட்டான்.
சுராயா மீண்டும் யாருமில்லாத நிலைக்குள் தள்ளப்பட்டாள். வினோத்தையும் முறையாகப் பதியாமல் அவனுக்கும் பிறப்புப் பத்திரம் தொடர்பான சிக்கல், பள்ளிக்கூடம் சேர்த்தல் என்று அலைந்து திரிந்தாள். சுப்ரமணியம் வீட்டார் உதவிக்கு வரவில்லை. இருவரையும் கைவிட்டுவிட்டார்கள். இப்பொழுதுவரை சுராயாவிற்கு வினோத் மட்டுமே ஆறுதல். விரைவில் மீண்டும் வினோத்துடன் இந்தோனேசியா போய்விடலாம் என்றுகூட திட்டம் வைத்திருக்கிறாள். ஆனால், அங்குச் சென்றால் தலைவிரித்திருக்கும் கடன்களை நினைத்து மனத்தை மாற்றிக் கொள்வாள். அப்பொழுதெல்லாம் என்னவென்று கேட்பது போலப் புருவத்தை உயர்த்தி வினோத் பாவனையிலேயே கேட்பான். அவள் மனம் இலேசாகிவிடும். சுராயாவின் முன் பல் வரிசை உதடுக்கு வெளியில் இருக்கும். எப்பொழுதும் சிரிப்பதைப் போன்றே தெரிவாள். சிரிக்காத நாளிலுங்கூட அவள் முகம் சிரித்தப்படிதான் இருக்கும். அதனாலேயே வினோத்தைச் சமாளித்து அவனுடைய பல கேள்விகளையும் அடக்கக் கற்றிருந்தாள்.
வினோத் மேசையிலிருந்த தட்டுகளைச் சிலவற்றை எடுத்து அடுக்கிக் கொண்டான். அதனை மேரியக்காவிடம் கொடுத்துவிட வேண்டும். வினோத் ஒவ்வொரு தட்டுகளுக்கும் பெயர் வைத்திருக்கிறான். அம்மாவிடம் அதனைச் சொல்லி அவன் கிண்டல் செய்வதுண்டு. சிலர் கீரைகளைச் சாப்பிடாமல் ஒதுக்கியிருப்பார்கள். பெரும்பாலும் அதுபோன்ற மிச்சத் தட்டுகளை வினோத் உடனே எடுத்துவிட மாட்டான். கீரைகளைத் தட்டைச் சுற்றி வைத்து அழகு படுத்துவான். அதற்குப் பெயர் பச்சைத் தட்டு. உடல் குதறப்பட்டு வெறும் முள்ளுடன் இருக்கும் மீன்கள் அல்லது எலும்புடன் இருக்கும் கோழிகள் உள்ள தட்டை அவன் ‘ஆப்பரேஷன் தட்டு’ என்பான். அறுவைச் சிகிச்சை முடிந்து மீன் இறந்துவிட்டதாக சுராயாவிடம் சொல்லிவிட்டுச் சிரிப்பான். “மா… ஆப்ரேஷன் சக்சஸ். உங்களுக்கு ஒரு மீன் பொறந்திருக்கு…” எனச் சொல்லும்போது சுராயாவும் மேரியும் சிரித்துச் சிரித்துக் கண்களில் நீர் வடிப்பார்கள்.
கோழி சூப், பன்றி சூப், கொய் தியோ சூப்புக்குக் கொடுக்கப்படுவதைக் குண்டுத் தட்டு என்பான். “கும்முன்னு இருக்கற தட்டுல எனக்குச் சூப்பு கொடுமா…” என்று இரண்டு கைகளையும் விரித்துக் காட்டுவான். உணவுத் தட்டுகள் வாழ்க்கைக்கான ஆதார வடிவம் என்பதைப் போல அதனைச் சிலசமயங்களில் தலை மேல் வைத்துக் கொண்டு நடந்து காட்டுவான். மேரியும் சுராயாவும் அதனைப் பார்த்துக் கிண்டலாகச் சிரிக்கும்போது, “சாப்படற சாப்பாட்டையும் அந்தச் சாப்பாட்டைப் போட்டுச் சாப்டற தட்டையும் விடைக்கக்கூடாதுமா…” என்று சிரிக்காமல் நகைச்சுவை செய்வான். ஆனால், அப்பொழுதெல்லாம் அவனுக்குப் பசி பெரிய பூதமாக வயிற்றுக்குள் உலாவிக் கொண்டிருப்பதும் சுராயாவுக்குத் தெரியும். இடையில் பசியென்று எதாவது வாயில் போட்டுக் கொள்வதை தவுக்கானோ ஆச்சியோ பார்த்துவிட்டால் அதற்கும் கத்துவார்கள். சிலசமயம் காற்சட்டைப் பாக்கெட்டில் மிட்டாய்களை ஒளித்து வைத்து அதனை யாருக்கும் தெரியாமல் வாயில் போட்டுக் கொள்வான்.
கடையின் நடுப்பகுதியில் நீண்டு வளர்ந்திருக்கும் மாமரத்திற்குக் கீழுள்ள மேசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தை வினோத் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். இப்படிக் கடைக்கு வருபவர்களை வேடிக்கைப் பார்த்து அவர்களுடன் இணைவதும் அவனுடைய இன்னொரு விளையாட்டு. இதுபோல யார் கடைக்கு வந்தாலும் அவர்களின் குடும்பத்தில் ஓர் ஆளாகத் தன்னைக் கற்பனை செய்து கொண்டு விளையாடுவான். அவர்களைப் பார்த்துச் சிரிப்பான். மேசையில் தலையைக் கவிழ்த்து மீண்டும் தலையைத் தூக்கி அவர்களைப் பார்த்துச் செய்கைகள் செய்வான். சிலர் அவனைக் கண்டு சிரிப்பார்கள். சிலர் அவனைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். அக்குடும்பத்தில் வினோத்தைப் போலவே ஒரு சிறுவன் இருந்தான். உருவத்திலும் வினோத் மாதிரியே சிறுத்துத்தான் இருந்தான். அவனுக்கு மட்டும் மூன்று நாற்காலியை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கொஞ்சம் உயரமாக்கி அமர வைத்திருந்தார்கள். அவனுடைய அம்மா, தாத்தா அவனுக்குச் சோறு ஊட்டும்போது வினோத் அதனைப் பார்த்துக் கைத்தட்டினான். பின்னர், உறிஞ்சிக்குழாயை எடுத்து அதில் நீரைச் சிறுக உறிஞ்சி அதனை அவன் வெளியே துப்புகையில் அவன் தாத்தா அவன் தலையில் தட்டும்போது வினோத் சிரித்தான். அவர்கள் சாப்பிடும் விதவிதமான ஒவ்வொரு சாப்பாட்டையும் வினோத் தொலைவிலிருந்தே ருசி பார்த்தான். அவற்றை அப்படியே விழுங்கி அதன் ருசியைக் கற்பனையின் உச்சத்தில் வைத்து மகிழ்ந்தான். பிறகு, எல்லோரும் சாப்பிட்டுவிட்டு வெளியே போகும்போது வினோத்தின் கவனமும் அவர்களுடன் சிறிது நேரம் போய்விட்டுக் கடைக்குத் திரும்பியது.
மீண்டும் குண்டு விளக்கு வெளிச்சத்தில் அவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்று யூகிக்க முடியாத அளவிற்குச் சிதறிக் கிடக்கும் மிச்சத் தட்டுகளை எடுத்துக் கழுவும் இடத்திற்கு முன் உள்ள பெரிய வாளியில் வைக்கச் சென்றான். அதற்கு முன்பாகத் தட்டிலுள்ள மிச்ச உணவுகளைக் குப்பைத்தொட்டியின் விளிம்பில் வைத்துத் தட்டினான். அதுவொரு சிறிதுநேரத் தாளம். சுராயாவிற்கு ஒரு சமிக்ஞை என்றுகூட சொல்லலாம். வேண்டுமென்றே பலமுறை தட்டி அம்மாவிற்கு மட்டுமே விளங்கும் ஒரு இராகத்தை உண்டு செய்வான். தட்டுகளைக் கழுவிக் கொண்டிருக்கும் சுராயா முகத்தில் தெறித்திருக்கும் சவர்க்கார நுரைகளை ஓரம் தள்ளிவிட்டு எழுந்து குப்பைத்தொட்டி இருக்கும் பக்கம் பார்ப்பாள். அந்த ஒரு தரிசனத்திற்காக வினோத்திற்குத் தட்டுகளைத் தட்டுவது மிகப் பிடித்தமானதாகும்.
சில சமயங்களில் அப்படித் தட்டும்போது தட்டுகள் குப்பைத் தொட்டியிலேயே விழுந்து விடுவதுண்டு. யாரும் பார்க்கும் முன்பே வினோத் சட்டென எடுத்துவிடுவான். அப்படிப் பெரும்பாலான தட்டுகள் குப்பைத் தொட்டியில் விழுந்தவை என்று சொன்னால் அப்பெருமை வினோத்தையே சேரும். இம்முறை தட்டித் தட்டிப் பார்த்தான். மிச்சங்கள் அனைத்தும் கொட்டியும் அம்மா தலை தூக்கவே இல்லை. தட்டுகளை வாளியில் போட்டுவிட்டு மீண்டும் மேசைப் பக்கம் ஓடினான். மேசையைத் துடைக்கும் முன்பே அடுத்த வாடிக்கையாளர்கள் வந்து உட்கார்ந்துவிட்டால் அவனுக்குத் திட்டு நிச்சயம். நினைத்ததைப் போலவே ஓர் இளம் ஜோடிகள் அம்மேசையில் வந்து அமர்ந்திருந்தனர். வினோத் சிரித்துக் கொண்டே அவர்களிடம் போனான்.
“வோய் இனி மச்சாம் கெர்ஜாக்கா?” என்று மேசையின் ஓரத்தில் இருந்த ஒரு சிறிய முள் துண்டைக் காட்டிக் கத்தினான். வினோத் அம்முள் எப்படி அவன் எடுத்துப் போன தட்டிலிருந்து கீழே விழுந்திருக்கும் எனத் திகைத்தான். வலது கையில் இரண்டு தட்டுகள், இடது கையில் ஒரு தட்டும் ஒன்றோடு ஒன்று அடுக்கப்பட்ட சில குவளைகள் போக, ஒரு தட்டின் மேல் மேசையிலிருந்து வழித்தெடுக்கப்பட்ட மிச்ச மீதிகள் அடங்கிய அவனுடைய ஈரத்துண்டு. அதிலிருந்து எப்படி ஒரு சிறிய முள் தப்பித்துக் குதித்திருக்கும் என்று மேசையைக் குறுகுறுவென்று பார்த்தான்.
“வோய் அப்பா தெங்கோக்?” என்று அவன் மீண்டும் கத்தியபோது வினோத் திரும்பி ஆச்சி இருக்கும் இடத்தைப் பார்த்தான். ‘கொய் தியோ’ புகையில் அவள் தெரியவில்லை. உடனே அந்த மீன் முள்ளைக் கையில் எடுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். இருப்பினும், அந்த இளைஞன் மீண்டும் ஏதோ திட்டுவது கேட்டது. வினோத் அம்முள்ளை உற்றுக் கவனித்தான். சாப்பிட்டுப் போட்ட மீனின் உடலிலிருந்து வெகு இயல்பாகக் கீழே விழுந்துவிடக்கூடிய ஒரு ஆகச் சிறிய முள். சுண்டு விரலில் பாதிகூட இல்லை. வினோத் அவர்கள் அமர்ந்திருந்த மேசைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் விளக்கைப் பார்த்தான். அது ஆடாமல் அசையாமல் அதே சமயம் குறைந்த வெளிச்சத்தை மட்டுமே கக்கிக் கொண்டிருந்தது.
வினோத்திற்குக் கோபம் வந்தால் உடனே பழிவாங்கிவிடுவான். அங்கு அதுவும் அவனுக்கொரு விளையாட்டுத்தான். அவ்விளைஞன் ஆர்டர் செய்திருந்த கொய் தியோ சூப்பை மேரிதான் எடுத்து வந்து கொண்டிருந்தாள். இடையில் அவளை நிறுத்தி வினோத் அந்தச் சூப்பை வாங்கிக் கொண்டான். மேரிக்கு அவன் சில சமயங்களில் இதுபோன்ற உதவிகளைச் செய்வதுண்டு. மேரியும் அவன் ஒருவனால் சமாளிக்க முடியாதபோது மேசைகளைத் துடைப்பதுண்டு. கொய் தியோ சூப்பில் ஒரு மீன் முள் இருப்பது தெரியாமல் அவ்விளைஞன் ருசித்து அதனை உறிஞ்சும்போது வினோத் சத்தமாக “பெர்கி புவாட் கெர்ஜாலா!” என்று சொல்லிக் கொண்டே சிரித்தான். இரவுக் காற்றில் மேசைகளில் போர்த்தப்பட்டிருந்த துணிகள் படபடத்து மீண்டும் அடங்கின.
ஒருமுறை மேரி தவறுதலாக ஈரத்துணியை மேசையிலேயே வைத்துவிட்டாள். அம்மேசைக்கு வந்தவன் அவளுடைய முகத்தில் அத்துணியை விட்டடித்துவிட்டான். வினோத் அவனைச் சாமர்த்தியமாகப் பழிவாங்கினான். பல மேசைகளைத் துடைத்து ஈரப்பதத்துடன் இருந்த அத்துணியை வினோத் நன்றாகப் பிழிந்தான். பிழியும்போது அதற்குக் கீழாக அம்மேசைக்குப் போகவிருந்த கோழி சூப் மங்கு இருந்ததைப் பற்றி அவ்வாடிக்கையாளனுக்கும் தெரியாது. மேரிக்கும் தெரியாது. கடையை மூடும்போது மேரியிடம் அதனைச் சொல்லி இருவரும் ஆச்சி வந்து கத்தும்வரை சிரித்துக் கொண்டிருந்தார்கள். அன்று யார் அவனிடம் கத்துகிறார்களோ அவர்கள் அனைவரும் அக்கடையில் மிகவும் பிரபலமான கொய் தியோ சூப்பின் மூலமே பழிவாங்கப்படுவார்கள். இத்திறனைக் கைவரப் பெற்றிருந்த வினோத்தால் தினமும் அவனிடம் கத்தும் ஆச்சியை மட்டும் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவள் கடையை மூடும்வரை எதுமே சாப்பிட மாட்டாள் என்பதாலேயே தொடர்ந்து வினோத்திடமிருந்து தப்பித்துக் கொண்டிருந்தாள்.
சட்டென்று வினோத்திற்குத் தெரிந்த வகுப்பு நண்பன் குடும்பத்தோடு கடைக்குள் நுழைந்தான். அவனைப் பார்த்ததும் வினோத்திற்கு ஒரே மகிழ்ச்சி. ஓடிச் சென்று அவர்கள் அமர்ந்திருந்த மேசையைச் சுத்தம் செய்தான். அவன் வகுப்பு நண்பன் அவனைப் பார்த்துக் கண் சிமிட்டினான். கையில் இருந்த ஈரத்துண்டைக் கொண்டு நாற்காலியையும் துடைத்துவிட்டுச் சிரித்தான்.
“ஏன்டா ஸ்கூலுக்கே வர்றது இல்ல?” என்று அவன் கேட்பான் என்று வினோத் எதிர்ப்பார்க்கவே இல்லை. அவனுக்குள் மகிழ்ச்சி பெருகெடுத்து முகத்தில் கொப்பளித்தது. ஆனால், அவனுடைய அப்பாவின் முகத்தில் வினோத்தைப் பார்த்ததும் அவ்வளவாக ஈயாடவில்லை. அவனை மேலும் கீழுமாகப் பார்த்தார். வினோத் சிரித்துக் கொண்டே தன் ஈரத்துண்டைக் காற்றில் சுழற்றினான். அதிலிருந்து ஈரத் துளிகள் காற்றில் கலந்து சிதறின.
“போய் வேலைய பாருடா… ஆளயும் மூஞ்சயும் பாரு…” என்று நண்பனின் அப்பாவும் அதையே சொன்னார்.
“ஆளைப் பாரு மூஞ்செ பாரு.. ஆளைப் பாரு மூஞ்செ பாரு…” என அதனை ஒரு பாடலைப் போலப் பாடிக் கொண்டே வினோத் இன்னொரு மேசைக்கு ஓடினான். சுராயா கொடுத்த ஒரு ரொட்டித் துண்டை அங்குத் தேடினான். அவன் பசி தாங்க மாட்டான் என அவளுக்குத் தெரியும் என்பதால் இரவிலேயே ஒரு ரொட்டித் துண்டை வாங்கி அவனுக்குக் கொடுத்துவிடுவாள். அவன் பசிக்கும்போது அதனைத் தேடுவான். நினைத்த மாதிரியே அக்கடையில் இருக்கும் ஒரு பூனை ரொட்டியைத் தூக்கிக் கொண்டு போயிருந்தது. வினோத் மேசைகளுக்கு அடியில் அப்பூனையைத் தேடி அலைந்தான். ஆள்கள் உட்கார்ந்திருக்கும் மேசையின் துணியைத் தூக்கியும் பார்த்தான். சிலர் அவனை அசூசையாகப் பார்த்தார்கள். சிலர் திகைத்தனர். அவர்கள் அப்படிப் பார்க்கும்போது, “மியாவ்வ்வ் மியாவ்” என்று பூனை மாதிரி செய்து காட்டி அதனை விரட்டுவதைப் போல “சூச்சுச்ச்சு” என்று அதட்டுவான்.
ஆள் இல்லாத ஒரு மேசையின் கீழ் வினோத் தேடிக் கொண்டிருந்த பூனை அவனுடைய ரொட்டியின் நெகிழிப்பையைக் கீறிக் கொண்டிருந்தது. அவனைக் கண்டதும் ரொட்டியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வேறுபக்கம் திரும்பி பையுடன் போராட ஆரம்பித்தது. வினோத் கையில் இருக்கும் துண்டைத் தூக்கி வீசியதும் பூனை அலறிக் கொண்டு வெளியேறி எதிரில் இருந்த ஒரு மேசையில் தாவிக் குதித்தோடியது. அம்மேசையில் ‘தே ஓ’ குடித்துக் கொண்டிருந்த ஒரு சீன பாட்டி ஏதோ கெட்ட வார்த்தையில் கத்தினார். ஆச்சி அங்கிருந்து பார்த்தாள். அவளுக்கு ஏதும் சரியாகப் புரியாமல் போயிருக்கலாம். மீண்டும் தன் கையில் இருந்த விசிறியை முகத்தின் வலப்பக்கத்தில் ஆட்டத் துவங்கினாள்.
அடுத்தடுத்து நிறைய பேர் வரத் துவங்கியதும் வினோத் மேசையை மும்முரமாகத் துடைத்தான். அவனுக்கு வலது கையில் உள்ள எழும்பு பலவீனமானது. சிறு வயதில் அக்கையில் ஏற்பட்ட எழும்பு முறிவுதான் காரணம். அவனால் இரண்டு கையால் ஒரே நேரத்தில் வேலையைச் செய்ய இயலாது. ஒரு கை வேலை செய்து கொண்டிருக்கும்போது இன்னொரு கை ஓய்வாக இருந்தால் மட்டுமே அவனுக்குச் சமன்நிலை கிடைக்கும். இல்லையென்றால் தட்டுகளைக் கீழே போட்டுவிடுவான்.
கடை எவ்வளவு சத்தமாக இருந்தாலும் சுராயா அதையெல்லாம் தாண்டி ஏதாவது தட்டுகள் கீழே விழுகிறதா என்று மட்டுமே கூர்ந்து கேட்டுக் கொண்டிருப்பாள். இந்தோனேசியாப் பெண்களின் உடலுக்கென்று ஒரு வலிமை இருக்கிறது. அவர்களால் வீட்டு வேலைகளில் எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் உழைக்க முடியும். சலித்துக்கொள்ளாத ஒரு பழக்கம் செயற்கையாகவோ இயற்கையாகவோ அவர்களிடம் இருந்தது. சுராயா தன் உடலின் மொத்த அசைவுகளையும் தட்டுகளைக் கழுவுவதிலேயே குவித்திருப்பாள். ஆனால், மனமெல்லாம் மேசை மேசையாக அலைந்து கொண்டிருக்கும். வினோத் தட்டுகளைப் போட்ட கதை கொஞ்சம் வேடிக்கையானது. ஒருமுறை பெரிய தவுக்கான் குழாயடியிடம் வாளியைக் கழுவிக் கொண்டிருக்கும்போது நிறைய தட்டுகளைக் கையில் கொண்டு போன வினோத் தடுமாறி அதனை அவன் தலையிலும் முதுகிலும் போட்டதும் சுராயாவும் மேரியும் வாளியில் தேங்கியிருந்த தண்ணீரை அடித்துக் கொண்டு சிரித்தார்கள். கிச்சாப், மிளகாய் சாறு என வண்ணமயமாய்ப் பெரிய தவுக்கான் தெரியும்போது ஈரப்பாவடையுடன் நின்றிருந்த மேரிக்குக் கால்கள் மகிழ்ச்சியில் துள்ளின. அந்தக் கோட்டானுக்கு இப்படி ஏதும் நடக்காதா என்று அவளும் சுராயாவும் ஏங்காத நாள் இல்லை. வினோத்தைத் துரத்திக் கொண்டு ஓடிய தவுக்கானை ஆச்சிதான் நிறுத்தினாள்.
கீறல்கள் பட்டுப் பட்டுப் பழுப்படைந்த தட்டுகளைக் கழுவித் தேய்த்து அதனை அடுக்கித் தூக்கிக் கொண்டு மேலே எழுந்து வைத்துவிட்டுக் கொஞ்சம் கால்களை உதறி முதுகை வளைத்து நெட்டெடுத்தாலும் பெரிய தவுக்கானுக்குப் பொறுக்காது. மீண்டும் அவள் உட்கார்ந்துவிட வேண்டும். அதிக நேரம் இப்படி வெறுமனே நிற்பதை அங்கிருக்கும் அவன் விரும்பமாட்டான். தவுக்கான் ஆச்சியின் மூத்த மகன். உண்மையான பெயர் தௌ காங், ஆனால் நாளடைவில் ‘தவுக்கான்’ என்றானது. கடையை அவர்கள் இருவரும்தான் கவனித்துக் கொள்கிறார்கள். உடல் வலி என்று சுராயாவும் மேரியும் கொஞ்சம் ஓய்வெடுத்தாலும் அங்கிருந்து நெகிழிக்குழாயின் வழியாக நீரை வேண்டுமென்றே அவர்கள் மீது பாய்ச்சுவான். அதுவும் சுராயாவின் உடை ஈரத்தால் ஒட்டிப்போகும்போது அதனை ஆர்வத்துடன் கண்காணிப்பான்.
“ஓய்ய்ய்ய்க் புவாட் கெர்ஜாலா!” என்று அவர்களைப் பார்த்துப் பின்னர்த் தெரியாததைப் போல வேலை மீதான அக்கறைத் தொனியுடன் கத்துவான். சுராயா முடியைக் குட்டையாக வெட்டியிருப்பாள். தட்டுகளைக் கழுவும்போது வசதியாக இருக்கும் என்றுதான் அவள் முதுகுவரை இருந்த தலைமுடியை வெட்டிக் கழுத்து நடுப்பகுதிவரைக்கும் வைத்துக் கொண்டாள். கால்களை அகட்டி அவளுடைய நீண்ட பாவாடையைக் கக்கத்தில் செருகவிட்டுப் பச்சைப் பஞ்சால் ‘சரக் சரக்’ என்று தட்டுகளைத் தேய்க்கும்போது பெரிய தவுக்கான் அவளை மட்டுமே கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பான். அது அவளுக்கும் தெரியும். வினோத்தும் பெரிய தவுக்கான் மீது ஒரு கண் வைத்திருப்பான். மிச்சமாய் இருக்கும் ஆரஞ்சு பழத்தை அவன் மீது விட்டடித்துவிட்டுத் தெரியாததைப் போல மேசையைத் துடைக்க ஆரம்பித்துவிடுவான். தவுக்கான் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுக் கெட்ட வார்த்தையில் ஏதோ கத்துவான். யாரைத் திட்டுகிறான் என்று யாருக்குமே தெரியாது. முகம், காது எல்லாம் சிவந்து நிற்கும். “ஓய்ய்ய்ய்!!!!” என்றவாறு கத்துவான்.
சில சமயங்களில் சுராயா கால்வாயின் மீதுள்ள இரும்பின் மேல் பெரிய பேசனை வைத்துத் தட்டுகளைக் கழுவிக் கொண்டிருக்கும்போது சாக்கடை அடைப்பைச் சரிசெய்வது போல அவளிடம் வந்து நின்று கொண்டு பேசனையெல்லாம் தள்ளி வைத்துவிட்டுச் சாக்கடை தடுப்பிரும்பைத் தூக்கி ஓரத்தில் வைத்துவிட்டுக் குச்சியால் குப்பைகள் அடைப்புகளைத் தள்ளிவிடுவான். அதுவே சாக்காக வைத்துச் சுராயாவை உரசிக் கொண்டிருப்பான். அவள் தூரம் தள்ளிப் போகத் தடுமாறுவாள். சாப்பிட வந்தவர்கள் யாராவது பார்த்தால் அசூசையாக உணர்வார்கள் என்பதாலே அவள் தனது அசௌகரிகங்களைப் பொறுத்துக் கொள்வாள்.
சரியாகப் பத்து மணிக்கு மேல் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் சமைத்து ஒரு பெரிய தட்டில் வைத்துவிடுவார்கள். இன்று நாசி கோரேங் சுடச்சுடக் காத்திருந்தது. வினோத் பாதி உறக்கத்தில் ஒரு மேசையில் உட்கார்ந்திருந்தான். அவனுக்குப் பசி முற்றிப் போயிருக்கக்கூடும். மேசையில் இருந்த நீருக்கு விரலால் கால்வாய் வெட்டி அதனை விளிம்புவரை ஓடவிட்டு மீண்டும் பிடித்துக் கொண்டிருந்தான். ஆள்கள் குறைந்து ஒன்றிரண்டு பேர் வீட்டிற்கு எடுத்துச் செல்ல உணவை வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஆச்சி அயர்ந்து தெம்பில்லாமல் அமைதியாகிவிட்ட சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அங்கு வைக்கப்பட்டிருந்த உணவைச் சுராயாவும் வினோத்தும் சாப்பிடத் தொடங்கினார்கள். வினோத் தன் இரு கை விரல்களையும் பார்த்தான். ஈரம் பட்டுப்பட்டு விரல்கள் வெளுத்துச் சுருங்கித் தோல்கள் கோடு கோடாய்த் தெரிந்தன. அவற்றைத் தேய்த்துத் தேய்த்து விளையாடிக் கொண்டிருந்தான். விரல்கள் அப்படி மாறும்வரை காத்திருந்து பின்னர் அதனை வருடித் தேய்த்து விளையாடுவான். அக்கடையில் அவனுடைய கடைசி விளையாட்டு அதுதான். ஆ மேங் தாத்தா தன்னுடைய அடுப்பில் சோர்ந்துபோய் மௌனமாக அசைந்து கொண்டிருந்த நெருப்பை அணைக்கத் தயாரான நேரம் சுராயாவும் வினோத்தும் கடைக்கு வெளியில் வந்தார்கள். நடந்து போகும் தூரமே வீடு. இருவரும் அச்சாலையில் நடக்கத் துவங்கினார்கள்.
“ம்மா… இன்னிக்கு என் கூட்டாளி கடைக்கு வந்திருந்தான் குடும்பத்தோட… அப்பறம் ஒரு வெள்ளி கொடுத்தான், அவுங்க அம்மா கொடுக்கச் சொன்னாங்கனு… நான் தெரியாம வாங்கிட்டன்… என்னை ஏசுவியா?”
“பரவாலடா வச்சுக்கோ… ஆரஞ்சுப் பழம் வாங்கிக்கலாம்…”
“எதுக்குமா? தவுக்கான அடிக்கியா? சரோஜா அக்காவ அடிக்கியா?”
“தவுக்கான் சரி… ஏன்டா சரோஜா அக்கா?”
“அவுங்க என்ன எத்தறாங்கமா… அன்னிக்கு ஒரு நாள் தொடையில கிள்ளனாங்க… நேத்து பின்னால எத்துறாங்க…” எனக் கூறிக்கொண்டே பிட்டத்தைக் காட்டினான்.
“ஐயோ! ஆமாம்… அதான் என் பிள்ளையோட அழகு கொறைஞ்சிருச்சி…”
எனச் சிரித்துக் கொண்டே அவனுடைய பிட்டத்தைச் சுராயா தடவிக் கொடுத்தாள். சிரிப்பொலியுடன் ஒரு சிறிய இருளில் இருவரும் மறைந்து கொண்டிருந்தனர்.
- கே.பாலமுருகன்
*“வோய் இனி மச்சாம் கெர்ஜாக்கா?” – “இப்படித்தான் வேலை செய்வீயா?
*கொய் தியோ, நாசி கோரேங் – ஒரு வகை உணவு.
*“வோய் அப்பா தெங்கோக்?” – என்ன பாக்கறே?
*பெக்கான் லாமா – பழைய பட்டணம்
ந.பச்சைபாலன்
அடுத்து…அடுத்து என்ன என்று கதை முழுக்க ஓடி வந்து, கடைசியில் வினோத்தும் சுராயாவும் நம்மைக் கடையிலேயே விட்டுவிட்டு இருளில் மறைந்து விட்டார்களே!சாப்பிடப்போனால் கவனம் என்ற சிந்தனையில் கவனம் குவிக்கும் கதை. வாழ்த்துகள்