சிறுகதை நூல் வெளியீட்டை முன்னிட்டு நேர்காணல்: ‘தனிமைத்தான் எனது ஆத்மப்பூர்வமான ஊக்கியாகும்- கே.பாலமுருகன்’

கேள்வி: உங்களின் பின்புலனைப் பற்றி சில வார்த்தைகள் ?

கே.பாலமுருகன்: கெடா மாநிலத்தில் பிறந்து இங்கேயே ஆசிரியரராகப் பணியாற்றி வருகிறேன். இதுவரை இலக்கியம், கல்வி என 17 நூல்கள் எழுதியுள்ளேன். தற்சமயம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நாடெங்கும் சிறுகதை எழுதும் பயிலரங்கை வழிநடத்தி வருகிறேன். இலக்கியத்தில் இதுவரை ஆறு விருதுகள் கிடைத்துள்ளன.

 

கேள்வி: எழுதியே ஆக வேண்டுமென்ற எண்ணம் எப்போது தோன்றியது ?

கே.பாலமுருகன்: ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது வாசிப்பின் மீது தீராத ஆர்வமும் ஈடுபாடும்  உண்டாகின. அங்கிருந்துதான் சில மாதங்களில் எழுத வேண்டும் என்ற  உள்ளுணர்வும் ஏற்பட்டது. கல்லூரியில் நடந்த சிறுகதை போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகளும் பெற்றேன். இப்படித்தான் என்னுடைய எழுத்துப் பயணம் தொடங்கியது எனலாம். அடுத்து, நான் எழுத வேண்டும் எனத் துடிப்புடன் இருந்த காலத்தில் மலேசியாவில் நடக்கும் சிறுகதை போட்டிகளில் பங்கெடுத்து சிறந்த பரிசுகளைப் பெற்று கொண்டிருந்த அண்ணன் யுவராஜன் மனத்தை இலக்கியம் நோக்கி நகர்த்திச் செல்ல அவர் அவரையறியாமலேயே  ஒரு தூண்டுகோளாக அமைந்திருந்தார்.

 

கேள்வி: தொடர்ந்து எழுத ஊக்கியாக இருந்தது எது ?

கே.பாலமுருகன்: தனிமை என்றுத்தான் சொல்ல வேண்டும். என் சுபாவமோ அல்லது என் பலவீனமோ அல்லது எனக்கு வாய்க்கும் சூழ்நிலைகளோ தெரியவில்லை. ஆனால், தனிமைப்படுத்தப்படுவேன் அல்லது தனிமையாகிவிடுவேன். எழுத்துலகிலும் நான் அப்படித்தான். ஆதலால், என் இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள மற்றவர்களைவிட எனக்குத்தான் கட்டாயம் அதிகமாக இருந்தது. ஓர் எழுத்தாளன் எழுத்தின் ஊடாகத்தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியும். ஆக, தனிமைத்தான் எனக்கு ஆத்மப்பூர்வமான ஊக்கியாக இருக்கிறது என்றே சொல்லலாம். மேலும், சில சமயங்களில் நான் சந்திக்கும் மிக முக்கியமான எழுத்தாளர்களின்  ஒருசில வார்த்தைகள் என்னை உற்சாகப்படுத்தியிருக்கின்றன. அவற்றுள் சுவாமி பிரம்மாநந்த சரஸ்வதி, எழுத்தாளர் சீ.முத்துசாமி, மேனாள் தேர்வு வாரிய அதிகாரி திரு.பி.எம்.மூர்த்தி,  எழுத்தாளர் ஜெயமோகன், பாண்டியன், மணிஜெகதீசன், திரு.பெ.தமிழ்செல்வன் ஐயா, தலைமை ஆசிரியர் திரு.அ.ரவி, எனக்குப் போதித்த விரிவுரைஞர்கள், இன்னும் பலர்  அடங்குவர். எழுத்துலகில் என்னுடன் பல சமயங்களில் பயணித்து இப்பொழுது தொடர்பில் இல்லாத அல்லது தொடர்பில் இருக்கும் பலரும் ஏதோ ஒரு சந்தர்ப்பங்களில் ஊக்கமளித்துள்ளார்கள் என்றுத்தான் சொல்ல வேண்டும். எல்லாவற்றையும் தாண்டியும் நான் தனியன் தான். கூட்டத்தில் ஒருவனாக தனித்து நிற்கின்றேன்.

 

கேள்வி: எழுத்துப் பயணத்தில் மறக்க முடியாத அனுபவங்களைச் சொல்லுங்கள் ?

கே.பாலமுருகன்: எனக்கு வாய்த்த இந்த எழுத்தென்பதே எனக்கு என்றுமே மறக்க முடியாத அனுபவத்தின் ஊற்றுத்தான். இந்த ஊற்றுலிருந்து வெளிப்படும் யாவுமே எனக்குள் ஒரு வற்றாத அனுபவக் கிடங்கை உருவாக்கிவிட்டுள்ளது. ஆகையால், எதனையும் தனித்துச் சொல்லத் தெரியவில்லை. இருப்பினும், இரண்டுமுறை தமிழ்நாட்டிற்கு எழுத்தாளர்களைச் சந்திக்க மட்டுமே போயிருந்தபோது நான் சந்தித்த மனிதர்கள், செலவிட்ட பொழுதுகள் என்றுமே என் எழுத்துலக சூழலில் இனிமையான நினைவுகளாக இருக்கும். மேலும், என் முதல் நூலைத் தங்கமீன் பதிப்பகம் சிங்கப்பூரில் வெளியீடு செய்த போது எனக்குண்டான மகிழ்ச்சியை இன்றளவும் மறக்க முடியாது.

 

கேள்வி: நல்ல எழுத்து என்றால் என்ன எனக் கேட்கப்பட்டால் உங்கள் பதில் என்ன ?

கே.பாலமுருகன்: இன்றைய டிஜிட்டல் காலத்தில் நூல் பிரசுரிப்பது சாதாரணமாகிவிட்டது. ஆகவே, நம் கைக்கு வந்து சேரும் அனைத்துமே நல்ல எழுத்தா என்கிற விமர்சனப்பூர்வமான கேள்வி தேவை என்றே கருதுகிறேன். காலத்தைத் தாண்டியும் ஒருவனால் அல்லது ஒரு சமூகத்தால் மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும்; விமர்சிக்கப்படும்; ஏதோ ஒருவகையில் காலம் தாண்டி வாழும் படைப்புகளே நல்ல எழுத்து என நான் புரிந்து கொள்கிறேன்.

கேள்வி: இதுதான் உங்கள் முதல் சிறுகதை நூலா?

கே.பாலமுருகன்: இது என்னுடைய மூன்றாவது சிறுகதை தொகுப்பு. முதலில் பாரதி பதிப்பகம் மூலம் நண்பர் சிவா பெரியண்ணனும், எழுத்தாளர் நவீனும் இணைந்து என்னுடைய முதல் சிறுவர்களுக்கான சிறுகதை வழிகாட்டி நூலை வெளியீட்டார்கள். அடுத்து, வல்லினம் பதிப்பகத்தில் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’ வெளியீடு கண்டது. எழுத்தாளர் ஷோபா சக்தியின் வழியாக அந்நூல் ஆஸ்ட்ரோலியா வரை சென்றது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்து ஒரு வாசகர் விமர்சனக் கட்டுரையும் எழுதி எனக்கு அனுப்பியிருந்தார். அவ்வகையில் வல்லினம் பதிப்பகத்தையும் வல்லினம் நண்பர்களையும் நன்றியோடு நினைவுக்கூற வேண்டியுள்ளது. இப்பொழுது, தோழி பதிப்பகம் எனது சிறந்த சிறுகதைகளைச் சிரத்தையெடுத்து அடையாளம் கண்டு வெற்றிகரமாக வெளியீடு செய்கிறது. அதற்கு யுவராஜன் அவர்களுக்கும் கவிஞர் தோழிக்கும் நன்றி சொல்லியாக வேண்டும்.

 

கேள்வி: இறந்தகாலத்தின் ஓசைகள் தொகுப்பின் பின்புலன் என்ன ?

கே.பாலமுருகன்: கடந்தாண்டு நானும் சு.யுவராஜன் அவர்கள் சேர்ந்து இத்தொகுப்பிற்கான சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினோம். சிறுகதைகள் பொறுத்தவரையில் சு.யுவராஜன் மிகவும் கறார்த்தனமான விமர்சனம் கொண்டவர். அவருடைய சிறுகதை வாசிப்பு அவருடைய வாசிப்பு இரசனையை மேம்படுத்தியிருந்தது. ஆகவே, இந்தத் தொகுப்பிற்கான என்னுடைய சிறுகதைகளைத் தேந்தெடுப்பதில் எந்தச் சமரசமும் இல்லாமல் இருவரும் செயல்பட்டோம். அப்படிக் கிடைக்கப்பெற்ற என்னுடைய வாழ்நாளில் நான் எழுதிய மிகச் சிறந்த ஒன்பது சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ஒரு சிறுகதை கொஞ்சம் அமானுஷமாகவும் பிரிவேக்கத்தின் ஆழத்தை மர்மமான முறையிலும் வெளிப்படுத்திய கதையாகும்.

 

கேள்வி: புதிதாக நல்ல படைப்புடன் எழுதும் புதியவர்கள் உள்ளனரா ? அவர்களைப் பற்றி.

கே.பாலமுருகன்: கூலிம் தினகரன் இளம்வயதிலேயே மிகவும் மேம்பட்ட வாசிப்பும் சிந்தனை முதிர்ச்சியும் உள்ளவராகக் காண்கிறேன். அவர் நிறைய எழுதும்போதுதான் அவருக்கான தளத்தைக் கண்டடைய முடியும் என நினைக்கிறேன். மேலும், சுங்கை பட்டாணி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிலும் அர்விந்த் என்கிற மாணவர் ஒருவரை என்னால் அடையாளம் காண முடிகிறது. அவருடைய எழுத்தில் இன்னும் ஆழமும் முதிர்ச்சியும் தேவை என்றாலும் அவருடைய வாசிப்பின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. நான் எப்படி வாசிப்பினூடாக என்னையும் என் எழுத்தையும் கண்டடைந்தேனோ அதே போல இன்று அர்விந்த் குமார் வாசிப்பின் மீது தீராத காதலுடன் இருப்பதைப் பார்க்கும்போது நம்பிக்கையும் எதிர்ப்பார்ப்புகளும் கூடுகின்றன. தொடர்ந்து எழுதி வரும் உதயகுமாரி, கங்காதுரை, முனிஸ்வரன் குமார் போன்றவர்களும்  மேலும் நிறைய எழுதி எழுதி சிறுகதை சூழலில் தனக்கான வலுவான இடத்தை உருவாக்குவார்கள் என நம்புகிறேன்.

 

கேள்வி: அடுத்த உங்களின் திட்டங்கள் ?

கே.பாலமுருகன்: இவ்வாண்டு தோழி பதிப்பகம் மூலம் இச்சிறுகதை நூலும் சென்னையில் மோக்லி பதிப்பகத்தின் வழியாக ஒரு சினிமா கட்டுரை நூலும் வெளிவந்தன. இனி, அடுத்தாண்டு ஒரு நாவல் எழுதும் திட்டமுண்டு. இலங்கை படைப்பாளிகளின் சிறுகதை விமர்சன நூலையும் கொண்டு வரத் திட்டமுண்டு. அடுத்து, நாடெங்கிலும் உள்ள சிறுவர்களைச் சந்தித்து அடுத்த தலைமுறையில் சிறந்த படைப்பாளிகள் உருவாகச் செயல்பட வேண்டும் என்கிற திட்டமும் உள்ளது.

 

கேள்வி: நூல் வெளியீடு குறித்த தகவல்கள்.

கே.பாலமுருகன்: வருகின்ற ஆகஸ்ட் 19ஆம் திகதி சுங்கை பட்டாணி ‘பாலி மண்டபத்தில்’ இறந்தகாலத்தின் ஓசைகள் சிறுகதை நூல் வெளியீடும் கூலிம் தியான ஆசிரமத்தின் தோற்றுனர் தவத்திரு சுவாமி பிரம்மாநந்த சரஸ்வதியின் ‘தனியன்’ வேதாந்த கட்டுரை நூல் அறிமுகமும் மாலை மணி 6.00க்கு நடைபெறவிருக்கின்றது. கெடா மாநில கல்வி இலாகாவின் மொழித்துறை துணை இயக்குனர் திரு.பெ.தமிழ்செல்வன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கவிருக்கிறார். நாட்டின் மூத்த எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்கள் நூல் விமர்சன உரையை வழங்கவிருக்கிறார். மேலும், கூடுதல் சிறப்பம்சமாக கோலா மூடா/யான் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட சிறுகதை எழுதும் போட்டிக்கான பரிசளிப்பு அங்கமும் இடம்பெறவிருக்கின்றது.

கேள்வி: இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் எந்த வகையில் சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் என நினைக்கிறீர்கள்?

கே.பாலமுருகன்: கண்டிப்பாக இத்தொகுப்பு இதுவரை சிறுகதை தொகுப்புகளில் கையாளப்படாத ஒருசில சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும். வாசிக்கும்போது அல்லது நூல் வெளியீட்டுக்குப் பிறகு அவை வாசகர்களாலும் விமர்சகர்களாலும் முன்னெடுக்கப்படும் என நினைக்கிறேன். குடும்பத்திற்குள்ளும் சமூகத்திற்குள்ளும் கண்டுகொள்ளப்படாத ஒரு வாழ்வை இக்கதைகள் மிகவும் நூதனமாகவும் கூர்மையாகவும் உங்களுடன் பேசும் என நம்பிக்கையோடு கூறுகிறேன். இலக்கியத்தின் மீது ஆர்வமுள்ளவர்கள், தமிழின் மீது அன்புடையவர்கள், அதற்கும் மேல் இளம் தலைமுறை எழுத்தாளர்களின் முயற்சிகளைப் பாராட்ட விரும்புபவர்கள் தவறாமல் இந்நூலை வாங்கி ஆதரிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

 

நேர்காணல்: சு.காளிதாஸ்

 

About The Author