சிறுகதை: டீவி பெட்டி
அப்பா கொண்டு வந்து வீட்டின் வரவேற்பறையில் வைக்கும்வரை என்னால் அதை யூகிக்க முடியவில்லை. முன்கதவை இடித்துத் தள்ளிக் கொண்டு உள்ளே வரும்போதே ஏதோ கனமான பொருள் என்று மட்டும் தெரிந்தது.
“ம்மா! இந்தா டீவி பெட்டி,” என அப்பா உரக்க சொன்னதும் வீடே விழித்துக் கொண்டது. பாட்டியின் கண்கள் அகல விரிந்து மூடின.
பாட்டி பெரியப்பா வீட்டில்தான் இருந்தார். மூன்று வாரத்திற்கு முன் மயங்கி கீழே விழுந்து கால் உடைந்து போனதும் இங்கே வந்து விட்டார். பெரியப்பா அப்படித்தான். அவருக்கு உடல் சுகமுள்ள பாட்டித்தான் தேவை.
பாட்டிக்கு இரண்டு கிழட்டு இறக்கைகள் முளைத்துக் கொண்டன. சமையலறையிலிருந்து இதுவரை அவர் முகத்தில் காணாத பூரிப்புடன் நொண்டி நொண்டி வந்தார். பழுப்பு நிறப் பெட்டிக்குள் இருந்த தொலைகாட்சியை அப்பா வெளியில் எடுக்கும்போது கடவுளே வீட்டுக்குள் வந்துவிட்டதைப் போல எல்லாரும் மலைத்து நின்றோம்.
அம்மா வைத்திருந்த ஒரு பழைய ‘சிங்கர்’ வானொலித்தான் வீட்டில். அதை அப்படி யாரும் பொருட்படுத்த மாட்டோம். சாப்பிட்டுவிட்டு சமையலறைக்குப் போகும்போதும், கழிப்பறைக்குப் போகும்போதும் அதில் ஏதாவது ஒரு பழைய பாடல் ஓடிக் கொண்டிருப்பது சன்னமாகக் கேட்டுத் தொலைக்கும். அவ்வளவுத்தான். சில நேரங்களில் அம்மா அதைத் தூக்கிக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருப்பார். பாடல் கிடைக்கவில்லை என வானொலியை வானத்தை நோக்கி காட்டியப்படி எதையோ தேடுவார்.
“மேல என்ன தேடற?” என அப்பா கேட்டால், “ஏரியல் கிடைக்க மாட்டுது,” என மிகவும் அழுப்புடன் கூறுவார்.
மற்றப்படி தொலைகாட்சி என்றால் பக்கத்து வீட்டு வேடியப்பன் தாத்தாதான் ஒரே அடைக்கலம். அவர் வீடு அப்பொழுதே கொஞ்சம் ஏற்றத்தில் கட்டப்பட்டிருக்கும். அந்த வரிசையில் அவர் வீடு மட்டும் வித்தியாசம். வெளியே வாசலில் படிகள் இருக்கும். அதில் ஏறி நின்று பார்த்தால் உள்ளே வேடியப்பன் தாத்தா வீட்டில் தொலைகாட்சி தெரியும். பல நேரங்களில் படத்தில் வரும் வசனங்கள் விளங்காது. அவர் சத்தத்தையும் கூட்டி வைக்கமாட்டார். வெளியிலிருந்து எல்லோரும் பார்த்து ‘உச்சு’ கொட்ட வேண்டும் என்பதற்காகவே நடு வீட்டில் தொலைகாட்சியை வைத்திருப்பார். அவரே நடு வீட்டில் உட்கார்ந்து 24 மணி நேரமும் பல்லிழித்துக் கொண்டிருப்பதைப் போல அவர் வீட்டில் எந்நேரமும் தொலைகாட்சி ஓடிக் கொண்டிருக்கும். அவருக்கு திருவிழாவில் படம் ஓட்டும் நினைப்பு.
முதன் முதலில் ஞாபகம் அறிந்து அம்மாவுடன் அப்படிக்கட்டில் அமர்ந்து இரஜினிகாந்த் நடித்த மன்னன் படம் பார்த்தேன். அதன் பிறகு 8.00 மணியாகிவிட்டால் அம்மா படம் பார்க்கப் பக்கத்து வீட்டு படிக்கட்டுக்கு அழைத்துப் போய்விடுவார்.
பிறகொருநாள் என்னையும் அம்மாவையும் வேடியப்பன் உள்ளே அழைத்துப் படம் பார்க்கவிட்டார். அது சத்யராஜ் நடித்த ஒரு படம். பெயர் ஞாபகத்தில் இல்லை. அன்றுத்தான் அம்மா என்னுடன் படம் பார்த்த கடைசிநாள். அதன் பிறகு அம்மா அங்கு வருவதையோ அல்லது படிக்கட்டில் அமர்ந்து கொண்டு படம் பார்ப்பதையோ நிறுத்திக் கொண்டார். நானும் அக்காவும் தான் போய் ஏதாவது ஒரு படத்தைப் பார்த்துவிட்டு வருவோம். இரவு கொஞ்சம் நேரம் தூங்காமல் அப்படத்தில் விளங்காமல் போன வசனங்களை நானும் அக்காவும் பேசிப் பார்ப்போம்.
பாட்டி காலுடைந்து வந்த நேரம் வீட்டிற்கு ஒரு தொலைகாட்சி தேவைப்பட்டது. பாட்டிக்குத் தெரிந்த ஒரே பொழுதுபோக்கு ‘டீவி பெட்டித்தான்’. வந்த நாளிலிருந்து ஒரு பத்து முறையாவது ‘டீவி பெட்டி’ கதையைச் சொல்லிவிடுவார். பெரியப்பா வீட்டில் தொலைக்காட்சி இருப்பதால் அவருக்குச் சௌகரியமாகப் போய்விட்டது.
“ஏன்டா வேலு! ஒரு வீடுன்னா டீவி பெட்டி இருக்க வேணாமா?”
“என்னம்மா வீடு இது? ஒரு டீவி பெட்டி சத்தம் இல்ல?”
இப்படி ஏதாவது ஒன்றைச் சொல்லிச் சொல்லியே அப்பாவை இம்சித்துக் கொண்டிருந்தார். அப்பொழுதுதான் முதன் முதலில் எங்களுக்கு வீட்டில் தொலைகாட்சி இல்லாதது பெரும் பாவம் எனத் தோன்றியது.
“சந்தோசமா மா? டீவி பெட்டி! இனிமேல இது வீடுதானே?” எனச் சொல்லிவிட்டு அப்பா சிரிப்பை உதட்டுக்கு மத்தியில் அடக்கினார்.
வரவேற்பறையில் இருந்த ஒரு மேசையை அப்பா தொலைகாட்சியைத் தாங்கி நிற்கப் பயன்படுத்தினார். அந்த மேசையும் ஒரு சிறிய பொருளை வைத்தாலே பயங்கர ஆட்டம் போடும். ஆகையால், நாளிதழ்களைக் குவித்து அதன் காலுக்கு முட்டுக் கொடுத்தார். பாட்டி தன் உடைந்த காலை ஆயாசமாக நாற்காலியின் மீது வைத்துக் கொண்டே அப்பா செய்யும் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தார். அப்பா அவருடைய ‘முட்டிக் கிழிந்த ஜீன்ஸை’ இழுத்துவிட்டுக் கொண்டார். முட்டிப் பகுதியில் இரண்டு பக்கமும் அந்த ஜீன்ஸ் கிழிந்திருக்கும். எனக்குத் தெரிந்து அப்பாவிடம் இருக்கும் ஒரே ஜீன்ஸ் அதுதான். வெளுத்து நிறமிழந்தும் அப்பா அதை சித்ரவதை செய்து கொண்டிருக்கிறார்.
தொலைகாட்சி சதுர வடிவத்தில் இரு முனைகளுக்கும் இடையில் கொஞ்சம் வளைந்திருந்தது. அதன் திரை பளபளப்புடன் காட்சியளித்தது. கோலாலம்பூரிலிருந்து வருடம் இரண்டுமுறை எங்கள் வீட்டுக்கு வரும் பெரிய அத்தையைப் போல குறையாத மினுமினுப்புடன் தொலைகாட்சி தெரிந்தது.
பாட்டி முகத்தில் மகிழ்ச்சி கலந்த பரித்தவிப்பு.
“சீக்கிரம் போடுடா வேலு,” என அப்பாவைத் தொடர்ந்து துரத்திக் கொண்டிருந்தார்.
“இரு மா. ஏரியல் சரி பண்ணனும். உடனே படம் வந்துருமா?” என அப்பா அலட்டிக் கொண்டே தொடர்ந்தார்.
பாட்டியின் சிரிப்பு வாய்க்குள்ளேயே அலம்பியது. கம்பீரமும் சிரிப்புமாக எல்லோரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த நாளிலிருந்து அவர் அப்படி இருந்ததில்லை. எதையோ இழந்துவிட்ட பார்வையும் அதிகம் பேசாத மௌனமாகவே வீட்டில் காணப்பட்டார்.
“சரசு! இனிமேல ராத்திரிலே என்னை விட்டுடுங்க. டீவி பெட்டி பாத்துட்டுத்தான் படுப்பேன், சொல்லிட்டேன்,”
பாட்டிக்கு இரண்டு பிள்ளைகள்தான். அப்பாவிற்கு அத்தனை வசதியில்லாததைக் காட்டியே பெரியப்பா பாட்டியை அவருடனே வைத்துக் கொண்டார். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை பாட்டியைப் பார்க்க பஹாவ் போவோம். பாட்டி அப்பொழுதெல்லாம் அதிகம் பேச மாட்டார். பெரியப்பாவிற்கு அது பிடிக்காது. பாட்டியின் குடுமி பெரியப்பாவின் கையில் இருந்தது.
நாங்கள் பஹாவ் போனால், பாட்டி குதூகலமாகி எங்களிடம் பேச நினைப்பார். ஆனால், நாங்கள் போன பிறகு பாட்டியைப் பெரியப்பா கடிந்து கொள்வார் எனப் பாட்டிக்குத் தெரியும். அதனாலேயே நாங்கள் போகும்போதெல்லாம் தொலைகாட்சியை மட்டுமே பாட்டி பார்த்துக் கொண்டிருப்பார். அவருடைய கவலை தொய்ந்த முகத்தை யாருக்கும் காட்டமாட்டார்.
அப்பா தொலைகாட்சியைத் திறந்தார். வெறும் வெள்ளைப் பொறிகள் மட்டுமே தெரிந்தன. ஏரியலைச் சரிப்படுத்திப் பார்த்தார். அப்பொழுதும் எந்த மாற்றமும் இல்லை.
“டேய்..நான் கூரையில ஏறி மேல உள்ள ஏரியல சரி பண்றேன். படம் வந்துச்சுன்னா சொல்லு, சரியா?”
அப்பா ஏணியைக் கொண்டு கூரைக்கு ஏறினார். நான் தொலைகாட்சியின் முன்னே நின்று கொண்டேன்.
“டேய்!!! படம் வருமா வராதாடா?”
பாட்டியின் புலம்பல் வெள்ளைப் பொறிகளை விட சத்தமாகக் கேட்டது. வெள்ளைப் பொறியில் எந்த மாற்றமும் இல்லை. அப்பா மேலே ஏதேதோ செய்து கொண்டிருந்தார். ஏரியலை நகர்த்தினார்; வளைத்தார். தொலைகாட்சியில் எந்தப் படமும் வரவே இல்லை.
“ப்பா! ஒன்னுமே வரலெ”
வியர்த்த உடலுடன் அப்பா கீழே இறங்கி வந்தார். தொலைகாட்சியை வெகுநேரம் பார்த்துக் கொண்டே ஏதோவொரு சிந்தனையில் ஆழ்ந்தார். பாட்டி நாற்காலியிலே அசந்து விட்டார். கேட்டுக் கேட்டு அழுத்தக் குழந்தையின் தோற்றம். எப்பொழுது தூங்கினார் எனத் தெரியவில்லை. மீண்டும் எழுந்தால் ‘டீவி பெட்டி’ கதையைத் தொடங்கிவிடுவார்.
அப்பா தொலைகாட்சியின் தலையில் இரண்டுமுறை தட்டிப் பார்த்தார். அவர் தட்டுவதிலேயே அவருடைய எரிச்சல் தெரிந்தது. பிறகு, வெளியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் மோட்டார் கிளம்பி போகும் சத்தம் மட்டும் கேட்டது.
இரவு சாப்பாட்டிற்கு அம்மா பாட்டியைத் தயங்கியபடியே எழுப்பினார். பாட்டி எழுந்ததும் தொலைகாட்சியைத்தான் பார்த்தார்.
“டேய் எங்கடா படம்? என்னடா இன்னுமா வரலெ?”
அப்பா அப்பொழுது வீட்டில் இல்லாததால் பாட்டியின் கேள்விக்கு யாரும் வாயைத் திறக்கவில்லை. கொஞ்ச நேரத்தில் வீட்டு அழைப்பேசி அலறியது. பெரியப்பா அவருடைய கறாரான குரலில் வழக்கம்போல உணர்ச்சியில்லாமல் பேசினார். அம்மா பேசிவிட்டு எங்களையெல்லாம் பார்த்தார்.
“ம்மா! பெரியவரு உங்கள நாளைக்குக் காலைலெ கிளம்பி இருக்க சொன்னாரு. வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறாராம்…” எனத் தெம்பில்லாமல் உச்சரித்தார்.
பாட்டி தோளிலிருந்து விலகியிருந்த தன்னுடைய கலர் துண்டை எடுத்து மீண்டும் தோளில் போட்டுக் கொண்டார். பின்னர், எழுந்து நின்று தொலைகாட்சியின் திரையில் தெரியும் அவருடைய முகத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
“பாட்டி, சாப்பிடுங்க. மணியாச்சி,”
என்னுடைய அழைப்பை அவர் பொருட்படுத்தவில்லை. தொலைகாட்சியின் திரையையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
“பாட்டி அதுல என்ன படமா தெரியுது? வெறும் டீவிய அப்படிப் பாக்குறீங்க?”
பாட்டியின் முகத்தில் திடீர் புன்னகை. பிறகு மெல்லிய சிரிப்பாக மாறியது. தன் இடுப்பை ஆட்டியபடியே மெதுநடனம் செய்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அடிப்பட்ட காலைப் பற்றி பொருட்படுத்தாமல் பாட்டி ஆடினார்.
“டேய், வாடா வந்து பாருடா. பாட்டி டீவி பெட்டில நடிக்கிறேன், எப்படி ஸ்ரீதேவி மாதிரி இருக்கனா?”
எனக்குச் சிரிப்பும் ஆச்சரியமும் திணறின. பாட்டி மீண்டும் இரண்டு பக்கமும் இடுப்பை ஆட்டிக் கொண்டே சுழன்றார்.
“இதென்ன கூத்து?”
அம்மா பயந்துவிட்டார். பாட்டி விழுந்துவிடுவார் என்கிற பயம்.
“ஏய் சும்மா கத்தாதெ பிள்ள… வந்து ஆடு வா…வா, டீவி பெட்டில தெரிவோம் பாரு…”
ஒன்றுமே இல்லாத வெறும் தொலைகாட்சியின் முன்னே பாட்டி பலம் கொண்டு ஆரவாரத்துடன் கத்திக் கொண்டே ஆடிக் கொண்டிருந்தார்.
- கே.பாலமுருகன்
காந்தி முருகன்
நடுத்தர வர்க்கத்தின் உளவியலைப் படம் பிடித்து காட்டிய வரிகள்..