சிறுகதை: ஒரு ‘லைக்’ போடலாம்

அக்கா யாரோ தன்னுடைய முகநூல் போன்று இன்னொரு கணக்கைத் திறந்துவிட்டுள்ளார்கள் என்ற புகாரைப் பதிவிட்டிருந்தார். அலுவலகம் தொடர்பான  கடிதம் தயார் செய்ய வேண்டும் என உட்கார்ந்தேன். ஆனால், ஒரு வேலையைத் தொடங்கி எழுதி முடிப்பதற்குள்  பத்துமுறையாவது முகநூல் சென்று பார்த்துவிட்டு வரும் பழக்கம் எப்பொழுது தொற்றிக் கொண்டதென தெரியவில்லை. இடைவெட்டாக அறிவில் பதிந்து போனது. அலாரம் அடித்து எழுப்பிவிடுவதைப் போன்று ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை முகநூலைத் திறந்து உள்ளே உலாவிவிட்டு நாம் போட்டப் பதிவுகளுக்கு எத்தனை ‘லைக்’க்குள் வந்துள்ளன என ஆராயாமல் இருக்கவே முடியாது. 5000 நண்பர்களைப் பகட்டுமேனிக்கு என் கணக்கில் இணைத்துக் கொண்ட பின், இன்னும் ஏற்காமல் இருக்கும் நண்பர்களின் முகநூல் கணக்கும் காத்திருப்பில் நிரம்பிக் கிடந்தன. நேற்று புதிதாகக் கட்டப்பட்ட மேம்பாலத்தில் எடுத்த ‘தம்படம்’ முகநூலில் ஏற்றி ஐந்து மணிநேரம் ஆகியும் இன்னும் 67 லைக்குகளைக்கூட கடக்காமல் தவித்துக் கொண்டிருந்தது. மனத்தில் பேரேக்கம் தோன்றி அச்சமும் ஏற்பட்டது.

இரவு 8.15க்கு அப்படத்தைப் பதிவேற்றம் செய்தேன். ஒருவேளை அது எல்லோரும் வேலை முடிந்து களைப்பாக இருக்கும் நேரமாகக்கூட இருக்கலாம். சட்டென முகநூல் வாழ்க்கை அப்படியல்ல; அது எந்நேரமும் இயங்கிக் கொண்டிருக்கவே செய்கிறது என்று ஒரு ‘லைக்’ தோன்றி ஞாகபப்படுத்தியது. மனோகரன். நான் என்ன பதிவு போட்டாலும் அவன் படிக்க மாட்டான் என்று எனக்குத் தெரியும். ஆனால், கடமைக்கு ‘லைக்கை’ ஓர் அழுத்து அழுத்திவிடுவான். நானும் வெளியில் எங்காவது பார்த்தால் அவனை விடமாட்டேன். எங்களின் வாக்குவாதம் கடைசியில் எண்ணிக்கை ஒப்பீட்டில் வந்து நிற்கும். அவன் பதிவுகள் பலவற்றிற்கு நான் ‘லைக்’ போடாமல் விட்டதைச் சொல்லிக் காட்டிவிட்டு அவன் நேர்மையை என்னிடம் நிருபிப்பான். கைப்பேசியில் தயாராக இருக்கும் முகநூல் பக்கத்தைத் திறந்து அவன் போட்ட ‘லைக்’ வரலாற்றைக் காட்டுவான். உண்மையில் பலவேளையில் எனக்கே பிரமிப்பை உருவாக்கிவிட்டுப் போய்விடுவான். அவனுக்காகவே தைரியமாக பதிவுகள் போடத் தொடங்கினேன். அவனும் அவனைச் சார்ந்தவர்களும்  நிச்சயம் எனக்கு ‘லைக்’ போடுவார்கள் என்கிற நம்பிக்கை கூடியது.

அன்று என்னவோ அவ்வளவு தாமதாக முகநூல் வந்து ‘லைக்’ போட்டான். அத்தனை நிமிடங்கள் வெறுமையாக இருந்த என் முகநூல் அவன் வருகைக்குப் பின் மேலும் ஒரு சிலர் உள்ளே நுழைந்து ‘லைக்’ செலுத்தி எனக்கு ஊக்கமளித்துக் கொண்டிருந்தார்கள். உடனே அடுத்த பதிவாக ‘ஓஷோவின்’ ஒரு வாசகத்தைப் போட்டேன். அடுத்த கணமே அக்காவுடைய கருத்துப் பதிவாகும் என்று தெரியும். பெரும்பாலும் பெண்கள் நல்ல வாசகர்கள். நிதானமாக பல நாவல்களைக்கூட இடைவிடாமல் வாசித்து முடிக்கக்கூடிய ஆற்றல் உள்ளவர்கள். ஆண்களிடம் தொற்றிக் கொண்டே வரும் அவசரம் அவர்களிடம் அத்துணைச் சீக்கிரத்தில் பார்த்திட முடியாது. என் அக்கா மிகச் சிறந்த வாசகி. ஒரு நாவலைப் படித்துமுடித்துவிட்டு அது கொடுக்கும் எந்தத் தாக்கங்களையும் தர்க்கங்களையும் நூதனமாகக் கடந்து அடுத்த நாவலுக்குள் நுழைந்திருப்பாள். நான் அக்காவைச் சிறுகச் சிறுக எனக்கே தெரியாத ஒரு பிரம்மிப்பிற்குள் கொண்டு வந்திருந்தேன். பின்னர், அவள் திருமணம் ஆகி பினாங்கிற்குப் போன பிறகு இரண்டே ஆண்டில் முகநூல் கணக்கைத் திறந்தாள். நான் போடும் எல்லா பதிவுகளுக்கும் ‘லைக்’ போடும் கூட்டத்திற்குத் தலைவியானாள். மேலும், எனது படங்களுக்கு அதீத விசுவாசியாக மாறி அதிகாரமும் செலுத்தத் துவங்கினாள். எந்தப் படத்தைப் பதிவேற்றினாலும் உடனே அது சரியில்லை இது சரியில்லை என்று கிளம்பிவிடுவாள்.  மாமா கொஞ்சம் அகம்பாவம் கொண்டவர். அப்பாவிற்கும் அவருக்கும் உண்டான ஒரு தீபாவளி சச்சரவிற்குப் பின் அக்காவும் வீட்டுப் பக்கம் வருவது குறைந்துவிட்டது.

“டேய்ய்! எவன்னு தெரில என் முகநூலை ‘ஹேக்’ செஞ்சிட்டாங்க. பாத்தியா?… சரி, இந்தத் தைப்பூசத்துக்குப் பெனங்க்கு வந்துரு. அப்பாகிட்ட சொல்லாத… என் போட்டோலாம் எடுத்துட்டானுங்கள ஏதாச்சம் செஞ்சிருவானுங்களா?” என்ற அவளுடைய குறுஞ்செய்தியுடன் முகநூல் மடல்பெட்டி  கைப்பேசியின் திரையின் ஓரத்தில் உதித்தது.

“எதுமே இப்போ பாதுகாப்பு இல்ல. இண்டர்னேட் என்பது ஒரு வெட்டவெளி குளியல் மாதிரி… உன்னை யாரு முகநூல் தொறக்க சொன்னது?” என்கிற எனது கேள்வியை மடல்பெட்டியில் அனுப்பினேன்.

“நான் வேற என்ன செய்றதுடா? ஏய்.. இரு இரு… சீக்கிரம் சொல்லு… ஆபத்தா?” என்கிற செய்தியுடன் ஓர் அதிர்ச்சி ‘ச்மைலி’ முகமும் உடன் வந்தது. இப்பொழுதெல்லாம் அவள் நாவல்கள் வாசிப்பதில்லை. சொல்லப் போனால் அவள் சேகரித்து வைத்திருந்த அனைத்து நாவல்களும் அவள் விட்டுப்போன அலமாரியில் அப்படியே கிடந்தன. அதில் ஏதாவது ஒரு பக்கத்தில் அவளுடைய வாசம் இன்னும் இருக்கக்கூடும். பெரும்பாலும் அந்த அலமாரியைத் திறப்பதும் இல்லை. வீட்டில் பல பொருள்கள் அப்படித்தான் வெறுமனே காட்சிப்பொருளாக மட்டுமே இருக்கின்றன. மீண்டும் முகநூலில் இரண்டு ‘லைக்’க்குள் வந்தன. உள்டப்பியில் அக்கா காத்திருந்தாள். அவளுக்குப் பதில் அனுப்பிவிட வேண்டும். இல்லையென்றால் என்னையே தாக்கி ஒரு பதிவு போடுவாள்; அதற்கும் நான் ‘லைக்’ போட்டுத் தொலைய வேண்டும்.

‘அண்ணன் என்னடா தம்பி என்னடா, எல்லாமும் வேடம்தானே’ இது அவளுடைய பிறந்தநாளுக்கு நான் சரியாக 12 மணி நள்ளிரவில் அவளை வாழ்த்திப் பதிவிடாமல் விட்டதன் விளைவு. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் வாழ்த்திக் கொண்டிருக்கும் மற்ற முகநூல் நண்பர்களுக்கு நன்றி கூட சொல்லாமல் இப்பதிவைப் போட்டு என்னிடமே ‘லைக்’ வாங்கினாள். ஆக, தைப்பூசத்திற்கு முதல்நாளே வந்துவிடுகிறேன் என்று பதிலளித்ததும் என் ஓஷோ பதிவை அவளுடைய முகநூலில் பகிர்ந்தாள். “அது ஹேக் இல்ல… உன்னோட படங்கள், பேரு வச்சு உன்னோட முகநூலை ‘க்ளோன்’ செய்றது… ரிப்போர்ட் செஞ்சிரு. மத்தவங்களயும் ரிப்போர்ட் பண்ண சொல்லு,” என்று கூறிவிட்டு அவளுடைய பொய்யான கணக்கை நானும் புகார் செய்தேன். உடனே, அவளுடைய முகநூல் படத்தை ஒரு பூச்செடி படமாக மாற்றிக் கொண்டாள்.

பூச்செடிகளுடன் யாராவது பேசிக் கொண்டிருந்தால் நமக்கு என்ன தோன்றும்? பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பையன் அக்காவைப் பார்த்துக் ‘கிறுக்கி’ என்று கத்துவான். எரிச்சல் வந்தாலும் அதனை அக்காவிடமே காட்டுவேன். ஏன் செடிகளுடன் பேசி என் மானத்தை வாங்குகிறாய் என அப்பாவைப் போலவே அவளிடம் கத்துவேன். அக்கா ஒரு குழந்தையைப் போல பூச்சாடியைச் சுவரின் மீது வைத்துவிட்டுச் சிரிப்பாள். கொஞ்சமும் பதற்றமே இல்லாத சிரிப்பு அது. வந்த கோபமெல்லாம் எங்குப் போய் கரையும் என்று கணிக்க முடியாது. குழாயிலிருந்து பூவாளியில் நீரைக் கொண்டு வந்து பிசகாமல் ஊற்றுவாள். தலையைத் துவட்டி முடித்த செடிகள் ஓரக்கண்ணில் அக்காவைப் பார்க்கும். செடிகளுக்கு  முகம் இருந்ததை அன்றுதான் நான் பார்த்தேன்.

அக்கா மொட்டைமாடியின்  படத்தை போட்டு என்னையும் ‘டேக்’ செய்தாள். வெள்ளைப் பல்லிங்கால் ஆன இரண்டு நாற்காலிகள். அதற்கு நடுவே நீர் வடிந்து கொண்டிருக்கும் ஒரு சிறிய செயற்கை நீர்வீழ்ச்சி உருமாதிரி இருந்தது. அக்காவின் பாதி முகம் மட்டுமே அதுவும் சரியாகத் தெரியக்கூடாது என்று கவனமாகப் பதிவிட்டிருந்தாள். நாற்காலியும் அந்த ஆடம்பர அழகையும் தாண்டி எதையோ தேடினேன். “ஏன் இப்ப உன் வீட்டைப் ப்ரோமோட் செய்றீயா? சும்மான்னு இருக்க முடியாதுதானே?” என்று மடல்பெட்டியில் அனுப்பினேன். பிறகு ஒரு ‘லைக்’ போட்டுவிட்டு, ‘சூப்பர்’ என்ற ஒரு வாடிக்கையான கருத்தும் பதிவிட்டேன். முகநூலில் வந்து குவியும் அனைத்திற்கும் எல்லாரிடம் ஒரே பதில் இருக்கிறது என்றால் அது ‘சூப்பர்’ தான்.

“சூப்பர் சார்”

“சூப்பரோ சூப்பர்”

“செம்ம… சூப்பர்”

“சூப்பர்… சாவடி”

“சூப்பர் ஜீ”

இப்படிச் சூப்பரையே பல மாதிரி சொல்லும் சூப்பர்த்தனம் இங்கு முகநூலிலே சாத்தியமானது. எனக்கேக்கூட யாரும் சூப்பர் என்று கருத்துப் பதிவிட்டாலே போதும் என்கிற அளவிற்கு வந்துவிட்டேன். எத்தனைமுறைத்தான் உள்டப்பியில் நுழைந்து கருத்திடக் கெஞ்சுவது? அப்படிக் கெஞ்சி இம்சித்து வற்புறுத்திக் கருத்திட வைத்தால் மிகச் சுருக்கமாக ‘சூப்பர்’ என்று பதிவிட்டால் எட்டு ஆண்டுகளில் 5000 நண்பர்களைச் சம்பாரித்து தினமும் விடாமல் உலா வரும் என்னைப் போன்றவர்களின் வயிற்றெரிச்சல் வெறுமனே இருக்குமா? யாரெல்லாம் என்னைச் சில நாட்களாகக் கவனிக்கவில்லையோ அவர்களுக்கு நான் முன்பு போட்ட அனைத்துக் கருத்தையும் அழித்துவிடுவேன். அப்பொழுதுதான் ஒரு நிம்மதி தோன்றும்.

மீண்டும் அக்காவிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. கவலை முகங்களை வரிசையாக அனுப்பிக் கொண்டிருந்தாள். ஏன் என்று கேட்டும் மீண்டும் அழுகை ‘ஸ்மைலி’யைத் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தாள். நானும் புரியாமல் தவிக்கும் முகத்தை அனுப்பி வைத்தேன். “ஆமாம் அந்தப் படத்துலே நாற்காலிகிட்டெ ஒரு கருப்பு கலர் சப்பாத்து இருந்துச்சி… ஏன் மேல மொட்டைமாடில சப்பாத்தி?” என்கிற செய்தியுடன் மடல்பெட்டி நூறு கிலோ மீட்டர் தாண்டி பறந்தது. சட்டென எனக்கு ஒரு பாடல் அனுப்பு என்றாள். எனக்கு அவளுடைய அந்தப் பழைய வானொலி நினைப்பு வந்தது. பாட்டி காலத்தில் வாங்கி வைத்தது. சதுர வடிவத்தில் இரண்டு ஏரியல் கொண்டிருக்கும் பழைய வானொலி. அக்கா எங்குச் சென்றாலும் எடுத்துச் செல்வாள். அவளுக்கு அதில் ஒலிக்கும் இளையராஜா பாடல்கள் மட்டும் போதும். இசையில் இலயித்துக் கொண்டே வாழைத்தார்களை அறுத்துக் கொண்டிருப்பாள். நான் அவள் ஏறி நிற்கும் நாற்காலியைப் பிடித்துக் கொண்டிருப்பேன். எனக்குத் தரப்படும் வேலை அவ்வளவுத்தான். அக்கா எங்கள் அனைவரையும்விட பலமானவள். அக்காவினால் மட்டுமே வாழைத்தார்களை அறுக்க முடியும். அப்பாகூட அதனைச் செய்ய மாட்டார்.

வாழைமரத்தின் ஓரத்தில் இளையராஜா பாடிக் கொண்டிருப்பார். அவருடைய அரங்கிலே சென்று அவருடன் பாடும் பாவனையில் அக்கா முணுமுணுத்துக் கொண்டிருப்பாள். அவளுடைய கறகறக்கும் குரல் அப்பாவை ஒத்திருந்தது. உச்சத்தொனிக்குப் போகும்போது அவளுடைய குரல் உடைந்து அப்பாவின் குரல் தொனியின் ஒரு சிறிய உரசலை ஏற்று வெளிப்படும். அது அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்பாவிற்கு வானொலி கேட்டுக் கொண்டிருந்தால் பிடிக்காது. கத்துவார். அதனாலேயே அக்கா, அப்பா இருக்கும் நேரத்தில் வானொலியை மெத்தைக்கடியில், அலமாரிக்குள், கட்டிலுக்கடியில் என்று ஒளித்து வைத்துக் கேட்பாள். அந்த இருளுக்குள் நுழைந்து நானும் அவளுடன் இணைந்து கொள்வேன். காதைக் கழற்றி வானொலிக்குள் பொருத்தினால் மட்டுமே கேட்க முடிந்த மிகக் குறைவான சத்தத்திலும் அக்காவால் எதையோ கேட்க முடிந்தது. அது அவளுடைய பிரமை என்றே இப்பொழுது தோன்றுகிறது. கேட்டுக் கேட்டுப் பழகிபோன இசையை வானொலி ஒலிக்காத சமயத்திலும் அவளால் கற்பனை செய்து கொண்டு இரசிக்க முடிந்தது. பாடலே இல்லாமல் சுயமாக முணுமுணுப்பாள்.

இளையராஜாவின் பாடல் ஒன்றை அக்கா முகநூலில் பகிர்ந்திருந்தாள், அன்று அவள் போடும் நான்காவது பதிவு அது. நானேகூட இதுவரை இரண்டுத்தான் என்றதும் எனக்குக் கொஞ்சம் பொறாமையாக இருந்தது. மேலும், அவள் எது போட்டாலும் முகநூலில் அதற்கு ‘லைக்’ போட நூறு வெட்டிப்பயல்கள் இருக்கவே செய்தார்கள். அவர்களை நினைத்தாலும் பொறாமையாக இருக்கும். அக்கா பதிவேற்றம் செய்திருந்த இளையராஜா பாடல் அவளுக்கு மிகவும் பிடித்தமானது என்பதால் அதையே அவள் பலமுறை பகிர்ந்திருந்தாள். ஆனாலும் அதையும் ‘லைக்’ போட்டு ஆதரிக்க தன்னார்வ இளைஞர்கள் இருந்தார்கள். அதிலும் அவளுக்கு வரும் கருத்துகள்தான் அபாரம். அப்பொழுதுதான் இளையராஜாவே தமிழில் அறிமுகம் ஆவதைப் போல தாளவே முடியாத இவர்கள் செய்யும் அளப்பறைகள்தான் உச்சம்.

உடனே மடல்பெட்டி யில் நுழைந்து அக்காவிடம் பேச்சுக் கொடுத்தேன். “ஏன் இப்போ போட்டப் பாட்டையே போடறே? வேற பாட்டு இல்லயா?” அவள் என் குறுஞ்செய்தியைப்  பார்த்தும் அமைதியாக இருந்தாள். “நீ மீண்டும் மீண்டும் ஒரே பாடலைப் போட்டு உண்மைலே கடுப்பாக்காறெ…” என்று கோப முகத்தையும் சேர்த்து அனுப்பினேன். அவள் அமைதியாகவே இருந்தாள். பதில் ஏதும் அனுப்பவில்லை. ‘Sorry’ என்று அவள் எப்பொழுதோ எழுதிய கையெழுத்தைப் படம் பிடித்து எனக்கு அனுப்பி வைத்தாள். அவ்வெழுத்துகள் என்னிடம் எதையோ சொல்ல முயன்று தோற்றுக் கொண்டிருந்தன. அக்காவிடம் முன்பொரு புத்தகம் இருந்தது. அம்மா அவளுக்குக் கொடுக்கும் பணத்தின் வரவு செலவுகளை அதில் எழுதி வைப்பாள். இடையிடையே தமிழ்ப் பாடல் வரிகளையும் எழுதி வைத்திருப்பாள். ஓர் எழுத்துப்பிழையும் இருக்காது. அழகான கையெழுத்து. நிதானமாக எழுதும் ஒருவரால் மட்டுமே அத்தனை நேர்த்தியாக கையெழுத்தைக் கையாண்டிருக்க முடியும். எப்பொழுதாவது சோகம் தோன்றும் போதெல்லாம் அக்காவின் அக்கையெழுத்திலுள்ள பாடல்களை வாசிப்பேன். மனத்தில் பல்லாயிரம் வயலின் இசை சேர்ந்து இசைக்கும். எல்லா கசப்பையும் யாரோ துடைத்தொழித்துவிட்ட மனநிறைவு தோன்றும்.

 

அவளிடமிருந்து மீண்டும் ஒரு சோக முகம் ‘ஸ்மைலி’ வந்தது. அதற்குள் நான் போட்டிருந்த தம்படத்திற்கு வரிசையாக ‘லைக்கு’கள் வந்து கொண்டிருந்தன. யாரெல்லாம் ‘லைக்’ போட்டார்கள் என்று ஒருமுறை சரிப்பார்த்துவிட்டு அவர்களுடைய பக்கத்திற்குச் சென்று நானும் ‘லைக்’ போட்டுக் கொண்டிருந்தேன். இடையிடையே ‘சூப்பர்… அருமை… வாழ்த்துகள்’ என்ற கருத்துகளையும் பதிவிட்டேன். ஒரு கடமையை நிறைவேற்றிய திருப்தியுடன் மீண்டும் அக்காவின் பொய்க் கணக்கு முகநூல் சென்றேன். ஏதோ சீனத்தில் எழுதப்பட்டிருந்த நிறைய பதிவுகள் இருந்தன. பின்னர் கொஞ்சமும் தொடர்பில்லாத பதிவுகளும் நிறைந்திருந்தன. அக்காவிற்குச் சீனமொழி தெரியும் என்பது அவளுக்கும் எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த மேய்க்கும் நடந்த சண்டையின் போதுதான் எனக்கும் தெரிந்தது.

“க்கா… உனக்கெப்படி சீனம் தெரியும்?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டதற்குத் தன்னிடம் மல்லுக்கு நின்ற மேயைப் பார்த்து “அவந்தான்டா சொல்லிக் கொடுத்தா…” என்று கைக்காட்டினாள். இருவரும் ஒருவர் கூந்தலை இன்னொருவர் பிடித்துத் தரையில் உருள்வதற்குத் தயாராக இருந்தனர். அக்கா தொடர்ந்து சீனமொழியில் கொஞ்சமும் தடுமாறாமல் பேசினாள். அதற்கு மேய் அக்காவும் ஏதோ பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். பள்ளியில் முறையாகப் படித்தாலும் இத்தனை தெளிவாக இன்னொரு மொழி பேசிவிட முடியுமா என்று அப்பொழுதும் இப்பொழுதும் எனக்குப் புரியவில்லை. அவிழ்ந்து கூந்தலின் விளிம்பில்  தொங்கிக் கொண்டிருந்த சிவப்பு ரிப்பனைப் பார்க்காமலே இலாவகமாக உருவி பின்மண்டையில் களைந்திருந்த ஒரு கொத்து முடியை விரலால் சுருட்டி சட்டென ரிப்பனைக் கொண்டு அடக்கிவிட்டு மேயைப் பார்த்து முறைத்தாள். ஆக்ரோஷமான பார்வை அது. பிறகு மேயின் அம்மா தூரத்திலிருந்து எதோ கத்தியதும் மேய் அக்கா வீட்டினுள் ஓடி உள்ளுக்குள்ளிருந்து அக்காவைப் பார்த்துப் பழித்தவாறே தன் இடுப்பை இரு பக்கமும் ஆட்டினாள். அக்காவின் கோபமான முகம் மெல்ல உடைந்து ஒரு மெல்லிய புன்னகை உதட்டினோரம் தோன்றியது. அக்கா எனக்கு ஒரு மல்யுத்த விளையாட்டாளராகத் தெரிந்தாள். மல்யுத்தம் என்றால் கோபத்தை உச்சம் கொண்டு போய் எதிராளியைத் தாக்குவது அல்ல; வந்த கோபத்தை அடக்கி அதனைச் சிரிப்பாக மாற்றும் வித்தை.

மனம் அன்று என்னவோ செய்யத் தொடங்கியது. அக்காவிற்கு அழைக்கலாம் என்று கைப்பேசியைத் திறந்தேன். அழைப்புச் செல்லவில்லை. மீண்டும் அழைத்துப் பார்த்தேன். ஒருவேளை அக்கா அழைப்பேசியை அடைத்து வைத்திருக்கலாம் என்று தோன்றியது. அவள் அடிக்கடி அழைப்பேசியில் முகநூல் பயன்படுத்துவது மாமாவிற்குப் பிடிக்காது. இரண்டு முறை அவளுடைய கைப்பேசியைப் போட்டு உடைத்திருக்கிறார். அதனை மீண்டும் சரிசெய்து பயன்படுத்த பல வாரங்கள் ஆகியுள்ளன. நிச்சயம் கைப்பேசியை அவள் அடைத்து எங்கேயாவது ஒளித்து வைத்திருப்பாள் என்று யூகித்துக் கொண்டேன். முகநூலில் குறுஞ்செய்தி அனுப்பினாலும் அது அவளுடைய கைப்பேசிக்கே போகும் என நினைத்துக் கொண்டு முகநூல் மடல்பெட்டியைத் திறந்தேன். தன் முகநூல் கணக்கை இன்றோடு மூடப்போவதாக அக்கா எனக்கொரு தகவல் அனுப்பியிருந்தாள். அவசரமாகச் சென்று அவளுடைய முகநூலை நோட்டமிட்டேன். சிலசமயம் ஏதாவது செய்தியை ஒரு பதிவாகப் போட்டுவிட்டுப் போயிருப்பாள் என்று தெரியும்.

 

“உன்னை நானறிவேன்… என்னையன்றி யார் அறிவார்?

கண்ணில் நீர் வடிந்தால் என்னையன்றி யார் துடைப்பார்?

யார் இவர்கள் மாயும் மானிடர்கள்… ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள்…”

அக்கா தன் முகநூலில் கடைசியாக இன்னொரு பதிவாக ஒரு பாடல் வரியைப் பதிவேற்றிருந்தாள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. வெகுநேரம் அவளுடைய முகநூல் பூச்செடி  படத்தையே கவனித்துக் கொண்டிருந்தேன். சட்டென ஆகச் சிறிய அந்த ‘லைக்’ பட்டனை அழுத்தினேன்.

 

  • கே.பாலமுருகன்

About The Author