குறுங்கதை: வழிபோக்கர்

அவ்வளவு தாமதாக மலையேற முடிவெடுத்திருக்கக்கூடாதோ எனத் தோன்றியதும்தான் பீதி கிளம்பியது.

எத்தனைமுறை மலையின் உச்சியை அடைந்தபோதும் பலகை பாலத்தின் மீது ஏறி நிற்க வாய்ப்புக் கிடைத்ததில்லை. எந்நேரமும் புகைப்படம் எடுத்துக்கொள்ள கூட்டம் வரிசையில் நிற்கும். அந்தப் பாலத்தில் ஏறி நின்றால் காலுக்குக் கீழே சிறுபுள்ளியாய்த் தெரியும் நகரத்தின் மொத்த ரூபத்தையும் பார்த்து இரசிக்க முடியும்.

இன்று வழக்கத்தைவிட தாமதமாகச் சென்றால் பலர் மலையை விட்டு இறங்கிவிடுவர் என்கிற திட்டத்துடன் மாலை 6.15 மணிக்கு மேல்தான் மலையேறத் தொடங்கினேன். நல்ல செங்குத்தான மலை என்பதால் இடையிடையே இடை கழன்று விடுவது போல் வலிக்கும். ஆளரவமில்லாமல் பாதி மலையைத் தாண்டிவிட்டேன். மௌனம் கெடாமல் பாதையின் இரு மருங்கிலும் அடர்ந்து கிடந்த காடு சலசலத்துக் கொண்டிருந்தது.

அப்பொழுதுதான் அவர் பின்தொடர்ந்து வருவதைக் கண்டேன். அவ்வளவு நேரம் ஆளே இல்லாமல் இருந்த பாதையில் திடீரென ஒரு வளைவின் முற்சத்திக்கு வந்து நின்றபோதுதான் அவர் பின்னே நடந்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். மிகவும் வயதானவர். நிதானமாகக் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு ஏறி வந்தார். நான் இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு நாக்கைத் தள்ளிக் கொண்டு நின்றிருந்தேன். அவரைப் பார்த்ததும் நாக்கை உள்ளே இழுத்துக் கொண்டு மரங்களை இரசிக்கத்தான் நின்று கொண்டிருப்பது போல பாவனை செய்தேன்.

மலையேறும்போது நம்மைவிட வயதில் மூத்தவர்கள் அல்லது வயதானவர்கள் நம்மைக் கடந்து வேகமாக ஏறும்போது ஏற்படும் அவமானத்தைத் தாங்கிக் கொள்ளும் அளவிற்கு நான் இன்னும் பக்குவமடையவில்லை. அவர் என்னைத் தாண்டிச் செல்லும் முன் நான் சட்டென மேட்டில் நடக்கத் துவங்கினேன். அப்பொழுதும் அவர் பதற்றப்படாமல் நிதானமாகவே ஏறிக் கொண்டிருந்தார். கண்கள் சற்றும் களைப்பில்லாமல் ஒளிர்ந்து கொண்டிருந்தன. தலையில் கருப்புத் துணியைக் கட்டியிருந்தார்.

‘பொறந்ததுலேந்து மலை ஏறுனவரு போல’ என மனத்தில் நினைத்துச் சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆவேசப்பட்டு ஏறியதும் இடுப்பெலும்பு இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தது. நமக்குப் பின்னால் யாரும் வராத சமயமே யாரோ வருவது போல் கற்பனை எழும். இப்பொழுது ஒருவர் நிதானமாக நம்மைப் பின்தொடரும்போது என்னனவோ கற்பனைகள் எழத் துவங்கின. ஒருவேளை அவர் அப்படியே ஓடிவந்து என் பின்னந்தலையில் அடித்துவிட்டு நான் ஒரு வழிப்பறி கொள்ளையன் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றெல்லாம் நினைப்புத் தோன்றியது.

அவ்வப்போது மரங்களைப் பார்ப்பது போல் பின்னால் அவர் எவ்வளவு தூரத்தில் வருகிறார் எனச் சரிப்பார்த்துக் கொண்டேன். மேட்டின் உச்சிக்குச் சென்றதும் இன்னொரு வளைவு காத்திருந்தது. அதைக் கடந்துவிட்டால் மலையின் உச்சி. திரும்பிப் பார்த்தேன். அந்த வயதானவரைக் காணவில்லை. அவ்வளவு சீக்கிரத்தில் பள்ளத்தில் இறங்கியோடியிருக்க வாய்ப்பில்லை. அப்படி எந்தச் சத்தமும் கேட்கவில்லை.

மணி 6.45ஐத் தாண்டி மெல்ல இருட்டத் துவங்கியிருந்தது. விருட்டென வளைவில் ஏறி மலை உச்சியை அடைந்துவிட்டேன். தூரத்தில் சிலர் மட்டும் பாலத்தினருகே நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும் சற்றே மூச்சிரைப்பு அடங்கியது. பாலத்தை நோக்கி நடக்கத் துவங்கும்போதுதான் அங்கொரு உயரமான மெராந்தி மரத்தைப் பார்த்தேன். வாரம் மூன்றுமுறை வரும் நான் மலை உச்சியில் இந்த மரத்தைப் பார்த்ததே இல்லை. மலையேறும் பாதை வளைவுகளில் பார்த்ததுண்டு. யாரோ பிடுங்கி கொண்டு வந்து நட்டதைப் போல நின்று கொண்டிருந்தது. அருகில் சென்றபோது அதன் தண்டில் ஒரு கருப்புத் துணி கட்டப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.

– கே.பாலமுருகன்

About The Author