குறுங்கதை: வருகை

எல்லோரும் திக் பிரமை பிடித்துதான் உட்கார்ந்திருந்தார்கள். அம்மாவுக்குச் சலனமெல்லாம் பொங்கி வழிந்து இப்பொழுது அழுதோய்ந்து அதிர்ச்சியுடன் தெரிந்தார். வீட்டுக்கு வெளியில் தொங்கிக் கொண்டிருந்த அழகுமணிகள் ஒன்றோடொன்று மோதி இசையை உருவாக்க முயன்று கொண்டிருந்தது.

அப்பா உடலில் ஒட்டியிருந்த மண் துகல்களைத் தொடர்ந்து உதறிவிட்டபடி இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தார். கணேசனுக்குக் கனவில் இருப்பது போலவும் இன்னும் சிறிது நேரத்தில் விழிப்பு வந்துவிடலாமெனக் கூட தோன்றியது. அப்பா தண்ணீர் வேண்டுமெனக் கட்டை விரலை உதட்டிடம் வைத்துக் காட்டினார். கணேசனின் தங்கை பதற்றத்துடன் எழுந்து நீர் எடுக்கச் சென்றுவிட்டாள்.

“என்னடா இப்படிப் பாக்கறீங்க?”அப்பா முகத்தைத் துடைத்துக் கொண்டார். குளுரூட்டி இருந்தும் அவருக்கு வியர்த்துக் கொண்டிருந்தது. நாற்காலியில் வசதியாக அமர்ந்து கொண்டு உடலை முறுக்கினார்.

“என்ன நடக்குது? ஒன்னுமே புரியல…”

மாமா ஆச்சரியத்துடன் கேட்டுவிட்டு கணேசனைப் பார்த்தார். அவனுக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. திடீரென மாலை 4.00 மணிக்கு அப்பா கதவைத் தட்டுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. கதவைத் திறந்தது கணேசன்தான். பார்த்ததும் தலை சுற்றல் உண்டாகி பத்து நிமிடத்திற்கு அப்படியே உட்கார்ந்துவிட்டான்.

“மாமா, எப்படிச் சொல்லிடலாமா? இல்ல இது எதாவது…”

“டேய், எந்தக் காலத்துல இருந்துகிட்டு என்ன பேசற? இரு கொஞ்ச நேரம்… என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்…”

மாமாவின் பேச்சு கணேசனைச் சற்று நிதானப்படுத்தியது. அப்பா புருவங்களைத் தேய்த்தார். அது அவருடைய பழக்கம். அவர் அசௌகரிகமாக உணரவில்லை. வழக்கம் போல கால்களை ஆட்டிக் கொண்டே அமர்ந்திருந்தார். அம்மா, அப்பாவைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். கண்ணீரெல்லாம் தீர்ந்து இப்பொழுது வெறுமையுடன் இருந்தார். அவ்வப்போது கணேசன் என்ன சொல்வான் என்றும் அவருடைய கண்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தன. முதலில் பார்த்ததும் அம்மாவும் கத்தி கூச்சலிட்டு அரைமயக்கத்திற்கு வந்துவிட்டார். கணேசன் அம்மாவைப் பிடித்து ஓரிடத்தில் அமர வைக்கும்வரை அவர் நிதானத்தில் இல்லை. வெளியில் ஓடுவதற்குத் தயாராகிவிட்ட தங்கையைக்கூட கணேசன்தான் தடுத்து நிறுத்தி வைத்தான்.

மாமா வந்த பின்னர்தான் வீட்டில் ஓர் அமைதி மெல்ல பின்னப்பட்டுக் கொண்டிருந்தது. அப்பா மௌனமாக எல்லோரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்னடா ஏதோ மாதிரி பாக்குறீங்க? அன்னிக்கு என்னத்தான் நடந்துச்சி? ஒன்னுமே ஞாபகமில்ல…”

அப்பாதான் மௌனத்தைக் கலைத்தார். அப்பொழுதும் கணேசன் ஒன்றும் பேசவில்லை. இதை எப்படி எடுத்துக் கொள்வதென அவர்களுக்குத் தெரியவில்லை. முன்னே அமர்ந்திருப்பது அப்பா என்பதை மீண்டும் சிரமப்பட்டு நினைவுப்படுத்தியபடியே நின்றிருந்தான் கணேசன். ஒரு மணி நேரம் அப்படியே மௌனத்திலேயே கடந்து சென்றது. கணேசன் எழுந்து அறைக்குள் சென்று மாமாவை அழைத்தான்.

“மாமா, போலிஸ்க்கு அழைச்சிச் சொல்லிட்டன்… இத ரிப்போட் செஞ்சித்தான் ஆகணும்… வெற வழி இல்ல…”

மாமாவும் கணேசனின் முடிவுக்கு ஒத்துப் போனார்.

“பா, நீங்க கீழ உள்ள ரூம்ல கொஞ்ச நேரம் படுங்க… அப்புறம் எழுப்புறோம்,”

கணேசன் அப்படிக் கூறியதும் அப்பா சந்தேகத்துடனே எழுந்தார்.

“தூக்கம் வரலடா… அம்மா கூட கொஞ்சம் பேசிக்கலாமா?”

அம்மா அதை எதிர்ப்பார்க்கவில்லை. விருப்பமில்லாதது போல் சடக்கென்று எழுந்து குளிக்கப் போவதாக நழுவினார்.

“நீங்க வாங்கப்பா, கொஞ்சம் ஓய்வு எடுங்க… அப்புறம் பேசலாம்…”

கணேசன் அப்பாவைத் தொட முயன்று பிறகு பின்வாங்கிக் கொண்டான். வேறுவழியில்லாமல் அப்பா எழுந்து கீழேயுள்ள அறையில் நுழைந்தார். மீண்டும் திரும்பி கணேசனின் கண்களைப் பார்த்தார். அதில் தெரிந்த ஒரு பதற்றம் அவருக்குப் பயத்தை உண்டாக்கியது. அப்பா உள்ளே சென்றதும் கணேசன் கதவைச் சாத்தினான்.

மாமா அவனைப் பார்த்துக் கொண்டிருந்த விதம் அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கலாம்.

“என்ன மாமா செய்றது? இவரு செத்துப் போய் பதிமூனு வருசம் ஆச்சு…திடீர்னு வந்துருக்காரு… என்ன இது? வருசம் வருசம் திதி கொடுத்துக்கிட்டு இருக்கோம்…”

அதற்குள் மாமாவின் கைப்பேசி அலறியது. அத்தையின் அழைப்பு. எடுத்துப் பேசிவிட்டு அப்படியே திகைத்து நின்றார்.

“என்ன மாமா சொன்னாங்க?”

“அங்க பக்கத்து வீட்டுல போன வருசம் செத்துப்போன அவுங்க மூத்த பையன் வீட்டுக்கு வந்துருக்கானாம்…”

அப்பா அறைக்கதவைத் திறந்து ஏக்கமிகுந்த கண்களுடன் இருவரையும் பார்த்தார்.

– கே.பாலமுருகன்

About The Author