கவிதை வரிசை 1: மாரியம்மா

கவிதை வரிசை – 1
நான் அவர்கள் நீங்கள்

மாரியம்மா

சமையலின்போது உள்ளங்கையில்
உண்டான காயத்தை மாரியம்மா
மறைக்க நினைக்கிறாள்.

மறைப்பதற்கான பயிற்சிகளில்
மும்முரமாக இறங்கினாள்.
வலியைப் பற்றிய தகவல்கள்
மூளைக்குச் செல்லாதவாறு
கவனத்தையெல்லாம் திசைத்திருப்ப
பழைய வானொலி
இளையராஜா பாடல்
இளமைக்கால நினைவுகள்
‘ஹோம்டவுன்’ கனவுகள்
என்றெல்லாம் கூடு விட்டு கூடு பாய்ந்து
வித்தையாடி ஓய்ந்தாள்.

அன்று பள்ளிக்குக் கிளம்பிபோன
மகளுக்கு ‘பாய் பாய்’ காட்டும்போதும்
மாணிக்கத்திற்கு உணவு பரிமாறும்போதும்
தொலைக்காட்சி தொடரில் மூழ்கிபோன
பாட்டிக்கு கால்களை நீவிவிட்டப்போதும்
மாரியம்மா தன் உள்ளங்கை காயத்தை
தற்காத்துக் கொண்டாள்.

நாள்கள்
பல கடந்தும்
மாறாத ஒற்றை வடுவாய்
உள்ளங்கையிலும் உடலிலும்
ஜீவித்துக் கொண்டிருந்த
காயத்தினையெல்லாம் தடவிப் பார்க்கிறாள்.

காயத்தை இலாவகமாக
மறைத்த தன் திறமையைக் கண்டு
கைத்தட்ட யாருமற்ற அறைக்குள்
பெருமிதம் கொள்கிறாள்.

-கே.பாலமுருகன்

About The Author