எனது 2015ஆம் ஆண்டு ஒரு மீள்பார்வை – பாகம் 1

வருடம்தோறும் புத்தாண்டு கொண்டாட்ட உணர்வெல்லாம் இருந்ததில்லை. ஆனால், நம்மைத் தாண்டி ஓராண்டு நகர்ந்து போகையில் அவ்வருடத்தில் என்னவெல்லாம் நடந்தது, அவ்வருடத்தில் யாரையெல்லாம் சந்தித்தோம், கிடைத்த புதிய நட்பு, பார்த்தப் படங்கள் என அசைப்போடத் தோன்றும். அவ்வருடத்தை மீட்டுரணாமல் அடுத்த ஆண்டை நோக்கி பயணிக்க இலகுவாக இருக்காது.

ஒரு பக்கத்தைத் திருப்புவதைப் போல சட்டென 2015ஆம் ஆண்டு முடிந்துவிட்டது. இத்தனை வேகமாக நகர்ந்த வருடம் என் வாழ்வில் இதற்கு முன் இருந்ததேயில்லை. எதை முறையாகத் திட்டமிட்டேன் என நினைவில் இல்லை. ஆனால், திட்டமிடாமல் நடந்ததுதான் ஏராளம் இருக்கின்றன. எதிர்ப்பாராத பயணங்கள் மட்டுமே ஞாபகத்தில் நிலைக்கின்றன.

2015ஆம் ஆண்டில் வெளிவந்த என் நூல்கள் ஒரு பார்வை:

  1. மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான ‘அற்புதத் தீவும் அதிசயக் காலணியும்

 

11802108_10207467632067589_1282655453_n

டிசம்பரில் எழுதி முடித்து ஜனவரியில் வெளிவந்த இந்தக் கட்டுரை நூல் நல்ல வரவேற்பைப் பெற்று இவ்வாண்டு நவம்பர்வரை தொடர்ந்து விற்கப்பட்டன. ஆண்டு முழுவதும் விற்கப்பட்ட நூல் இது. 6000 பிரதிகள் அச்சிட்டு விற்பனையாளர்களின் மூலம் பல மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. பல தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர்களும் தனிப்பட்ட முறையில் இந்த நூல் மாணவர்களுக்கு உதவியாகவும் வழிகாட்டியாகவும் இருந்ததாகக் குறிப்பிட்டார்கள். எத்தனையோ மெதுப்பயில் மாணவர்கள் இந்த நூலின் வழி பயனடைந்திருப்பது அவர்களுக்கும் பள்ளிக்கும் தெரியும். ஆகையால், எனக்கு அதன் மூலம் மகிழ்ச்சியே.

 

  1. மோகினி மலையின் இரகசியமும் பாழடைந்த மாளிகையும்- சிறுவர் நாவல் பாகம் இரண்டு

522041_483880788426159_5234515917053158740_n

மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும் எனும் சிறுவர் மர்ம நாவலின் இரண்டாம் பாகமாக இந்த நாவல் வெளியீடு கண்டது. 10ஆம் திகதி மே மாதத்தில் இந்தச் சிறுவர் நாவலைக் கோலாலம்பூர் சோமா அரங்கத்தில் செம்பருத்தியின் ஏற்பாட்டில் வெளியீடு செய்தேன். வழக்கறிஞர் திரு.பசுபதி அவர்கள் தலைமை தாங்கி நூலை வெளியீடு செய்து வைத்தார். இந்த நாவலையொட்டி ஒரு வாசகர் கடிதம் எழுதும் போட்டியையும் அறிவித்திருந்தேன். 10 கடிதங்கள் மட்டுமே வந்திருந்தன. ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவியான சர்மிதாவின் கடிதமே என்னைக் கவர்ந்ததாக அமைந்திருந்தது. அம்மாணவி சிறுவர் நாவலை 100 தடவைக்கு மேல் வாசித்ததாக அவளின் பெற்றோர் சொல்லும்போது ஆச்சர்யமாக இருந்தது. இந்த ஆண்டில் சிறுவர் நாவலின் மூலம் பல மாணவர்களின் மனத்தைக் கவர்ந்ததே எனக்கு பெரும் மகிழ்ச்சி. இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இலக்கியத்தை விரும்பும் வாசிக்க ஆர்வப்படும் ஒரு தலைமுறையை உருவாக்க முடியும் என நம்பிக்கையை இவ்வருடம் எனக்குக் கொடுத்தது.

 

  1. ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்

 

NEW NOVEL BOOK COVER 01-page-001cc

மலேசியாவில் வெளிவந்த தமிழ் நாவல்களில் மிக நீளமான தலைப்பைக் கொண்ட நாவல் இதுதான் என எழுத்தாளர் அ.பாண்டியன் குறிப்பிட்டார். வெகுநாட்கள் என் மனத்தில் ஊறிக்கிடந்த ஒரு கதைக்கரு இந்த நாவல். புறம்போக்குவாசிகளாக அலைந்து திரிந்த மலேசிய இந்திய விளிம்புநிலை வாழ்க்கையை ஓரளவிற்காவது பதிவு செய்ததில் திருப்தி. இதனையே விரித்து ஒரு முழு நாவலாக எழுதத் திட்டமுண்டு. அதற்கான ஒரு பயிற்சியாக இந்தக் குறுநாவலைக் கருதுகிறேன். இந்தக் குறுநாவலுக்கான முகப்பு ஓவியத்தைப் புகைப்படமெடுக்க நானும் நண்பர் ஹென்றியும் சிமிலிங் பழைய சீனப் பட்டணத்திற்குச் சென்றது மறக்க முடியாத அனுபவமாகும்.

மேற்கண்ட மூன்று நூல்களை மட்டுமே 2015ஆம் ஆண்டில் கொண்டு வர முடிந்தது. ஆப்பே நாவல் சிறுவர்களுக்குரியது அல்ல. இருப்பினும் இதுவரை 600 பிரதிகள் விற்க முடிந்ததே மகிழ்ச்சி. பெரும்பாலும் நம் சமூகத்தினர் வாசிப்பது அரிதாகும். தொலைக்காட்சி தொடர்கள் வந்த பிறகு வாசிப்பு முற்றிலும் அந்நியமாகிவிட்ட சூழலில் நூல்கள் வாங்கப்படுவது அரிதான செயலாகிவிட்டது.

2015ஆம் ஆண்டில் நான் வாசித்த நூல்களில் என்னைக் கவர்ந்தவை:

  1. அ.முத்துலிங்கத்தின் சிறுகதை தொகுதி ‘பிள்ளைக் கடத்தல்காரன்’

 

அங்கதமான தொனியில் ஆழமான விசயத்தைப் பேசக்கூடியவர் அ.முத்துலிங்கம். கனடா வாழ்வின் அபத்தங்களைத் தன் கட்டுரைகள், கதைகளின் வழி நிறைய பதிவு செய்திருக்கிறார். எந்த அலட்டலுமில்லாத இயல்பாக ஒலிக்கும் அவருடைய நகைச்சுவை உணர்வு சட்டென நம்மை ஈர்த்துவிடும். ஆனாலும், அவையாவும் மேலோட்டமான பார்வைகள் கிடையாது. எந்தச் சிரமும் இல்லாமல் வாழ்க்கைக்குள் நம்மை இழுத்துச் செல்பவர் அ.முத்துலிங்கம்.

 

  1. உலகத் திரைப்பட மேதை அகிரா குரோசாவின் சுயசரிதை

 

கல்லூரிப் படிக்கும் காலத்திலேயே எனக்கு அகிரா குரோசாவாவின் படங்கள் அறிமுகமாயின. 1950களிலிலேயே ரஷமோன் என்கிற ஜப்பானியப் படத்தின் மூலம் உலகத் திரைக்கதை சூழலில் பெரும் பாதிப்பையும் புதிய அலையையும் உருவாக்கியவர். அவருடைய இளமை பருவம் தொடங்கி வாழ்க்கை அனுபவம், சினிமா அனுபவம் எனத் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட இந்த நூல் படிப்பதற்குச் சிறப்பாக இருந்தது. ஒருவகையில் பயணமே அகிரா குரோசாவின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை உருவாக்கியிருக்கின்றது.

2015ஆம் ஆண்டில் நான் மேற்கொண்ட தமிழ்ப்பள்ளி பயணம்

  1. தமிழ்மொழி சிறுகதை/ தமிழ்மொழித் தேர்வு வழிகாட்டிப் பட்டறைகள்

கடந்தாண்டின் மலேசியா முழுவதும் பல தமிழ்ப்பள்ளிகளுக்குச் சிறுகதை பட்டறை நடத்தவும் தமிழ்மொழி வழிகாட்டிப் பட்டறை நடத்தவும் சென்றுள்ளேன். இதுபோன்ற நிகழ்ச்சிகள் நானே வழிந்து கேட்டுச் செல்வதல்ல. எல்லாமே அப்பள்ளி நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் செல்வதே ஆகும். நான்கு பட்டறைகள் மட்டும் சுடர் பதிப்பகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். இவ்வாண்டு நான் சென்ற தமிழ்ப்பள்ளிகளின் வட்டாரம்:

????????????????????????????????????

  1. தெலுக் இந்தான் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகள்
  2. தைப்பிங் 16 தமிழ்ப்பள்ளிகள், பேராக்
  3. காராக், பகாங்
  4. பெந்தோங், பகாங்
  5. முவார் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகள், ஜொகூர்
  6. தாப்பா மாவட்ட 6 தமிழ்ப்பள்ளிகள், பேராக்
  7. சிலிம் ரீவர் மாவட்டச் சிறிய தமிழ்ப்பள்ளிகள், பேராக்
  8. ஈப்போ 6 தமிழ்ப்பள்ளிகள், பேராக்
  9. பினாங்கு, செபெராங் ப்ராய், நிபோங் தெபால் 14 தமிழ்ப்பள்ளிகள், பினாங்கு
  10. யூ.எஸ்.ஜே, ஷா அலாம், 12 தமிழ்ப்பள்ளிகள், சிலாங்கூர்
  11. காப்பார் தமிழ்ப்பள்ளிகள், சிலாங்கூர்
  12. வாட்சன், வளம்பூரோசா, பத்து அம்பாட் மேலும் கிள்ளான் தமிழ்ப்பள்ளிகள், சிலாங்கூர்
  13. லங்காவி, கெடா
  14. கூலிம் தமிழ்ப்பள்ளிகள், கெடா
  15. இண்ட்ரா மாக்கோத்தா குவாந்தான் தமிழ்ப்பள்ளிகள், பகாங்
  16. கேமரன் தமிழ்ப்பள்ளிகள், பகாங்
  17. சுங்கை தமிழ்ப்பள்ளிகள், பேராக்

????????????????????????????????????

????????????????????????????????????

மேலும் பல இடங்கள், என 150க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளுக்குப் பயணம் செய்துவிட்டேன். பலத்தரப்பட்ட மாணவர்கள், பலவகையான அனுபவங்கள் நிறைந்த வருடமாக இப்பயணங்கள் மூலம் கிடைக்கப்பெற்றது.

 

  1. சுடர் பயிற்சிப் பட்டறைகள்

சுடர் மூலம் நடைபெற்ற நான்கு பட்டறைகளுக்குத் தமிழ்ப்பள்ளிகளின் ஆதரவு மிகச் சிறப்பாக இருந்தது.

சுடர் பட்டறை 1: யூ.எஸ்.ஜே துன் சம்பந்தன் பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. கிள்ளான், ஷா அலாம், சுபாங் ஜெயா என 350 மாணவர்கள் 14 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து வந்து கலந்து கொண்டனர்.

 

சுடர் பட்டறை 2: கிள்ளான் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது. சுமார் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சுடர் பட்டறை 3: கிள்ளான் வாட்சன் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது. கோலாலம்பூர், கிள்ளான் ஆகிய பகுதிகளிலிருந்து 300 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சுடர் பட்டறை 4: பினாங்கு, நிபோங் தெபால் அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பினாங்கு, நிபோங் தெபால், செபெராங் ப்ராய் போன்ற பகுதியிலிருந்து 14 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

  1. சுடர் இலவசப் பயிற்சி நூல்

 

கடந்தாண்டு சுடர் இலவசப் பயிற்சி நூல் 3000 பிரதிகள் நாடு முழுவதிலும் உள்ள 120க்கும் மேற்பட்ட சிறிய பள்ளிகளுக்கு இலவசமாக அனுப்பப்பட்டது. பலரும் அழைப்பேசியின் வாயிலாக அப்பயிற்சி நூல் பயனளித்ததாக அறிவித்தனர். நாட்டின் ஒதுக்குப்புறங்களில் இருக்கும் சிறிய பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேவை குறித்து இத்திட்டத்தை மேற்கொண்டேன்.

2015ஆம் ஆண்டில் மேற்கொண்ட இலக்கியப் பயணங்கள்

  1. சிங்கை பயணம்

 

இவ்வாண்டு ஜூன் மாதத்தில் நானும் தம்பி தினகரனும் என்னுடைய இரண்டு நாவல்களையும் அறிமுகம் செய்வதற்கு சிங்கை சென்றிருந்தோம். சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் அந்த நாவல் அறிமுக நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. தீவிரமாக வாசிப்பவர்கள் 25க்குப் பேர் மேல் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

  1. மலேசிய ஆசிரியர் கழகங்களில் சிறுகதை பட்டறை

 

மலேசியாவின் இரண்டு ஆசிரியர் கழகங்களில் சிறுகதை தொடர்பான உரை ஆற்றுவதற்காகச் சென்றிருந்தேன். அது நிறைவான அனுபவமாக இருந்தது. ஈப்போ ஆசிரியர் பயிற்சிக் கழகத்தின் ஏற்பாட்டில் நான்கு மணி நேரம் சிறுகதை பட்டறையை வழிநடத்தினேன். 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் அப்பட்டறையில் கலந்து கொண்டனர். ஐயா குணசீலன் அவர்கள் ஏற்பாட்டில் அச்சிறுகதை பட்டறை சிறப்பாக நடந்தது. அடுத்து, சிரம்பான் ராஜா மலேவார் ஆசிரியர் கழகத்தில் மாணவர்களின் படைப்புகளை உள்ளடக்கிய நூல் வெளியீடு கண்டது. அவர்களுக்கு படைப்பு ஒருங்கிணைப்பாளராக இருந்து செயலாற்றினேன். அதுவும் சிறந்த அனுபவமாக இருந்தது.

 

  1. சுங்கைப்பட்டாணியில் குறுநாவல்கள் தொகுப்பு வெளியீடு

 

27ஆம் திகதி நவம்பர் மாதத்தில் கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதரவில் எனது ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல் குறுநாவல் தொகுப்பு ஐயா திரு.பெ.தமிழ்ச்செல்வன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நண்பர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள் எனப் பலர் திரண்டனர்.

அலசல் தொடரும்

கே.பாலமுருகன்

 

About The Author