இலக்கியமும் படைப்பும்: இளையோர்களுக்கான ஒரு விமர்சனத் தளம்

கடந்த ஓராண்டு காலம் இளையோர்களின் அதிகமான சிறுகதைகளை வெண்பலகை, கதைச்சாரல் போன்றவற்றின் வாயிலாக வாசித்தும் விமர்சித்தும் வருகிறேன். இளையோர்களுடன் அவர்களின் முதல் படைப்புகளுடன் உரையாடவும் ஒரு விமர்சனப் போக்கை நோக்கி நகரவும் இயன்றது. ஆக்கப்பூர்வமான சிந்தனையுடன் படைப்புத் துறையில் ஈடுபட வேண்டும் என்கிற ஆவலும் தேடலும் உள்ள ஓர் இளைஞர் கூட்டத்தை இயல் பதிப்பகம் சிறப்பாக வழிநடத்தியும் வருகிறது. அவர்களின் சிறுகதைகள் மீது நான் முன்வைத்த சமரசமற்ற பார்வைகளை முழுவதுமாக ஏற்றுக் கொண்டு அவ்விளைஞர்கள் சிறுகதைகளை மீண்டும் எழுதியது ஆரோக்கியமான மாற்றமாகவே நான் பார்க்கின்றேன்.

கல்விக்கும் இலக்கியத்திற்கும் இடையிலான மனோநிலை

நம் நாட்டில் கல்லூரி, பலகலைக்கழகம், இடைநிலைப்பள்ளி என பல்வேறான பின்னணியிலிருந்து இலக்கியம் என்கிற மைய நீரோட்டத்தை நோக்கி வரும் ஒவ்வொரு இளையோருக்குள்ளும் கல்வி சார்ந்த சில அடிப்படையான/திட்டவட்டமான இலக்கிய புரிதல்கள் அமைந்துள்ளன. அதன் வெளிப்பாடாகவே அவர்கள் துவக்கத்தில் எழுதும் சிறுகதைகளும் இருந்துவிடுகின்றன. கல்வித்துறையின் கண்கள் கொண்டு படைப்பிலக்கியத்தை இளையோர்கள் பார்க்கக் கற்றுக் கொள்ளும் நிலை அவர்களுக்கான துவக்கக்கால தேர்ச்சியாகும். கற்பித்தல்முறைக்கேற்றவாறு வரையறைகளுடன் இலக்கியம் கற்பிக்க வேண்டிய துவக்கக்கால அணுகுமுறைகளையும் தேவைகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்குச் சில எல்லைகளும் இருக்கின்றன.

கற்பனையைத் தூண்டும் அதேவேளையில் திட்டவட்டமான சில புரிதல்களை மாணவர் மனத்தில் உருவாக்கியே படைப்பிலக்கியம் நோக்கி அவர்களைப் படிப்படியாக நகர்த்த வேண்டியுள்ளது. இளையோர்களின் அகத்தில் இலக்கிய வாசிப்பு, எழுத்து வழி மேற்கொள்ளப்படும் உரையாடலும் கற்பித்தலும் இலக்கியத்தின் மீதான அவர்களின் புரிதலில் சில படிநிலைகளை உருவாக்குகின்றன. அப்படிநிலைகள் அதுவரை அவர்கள் புரிந்து வைத்திருக்கும் வாழ்க்கைக்குள் புதிய கண்ணாடியை வைக்கிறது. இதுவரை பார்த்த காட்சிகள், பார்த்த மனிதர்கள், சம்பவங்கள், பறவைகள் என அனைத்திற்கும் ஒரு புதிய கோலத்தை உருவாக்குகிறது. இந்த மனமாற்றமே இலக்கியத்தின் வருகை உருவாக்கும் முதல் அதிர்வு. அதுவே பின்னாளில் இரசனையாக மாறுகிறது. அதுவரை உறுத்திக் கொண்டிருந்த பக்கத்து வீட்டில் கேட்கும் கணவன் மனைவியின் சண்டைக்கூட, வாழ்வின் ஓர் அங்கமென இளையோர்களின் மனம் ஏற்கத் துவங்குகிறது. வாழ்க்கையை அவர்கள் பார்க்கும் விதத்தில் அனுபவ மேம்பாடு உருவாகிறது. இலக்கிய வாசிப்பும், இலக்கியப் போதனைகளும் இத்தகைய ஓர் அனுபவத்தை முதல் கட்டமாக உருவாக்கிவிடுகின்றன.

இதுபோன்ற இலக்கிய வாசிப்பும், வகுப்பறை போதனைகளும் அடுத்தக்கட்டமாக படைப்பிலக்கியப் பகுதியில் எழுத வேண்டும் என்கிற நிலையை மாணவர்களுக்கு உருவாக்குகிறது. அவர்களின் கற்பனைக்கு உதவும் பொருட்டு கருப்பொருள், சூழல், படம் எனும் தூண்டல் பகுதிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பிட்ட எல்லைக்குள்ளே தனக்கான கதைக்களத்தையும் கதை நிகழ்வுகளையும் மாணவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். இதை கல்விநிலையிலிருந்து இலக்கியத்தை நோக்கும் ஒரு மனஅமைப்பு. துவக்கத்தில் இளையோர்கள் இதன்வழியே இலக்கிய புரிதல்களைக் கடந்து வரவேண்டியுள்ளது. கற்பித்தல் வசதிக்காகக் கல்வித்துறையில் உருவாக்கப்படும் இந்த அணுகுமுறைகளானது ஆரம்பக்கட்டங்களுக்கு அவசியம். ஆனால், அதனை மாணவர்கள் கடந்து வளர்ந்து இன்னும் விரிவாக வேண்டும் என்பதே அடுத்தக்கட்டத் தேவையாகும். இலக்கியத்தின்பால் உருவாகும் இந்தப் படிகளில் ஏறி மாணவர்கள் இன்னும் மேலே வந்துவிட வேண்டும். தரிசனம் விரிவடையும்போது எழுத்தும் ஆழமாகும்.

எடுத்துக்காட்டாக, மனிதநேயம் என்கிற ஒரு கொள்கையை மாணவர்களுக்குப் பாடமாக நடத்த வேண்டும் என்கிற ஒரு நிலை வருகிறது என்று வைத்துக்கொள்வோமே. அதற்கு ஒரு பாடப்பனுவல் வேண்டும். அப்பாடப்பனுவலை ஒட்டிய சில கேள்விகள், அதனைத் தொடர்ந்து வகுப்பு நிலையிலான கலந்துரையாடல், மேலும் சில உதாரணங்களுடன் மனிதநேயம் என்கிற ஒரு சிந்தனையை மாணவர்களிடத்தில் கல்வியியல் முறையில் புகுத்திடல் முடியும். மாணவர்கள் அதனைப் பாடமாக மனத்தில் ஏற்றிக் கொண்டு அடுத்து தன் வாழ்வில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் மனிதநேயம் பொருட்டு மதிப்பிடவும் புரிந்து கொள்ளவும் ஏற்கவும் துவங்குவார்கள். சிலர் அதனைத் தன்னளவில் பயிற்சித்தும் பார்ப்பார்கள். அடுத்து, ஒரு மனிதநேய நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள் என்கிற இடுப்பணியைக் கொடுத்தால் அவர்கள் உடனே சிறுநீரக நோயாளிகளுக்கு மாதம் 30 ரிங்கிட் நன்கொடையென தொடங்கிட மாட்டார்கள். அவர்களின் சிறிய எல்லைக்குட்பட்ட வசிப்பிடத்திலுள்ள ஓர் ஏழைக்குடும்பத்தின் வீட்டிற்குச் சென்று அவர்களின் வீட்டைத் துப்புரவு செய்துவிட்டு அவர்களுடன் உணவு சமைத்து அன்றைய நாளைப் போக்கியிருப்பார்கள். இளையோர்கள் தங்கள் மனத்தை முதலில் அசைத்துப் பார்த்து பின்னர் மெல்ல விரிக்கும் தன்மையுடையவர்கள். ஆனால், கடைசிவரை தன் சிறகையே தடவிப்பார்த்துக் கொண்டிருக்கும் வரையறைக்குள் சிக்கியும் விடக்கூடாது.

சிறகு விரித்தல் பின்னர் கழுகு பறத்தலாக விரிந்திட வேண்டும். நம் வீட்டு மரத்தில் வந்தமரும் சிட்டுக்குருவிகளுக்குக் கூரைகள் மட்டுமே தெரிய சாத்தியமுண்டு. ஆனால், கழுகின் பறத்தலில் ஒரு நகரமே தெரிந்திடும். கல்வி வசதிக்காக மாணவர்கள் மனத்தில் தொகுத்து வழங்கப்படும் இலக்கியமும் எழுத்தும் அவர்களுக்குள் குருவியிலிருந்து கழுகு நிலைக்கு விரிந்திடல் வேண்டும். வாசிப்பும் பல தடங்களைக் கடந்து விரிந்து செல்ல வேண்டுமே தவிர நான் கடைசியாக எஸ்.பி.எம் நாவல்தான் படித்தேன் என்றிருந்துவிட்டால் நமது ஆக்கமும் வலுவில்லாமல் போய்விடும்.

பொதுவெளியில் உருவாக்கும் சித்திரம்

2012ஆம் ஆண்டில் நானும் எழுத்தாளர் கோ.புண்ணியவான் அவர்களும் பேராக் மாநிலத்தில் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான சிறுகதைப் பயிலரங்கத்தில் பேச்சாளர்களாக கலந்து கொண்டோம். அதன் மூன்றாவது அரங்கத்தில் மாணவர்கள் கருத்தரங்கிற்குப் பின் எழுதிய சில சிறுகதைகளை வாசித்துக் கருத்துரைக்கக் கேட்டிருந்தார்கள். நான் வாசித்த ஐந்து சிறுகதைகளிலும் நான் பார்த்த பொதுவான சிக்கல்களையே 2020ஆம் ஆண்டில் தனது முதல் சிறுகதையை எழுதும் இளையோர்களிடமும் பார்க்க முடிகின்றது. சற்றும் மாறாமல் பின்பற்றப்படும் ஒரு பாரம்பரியமான நீட்சியைக் கவனிக்க முடிகின்றது.

அதுபோன்று எழுதப்படும் கதைகளில் காலம் தாண்டியும் தொடர்ந்து நீடித்திருக்கும் தேய்வழக்கு அம்சங்கள் சிலவற்றை காணலாம். வாழ்வில் பல இன்னல்களின் முன் அரும்பாடுப்பட்டு வாழ்வியல் சிக்கல்களை எதிர்க்கொள்ளும் ஓர் இளைஞனின் கதையாக இருக்கும். அவன் பிறந்தது முதல் வெற்றி பெறும்வரை அவன் முழு வாழ்வையும் சிறு சிறு தொகுப்புகளாகக் கதைநெடுக சொல்லிக் கொண்டே வரப்படும். அவன் வாழ்வின் அத்தனை சிக்கல்களும் அச்சிறுகதைக்கு அடர்ந்து ஒரு நெரிசலை உருவாக்கியிருக்கும். வாசிக்கும்போது திணற நேரிடும். அத்தகைய ஒரு வாழ்வியல் பின்னணியில் அப்பா கட்டாயக் குடிகாரராகவும் அந்த இளைஞன் போதைப்பொருள் பித்தனாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பான். ஆக, அப்பா குடிகாரராக இருக்கும் அத்தனை குடும்பங்களிலும் மகன் போதைப்பித்தனாக மாறியாக வேண்டும் என்கிற ஒரு விதி கடைப்பிடிக்கப்பட்டே வந்திருக்கின்றது. பிற்படுத்தப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்து வரும் இளைஞன் ஒன்று போதைப்பித்தனாக இருப்பான் அல்லது சிறந்தவனாக இருப்பான் என்பதே விதிவிலக்காக இருக்கும். அதுவே பெண் கதைமாந்தராக இருந்தால் காதல் வலையில் சிக்கி வழித்தவறியவளாகச் சித்தரிக்கப்பட்டிருப்பாள். இதனை நான் பெரும் குறையாக முன்வைக்கவில்லை. இளையோர்கள் தங்களின் படைப்புகளை மீண்டும் பரிசீலனை செய்வதற்குரிய எல்லைகளைத் திறந்துவிடவே செய்கிறேன்.

எப்படி இளைஞன் அதுபோன்ற அவலநிலைகளைக் கடக்கின்றான்? அவனைக் கீழ்மைப்படுத்திய அப்போதைப்பொருளின் பிடியிலிருந்து அவன் எப்படி மீள்கிறான் என்பதையே இதுபோன்ற கதையின் மையக்கரு கொண்டிருக்கும். இப்பொழுது நான் சொன்னது ஓர் உதாரணம் மட்டுமே. இதுபோன்று சில வரையறுக்கப்பட்ட சிறுகதைக்கென்ற விதிமுறைகள் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து காக்கப்பட்டும் போற்றப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன. இது எவ்வகையில் மொழியினூடே நம் இளையோர்களின் மனங்களைப் பேசுகிறது என்றும் எவ்வளவு நெருக்கமாக இளையோர் வாழ்வியலைச் சித்தரிக்கிறது என்றும் விமர்சனப் பார்வைக்குள் வைத்து உரையாட வேண்டியுள்ளது.

எது சிறுகதை?

முதலில் சிறுகதை என்றால் ஒருவனின் முழு வாழ்வையும் 6 பக்கத்தில் அடக்கி பார்க்கும் முயற்சி என நம்புவதை விட்டுவிட வேண்டும். பலர் இத்தகைய பாணியில் எழுதுவதால்தான் ஒரு நாவலின் கதைச் சுருக்கத்தைப் போல அவ்வகையான படைப்புகள் சிறுகதைக்கான ஒருமையிலிருந்து விலகிவிடுகின்றன. தாமான் உத்தாமா எனும் வசிப்பிடத்தில் முத்து என்கிற இளைஞன் வாழ்ந்து வந்தான் என்பதில் துவங்கி அவன் எப்படி வாழ்வில் பல இன்னல்களை அனுபவித்தான், பின்னர் எப்படி அதிலிருந்து மீண்டு வந்தான் என்பது வரை அனைத்தையுமே தாவுதல் காட்சிகளாக விரைந்து எழுதி சுருக்கி முடித்துவிடுகிறார்கள். இது சிறுகதை அல்ல என்பதை இளையோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். முத்து என்பவனின் வாழ்வின் பல தருணங்கள் இருந்திருக்கும். அவற்றுள் பேரனுபவமாக வாசகனின் அனுபவ எல்லைக்குள் கடத்த முடிந்த, கடத்தினால் வாசகனுக்குள் கவித்துவமான பாய்ச்சலை உருவாக்கக்கூடிய ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதனைத் தொடக்கம், நடு, முடிவு என்று அதன் வேகத்திற்கும் கச்சிதத்திற்கும் ஏற்ப வடிவமைத்துக் கொண்டு எழுதலாம்.

நண்பன் திரைப்படத்தில் ஒரு வசனம் இடம்பெற்றிருக்கும். ‘எனக்கு ரெண்டு கால்களும் உடைஞ்ச பெறகுத்தான் சார் நான் சொந்த காலில் நிக்க ஆரம்பிச்சிருக்கன்…” எத்தனை கவித்துவமான ஒரு வசனம் இது? அதே இடத்தில், “சார் நான் என் குடும்பத்தைக் காப்பாத்தணும். கொஞ்சம்கூட அக்கறையில்லாமல் கூட்டாளிங்கக்கூட சுத்தி திரிஞ்சன்… படிப்புல அக்கற காட்டல… கடைசில மேலேந்து விழுந்து தற்கொலை செஞ்சிக்கிட்டன்… அப்போ கால் ரெண்டும் உடைஞ்சிருச்சி சார்… அப்பத்தான் எனக்குப் புத்தி வந்துச்சி சார்,” என்று எழுதியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை ஊகித்துப் பாருங்கள். இரண்டு வசனங்களும் உருவாக்கும் கச்சிதமும் பேரனுபவமும் வெவ்வேறானவை என்பதைப் புரியும் இடத்தில் இலக்கியத்தின் மீதான புரிதலும் பயிற்சியும் சற்றே மேம்படும்.

அடுத்து, ஒரு மனிதனின் அத்தனை வாழ்வியல் சிக்கல்களையும் கொண்டு வந்து குவிக்கும் இடமென சிறுகதையைக் கருதுவதையும் விட்டுவிட வேண்டும். இது சிறுகதையின் ஆன்மாவை நெருக்கிவிடும். பெருமளவிலான கவனச்சிதறலை உருவாக்கிவிடும். எதை நோக்கி செல்கிறோம் எனத் தெரியாமல் வாசகர்களின் ஈடுபாடும் சிதைந்துவிடும். சிறுகதை தன்னளவில் ஓர் உணர்வை, ஒரு பிரதான சம்பவத்தை என்று கச்சிதமான வடிவமைப்பை உள்முகமாகக் கொண்டு நகர்த்தப்பட வேண்டிய படைப்பு.

இளையோர்கள் முதலில் இவ்விரண்டையும் கருத்தில் கொண்டு ஒரு இலக்கியப் படைப்பை, குறிப்பாக சிறுகதையை அணுகினால் சிறப்பான மாற்றம் வரும் என்றே கருதுகிறேன். இலக்கியம் குறித்து கல்வித்தான் நமக்குள் முதல் புரிதலையும் அது சார்ந்த அடிப்படைகளையும் விதைக்கிறது. ஒரு போட்டிக்குக் கதை எழுதும்போது கருப்பொருளையும், சூழலையும், வழிகாட்டிப் படத்தினையும் கொடுத்து வழிகாட்டுகிறது. இவை யாவும் மதிப்பீட்டு வசதிக்காக உருவாக்கப்பட்டக் கருவிகள் ஆகும். ஆகையால், அக்கருப்பொருளை வலிந்து புகுத்தி அதனை அழுத்தமாக உணர்த்துவதற்கான மெனக்கெடல் மாணவர்களின் படைப்புகளில் இயல்பாகவே வெளிப்படும். ஆகவேதான், விடாமுயற்சி எனும் கருப்பொருளைப் பாவித்து எழுதப்படும் சிறுகதையில் ஓர் இளைஞன் வாழ்க்கையில் முன்னேற என்ன மாதிரியான விடாமுயற்சிகளையெல்லாம் மேற்கொள்கிறான் எனப் புகுத்த வேண்டிய நிலை உருவாகிவிடும். இது மதிப்பீட்டுக்கு உதவும்; மேலும், மாணவர் பருவத்தில் அது தவிர்க்க இயலாத இலக்கிய அணுகுமுறையாகும்.  ஆனால், பள்ளிப் பருவம் கடந்து வந்து அந்நிலை நீடிப்பதே கவனித்துக் களைய வேண்டியதாகும்.

ஆழமும் விரிவும் கொண்ட வாசிப்பே இளையோர்களின் இலக்கிய புரிதலையும், இலக்கியத்திற்கான மொழியையும் மேம்படுத்தும். அனுபவத்தை அனுபவமாக மட்டுமே எழுதிடாமல் அவ்வனுபவத்தைக் கவித்துவமான ஓர் இடத்திற்குள் மொழியின் வழியாக நகர்த்திடல் வேண்டும். இதுதான் இளையோர்களுக்கான சவாலும்கூட.

ஆக, வாசிப்பை நிறுத்திவிடாமல் தேடல் நிகழ்ந்துகொண்டே இருத்தல் வேண்டும். ஒரு கூட்டாக சேர்ந்து வாசித்த சிறுகதையை ஆரோக்கியமான முறையில் விவாதிக்கத் துவங்குவதே ஓர் கூட்டு இரசனையை உருவாக்கும். அங்கிருந்து நமக்கான இரசனையைக் கண்டடைந்து வளர்த்துக்கொள்ள ஏதுவாகவும் இருக்கும். இதனைப் பயிற்சித்துப் பார்ப்பதே இன்றைய இளையோர்களுக்கான தேவையாகும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்

21.02.2021

About The Author