அவநிதாவின் சொல் – கவிதைகளின் புன்முறுவல்

அவநிதாவின்

சின்னஞ்சிறு கால் தடத்தினைப் போல

அவளுடைய வார்த்தைகளும்

பார்க்கும் முன் கரைந்தொழுகி விடுகிறது

மனத்திற்குள்…

 

2007ஆம் ஆண்டிலிருந்தே திண்ணை.காம் இணைய இதழின் மூலம் அறிமுகமானவர் சிங்கப்பூரில் வசிக்கும் எப்பொழுதுமான நெருங்கிய தோழர் பாண்டித்துரை. நான் அப்பொழுதிலிருந்தே அறிந்த பாண்டி, ஒரு நல்ல கவிஞர், கவிதையின் மீது அதீதமான ஈடுபாடும், செயல்நோக்கமும் கொண்டவர். நண்பர்களுடன் இணைந்து ‘பிரம்மா’ என்ற கவிதை நூலையும் வெளியிட்டிருந்தார். கவிதைகள் என்றால் பாண்டியின் ஆழ்மனம் விழித்துக் கொள்ளும். தெளிவான மனநிலையுடன் திட்டமிட்டு எழுத முடியாத ஒன்று கவிதை. அது மிகவும் யதார்த்தமான தெறிப்பு; ஆக்ரோஷமான மௌனம்; இரைச்சல்மிக்க அமைதி. இப்படியாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

நான் இலக்கியத்தில் ஆர்வத்துடன் இருந்த அதே காலக்கட்டத்தில் சிங்கப்பூரில் அதுபோல ஆர்வத்துடன் இருந்தவர் நீதிப்பாண்டி. அவருடைய நட்பு வட்டமும் பெரியதாக இருந்தது. ஒன்றாகவே அலைந்தோம். தேக்கா, சிராங்கூன், ஷா நவாஸ் சாப்பாட்டுக் கடை, அங் மோ கியோ நூலகம் என சந்திக்காத இடங்களே இல்லை. கொஞ்சமும் சலிப்பில்லாமல் இருவரும் அலைந்து கொண்டே இருப்போம்; உரையாடல் தீராமல் எல்லா கனங்களிலும் யாரையாது உள்ளே இணைத்தும் கொள்வோம். பூங்குன்ற பாண்டியன், பாலாஜி, பாலு மணிமாறன், எம்.கே குமார், கண்ணபிரான் ஐயா என சதா யாரையாவது சென்று சந்தித்துக் கொண்டும் இருப்போம். அப்பொழுதுதான் சிங்கை இலக்கிய நண்பர்களுக்கும் எனக்குமான நட்பும் விரிந்திருந்தது. அதை இணைத்தது நிச்சயம் பாண்டித்துரைத்தான்.

அவர் சிறுகதைக்காக ‘தங்கமுனை’ விருது பெற்ற செய்தி, கவிதையைக் கடந்து சிறுகதை துறையிலும் தனது அகங்களை விரித்துள்ளார் என்று மகிழ்ச்சியை அளித்தது. இம்முறை சிங்கை சென்றபோது அவருடைய குழந்தையை என்னிடம் கொடுத்தனுப்பினார். நான் அவநிதாவை அழைத்துக் கொண்டு கெடா வரை வந்துவிட்டேன். வெள்ளைக் கவுனுடன் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருக்கும் அவநிதாவைக் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தேன். அவளுடைய ஓரப்பார்வை மெல்ல திரும்பி என் அகத்தைக் கவனிக்கும் கூர்மையான சுட்டிப் பார்வையாக மாறியது.

தன் மகள் அவநிதாவுக்காகவே நீதிபாண்டியால் எழுதப்பட்ட கவிதை நூல் இது. இந்த நூலை அவர் எங்கேயும் வெளியிடவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். 2016ஆம் ஆண்டில் தான் அன்றாட வாழ்நாளில் சந்திக்கும் இலக்கியம் சார்ந்த நண்பர்கள், இலக்கியம் சாராத எளிய மனிதர்கள் என தினம் ஒருவரைப் பார்த்து ‘அவநிதாவின் சொல்’ புத்தகத்தைக் கொடுத்துள்ளார். அவர்கள் பற்றியும் முகநூலில் தொடராக அறிமுகமும் படுத்தியுள்ளார். இதுவரை இப்படி நூல் வெளியீடு செய்து நான் கேள்விப்பட்டதும் இல்லை. அவநிதா குழந்தைமையுடன் இந்த உலகை எதிர்க்கொள்வதைப் போல பாண்டியும் தன் எதிரில் இருக்கும் மனிதர்களோடு இந்த நூலின் சப்தங்களை அதே குழந்தமையுடன் பகிர்ந்திருக்கிறார்.

இத்தொகுப்பில் உள்ள 70க்கும் மேற்பட்ட கவிதைகள் மிகப்பெரிய கவிதை துறையையே புரட்டிப்போடப்போகும் கவிதைகள் என்றெல்லாம் இல்லை. பின் நவீனத்துவ, முன் நவீனத்துவக் கவிதைகளும் அல்ல. கவிதைகளின் புன்முறுவலே அவநிதா பாண்டியின் மனத்தில் உருவாக்கும் சலனம். அது வழியாக அல்லது அப்படியே அவளுடைய சொற்களைக் கவிதையாக்கியுள்ளார். இதுவும் மனத்தில் ஒரு துள்ளலை உண்டாக்கும்.

‘பின்னே ஓடவைத்து

முந்திச் செல்கிறாள்

அவநிதா’ – பாண்டித்துரை

கவிதை மொழியின் நடனம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். கவிதை மொழியின் குழந்தை என்றுகூட சொல்லலாம் போல என்றாகிவிட்டது. அத்தனை குழந்தைத்தனங்களையும் இணைத்துதான் நீதிபாண்டியின் ‘அவநிதாவின் சொல்’. புற உலகத்தை அறியாத ஒரு பருவம் உண்டு. யார் எத்தனைமுறை சொன்னாலும், எத்தனை கடினமான வார்த்தைகளை உள்ளடக்கி விளக்கினாலும் இவ்வுலகத்தின் சூட்சமமும் உலக நடைமுறையையும் அறியவே அறிந்திட முடியாது ஒரு வயதுண்டு. இன்றும் எல்லோரும் நினைத்து ஏங்கும் குழந்தை பருவம் அது. உலகத்தை அறியாமலே இருந்திருக்கலாம் என்ற குற்றவுணர்ச்சியோடும் ஏக்கத்துடனும் அலையும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு குழந்தை இருக்கிறது. தன் சிறார் பருவத்தின் அத்தனை நினைவுகளையும் ‘ப்ரேம்’ போட்டுத் தன் மனத்திற்குள் மாட்டிக் கொள்ளாத மனிதர்களே இல்லை என்று சொல்லிவிடலாம்.

‘பசித்த அவநிதா

அழுகையைத் தின்றுவிடுகிறாள்’ – பாண்டித்துரை

நோய் வந்துவிட்டால் எல்லோரும் குழந்தையாகிவிடுவோம். எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் ஒரு காய்ச்சல் போதும், நம்மைச் சுருட்டிக் குழந்தையாக்கி மெத்தையின் மடியில் போட்டுவிடும். மருந்து சாப்பிட நாம் பிடிக்கும் சிறு அடத்திலும், அம்மாவோ மனைவியோ அக்காவோ வைக்கும் உணவைக் கண்டு போர்வையை இழுத்துப் போர்த்திக் கொள்ளும் போதும், நமக்குள் இருக்கும் குழந்தை நம் அகங்காரங்களை, பதவிகளை, பட்டங்களை, அந்தஸ்த்துகளை எல்லாம் விழுங்கிவிட்டு ஒரு சிறு மௌனக் கண்ணீராக வெளியே கொட்டும்.

 

Pandithurai

அப்படிப்பட்ட நம்மையும் நமக்குள் இருக்கும் ஒரு குழந்தையையும் சுட்டிக் காட்டும் சொற்கள்தான் அவநிதாவினுடையது. அதையேத்தான் பாண்டியின் கவிதைகளும் செய்கின்றன. நம் வெளிமனம் திட்டவட்டமான பிம்பங்களுடன் கட்டப்பட்டவை. அவை இவ்வுலகை நினைவுக்கூர்ந்து கொண்டே இருக்கும். ஆனால், அதனையும் தாண்டி உள்ளே அகத்துக்கடியில் ஒளிந்து கொண்டிருக்கும், எப்பொழுதோ தன் பொம்மையைத் தொலைத்துவிட்டுத் தேடும் அவநிதாவைப் போல, ஒரு தீண்டலை நோக்கியதே இக்கவிதைகள்.

‘ அவநிதாவை

ஆகாயம் தொட

தூக்கி எறிகிறேன்

என்னையும் தூக்கிச் செல்கிறாள்‘ – பாண்டித்துரை

நாம் புத்தகங்களைத் திறந்திருப்போம்; அதனூடாக வாழ்க்கையின் பல கதவுகளையும் திறந்திருப்போம். ஆனால், இது அவநிதா என்கிற ஒரு குழந்தையைத் திறக்கும் முயற்சி. களைந்துகிடக்கும் சொற்களுக்கிடையே வாழ்க்கையைப் பற்றிய எந்தவித பெரிய தத்துவங்களும் அற்று, மூளையையும் மனத்தையும் கனமாக்காமல், நாம் எப்பொழுதோ தொலைத்துவிட்ட நம்மை தன் சிறு நுனி விரலால் காட்டிச் செல்கிறது. தொடாத ஒரு தொடுதல்; தொட்டுவிட்டுச் செல்கிறது.

அவநிதாவாகவே இருந்திருக்கலாம் என்று மட்டும் தோன்றியது. இடையில் வரும் அப்புக்குட்டி கவிதைகள் அவநிதாவிடம் இருந்து சட்டென தூரமாக்கிவிடுகிறது. இருப்பினும், அது உருவாக்கும் உலகமும் மீண்டும் நம்மைக் குழந்தைகளிடமே இட்டுச் செல்கின்றன.

‘சன்னல் தொடும்

சிட்டுக் குருவிகளை

விரட்டிப்பிடிக்க எத்தனிக்கும் அவநிதா

பறந்து பார்க்கிறாள்’ – பாண்டித்துரை

ஒருமுறை எனது முதுகையும் பார்க்கிறேன்; அதில் எப்பொழுதோ இருந்த சிறகொன்று இப்பொழுது கழன்று எங்கேயோ எந்த வயதிலோ  யார் விரட்டியோ, அதட்டியோ விழுந்துவிட்டதை நினைத்து ஏக்கம் கொள்கிறேன்.அவநிதாவின் ஒரு சொல்; இதுவரை நாம் சொல்லாமல் விட்ட ஆயிரம் சொற்களின் மௌனத்தைக் களைக்கும் மிகக் கச்சிதமான ஆயுதம்.

வாழ்த்துகள் பாண்டி. அவநிதாவை இலக்கிய உலகத்திற்குத் தந்தமைக்கு. எனது, உனது, அவர்களது அவநிதாவின் சொற்களுக்கு  என் அன்பு முத்தங்கள்.

– கே.பாலமுருகன்

About The Author