• சவரக்கத்தி – ஓர் அன்பு கத்தி- திரைப்பார்வை

  மிஷ்கின் ‘மங்கா’ எனும் கதாபாத்திரத்திலும், இயக்குனர் ராம் ‘பிச்சை’ என்கிற முடித் திருத்தம் செய்பவராகவும் இரு துருவங்களில் நின்று நடித்திருக்கிறார்கள்.  புதுமுக இயக்குனர் என்றாலும் ஜி.ஆர் ஆதித்யா மிஷ்கினிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அனுபவத்துடன் மிஷ்கின் பட சாயல் ஆங்காங்கே வியாபித்திருக்கும்படியே படத்தை உருவாக்கியிருக்க்கிறார். சினிமாத்தனங்களைப் பல இடங்களில் உதறித்தள்ளிவிட்டு தனித்துவத்துடன் ‘சவரக்கத்தி’ மனத்தில் ஆழ நுழைகிறது.

  பெரும்பாலான கதாநாயக முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் கதாநாயகனை நோக்கிய துதிப்பாடல்களும் தூயக் கட்டமைப்புகளும் மட்டுமே வழக்கமான தமிழ் சினிமாவின் கூறுமுறையாக இருக்கும். ஆனால், சவரக்கத்தி கதாநாயகனைச் சுற்றி கட்டியெழுப்பப்பட்டிருக்கும் படமாக இருப்பினும், ஆண்மை பிரச்சாரமெல்லாம் ஏதும் இல்லாமல் வலிக்கும் அடிக்கும் பயந்து பிறர் காலில் விழும் ஓர் எளிய மனிதனே இப்படத்தின் கதாநாயகனாகக் காட்டப்பட்டுள்ளான். இக்கட்டுடைப்பே படத்தை வித்தியாசப்படுத்துகிறது.

  ஒரே நாளில் நடக்கும் சம்பவம் என்றதுமே இது சிறுகதைக்குரிய கச்சிதம் பொருந்திய வடிவநேர்த்தியாகும். அதனைத் திரைக்கதையாக்கி தொய்வின்றி கொண்டு போனதுதான் இயக்குனரின் சாமர்த்தியம் எனலாம். மசாலா படங்களையும் தேய்வழக்குக் கதாபாத்திர மோகங்களைக் கக்கித் தள்ளும் படங்களையும், இரட்டைத்தனமான வசனங்களின் மூலம் செய்யப்படும் மூன்றாம்தர நகைச்சுவையை இரசிப்பவர்களுக்கும் ‘சவரக்கத்தி’ அவர்களின் காலாவதியான இரசனையைக் கூர்த்தீட்டும்.

  இரண்டு விசயங்கள் மட்டுமே கொஞ்சம் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றியது. கதையின் இரண்டாம் பாதியில் திரைக்கதையில் ஏற்படும் சிறிய தொய்வும், எல்லா கதாபாத்திரங்களும் கொஞ்சம் மிகையான நடிப்பை வழங்கியிருப்பதாகத் தோன்றும் நெருடலும் மட்டுமே சரிசெய்திருக்க வேண்டியதாகப் படுகிறது.

  இரண்டு வெவ்வேறான வாழ்க்கைக்குள்ளிருந்து வரும் மனிதர்கள் ஓர் எரிச்சலும் பகையும், வெறுப்பும் ததும்பும் புள்ளியில் சந்தித்துக் காரணமே இல்லாமல் ஒருவருக்கொருவர் முரண்படுகிறார்கள். பின்னர் வலியவன் எளியவனைத் துரத்துகிறான். எளியவன் வாழ்வதற்கு வேண்டி சந்தர்ப்பங்களின் எல்லா மூலை முடுக்கிலும் புகுந்து தப்பித்து ஓடுகிறான். வாழ்க்கை என்பது சதா நம்மைத் துரத்திக் கொண்டும், நாமும் பற்பல விசயங்களிலிருந்து தப்பித்துக் கொண்டிருக்கும் ஒரு நிச்சயமற்ற பந்தயம் எனப் படம் காட்டுகிறது.

  இறுதியில் மிஞ்சுவது மனிதநேயமே. அதுவரை ஆக்ரோஷமாக எளியவனைத் துரத்தும் வலியவன் ஒரு சம்பவத்தினூடாக  மனத்தால் ஈரப்படுகிறான். தன் தலைக்கனத்தையும் வெறுப்பையும் வன்முறையையும் தூக்கிவீசிவிட்டு வாழ்க்கை தனக்காக வகுத்திருக்கும் எல்லையை நோக்கிக் கிளம்புகிறான். வாழ்க்கை குறித்த அருமையான சித்தரிப்பு ‘சவரக்கத்தி’.

  -கே.பாலமுருகன்

  Share Button

2 Responsesso far.

 1. வனராஜன் says:

  மிகவும் சிறப்பாக திரை விமர்சனம் செய்து வருகிறீர்கள், வாழ்த்துக்கள்

 2. சிவாலெனின் says:

  சவரக்கத்தி படத்தை இன்னும் பார்க்கவில்லை.ராம்யின் இயல்பான நடிப்பு எப்பவுமே பிடிக்கும் என்பதாலும் படத்தின் தலைப்பில் ஏதோ ஒன்று மறைந்திருப்பதாலும் பார்க்க வேண்டும் என எண்ணியும் முடியாத சூழல்.இருப்பினும் நண்பர் பாலாவின் விமர்சனம் இன்னும் தூண்டுதலை ஏற்படுத்தியுள்ளது.அருமையான விமர்சனம்.ஆழமான பார்வை.வாழ்த்துகள் நண்பா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *