• ஒரு மிகப் பெரிய கொள்ளைச் சம்பவத்தைப் பற்றி- விசாரணைகளின் பலவீனங்கள்

   

  சம்பவம் நடந்த நாள்: கடந்த ஜனவரி 24

  இடம்: (இரகசியமாக்கப்பட்டுள்ளது)

  நேரம்: காலை 10.00 மணி

   

  இதுவொரு மிகப் பயங்கரமான கொள்ளைச் சம்பவமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. இக்கொள்ளைச் சம்பவத்தில் மொத்தம் நான்கு பேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் ஓர் ஆள்தான்  என்றாலும் இன்றளவும் அக்கொள்ளைச் சம்பவம் குறித்துப் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

  காவல்துறையினர் இதுபோன்ற ஒரு குரூரமான கொள்ளைச் சம்பவத்தைப் பார்த்ததில்லை என்றும் விசாரணையை எந்தக் கோணத்திலிருந்து தொடங்குவது என்றும் தீவிரமாகக் கலந்தாலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

  ஒரு காவல்துறை அதிகாரியின் வாக்குமூலம் பின்வருமாறு:

  “எனது 10 வருட வேலை  அனுபவத்தில் இதுதான் நான் கண்டு அதிர்ச்சியடைந்த ஒரு கொள்ளைச் சம்பவம் ஆகும். சமீபத்தில் ஒரு தமிழ் சினிமாக்கூட குற்றப் பரம்பரையில் கொள்ளைச் சம்பவத்தின் வன்முறையைக் காண்பித்தது. அப்படத்தைவிட பன்மடங்கு கேள்விப்படுவோருக்கு முழு அதிர்ச்சியையும் பயத்தையும் கொடுக்கக்கூடியதாக இக்கொள்ளைச் சமபவம் எப்பொழுதுமே பீதியை உண்டாக்கும் என்றே நினைக்கிறேன்”

  அக்கொள்ளைச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத நபரின் வாக்குமூலம்:

  “என் வாழ்நாளில் அத்தகையதொரு கொள்ளையர்களையும் கொள்ளைச் சம்பவத்தையும் நான் பார்த்ததே இல்லை. இன்னமும் என் நடுக்கம் குறையவே இல்லை. முடிந்தால் அக்கொள்ளைச் சம்பவத்தைப் பற்றி குழந்தைகளிடம் சொல்ல வேண்டாம். அக்கொள்ளையர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்”

  விசாரணை மிகவும் தீவிரமாக முடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கொள்ளையர்களைக் காவல்துறை கைது செய்தது. உண்மை சம்பவம் அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்பதால் நேரடி வாக்குமூலம் பெறக் காவல்துறை முடிவெடுத்தது. எல்லோரும் ஒன்று திரண்டு கொள்ளையர்களைப் பொதுமக்கள் முன்னிலையில் விசாரணைக்குட்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

  கொள்ளையர்களின் பெயர்கள் பின்வருமாறு:

  1. முரளி
  2. கபிலன்
  3. குமார்
  4. வினோத் 

   

  கேமரா பதிவுடன் விசாரணை தொடங்கப்பட்டது:

  காவல்துறை : முரளி, நீங்கள் சொல்லுங்கள். ஏன் அதைச் செய்தீர்கள்?

  முரளி: எனக்கு அது பிடிக்கல… அதான்…

  காவல்துறை: ஏன் பிடிக்கவில்லை?

  முரளி: அது என் கூட்டாளி இருக்கான் இல்ல? குமாரு… அவனோட…

  காவல்துறை: அது எப்படி உங்களுக்குத் தெரிய வந்தது.

  முரளி: அவன் தான் சொன்னான்…(சிரிக்கிறான்)

  காவல்துறை: சரி, எப்படி அக்கொள்ளையை மேற்கொண்டீர்கள்?

  கபிலன்: அது நான் சொல்றன். நாங்க கேட்டோம், சுபா கொடுக்கல. அப்பறம் அது சாப்ட போச்சா… அப்பத்தான் நான் போய் எடுத்தன்…

  காவல்துறை: அப்படிச் செய்யலாமா?

  முரளி: நான் கேட்டன் அதுதான் கொடுக்கல… அதான் அது குமாரோடையா இல்லயான்னு பாக்க எடுத்தன்…

  காவல்துறை: பார்க்கத்தான் எடுத்தீர்கள் என்று எப்படி நம்புவது?

  குமார்: நாங்கப் பாத்துட்டு வைக்கறதுக்குள்ள  எங்கள பிடிச்சிட்டாங்க   தெரியுமா?

  காவல்துறை: இதை எப்படி நாங்கள் நம்புவது?

  வினோத்: வேணும்னா சுபாகிட்ட கேட்டுப் பாருங்க…

  கொள்ளையில் பாதிக்கப்பட்ட சுபா வரவழைக்கப்படுகிறாள்.

  காவல்துறை: சொல்லுங்கள் சுபா, என்ன நடந்தது?

  சுபா: (அழுதுகொண்டே…) என் அழிப்பானை இவனுங்கத்தான் எடுத்தானுங்க…

  காவல்துறை: பிறகு என்ன நடந்தது?

  சுபா: குமாரு, திரும்பி வந்து கொடுத்துட்டான். ஆனால், அதுல கொஞ்சம் பிஞ்சிருக்கு… எனக்கு புது அழிப்பான் வேணும்….(மீண்டும் அழுகை)

  சுபா மீண்டும் அனுப்பப்பட்டவுடன் காவல்துறை அந்த நான்குக் கொள்ளையர்களின் முகத்திலும் கருப்புத் துணியை மூடி வெளியே கொண்டு வந்தது.

  மக்கள் கூட்டம் அந்த 7 வயது நிரம்பிய கொள்ளையர்களைப் பார்வையிட அலைமோதினர். கடுமையான  காவலுடன் காவல்துறை அவர்களை வண்டியில் ஏற்றி நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றது. குற்றவாளி கூண்டில் நிற்க வைக்கப்பட்டிருந்த அவர்கள் மீது பலர் கல்லெறிந்தனர். பலர் வசைப்பாடினர். பலர் எதிர்ப்புப் பலகையையெல்லாம் காட்டிக் கொண்டு முழக்கமிட்டனர்.

  சிறிது நேரத்திற்குப் பின் நீதிமன்றத்தில் அவர்களுக்குத் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

  “ஏழு வயது நிரம்பிய பள்ளி மாணவர்களான முரளி, கபிலன், குமார் மற்றும் வினோத் ஆகிய நால்வரும் கடந்த ஜனவரி 24 2018ஆம் ஆண்டில் காலை 10 மணிக்கு ‘சுபா’ என்கிற அதே ஏழு வயது ஆகிய சிறுமியின் 50 சென் மதிப்புள்ள அழிப்பான் ஒன்றை எடுக்க முயன்றுள்ளனர். ஆகவே, விசாரணைக்குப் பின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்களைத் தொடர்ந்து 10 நாட்கள் கடுங்காவலில் வைத்து ரோத்தானில் அடிக்கவும், தொடர்ந்து கடுமையாகத் திட்டவும், தீர்ப்பளிக்கப்படுகின்றது’

  குறிப்பு: மேற்கண்ட நீதிமன்றம் நம் வீடாக இருக்கலாம்; பள்ளிக்கூடமாகவும் இருக்கலாம். மேற்கண்ட காவல்துறை என்பவர்கள் பெரியர்களாக இருக்கலாம், பெற்றோர்களாக இருக்கலாம்… யாராக வேண்டுமென்றாலும் இருக்கலாம். தீர்ப்பு என்பது நம் மனசாட்சியின் குரலாக இருக்கலாம்.

  ஓர்  அழிப்பானை எடுத்த சிறுவர்களையும் ஒரு வங்கியைக் கொள்ளையடித்த திருடர்களையும் நாம் ஒரே மாதிரித்தான் நடத்திக் கொண்டிருக்கிறோமா என்கிற கேள்வியை உங்கள் முன் சிந்தனைக்காக வைத்துவிடவே இக்கற்பனை கொள்ளைச் சம்பவம். இதை யாரையும் எந்தத் தனிநபரையும் தனி அமைப்பையும்  குறிப்பிட அல்ல.  நம் விசாரணைகளில் முறையான உளவியலும் பெற்றோரியலும் அன்பும் இல்லாதனாலேயே பெரும்பாலான சம்பவங்களுக்குக் குற்றம் என்கிற பெயரைச் சூட்டி சிறார்களைக் காயப்படுத்துகிறோம். நம் விசாரணைகளின்/ அணுகுமுறைகளின்  பலவீனங்களிலேயே ஒரு தலைமுறையின் சீரழிவு ஒளிந்துள்ளது என்பதே இப்பதிவின் எதிர்வினை.  சிறார் செய்யும் தவறுகளை அணுகும் நம் விதத்தை நோக்கி நம்மை நாமே விசாரித்துக் கொள்ள இதுவொரு சந்தர்ப்பத்தை  உருவாக்கும் எனில்…

  -கே.பாலமுருகன்

  Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *