கணேஷ் பாபுவின் வாசிப்பு – ஒரு கடிதம்

Ganesh Babu

 

வணக்கம் பாலா,

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். என்னுடைய வாசிப்பு குறித்து கேட்டிருந்தீர்கள். என் அம்மா நிறைய வாசிப்பார்கள். சுஜாதாவின் தீவிர வாசகி. அதனால் எனக்கு கணேஷ் என்றும் என் தம்பிக்கு வசந்த் என்றும் பெயரிட்டார்கள். என்னுடைய பள்ளியிறுதி வகுப்பில் அம்மாதான் முதன்முதலில் கல்கியின் பொன்னியின் செல்வனை வாசிக்கத் தூண்டினார்கள். அதன்பின் சரித்திரப் புதினங்கள் அனைத்தையும் வாசித்தேன்(கல்கி, சாண்டில்யன், விக்கிரமன், கோவி மணிசேகரன் இவர்கள் எழுதிய அனைத்து நாவல்களையும் வாசித்தேன்.

பின்னர் அது சலிப்பூட்டத் தொடங்கியதும் பாலகுமாரனை முழுக்க வாசித்தேன். அவர் எழுதிய அனைத்து நாவல்களையும் வாசித்தேன். அதுவும் ஒருகட்டத்தில் சலிப்பு ஏற்படுத்தத் தொடங்கியது. என் கல்லூரி நாட்களில் விகடனில் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய “துணையெழுத்து” கட்டுரைத் தொடர் வெளியானது. அதன்பின் கனவில் கூட எஸ். ராமகிருஷ்ணனின் பெயரையே சொல்லிக் கொண்டிருந்தேன். புது பேனா வாங்கினால் கூட எஸ். ராமகிருஷ்ணன் என்ற பெயரையே எழுதிப் பார்ப்பேன். அவருக்கு கடிதங்கள் எழுதினேன். அவரும் போஸ்ட் கார்டில் பதில் போடுவார். மெல்ல மெல்ல அவரது அனைத்து சிறுகதைகளையும் நாவல்களையும் வாசித்தேன். அவர் காட்டிய உலகம் வித்தியாசமாக இருந்தது. அதுவரை வெகு ஜனக் கதைகளை வாசித்து வந்தவனுக்கு தீவிர இலக்கியம் அப்போதுதான் அறிமுகமானது. வாசிப்பு சார்ந்து அவர் எழுதிய பல்வேறு கட்டுரைகள் வழியே உலக இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளை வாசித்தேன்.

ஆங்கில வாசிப்பும் உடன் தொற்றிக் கொண்டது. ஒரு விடுமுறை நாளில் ஜெயமோகனின் திசைகளின் நடுவே என்ற சிறுகதைத் தொகுப்பை வாங்கினேன். அத்தொகுப்பில் முதல் கதை “நதி”. அந்த மொழியில் கிட்டத்தட்ட கிறங்கினேன் என்றே சொல்லலாம். அத்தொகுப்பின் இறுதி கதை “லங்காதகனம்”. அந்த கதை சிறுகதை குறித்து எனக்குள் எத்தனையோ விஷயங்களைச் சொன்னது. அதன்பின்னர் ஜெயமோகனின் அனைத்து கதைகளையும் நாவல்களையும் வாசித்தேன். இன்றுவரை அவருடன் தொடர்பில் இருக்கிறேன்.

அதன்பின் கோணங்கியின் மதினிமார் கதை, உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை ஆகிய தொகுப்புகளை வாசித்தேன். இப்படி எஸ்.ரா மற்றும் ஜெயமோகனின் தொடர் கட்டுரைகளை விடாமல் வாசிப்பதன் வழியே தான் நான் எனக்கான வாசிப்பைக் கண்டுகொண்டேன்.ஆங்கில எழுத்தாளர்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள், ஹெமிங்வே, ஜாக் லண்டன், சார்லஸ் டிக்கன்ஸ், எமிலி பிராண்ட், எமிலி டிக்கன்ஸன். மற்றைய மொழிகளில் பிடித்த எழுத்தாளர்கள் செல்மா லாகர்லாவ், பால்ஸாக். ருஷ்ய கதைகளின் மேலுள்ள மோகமும் அளவில்லாதது. எனக்கு மிகவும் பிடித்த ருஷ்ய ஆசிரியர்கள் தஸ்தாவெய்ஸ்கி, டால்ஸ்டாய், செகாவ்.

தமிழில் முன்னோடிகள் அனைவரையும் வாசித்திருக்கிறேன். புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, கு.ப.ரா, மௌனி, எம்.வி.வி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் தொடங்கி இன்றுவரை எழுதும் எழுத்தாளர்களை வாசித்து வருகிறேன். கவிதையில் கம்பரும் ஆண்டாளும் பிடித்தமானவர்கள். ஆண்டாளின் திருப்பாவை தரும் பிரமிப்பில் இருந்து இன்னும் விலகவில்லை. நவீன கவிதையில் பிடித்தமானவர்கள் சுகுமாரன், தேவதச்சன், தேவதேவன்.

அதிகம் வாசிக்க வாசிக்க இன்னும் வாசிக்க வேண்டியது அதிகம் என்றுதான் தோன்றுகிறது. தமிழில் இந்த நாள்வரை நான் என்றும் மறக்கமுடியாதவர்கள் சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், எஸ்.ரா, ஜெயமோகன் ஆவர். எஸ்.ரா வும் ஜெயமோகனும் எனது இரு கண்கள் போல என நண்பர்களிடம் சொல்வேன். எதை எழுதத்தொடங்கும் முன்னரும் இவர்கள் இருவரையும் மானசீகமாக வணங்கி விட்டுத்தான் எழுதத் துவங்குகிறேன். நேரில் சந்திக்கையில் நிறைய பேசலாம். உங்கள் வாசிப்பு அனுபவத்தையும் நேரம் கிடைக்கையில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. இன்னும் நிறைய எழுத வேண்டும் என்பதுதான் இப்போதைக்கு என்னுடைய குறிக்கோள். இவ்வளவு பேர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள், நாமும் எழுதவேண்டுமா என்று ஒரு சில சமயம் தோன்றும். ஆனாலும் ஒவ்வொருவரின் உலகமும் அனுபவமும் தனித்தனி. எழுதித்தான் ஆகவேண்டும். இதே கேள்வியை வாசகர் ஒருவர் ஜெயமோகனிடம் கேட்டபோது அவர் சொன்னது: “தஸ்தாயெவ்ஸ்கி எழுதியபின்னர்தானே நானும் எழுதுகிறேன்”. சுந்தர ராமசாமி ஒரு உரையில் சொன்னார், “வேறு யாருக்காக இல்லாவிட்டாலும் எனக்காக நான் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருக்க வேண்டியவன்தான்”

இவ்வார்த்தைகளை அடிக்கடி நினைவு கூர்வேன். அதுதான் எழுத ஊக்கமளிக்கிறது.

-கணேஷ் பாபு

 

அன்புள்ள கணேஷ்பாபு,

நீங்கள் ஆச்சர்யப்படுத்துகிறீர்கள். உங்கள் வாசிப்பின் விரிவும் ஆழமும் பன்மொழிகளில் ஆழ்ந்துள்ளன. அதுவே உங்கள் எழுத்தில் உருவாகியிருக்கும் தாக்கத்திற்கும் காரணம் என்றே சொல்லலாம். விரைவில் கனவுலகவாசிகளைப் போல மற்ற சிறுகதைகளையும் வாசிக்க ஆவலாக உள்ளேன். முடிந்தால் இவ்வருடத்தில் உங்களின் ஒரு சிறுகதை தொகுப்பும் வெளியாகும் என்றால் நான் தான் முதலில் மகிழ்ச்சிக் கொள்வேன்.

சுந்தர ராமசாமி தனது ஒரு நேர்காணலில், என் எழுத்துகள் என்பது எல்லாவற்றுக்குமான சாவி கிடையாது; ஆனால், சிலவற்றின் பூட்டுகளை அது திறக்கும் என்றே நம்புகிறேன் என்கிறார். நாம் எழுதுவது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கான விடியல் அல்ல; ஏதோ ஏங்கோ சிலரின் மனத்தைத் திறக்குமானால் அதுவே எழுத்திற்கும் புரிதலுக்கும் வாழ்விற்குமான இடைவெளியில் கலை செய்யும் நுட்பமான தொடுதல் ஆகும். அதே ஊக்கத்துடன் எழுதுங்கள். குறிப்பாக விமர்சனம் இப்போதைய இலக்கிய நகர்ச்சிக்கும் புதுப்பித்தலுக்கும் இலக்கிய பார்வைகளைத் தடம் மாற்றி விடுவதற்கான முக்கியமான தளமாகும். அந்த விமர்சனப் போக்கைச் சிறிதும் சமரசம் இன்றி முன்னெடுக்க உங்களைப் போன்ற விசாலமான வாசிப்புள்ள ஒருவரால் நிச்சயம் முடியும். விமர்சனத்தை இன்னும் கறாராக்குங்கள்; ஊக்கப்படுத்துங்கள்.

எனது வாசிப்பும் உங்களைப் போல எஸ்.ராவின் ‘துணையெழுத்து’, ‘கதா விலாசம்’ ஆகிய நூல் வாசிப்பிலிருந்து நவீன இலக்கியத்தின் நீட்சிக்குள் நுழைகிறது. கல்லூரி காலத்தில் மனுஷ்ய புத்திரன், தேவத்தேவன், எஸ்.ரா, பாரதி, புதுமைப்பித்தன் ஆகியோரே நான் முதலில் வாசித்துத் தாக்கம் பெற்ற எழுத்தாளர்கள். பின்னர் அதன் வழியாக, வண்ணநிலவன், வண்ணதாசன், பிரபஞ்சனை அடைந்தேன். புதுமைப்பித்தனின் தாக்கத்தை வண்ணநிலவன் அவர்களிடம் பார்க்க முடிந்தது. வண்ணநிலவன், வண்ணதாசன் அவர்களின் தாக்கத்தை எஸ்.ராவிடம் பார்க்க முடிந்தது. இப்படி, வாசிப்பின் தேடல் நிமித்தம் ‘ஷோம்பி’ போல தாக்கப்பட்டு, தாக்கப்பட்டுத்தான் இலக்கியம் தனக்கான இடத்தை நிரப்பிக் கொள்கிறது என்று நினைக்கிறேன். ஒருவரிடத்தில் இன்னொருவரின் மொழி, சொல்முறை தாக்கம் ஆரம்பத்தில் தென்பட்டாலும் அடுத்த சில படைப்புகளிலேயே அவர்களின் தனித்துவம், தனித்த மொழி அடையாளம், போன்றவை தன்னகத்தே உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால், அதற்கு அவனிடம் தொடர் படைப்புகள் இருக்க வேண்டும். ஜெயமோகன் சொல்வதைப் போல தொடர்ந்து எழுதுவதன் மூலமே தனக்கான இலக்கிய நடையை ஒருவன் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

 

albert camus

ஜெயமோகனுடைய ‘தம்பி’ சிறுகதைத்தான் நான் முதலில் வாசித்த அவருடைய கதையாகும். கல்லூரியில் அக்கதையை ஒட்டி நண்பர்கள் வெகுநேரம் பேசிக் கொண்ட்டிருந்தோம். ஒரு கதை விவாதத்தை முதலில் தொடக்கி விட்டது அச்சிறுகதைத்தான். விவாதத்தின் ஊடாக நாங்கள் கண்டடைந்த பலவகையில் நோக்கக்கூடிய சாத்தியப் பார்வை எங்களுக்குள் ஒரு அகத்தூண்டலை உண்டாக்கியது. அப்பொழுதும் இப்பொழுதும் விவாதமே ஒரு படைப்பைப் பல கோணங்களில் இருந்து திறந்து காட்டும் என நம்புகிறேன். அதன் பின்னர், நான் தனியாக ஒரு சிறுகதையை வாசித்தாலும், என்னுள் பல குரல்கள் எழுந்து அக்கதையை விவாதிக்கும். நானே எனக்குள்ளே விவாதித்துக் கொள்வேன்.

அங்கிருந்து எனது வாசிப்பு மேலும் விரிவடைந்து உலக இலக்கியத்தில் தஸ்தாவெய்ஸ்கி, டால்ஸ்டாய், செகாவ்  என நீண்டாலும் ஆல்பர்ட் காம்யூவின் அந்நியன் நாவல் படிக்கும்வரை வேறு யார் மீதும் அப்படியொரு தாக்கம் உருவானதில்லை என்பதை அப்பொழுதே உணர்ந்தேன். அந்நாவலை வாசித்த பின்னர் உருவான உணர்வைப் பிடித்துக் கொண்டு இரண்டு மூன்று நாட்கள் நிம்மதியின்றி இருந்தேன். மனம் கனத்துக் கொண்டிருந்தது. ஏதோ தட்டுப்படாமல் அலைந்து கொண்டிருந்தேன். அதுநாள் வரை இலக்கியம் உருவாக்கியிருந்த மனநிலையை அந்நியன் களைத்துப் போட்டது என்றே சொல்ல வேண்டும். மறுவாசிப்பில் மனத்தை ஏதோ ஒருநிலைப்படுத்த முடிந்தது. அதே போல அசோகமித்ரனை வாசிக்கும்போதும் அம்மனநிலைக்குள்ளே தள்ளப்பட்டிருந்தேன். ஆல்பார்ட் காம்யூவும் அசோகமித்ரனும் எனக்குள் என்னை அலைக்கழித்த இரு முக்கியமான படைப்பாளர்கள் என்றே சொல்வேன்.

இப்படியாக நீங்கள் சொல்வதைப் போல எவ்வளவு வாசித்தாலும் வாசிக்க வேண்டியவை நீண்டு கொண்டே போகின்றன. அதுவொரு அடங்காத தேடல். அணையாத தீயைப் போல. எப்பொழுதும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

-கே.பாலமுருகன்

(கடிதங்களின் மூலம் இலக்கியம், சினிமா, விமர்சனம், சிறுகதைகள், தொடர்பாக உரையாடலாம்)

மின்னஞ்சல் முகவரி: bkbala82@gmail.com

 

Share Button

About The Author

Comments are closed.