அக்கரைப் பச்சை – 4 : கணேஷ் பாபுவின் கனவுலகவாசிகள்

சிங்கப்பூரில் வசிக்கும் கணேஷ் பாபு பற்றி தோழி சுஜாவிடமிருந்து தெரிந்து கொண்டேன். சிறுகதை எழுத்தாளராகவும் நல்ல விமர்சகராகவும் அறியப்படும் அவர் தங்கமீன் வாசகர் வட்டத்தில் ‘கவிதை இரசனை’ என்கிற நவீன கவிதைகள் பற்றிய ஓர் விமர்சன அங்கத்தையும் பல வருடங்களாக நடத்தி வருகிறார். இலக்கியம் தொடர்பான விமர்சனங்களிலும் விவாதங்களிலும்  தீவிரமாக  ஈடுப்பட்டு வரும் அவருடைய ‘கனவுலகவாசிகள்’ சிறுகதை அக்கரைப் பச்சை தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

ஒரு படைப்பாளன் தான் வாழும் காலத்தின் சாட்சியமாக இருத்தல் அவசியம். இன்றும் பலர் உடலை இந்நூற்றாண்டில் இருத்திக் கொண்டு எழுத்தைக் கடந்த நூற்றாண்டிலேயே உலாவவிட்டுவிடுவார்கள். அவர்களுடைய எழுத்து கடந்தகாலத்தை மட்டுமே நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும். இதுவே, இலக்கியம் என்பது பிரிவேக்கத்தின் புலம்பல் என்பதொரு புரிதல் உருவாகிவிடும். எழுத பேனாவைத் தொடும் எவரும் தன் கடந்தகாலத்தை நோக்கி மட்டுமே கற்பனை செய்யத் துவங்கிவிட்டால் நம் கண் முன் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தையும் வாழ்வையும் யார் சொல்வது? கடந்தகால உணர்வுகளையும் சம்பவங்களையும் தன் எழுத்தில் சேர்த்துக் கொள்வது அவசியமான ஒன்றே. ஆனால், அங்கேயே உழன்று வெம்பி தேம்பி இருந்துவிடக்கூடாது. எழுத்து இன்றைய பொழுதின் நீட்சியாக இருத்தல் இப்போதைக்கு மிக முக்கியம் என நினைக்கிறேன்.

நவீன வாழ்வும் அதன்பால் பெருகி வளர்ந்திருக்கும் சிதைவுகளையும், மனித உணர்வுகளின் சிடுக்குகளையும், நவீன வாழ்வின் உறவு சிக்கல்களையும், அறம் குறித்த எதிர்வினைகளையும் என நவீன வாழ்வை இலக்கியத்தின் ஊடாக மிகத் தீவிரமாக விசாரிக்கும் கூர்மையான எழுத்து நவீன எழுத்தாளர்களுக்குத் தேவை எனக் கருதுகிறேன். அகிரா குரோசாவா தன்னுடைய கலையும் பயணமும் என்கிற கட்டுரையில் கலைஞன் அவன் வாழும் காலத்தின் ஓலங்களையும் கூக்குரல்களையும் வலிகளையும் சிரிப்பையும் சுமந்தவனாக வெளிப்பட வேண்டும் எனக் குறிப்பிடுவதை மேற்சொன்ன விசயங்களுடன் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிகிறது.

 

சிங்கை நவீன வாழ்வின் உருவகம்

நவீன வாழ்வின் மிகக் கூர்மையான அவதாணிப்புகளைத் தன் இக்கதையின் வழியாக கணேஷ்பாபு குறியீட்டுக் கதைக்களத்தில் வெளிப்படுத்தியுள்ளார். ஆகையால், தான் வாழும் இப்பரப்பரப்பான வாழ்வின் மீது அவருக்கு ஓர் ஆற்றாமை , விமர்சனம் உள்ளது. அதனையே இச்சிறுகதை படைப்பின் குரலாக வெளியேற்றுகிறது. கதைச்சொல்லியும் அவனுடைய இரண்டு நண்பர்களும் ஒரு புல்வெளியில் அமர்ந்துகொண்டு தாங்கள் கண்ட கனவுகளைப் பற்றி விவரிப்பதுதான் இச்சிறுகதை. ஜூரோங் ஈஸ்ட் ரயிலடி பற்றி கணேஷ் விவரிக்கும் இடம் மிக முக்கியமானவை. அங்குத்தான் கதைக்கான ஒரு சிறிய திறப்பையும் என்னால் அடையாளம் காணவும் முடிந்தது. இதுபோன்ற குறியீட்டு மொழியில் வழங்கப்படும் கதைகளைப் புரிந்து கொண்டு பயணிக்க நமக்குத் திறப்புகள் அவசியம். ஒரு மொழியில் புழங்குகின்ற சொல்லானது அம்மொழி வழங்குகின்ற பாரம்பரியான அர்த்தத்திலிருந்து விடுப்பட்டு புதியதொரு பரிணாமத்தை எட்டுவதே குறியீட்டு மொழிச்சூழலில் நவீன இலக்கியம் ஏற்படுத்தும் தாக்கமாகும். அது கணேஷ் பாபுவிற்குச் சிறப்பாகவே கைக்கூடியுள்ளது. குறியீட்டு மொழி மட்டுமல்ல அவருடைய கதைக்களமே ஒரு குறியீடுதான். தொடர்ந்து சிறுகதையை உருவகித்துக் கொள்ள ஜூரோங் ஈஸ்ட் ரயிலடி பற்றி சொல்லும் இடம் எனக்கு வசதியாக இருந்தது.

‘கதவு திறந்ததும், திசைகளை முறைத்துச் சீறும் ஜல்லிக்கட்டுக் காளைகளைப் போல மக்கள் திசைக்கொன்றாய் தெறித்து ஓடுவார்கள்’ என்கிற இடத்தில் ஜூரோங் ஈஸ்ட் ரயிலைடியக் கதையாசிரியர் ஜல்லிக்கட்டு, வாடிவாசலுடன் இணைத்துக் கொள்கிறார். ஒரு பண்பாட்டு தளத்திலிருந்து தனக்கான அவதாணிப்புகளுக்கேற்ற வார்த்தைகளை அவர் சேகரித்துக் கொள்கிறார். முதல் முறை நான் சிங்கப்பூர் வந்தபோது எனக்கு உண்டான ஆச்சர்யமும் இதுதான். ஒரு பார்டரிலிருந்து இன்னொரு பார்டருக்குப் போவதற்குள் எத்தனை மனிதர்கள், எத்தனை விரைவான ஓட்டம். பார்க்கவே கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஏன் எல்லோரும் இவ்வளவு அவசரமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு அப்போதைக்கு எனக்கு விளக்கம் தெரியவில்லை. எதையோ பறிக்கொடுத்தவர்களைப் போல ஆண்கள், பெண்கள், வயதானவர்கள் இளைஞர்கள் என எல்லோரும் ஓடிக் கொண்டிருந்தனர். இதனை என் கட்டுரையிலும் நான் குறிப்பிட்டுள்ளேன். இச்சிறுகதை அத்தகையதொரு வாழ்க்கையை நோக்கி நம்மை இழுத்துச் செல்கிறது.

சிங்கையில் வேலை செய்யும் மலேசியர்கள் வேலைக்குக் குறித்த நேரத்தில் போய்விட வேண்டும் என அவர்கள் எதிர்க்கொள்ளும் ‘பார்டர்’ அகநெருக்கடிகளை நினைத்தாலே பதற்றம் ஏற்படுகிறது. வாழ்விற்கும் வாழ்தலுக்கும் மத்தியில் சிதைந்து கரைந்துவிடும் கூட்டம். அதே போல சிங்கையிலும் எம்.ஆர்.டி இரயில் நிலையங்களிலும் இதே பரப்பரப்பைப் பார்க்கலாம். கணேஷ் பாபுவின் கதைக்களம் முழுக்கவும் இப்பரப்பரப்பான சூழலைச் சார்ந்தது அல்ல. விவரிப்புகளாகவே கதை ஓடிவிடும் என முதலில் தயங்கினேன். ஆனால், கதை முழுவதும் பரப்பரப்பான நவீன வாழ்வில் தொய்ந்து கசந்து சிதறுண்டு போன தன் அகத்தை விரித்துக் காட்டுகிறார்.

 

மூன்று பேரின் கனவுகள்

இச்சிறுகதையில் வரும் மூன்று கதாபாத்திரங்கள் தங்கள் கனவுகளை விவரிக்கிறார்கள். ஒவ்வொரு கனவும் நவீன வாழ்வின் மனச்சிதைவுகளையும் நெருக்கடிகளாலும் ஏற்படும் அகம் சார்ந்த சிக்கல்களையே நினைவுப்படுத்துகின்றன. முதலாவதாகக் கதைச் சொல்பவன் ‘முடிவிலியை நோக்கி வேகமாகப் பாயும் செம்மண் நிற நதியில் நான் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தேன்’ என தான் ஒரு நதியில் சிக்கி மூழ்குவதைப் பற்றி சொல்வான். இச்சித்திரங்கள் நவீன வாழ்வின் நெருக்கடிக்குள் சிக்கி மூழ்கிக் கொண்டிருக்கும் மானுட வாழ்வையே ஞாபகப்படுத்துகின்றன. ஒவ்வொரு கணமும் நவீன வாழ்க்கை நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன. ஏன் ஓடுகிறோம் எனத் தெரியாமல் ஓடிக் கொண்டே இருக்கிறோம். அடுத்தவன் ஓடுவதைப் பார்த்துப் பதற்றமுற்று நாமும் ஓடுகிறோம் எனும் நிலையைக் கொடுப்பதுதான் இன்றைய பெருநகர் வாழ்க்கை. வாழ்வு சுருங்கி இயந்திரத்தைப் போல ஆகிவிட்டோம். அதனால் உண்டாகும் ஒரு மனச்சித்தரிப்பே அக்கனவாகத் தோன்றுகிறது. சிக்மன் ப்ராய்ட் தன்னுடைய கனவுகள் பற்றி நூலில், உறங்கிக் கொண்டிருக்கும் ஒருவனின் காலில் நீங்கள் நீரை ஊற்றினால் உடனடியாக அவனுடைய கனவில் சட்டென்று மாற்றம் உருவாகுமாம். தரையில் ஓடிக் கொண்டிருப்பதைப் போல கனவு கண்டு கொண்டிருக்கும் ஒருவனின் காலில் நீங்கள் நீரை ஊற்றினால் உடனே ஓர் ஆற்றில் நிற்பதைப் போல கனவு மாறிவிடுமாம். கனவுகளை ஆராய்ந்து அவர் குறிப்பிட்ட உண்மை இது. அதே போல வாழும் வாழ்க்கைக்கு நிகரான ஒரு கனவு தோன்றுவதிலும் ஆச்சர்யமில்லை. சதா வேலை உலகத்தில் சிக்கி ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நகர்வாழ் மனிதனுக்குத் தன் உழைப்பையும் இரத்தைத்தையும் உறிஞ்சும் இவ்வாழ்க்கையின் மீது ஒரு கனவு தோன்றுகிறது. அது செந்நிறத்தில் தன்னை மூழ்க்கடித்துக் கொண்டிருக்கிறது.

அடுத்து ஒருவன் சொல்லும் கனவும் விசித்திரமானவை. முதலில் கண்டவனின் கனவின் தொடர்ச்சியாகச் சிறுகதையில் குறிப்பு உள்ளது. ஆகவே, கனவைப் பற்றி விவரிக்கும் மூவரும் ஒருவரே எனும் ஒரு புரிதலுக்குள் வர முடியும். கதைச் சொல்லிக்கு வலதுபுறமும் இடதுபுறமும் இருப்பவர்களும் கதைச்சொல்லியின் வெவ்வேறு அகநிலைகளைக் குறிக்கும் குறியீட்டுக் கதாபாத்திரங்களே. ஆக, கதையில் இருப்பது ஒரு கதாபாத்திரம் மட்டுமே என உருவகித்துக் கொள்ள முடிகிறது. இரண்டாவது கனவில் அவன் சொல்வதாவது ‘ கரைதொட்டு கடல்மீளும் அலைகள் போல’ எந்த உறவுமின்றி நான் வெயில் தகிக்கும் செம்மண் நிலத்தில் நடந்து கொண்டிருந்தேன் என. பெருநகர் வாழ்வின் பரப்பரப்பு ஒவ்வொரு மனிதனையும் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது என்கிற நிஜமே இக்கனவு. மேலும் அக்கனவில் நவீன மனிதனின் சிதைந்துபோன ஒரு மனம் எவ்வாறெல்லாம் குழம்பியும் நடுநிலை இழந்தும் மீண்டும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பியும் மாயையில் சிக்கியும் மீண்டும் உருப்பெற்று மீண்டும் தொலைந்து போகும் என்று கதைநெடுக விவரித்துள்ள்ளார். ஒரு நிலையற்ற தள்ளாட்டம் நிரம்பிய மனவெளியில் நாம் பயணித்துக் கொண்டே இருப்போம்.

நவீன வாழ்க்கை கொடுக்கும் உறவு சிக்கல்கள் ஓரளவிற்குக் கதையில் விவாதிக்கவும் பட்டிருக்கிறது. பெருநகர் வாழ்க்கையில் உறவுகள் என்பது அலாரத்தைப் போலத்தான். அன்பு செய்வதும் அக்கறை கொள்வதும் ஏதோ இயந்திரத்தன்மையுடனே இருக்கும். நாம் அளிக்கும் உறுதிகள் காற்றில் கலந்து நம்மையறியாமலேயே கரைந்து கொண்டிருக்கவும் செய்யும். நம்முடன் வருவதாகச் சொன்னவர்கள் எல்லாம் வாழ்க்கை எனும் அவசர வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய்விடுவார்கள். வெள்ளம் வடிந்த மிச்சப் பொருளாய் நாம் மட்டும் தேங்கி நின்றிருப்போம். அத்தகையதொரு தனிமையைப் பற்றி இக்கனவும் அதன் நிதர்சனங்களையும் அதன்பால் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய மீட்பையும் விவாதிக்கிறது.

 

மீண்டும் கதைச்சொல்லியின் வலதுபுறமிருந்தவன் தனக்கு ஏற்பட்ட ஒரு விசித்திரமான அனுபவத்தைப் பகிரத் துவங்குகிறான். அவனுடைய காதல் தோல்வியில் முடியும்போது அவனுக்குள் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. ஏமாற்றத்தைத் தாளமுடியாமல் அவனை அவனே சுருக்கிக் கொள்ளும்போது அவன் பார்க்கும் பொருள்கள் யாவும் காட்சிகள் யாவும் தூய வெண்ணிறமாக மாறுகிறது. ஆகவே, வேறுப்படுத்திப் பார்க்க முடியாமல் தடுமாறுகிறான். உறவுகளில் உள்ள போலித்தனங்களைத் தரிசிக்கும்போது அதிர்ச்சிக்குள்ளாகுகின்றான். தூக்கமின்மையில் தவிக்கிறான். இவ்வுலகம் எல்லாவற்றிலும் இரண்டு முகங்களைக் கொண்டுள்ளதை அறிகிறான். நவீன உறவுமுறைகளில் உள்ள சிக்கல், போலித்தனம் யாவும் அவனை அலைக்கழிக்கின்றன. அதைப் புரியாமல் தடுமாறிய அவன் மெல்ல அதனை உண்மை முகத்தைக் கண்ட கணம் மீண்டும் யதார்த்தத்திற்குத் திரும்புகிறான். பெருநகர் வாழ்க்கைக்குள் எல்லோர் மனங்களும் அடையும் சிக்கல் இதுதான். அவநம்பிக்கையால் தொற்றப்பட்டு அல்லல்படுகிறோம். ஏமாற்றத்தில் திளைத்துத் தடுமாறுகிறோம். ஆனால், வெகுசீக்கிரமே பெருநகர் வாழ்க்கை நம்மை அதுபோன்ற பொய்மைகளைப் பழகிக் கொள்ள தயார்ப்படுத்தி விடுகிறது. மிகுந்த முரணான இயக்கம் இது. உறவுகளில் ஏற்படும் அவநம்பிக்கைகளைக் காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளும் இயந்திரத்தனமான சமாதானம் கதையில் வாசிக்கும்போது சட்டென அச்சம் ஏற்படுகிறது. போலியான வாழ்க்கைக்குள் போலியான சமாதானம் பெற்றுக் கொள்கிறோம்.

கணேஷ் பாபு நவீன வாழ்க்கையை அவருக்கே உரித்தான குறியீட்டு மொழியின் வாயிலாகக் கதைக்குள் ஆழமாக விவாதித்துச் செல்கிறார். ஆனால், விவாதத்தின் நெடி கொஞ்சமும் பெருகினாலும் கதைக்குள் கட்டுரைத்தனம் ஏற்பட்டுவிடும் என்கிற கவனமும் அவரிடம் இருந்திருக்கிறது. மிகவும் முதிர்ச்சியான எழுத்து நடை. நவீன மனிதனின் தனிமை, அவநம்பிக்கைகள், பதற்றம், சிக்குண்ட நிலை என அனைத்தையும் இச்சிறுகதையில் விரித்துக் காட்டியுள்ளார். ஆனால், தேர்ந்த வாசகனால் மட்டுமே அதன் ஆழத்தையும் விரிவையும் சென்றடையும்படியான சொல்முறையை உபயோகித்துள்ளார். படிமங்களும் குறியீடுகளும் ஏராளமாகக் கதையிலிருந்து மிதந்து வருகின்றன. இதுவும் ஒரு சொல்முறையே.

writer Vannathasan

நிறைய இடங்களில் சூழல் வர்ணனைகள் மிகுதியாக வந்துவிட்டதானாலேயே கவனம் சிதறுகிறது. வண்ணதாசனின் கதைகளில் வரும் சூழல் வர்ணனைகளின் மீதான யதார்த்தமும் கச்சிதமும் நிறைந்த மொழி கணேஷ் பாபுவிற்கு வாய்க்குமென்றால் அவருடைய சிறுகதைகளின் விவரிப்புகள் மேலும் உயிர்ப்படையும் என்றே கருதுகிறேன். வண்ணதாசனின் ‘பெருக்கு’ , ‘வாழையடிகள்’, ‘கிருஷ்ணன் வைத்த வீடு’ என்கிற சிறுகதைகளில் வரும் சூழல் விவரிப்புகள் மிக இயல்பானவையும் கதைக்குக் கொஞ்சமும் கூடுதலில்லாமலும் கதையின் ஓட்டத்தில் நெகிழ்ந்திருக்கும். அவர் அடுத்து யதார்த்தக் கதைகளின் வழியாக நவீன வாழ்வின் எச்சங்களைச் சொல்வாராயின் சிங்கையின் அவசர உலகத்தினும் மாட்டித் தவிக்கும் அகங்களை நோக்கி நேரடியாக எல்லோரையும் இழுத்துக் கொண்டு போய் உண்மையின் நெருக்கத்தில் வைக்க முடியும் என்பதே என் விமர்சனப் பார்வையாகும்.

Writer I.Santhosh Kumar

கணேஷ் பாபுவின் இச்சிறுகதை, மலையாள எழுத்தாளர் ஈ.சந்தோஷ் குமாரின் ‘மூன்று குருடர்கள் யானையைப் பார்த்த’ சிறுகதையை மீட்டுணர வைத்தது. அதில் வரும் மூன்று பார்வையற்றவர்களையும் பேட்டியெடுப்பதற்காக ஒரு நிருபர் செல்வார். ‘குருடர்கள் யானையைப் பார்த்த கதைகள்’ பெரும்பாலும் உவமைக்காகப் பலர் சொல்லிக் கேட்டிருக்கிறோம். அதைப் பற்றி பார்வையற்றவர்களிடமே கேட்டால் விந்தையாக இருக்கும் என அவர்கள் தங்கியிருக்கும் அறைக்குச் செல்கிறார். ஒவ்வொருவரும் யானை தங்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்களையும் அக உணர்வுகளையும் மட்டுமே சொல்கிறார்கள். அவ்விவரிப்பு யானை என்பது உருவம் என்பதை மறந்து யானை என்பது ஓர் உணர்வின் கணத்த அசைவு என்பதைப் போன்ற ஒரு மனநிலைக்கு வந்துவிடுவோம். ஆக, உருவம், காட்சி என்பது மாயை; அவை உருவாக்கும் அக உணர்வுகளே மிக ஆழமான புரிதல். இக்கதையில் வரும் காட்சிகள் அனைத்தையும் ஒரு யானை இருளுக்குள் அசைவதைப் போல மனத்தில் அசைந்தாடுகின்றன.  நவீன வாழ்வின் பிய்த்தெடுக்கப்பட்ட அகங்களின் அசைவே இச்சிறுகதை.

– கே.பாலமுருகன்

Share Button

About The Author

Comments are closed.