• சிறுகதை: இரண்டு கிலோ மீட்டர்

  சீன மதுபான கடையில் இருக்கும் பூனை அந்த வெற்றிடத்தில் வந்து நின்று மண்ணில் எதையோ தேடிக் கொண்டிருந்தது. புதிதாகப் பார்க்கும் யாவருக்கும் அல்லது அப்பொழுதுதான் அவ்விடத்திற்கு வரும் யாவருக்கும் பூனை இரையைத் தேடிக் கொண்டிருப்பதாகத் தோன்றலாம். மோட்டாரில் வந்து நின்ற எனக்கும் அவ்வெற்றிடம் சட்டென கவனத்தை ஈர்த்தது.

  தைப்பூசம் நடக்கும் முருகன் கோவிலுக்கு முன்னே இருக்கும் நாற்சந்தி சாலையிலிருந்து 200 மீட்டர் தள்ளிப் போய் நின்றாலோ, தெற்கில் அமைந்திருக்கும் முருகவேல் சாப்பாட்டு கடையிலிருந்து வெளியாகும் யாராக இருந்தாலும் 20 மீட்டர் தொலைவில் இருக்கும் வளைவில் வந்து நின்றாலோ, வடக்கில் இருக்கும் சீனக் கம்பத்திற்குள்ளிருந்து அரக்கப் பரக்க வெளிவந்து திணறும் யாராக இருந்தாலும் 50 மீட்டரில் லாவகமாக வாயப் பிளந்து பெரிய சாலைக்கு அனுமதிக்க வந்து நின்றாலோ, அங்கொரு நீலம் மங்கிய ஓரிரு எழுத்துகள் காணாமல் போய்விட்ட பழைய சாலை வழிகாட்டி பலகை பட்டணத்திற்கு ‘இரண்டு கிலோ மீட்டர்’ தூரம் இருப்பதாக நாள் முழுக்க வெந்து நனைந்து வெளுத்து வெம்பிக் காட்டிக் கொண்டிருக்கும்.

  அந்த ‘இரண்டு கிலோ மீட்டர்’ பலகை பலருக்கு மிகவும் நெருக்கமானது; ஆபத்தானதும்கூட. தைப்பூசத்திற்கு வரும் யாராக இருந்தாலும் பெரும்பாலும் காவடிகளை வேடிக்கைப் பார்க்க அந்த இரண்டு கிலோ மீட்டர் பலகை நடுவில் இருக்கும் கம்பியில்தான் ஏறி நிற்பார்கள். அதில் ஒரு பத்து பேர் ஏறி நின்று தொலைவை வேடிக்கைப் பார்க்க முடியும். ஆகவே, யார் அவ்விடத்தை முதலில் அபகரித்துக் கொள்கிறார் எனும் போட்டி தைப்பூசத்தின் போது வழக்கமாகும். வீட்டை விட்டுப் போகும்போதே “சீக்கிரம் போய் அந்த ரெண்டு மைல் பலகைலெ எடத்த பிடிச்சிகுங்கடா,” எனப் பலர் சொல்லிக் கேட்டிருக்கலாம்.

  சிலசமயங்களில் அது குழந்தைகளின் இடமாகவும் மாறிப் போய்விடும். எப்பொழுதாவது அவ்விடத்தைக் கடக்கும்போது அந்தப் பலகையின் அடியில் குழந்தைகள் அமர்ந்து கொண்டு விளையாடுவதையும் பலரும் பார்த்திருக்கிறார்கள். கால்களைக் பலகையின் ஓரத்தில் இருக்கும் கால்வாயில் தொங்கவிட்டுக் கொண்டு சாலையில் போகும் வரும் வாகனங்களைக் கணக்கிடாத பிள்ளைகளே இல்லை எனலாம். அவ்வறிப்பு பலகையைத் தாங்கி நிற்கும் கருப்பு வெள்ளைக் கம்பியில் ஏதேதோ கிறுக்கி, சுரண்டி விளையாடிக் கொண்டிருப்பதை யாரும் தடுத்திருக்க மாட்டார்கள்.

  பின்னொரு நாளில் அவ்வறிப்புப் பலகையில் அந்த ‘இரண்டு கிலோ மீட்டர் வார்த்தை’ இருக்கும் இடத்தை மட்டும் விட்டுவிட்டு கெட்ட வார்த்தைகளைச் சாயத்தால் அடித்திருந்தார்கள். அங்கிருக்கும் இளைஞர்கள், அல்லது முருகவேல் கடைக்கு வந்துவிட்டுப் போகும் ‘கேங்’ ஆட்கள் என யாராவது அதனைச் செய்திருக்கலாம். நீலப் பலகைக்கு ஏற்றவாறு கருப்பு சாயத்தால் அவ்வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன. பாதைசாரிகளுக்கு மேற்கொண்டு வாழ்க்கை தத்துவங்களைப் போதிக்கும் வகையில் அவ்வார்த்தைகள் அப்படியே நிலைத்து நின்றன. யாரும் அதனைப் பற்றி பொருட்படுத்தவதாக இல்லை. பார்க்கும் யாவரின் மனத்தையும் உறுத்தும் மிகமோசமான கெட்ட வார்த்தைகள் பற்றி யாரும் எந்தக் கவலையும் படாதாது அவர்களுக்கே ஆச்சர்யமாக இருந்திருக்கலாம்.

  அந்த அறிவிப்புப் பலகையிலிருந்து பட்டணம் மட்டும் இரண்டு கிலோ மீட்டர் அல்ல. அங்கிருந்து இரயில் நிலையம் சரியாக இரண்டு கிலோ மீட்டர்தான். அதே போல இந்தியர்களின் சுடுகாடும் அங்கிருந்து போனால் இரண்டு கிலோ மீட்டர்தான். அதேபோல வழக்கிழக்கில் போனால் பொது மருத்துவமனையும் அதே இரண்டு கிலோ மீட்டர்தான். அங்கிருந்து இன்னொன்றும் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். அதுவும் இரண்டு கிலோ மீட்டர்தான். ‘சிவப்பு விளக்கு சாலை’ என்பார்கள். இரவில் மட்டும் துளிர்த்தெழுந்து நடுநிசியில் மீண்டும் ஆள் அரவமில்லாமல் கரைந்து காணாமல் போய்விடும் வெறும் காட்டு மரங்களும் ஆளில்லாத பழைய பலகை வீடுகள் அங்கிய சாலையாகும்.

  இப்பலகையை இங்கு நடும்போது தெரிந்து இதைச் செய்தார்களா அல்லது பட்டணத்தின் தூரத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டார்களோ தெரியவில்லை. ஆனால், இந்த இரண்டு கிலோ மீட்டர் பலகை அத்தனை கச்சிதமாக அமைந்து நின்றது. பிறகொரு நாளில் காணாமல்போன ஒரு வயதான தாடி தாத்தாவும் அந்தப் பலகையின் கீழ்தான் படுத்து உறங்கியிருக்கிறார். ஒரு வெள்ளைச் சாக்குப் பையைக் கையுடன் வைத்துக் கொண்டு நாளெல்லாம் போத்தல்களைக் குப்பைத் தொட்டிகளிருந்து சேகரித்து அதனைச் சீன இரும்புக் கடையில் விற்று விட்டு அன்றைய நாளுக்குத் தேவையான உணவை மட்டும் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு இரவில் இரண்டு கிலோ மீட்டர் பலகைக்குக் கீழ் அடைக்கலமாகிவிடுவார் என அங்கிருக்கும் எல்லோருக்கும் தெரியும்.

  இப்படிப் பல கதைகளை உள்ளடக்கிக் கொண்டு பல வருடங்களாக அங்கு நிற்கும் அப்பலகையின் ஓரம் கடந்த மாதம் நடந்த ஒரு சாலை விபத்து திருப்புமுனையாக அமைந்துவிட்டது. சிவப்பு விளக்கு சாலையிலிருந்து வேலை முடிந்து சீனக் கம்பத்து வழியாக உள்ளே இருக்கும் தன் வீட்டுக்குச் சைக்கிளில் போய்க்கொண்டிருந்த இடதுப்புறத்தில் ஒரு கொண்டை போட்டிருந்த பெண்மணி சரியாக இரவு மணி 11.35க்கு அப்பலகையின் ஓரம் வந்து நின்றாள். அங்கிருந்து சாலையைக் கடக்க எண்ணியவள், சட்டென ஓர் அழைப்பேசி வர, அவ்வழைப்பேசியில் அவளிடம் கடன் வாங்கியிருந்த ஒருவன் பேச, கொஞ்சம் மன அழுத்தம் ஏற்பட்ட அப்பெண்மணி அழுகையும் கோபமும் குரலில் மறுவார்த்தைகள் பேச, அப்பலகையில் மாதக்கணக்கில் தொங்கிக் கொண்டிருந்த கெட்ட வார்த்தைகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, சீன மதுபான கடையின் வாசலிலிருந்து போதையுடன் வெளியேறிய கிழட்டுப் பூனை சாக்கடையின் ஓரம் வந்து நின்று வெளிச்சங்களைக் கவனிக்க, வேலை முடிந்து அரைத் தூக்கத்துடன் தள்ளாகிக் கொண்டே முருகவேல் சாப்பாட்டுக் கடையிலிருந்து வெளியேறி ஒரு மோட்டாரோட்டி அப்பலகை இருக்கும் சாலைக்குள் வர…

  இப்பொழுது அப்பலகை அங்கில்லை. அடித்து முக்கால்வாசியைப் பெரிய கால்வாயில் இறக்கிவிட்டார்கள். மோட்டாரோட்டிக்கும் அப்பெண்மணிக்கும் என்னவாயிற்று என்கிற செய்தி கிடைக்கப் பெறாவிட்டாலும், அப்பலகை அங்கில்லாமல் போனதற்கு அவ்விபத்துதான் காரணம் என முருகவேல் கடைக்கு வரும் எல்லோரும் பேசிவிட்டுப் போவார்கள். அவ்வருடம் தைப்பூசத்தின்போது குழந்தைகள் பெரியோர்கள் என எல்லோரும் வெறுமனே நின்று கொண்டு காவடிகளைப் பார்க்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். முருகவேல் கடையில் சண்டையிட்டு கோபத்துடன் வெளியே வந்து எத்தி உதைக்க அங்கு ஒன்றுமே இல்லாததால் இளைஞர்கள் விரைந்து வெளியேறி மறைந்தனர்.

  இலேசாக மழைத் தூரத் துவங்கியிருந்தது. மீண்டும் அவ்வெற்றிடத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இப்பொழுது புதியதாக ஒரு பெரிய பேரங்காடியும் கட்டப்பட்டிருந்தது. எல்லோரும் இவ்வெற்றிடத்தை ஒரு கணம் பார்த்துவிட்டுப் போவார்கள். அப்பா உயிரோடு இருந்தபோது மாலையில் வேலை முடிந்து முருகவேல் கடையில் சாப்பிட்டு விட்டு எனக்காக இதே ‘இரண்டு கிலோ மீட்டர்’ பலகையின் ஓரம்தான் வந்து நிற்பார். நான் தாமதமாக வந்தாலும் அன்று கடையில் பேசிய அரசிய நிலவரங்களை உற்சாகத்துடன் சொல்லிக் கொண்டே வருவார். எல்லாவற்றுக்கும் தூரம் இரண்டு கிலோ மீட்டர்தான் என நினைக்கத் தோன்றியது.

  – கே.பாலமுருகன்

  Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *