• சிறுகதை: அழைப்பு

   

  யாரோ, தூரமாகச் சென்றுவிட்ட யாரையோ அழைக்கும் சத்தம். சட்டென மதிய வெய்யிலின் பிடியிலிருந்து எழுந்து நிதானித்தேன். வெகுநாட்களுக்குப் பின் மனத்தில் ஒரு துள்ளல். கடைசியாக எப்பொழுது இப்படியொரு அழைப்பைக் கேட்டிருப்பேன்? ஞாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அரை இருட்டில் இருந்த அறையிலுள்ள மேசை விளக்கைத் தட்டினேன். சுற்றிலும் அடர்த்தியான சன்னல் துணி. வெளிச்சம் உள்ளே வரவேகூடாது என ஆசிரியர் கோபால் எல்லாவற்றையும் அடைத்து வைத்திருந்தார். பள்ளிக்கூடம் முடிந்து அறைக்கு வந்ததும் இருவரும் அதிகம் பேசிக் கொள்ள மாட்டோம். இருவரின் கண்களிலும் ததும்பும் அசதிக்குப் பதில் சொல்லியே நாள் கரைந்துவிடும்.

  சன்னல் கதவைத் திறந்து வெளியே பார்த்தேன். அப்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு ‘மைவி’ காரில் ஏறி யாரோ போய்க் கொண்டிருந்தனர். இப்பொழுதும் அந்த அழைப்பு காதில் நங்கூரமிட்டிருந்தது. அத்தனை கணிவான அழைப்பு. மனத்தை அசைத்துப் பார்க்கும் அழைப்பு. தன் பேரனை அழைக்கும் பாட்டியாக இருக்குமோ? தன் மகனைப் பலநாள் பிரியப் போகும் தாயின் ஏக்கம் மிகுந்த அழைப்பாக இருக்கலாமோ? தெரியவில்லை.

  தலை கவிழ்ந்த மேசை விளக்கு. அதன் பாத நுனியில் எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன. நேற்று புத்தகம் படிக்கும்போது மேசையிலேயே போட்டிருந்த ஒரு கடைசி பிஸ்கட் துண்டின் வேலை. நாற்காலியில் உட்கார்ந்தவாறே அதனைக் கவனித்துக் கொண்டிருந்தேன். எறும்பு ஊர்வதைப் பார்ப்பது ஒரு தியானம் என யாரோ சொல்லிக் கேட்ட ஞாபகம் அப்பொழுது நினைவில் எட்டியதும் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன். மிச்சமாய் ஒட்டியிருந்த தூக்கம்தான் தலை தூக்கிப் பார்த்தது.

  மீண்டும் ஞாபகப்படுத்திப் பார்த்தேன். யாரோ யாரையோ அழைக்கும் அவ்வோசை அத்தனை சாதாரணமானதாகத் தெரியவில்லை. பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார் என  நினைவடுக்கில் அலசினேன். ஒரு பாட்டியும் அவளுடைய இரண்டு பேத்திகளும்தான் இந்நேரம் வீட்டில் இருப்பார்கள். இரவானதும் குரலே இல்லாத கணவன் மனைவி வருவார்கள். அவர்கள் பேசி நான் கேட்டதேல்லை. குறிப்பாக எங்கள் இருவரையும் பார்த்துவிட்டால் முகமெல்லாம் மாறும். கண்டிப்பாக அவர்கள் யாரையும் அழைத்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அந்தப் பாட்டியாக இருக்குமா? அந்தப் பாட்டி மிகவும் கண்டிப்பானவர். பேத்திகளை வீட்டுக்கு வெளியில் விடமாட்டார். வீட்டின் அஞ்சடியில் இருக்கும் ஒரு துருப்பிடித்த ஊஞ்சலில் விளையாட மட்டும்தான் அந்தப் பெண் பிள்ளைகளுக்கு சுதந்திரம்.

  ஒருவேளை அந்தத் துருப்பிடித்த ஊஞ்சலின் கீச்சிடும் சத்தம்தான் அழைப்பு போல கேட்டதா? மனம் குழப்பம் அடைந்தது. கனவாகக்கூட இருக்கலாம் என மனம் தடுமாறியது.  அந்த ஊஞ்சலுக்கு யாரையோ பெயர் சொல்லி அழைக்கும் ஓசை உண்டு. இரண்டு பிள்ளைகளும் அதில் ஏறி அமர்ந்து கொண்டு சோம்பேறித்தனத்துடன் மெதுவாக அந்த ஊஞ்சலை அசைத்து விளையாடுவார்கள். அதன் பழமையடைந்த கம்பிகள் கனம் தாளாமல் முணங்கும். அதன் ஓசை ஏதோ அழைப்பைப் போல ஒத்திருக்கும். அலுவலக வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் எனக்குப் பல சமயங்களில் அதன் ஒலி வேறு மாதிரியாக மாறி மாறிக் கேட்கும். நானே என் பெயரை அவ்வோசையினூடே நுழைத்து அதனை ஓர் அழைப்பாகக் கற்பனைச் செய்ததுண்டு. ஒருவேளை அப்பழக்கத்தினால் உண்டான பிரமையாக இருக்கலாமோ?

  காலையில் ஊற்றி வைத்துக் குடிக்காமல் மறந்துவிட்டுப் போன தேநீர் கட்டிலுக்குக் கீழிடுக்கில் அப்படியே இருந்தது. அதனை எடுத்துக் கழுவாவிட்டால் எறும்புகள் அங்கேயும் படை எடுத்துவிடும். அறையெங்கும் எறும்புகளின் குடியமர்வு ஏராளமாக இருந்தது. கீழே குனிந்து அக்குவளையை எடுக்கும்போது மண்டைக்குள் மீண்டும் அவ்வழைப்பின் ஞாபகம் ஒலித்தது. அத்தனை தெளிவாக ஒலித்த அவ்வழைப்பு நிச்சயம் கனவாக இருக்க வாய்ப்பில்லை. எனத் தோன்றியது.

  குவளையைக் கழுவி வைத்தப் பிறகு அம்மாவின் ஞாபகம் எட்டியது. வெள்ளிக் குவளையை அவர் கழுவிவிட்டுத் துடைக்கும்போது அப்பொழுதுதான் வெள்ளியை எடுத்துத் தடவியதைப் போல மினுக்கும். அம்மாவிற்கு வெள்ளிப் பாத்திரங்கள் என்றால் அதிகமான ஈடுபாடு. சமையலறையின் அடுக்குகள் எங்கும் வெள்ளித் தட்டுகளை அடுக்கி வைத்து அழகு பார்ப்பார். வீட்டில் நானும் தங்கையும் மட்டும் தான். எங்களைத் தட்டுகளைக் கழுவ அம்மா விடமாட்டார். அவர்தான் கழுவ வேண்டும்.

  வீட்டில் அம்மாவின் அழைப்பு வித்தியாசமானதாக இருக்கும். ஒரு வெள்ளித் தட்டை எடுத்து கரண்டியால் இரண்டுமுறை தட்டுகிறார் என்றால் சாப்பாடு தயார் என்று அர்த்தம். அதே வெள்ளித் தட்டை எடுத்து மேசையில் அடித்தார் என்றால் கோபமாக இருக்கிறார் என்று அர்த்தம். தங்கையுடன் சில சமயம் ஏற்படும் வாதத்தின் இறுதியில் அம்மா அதிகபட்சமாக ஒரு வெள்ளிக் குவளையையோ அல்லது பாத்திரத்தையோ எடுத்து வீசுவார். அவருக்கு அத்தனை விருப்பமான அப்பாத்திரங்களை எடுத்து வீசிவிட்டு பிறகு நாங்கள் அறைக்குள் சென்றதும் அதனை விழுந்து கிடக்கும் ஒரு குழந்தையை அள்ளி எடுப்பதைப் போல நிதானம்  கலந்து தெரியும்.

  அன்றைய ஆங்கில நாளிதழ் ஒன்று முன்கதவில் கதறிக் கொண்டு முட்டியது. மேல்கடை சீனன் மிச்சம் இருந்தால் ஒரு நாளிதழை எங்கள் வீட்டில் விசிறி அடித்துவிட்டுப் போவான். மாலையில் ஒரு தேநீருடன் உட்கார்ந்து அந்த நாளிதழைத் திறக்கும்போது உலகமே வீட்டு வாசலில் வந்து நிற்கும். அம்மா திடீரென இங்கு வர வாய்ப்பில்லை. அவர் தங்கையுடன் ஜொகூரில் இருக்கிறார். மேலும் அவர் வந்தாலும் அவரால் பேச முடியாதபோது அவர் எப்படி அழைத்திருப்பார்? ஒருவேளை கோபால் வீட்டிலிருந்து யாரும் வந்திருப்பார்களா என்கிற சந்தேகம் தோன்றியது. எழுந்து குளித்துவிட்டு எங்கேயோ கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்த கோபாலிடம் மெதுவாகப் பேச்சைத் தொடங்கினேன்.

  “கூப்டாங்களா? எங்க?”

  “அப்படித்தான் இருந்துச்சி. ஒருவேள உங்கள யாராச்சம்…”

  “இல்ல சார். நீங்க வேற… எனக்கு அம்மாவும் இல்ல அப்பாவும் இல்ல. வீட்டுல நானும் தம்பியும்தான். அவனும் சிங்கப்பூர்ல செட்டல் ஆயிட்டான்…”

  கோபால் அவசரமாகக் கிளம்பி வீட்டை விட்டு வெளியேறினார். எனக்குக் குழப்பம் பூதாகரமாகச் சூழ்ந்து கொண்டது. அந்த அழைப்பு யாருடையதாக இருக்கும் என்பதே எனது மிகப் பெரிய கவலையாக இருந்தது. அழைப்பு பற்பல கதவுகளாக மாறி விரிந்து சென்றது. ஒவ்வொரு கதவும் திறக்கப்பட்டு மீண்டும் மீண்டும் அதே அழைப்பு தொடர்ந்து மண்டைக்குள் ஒலிக்கிறது. அழைப்பு யாரும் கவனியாத நேரத்தில் எனக்குள் விழுந்து  பின்னர் தடித்த வேர்களாய் ஆழச் செல்கிறது. நிதானிக்க முயன்றேன். மனத்திற்குள் ஏற்படும் சலசலப்பு அடங்க மறுத்தது.

  காலை தூக்கம் இத்தனை வஞ்சம் செய்யும் என எதிர்ப்பார்க்கவில்லை. கைப்பேசி வரும் முன் வீட்டு அழைப்பேசியை வைத்துக் கொண்டு அப்பா பட்ட அவதி நினைவிற்குள் எட்டியது. யார் அழைக்கிறார் என அப்பொழுதுள்ள அழைப்பேசி காட்டாது. எடுப்பதற்குள் நின்றுவிட்ட அழைப்பேசி அழைப்புகளை நினைத்து அப்பா மிகவும் வருந்துவார். அதற்குள் நின்றுவிட்டது யாராக இருக்கும் என அன்றைய நாள் முழுவதும் யோசித்துக் கொண்டே இருப்பார். எனக்கும் அப்பொழுது அப்படித்தா இருந்த்து. தெரிந்தவராக இருந்தால் இந்நேரம் கைப்பேசியில் அழைத்திருக்கலாமே? அப்படியென்றால் தெரியாத, பழக்கமில்லாதவர்களாக இருக்கும் என்றாலும் ஏன் அவர்கள் என்னை அழைக்க வேண்டும்?

   

  குளித்துவிட்டு வெளியில் போகலாம் எனக் கிள்ம்பினேன். வெய்யிலின் சூடு சுற்றி அலைந்துவிட்டு அசதியுடன் முன்கதவின் மீது படர்ந்து கிடந்தது. அதை வெகுநேரம் உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு ரம்புத்தான் மரம் கிளைகளை அசைத்துத் திரும்ப முயன்று கொண்டிருந்தது. தாழ்பாள் திருப்பிடித்திருந்த பலகை கதவைத் திறந்ததும் கதவுக்கு மேலிடுக்கில் ஒளிந்திருந்த குருவிகள் சடசடத்துக் கொண்டே பறந்து சென்றன. காலணியை அங்கிருக்கும் ஒரு சிறிய நாற்காலியில் அமர்ந்துதான் அணிவேன். காலுறையை மெதுவாக இழுத்து சரிசெய்துவிட்டு, காலணிகளின் நேற்று கட்டப்பட்டக் கயிறுகளை நிதானமாக அவிழ்க்கும்போதும்கூட மனத்திலிருந்த முடிச்சை ஒன்றுமே செய்ய முடியவில்லை.

  மோட்டாரைத் தள்ளிக் கொண்டு வெளியில் வந்து நின்றேன். ஒவ்வொருவராக யோசித்துப் பார்த்துக் கடைசியில் நான் வேலை செய்யும் அலுவலகத்திலுள்ள ‘ஆபிஸ் பாய்’ மணியத்தில் வந்து நின்றது. அவருக்கு எப்பொழுது பெண் குரல் இருந்தது? வாய்ப்பே இல்லை. அழைப்பு ஒரு பெண்ணின் குரல். அதுவும் களைப்பில் தளர்ந்து, அதற்குமேல் சக்தியில்லாமல் சிரமப்பட்டு சேகரித்து மிகவும் அன்புடன் கேட்ட அழைப்பு. ஒருவேளை அது முற்றிலும் கனவுக்கும் எழப்போகும் தருணத்திற்கும் இடையில் ஏற்பட்ட மயக்கமாகக்கூட இருந்திருக்கலாம். ஒருமுறை தூங்கி எழப்போகும் ஒரு நெருங்கிய தருணத்தில் சட்டென கை பக்கத்தில் இருந்த குவளையைத் தட்டிவிடவும் ஏற்பட்ட ஈரத்தில் நான் எங்கோ ஒரு பெருங்கடலைத் தொடுவதைப் போல கனவு தோன்றி மறைந்தது.

  ஓரளவிற்கு என்னால் யூகித்து ஒரு முடிவுக்கு வர முடிந்தது. பக்கத்து வீட்டில் இருக்கும் அந்தப் பிள்ளைகள் ஊஞ்சல் ஆடியிருப்பார்கள். யாரையோ அழைக்கும் ஓசையை ஒத்திருக்கும் அந்த் ஊஞ்சலின் சத்தம் என் காதில் கேட்டிருக்கும். அது நான் விழிக்கப் போகும் தருணமாக இருந்திருக்கலாம். கொஞ்சம் நிதானத்திற்குத் திரும்ப முடிந்ததும் மோட்டாரை முடுக்கினேன். தலைக்கவசத்தை மறந்து வாசலிலேயே வைத்துவிட்டேன் என்பது ஞாபகத்திற்கு வந்ததும் மோட்டாரிலிருந்து இறங்கி மீண்டும் உள்ளே போனேன்.

  எப்பொழுதும் இல்லாததைப் போல பக்கத்து வீட்டுப் பாட்டி பேச்சுக் கொடுத்தது கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது.

  “யாரு மகேன்? நீயா? யாரோ வந்து கூப்டுகிட்டே இருந்தாங்க. நானும் சரியா பாக்கல. அப்பறம் யாரையும் காணம்…”

  பாட்டி ஒரு கடமைக்கு அதைச் சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே போய்விட்டார். எனக்கு முன் இருந்த உலகம் மெல்ல சுழலத் தொடங்கியது.

   

  • கே.பாலமுருகன்
  Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *