திரை ஒப்பீட்டு விமர்சனம்: நிபுணன் vs துருவங்கள் பதினாறு

கொலை, கொலை தொடர்பான விசாரணை என்கிற போக்கில் தமிழ்ப்படங்கள் நிறைய வந்துள்ளன. குறிப்பாக, யுத்தம் செய் சமீபத்திய திரைவரிசையில் முதன்மை வகிக்கிறது. கொரிய மொழியில் வெளியான ‘Memories of murder’ படத்திற்குப் பிறகு வந்த தமிழ்ப்படங்களில் ‘யுத்தம் செய்’ படத்தில் மட்டுமே பெரியளவு தாக்கத்தையும் புதிய கதைச்சொல் முறையையும் கவனிக்க முடிந்தது.

 

  1. கொலையைக் கண்டறிதல்

கொலை தொடர்பான படங்களை மூன்று வகைகளில் புரிந்து கொள்ளலாம். ஒன்று ஒரு கொலையை அல்லது கொலை செய்தவனை நோக்கி விசாரணை பாணியிலேயே முழுப் படமும் நகர்ந்து இறுதியில் அக்கொலைக்காரனையும் அவன் கொலை செய்ததற்கான நியாயங்களையும் முன்வைக்கும். இதுபோன்ற படங்களில் படத்தின் இறுதி காட்சிகளில்தான் யார் கொலைக்காரன் எனத் தெரிய வரும். அப்படித் தெரிய வரும்போது அது நமக்கு அதிர்ச்சியாக இருக்க வாய்ப்புண்டு. அது படத்தின் இறுதியில் ஒரு திருப்பத்தைக் கொடுத்து பார்வையாளனைத் தாக்கம் செய்யும் உத்தி. இவ்வகை உத்தி முறையில் கொலையைக் கண்டறிய முயல்பவனின் பார்வையில் கதை நகர்ந்து போகும். அக்கதையில் கொலையைக் கண்டறியும் காவல்துறையைச் சேர்ந்தவரோ அல்லது துப்பறிவாளரோ அல்லது கொலை செய்யப்பட்டவரின் நெருங்கிய உறவோ படத்தின் கதாநாயகனாக இடம் பெறுவர். யுத்தம் செய் படத்தில் கொலையைத் தேடிப் போகும் சேரன் கதாநாயகராகச் சித்தரிக்கப்பட்டிருப்பார்.

 

  1. கொலை செய்தல்

இன்னொரு வகையான படங்கள் கொலையைச் செய்பவனின் மனோநிலையில் அல்லது அவனுடைய பார்வையில் கதையை நகர்த்திச் செல்லும். இவ்வகை படங்களில் கொலைக்காரன் யார் என்று சொல்லப்பட்டு ஆனால், அவன் கொலை செய்யும் காரணத்தை மட்டும் படத்தின் இறுதியில் சொல்லப்படும். சில படங்கள் அக்கொலைக்காரன் நியாயங்களோடு கொலை செய்தாலும் சமூக விழுமியங்கள் பொருட்டு சட்டத்திற்கு முன்பாகத் தண்டனை பெறுவதாகக் கதை முடியும். அபூர்வ சகோதரர்கள், சிவப்பு ரோஜாக்கள் போன்ற படங்களை இவ்வகையில் சேர்க்கலாம். அதே போல சில படங்கள் கொலைக்காரனான கதாநாயகன் தன் கொலைகளுக்கு நியாயம் கற்பித்து இறுதியில் சட்டத்தில் சிக்காமல் காப்பற்றப்படுவதாக முன்வைக்கப்பட்டிருக்கும். கமல் நடித்த ‘இந்தியன்’, ‘பாபநாசம்’ போன்ற படங்களை இவ்வகையில் சேர்க்கலாம்.

 

  1. கொலையை மர்மமாக்குதல்

ஆரம்பத்தில் நான் சொல்லியிருந்த ‘Memories of murder’ என்கிற கொரிய படம் கொலைகளை மட்டுமே நோக்கி நகரும் ஆனால் கடைசிவரை யார் கொலைக்காரன் என்பதைக் காட்டாது. கொலைகள், கொலைகள் தொடர்பான விசாரணை என காவல்துறையினரின் பார்வையில் முழுக் கதையும் நகர்ந்து இறுதியில் கையறுநிலையில் முடிந்துவிடும். கடைசிவரை அக்கொலைக்காரனையும் அக்கொலைகள் தொடர்ந்து நடப்பதற்கான காரணங்களையும் முன்வைக்காது. கொலை என்றால் சமூகத்தின் பொதுபுத்தி இரண்டு விசயங்களை நோக்கி கேள்விகள் கேட்கும். யார் கொலைக்காரன், ஏன் அக்கொலை செய்யப்பட்டது? என்கிற கேள்விகளை நோக்கியே மனம் வந்து சேரும். ஆனால், அக்கேள்விகளுக்கான பதில் இல்லையென்றால் ஒரு சமூக பொது மனம் அமைதி கொள்ளாது. அப்படிப்பட்ட  சில படங்கள் பார்வையாளனின் அமைதியைக் களைக்கச் செய்யும் வகையில் சில விநோதமான வழக்குகளை முன்வைத்து நகரும்.

கொலையைப் பற்றிய நினைவுகளோடு அதுபோன்ற படங்கள் உண்மை என்பது ஓர் இருள் எனச் சொல்லிச் செல்லும். இவ்வகை படங்கள் தமிழ்ப்பட இரசிகர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கலாம். காலம் காலமாக ஒவ்வொரு கொலை தொடர்பான படங்களும் இறுதியிலாவது யார் கொலைக்காரன் என்றும் ஏன் கொலை செய்யப்பட்டது என்றும் சொல்லிவிடும். அப்பொழுதுதான் பார்வையாளன் திருப்தி அடைவான். ஆனால், 1950களில் ஜப்பானிய தலை சிறந்த இயக்குனரான அகிரா குரோசோவாவின் இயக்கத்தில் வெளிவந்த ‘ரஷமோன்’ படம் உட்பட ஒரு கொலையை நோக்கிய படமாக இருந்தாலும் அப்படத்திலும் யார் கொலைக்காரன் ஏன் கொலை நிகழ்த்தப்பட்டது என்கிற கேள்விகளுக்கு நான்கு கோணங்களில் பதில்களைச் சொல்லிவிட்டு முடிவைப் பார்வையாளனிடம் விட்டுவிட்டு முடிந்துவிடும். இதுபோன்ற அசாத்தியமான கதைச்சொல் முறைகள் மாற்றுமொழிப் படங்களில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

நிபுணன் – துருவங்கள் பதினாறு

மேலே குறிப்பிட்டதைப் போன்று நிபுணன் படம் முதல் வகையைச் சேர்ந்ததாகும். கொலைகளை நோக்கியும் கொலைக்காரனை நோக்கியும் விசாரணை பாணியில் செல்லும் கதை. ஆனால், கதைச்சொல் முறைமை மிகத் தொடக்கத்தில் கையாளப்பட்ட உத்தியாகும். இறுதியில் யார் கொலைக்காரன் என்றும் ஏன் கொலை செய்யப்பட்டது என்றும் சொல்லப்பட்டு வழக்கமான முறையில் முடிகிறது.

ஆனால், இப்படத்தில் உள்ள சில திருப்பங்கள் நம்மால் யூகிக்க முடியாததாகும். அவற்றுள் கொலைக்காரன் அடுத்த கொலைகள் பற்றி தகவல்களை அல்லது குறிப்புகளை ‘puzzle’ போல வழங்கியிருப்பதும் விசாரணை செய்யும் அதிகாரி (கதாநாயகன்) அக்குறிப்புகளைக் கொண்டு இரகசியங்களை உடைப்பதைப் போலவும் காட்டியிருப்பது பல ஆங்கிலப் படங்களில் பார்த்து சலித்த உத்தியாகும். தமிழில் அது ஒரு தாக்கத்தை உருவாக்க வாய்ப்புண்டு. கொலை தொடர்பான படங்களில் மக்கள் எதிர்ப்பார்ப்பது திருப்பங்களைத்தான். அவ்வகையில் நிபுணன் படத்திலுள்ள திருப்பம், கொலைக்காரன் இறுதியில் கொலை செய்ய நினைப்பது அக்கொலைகளை விசாரிக்கும் கதாநாயகனைத்தான் எனத் தெரிய வரும்போது அது எதிர்ப்பார்க்கப்படாத திருப்பமாகக் கதையில் பலம் சேர்க்கிறது. அடுத்து, கொலைக்காரனை அவன் பிறரைக் கொலை செய்த பாணியிலேயே கொலை செய்துவிட்டு, கொலைக்காரன் இன்னும் அகப்படவில்லை எனக் கதாநாயகன் பொதுமக்களிடம் அறிவிக்கிறார். அக்கொலைக்காரனின் பெயரைக் கொண்டு காவல்துறை சில தீயவர்களை அழிப்பதாக்க் கதை முடிகிறது. கொலைக்காரனைக் கண்டறிந்த காவல்துறை அதிகாரி அக்கொலைக்காரனைக் கொன்றுவிட்டு அவர் அதிகாரப்பூர்வமான கொலைக்காரராக மாறுகிறார். கொலைக்காரனின் கொலைக்கு நியாயம் கற்பிக்கப்படவில்லை. ஆகவே, அவனைக் கொல்வதையும் அவனைப் போன்று சமூகத்திற்கு அச்சமூட்டும் தீயவர்களைக் கொல்வதையும் படம் நியாயத்துடன் நிறுவி முடிகிறது.

நிபுணன் கொலையை விசாரிக்கும் பாணியில் துருவங்கள் பதினாறு படத்தை விட சிறப்பாக அமைந்திருந்தது. ரகுமானைவிட அர்ஜூன் விசாரணையில் உயிர்ப்பாக வந்து நிற்கிறார். ரகுமானிடம் நிதானமும் யதார்த்தமும் தெரிந்தன. ஆனால், அர்ஜூன் கதைக்கேற்ற அதே பரப்பரப்பிற்கு நிகரான நடிப்பை வழங்கியதால் கதையில் உள்ள சில பலவீனங்களைத் தாங்கிப் பிடித்துள்ளார். அதே போல கொலையை நோக்கி சென்றடையும் இடத்திலும் கொலையைச் சுற்றி பின்னும் மர்ம வலைகளிலும் துருவங்கள் பதினாறு தமிழ்த்திரைப்பட வரலாற்றில் புதிய கதைச்சொல் முறையைப் பதித்திருக்கிறது என்றுத்தான் சொல்ல வேண்டும். நான் தொடக்கத்தில் சொன்ன கொரிய படத்தினைப் போல கொலையை நோக்கி ஒரு சூட்சமமான இடத்தை நோக்கி நகர்ந்து ஆனால், முடிவடையும்போது எதிர்ப்பார்க்காத தருணத்தில் நின்று பார்வையாளனை வியக்கச் செய்கிறது. அந்த வியப்பை நிபுணன் வழங்கத் தவறிவிட்டது என்றுத்தான் சொல்ல வேண்டும்.

துருவங்கள் பதினாறு ஒரு கொலைக்காரனை நோக்கி நம்மை இழுத்துச் செல்கிறது. விசாரணையில் அக்கொலைக்காரனை நோக்கிய தேடல்களும் கேள்விகளும் எழுந்த வண்ணமே உள்ளன. நம் மனம் அக்கொலைக்காரனைச் சித்தரித்துக் கொண்டே இருக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், கதை அத்தகையதொரு கொலைக்காரனே இல்லை என்பதாகப் படம் முடியும். அவை திட்டமிட்டக் கொலைகளும் அல்ல, ஒரு தற்செயலான விபத்து என்பதாக முடியும். தமிழ்த்திரை இரசிகர்களுக்கு துருவங்கள் பதினாறு உருவாக்கிய தாக்கம் இன்னும் சில ஆண்டுகள் போனாலும் மீளாது. அதே போல, ரகுமானுடன் உரையாடிக் கொண்டிருக்கும் ஒரு மர்ம நபர் யார் என்று சொல்லும் இடமும் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தி ஒரு கணம் தத்துவார்த்தமான புள்ளியில் படம் கரைந்து முடிந்து விடுகிறது. இதுவரை கொலை தொடர்பான படங்களில் கொலையை விசாரிப்பதிலும் கொலைக்கான நியாயங்களை முன்வைப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வந்திருக்கும் படங்களின் வரிசையில் துருவங்கள் பதினாறு ஒரு மாற்று முயற்சியாக்க் கருதப்படுகிறது.

நிபுணன் சில முக்கியமான திருப்பங்களினாலும் அர்ஜூன் அவர்களின் முதிர்ச்சியான நடிப்பாலும் சிறந்து இருப்பினும் வழக்கமான ஒரு கொலை தொடர்பான படமாகவே நின்று விடுகிறது. ஆனால், துருவங்கள் பதினாறு திரைப்படம், கொலையும் கொலைக்காரனும் கரைந்து கொலை ஒரு தத்துவார்த்தமான இடத்தில் விரிந்து நினைவுகளாக முடிகிறது. இத்தகைய விநோதமான அனுபவத்தை துருவங்கள் பதினாறு வழங்கியிருக்கிறது.

 

  • கே.பாலமுருகன்

 

Share Button

About The Author

Comments are closed.