ஒளி என்பது வெளுப்பான இருட்டு- கே.பாலமுருகனின் சிறுகதைகள் விமர்சனம்

         ருள் என்பது குறைந்த ஒளி என்கிற பாரதியின் கூற்றை முற்றமுழுக்க மறுதலிப்பவராய் தெரிகிறார் பாலமுருகன். அவரைப் பொறுத்தவரை ஒளி என்பதேகூட வெளுப்பான இருட்டுதான் போலும். ஆமாம், அவருக்கு பூமியே ஒரு இருளுருண்டையாகத்தான் தெரிகிறது. எனவே அவரது கதையுலகமும் இருளுக்குள் தான் இயங்குகிறது. இருட்டு இருட்டு என்று இருட்டைப் பற்றியே இத்தனைக் கதைகள் எழுத முடியுமா என்கிற மலைப்பு ஒருபுறமிருக்க அதைப் பற்றி இன்னும் சொல்லிமுடிக்கவில்லை என்கிற ஒரு துயரத்தோடுதான் அவரது ஒவ்வொரு கதையும் முடிந்திருக்கிறது என்பதைத்தான் கவனப்படுத்தி சொல்லவேண்டியிருக்கிறது.

       ருளுக்குள் நுழைகிறபோதான தத்தளிப்பு, சற்றே பழகிய பின் கண்களுக்குப் புலப்படுகிற மங்கலான உருவங்கள், அவற்றின் நடமாட்டங்கள், முழுப் பரிமாணத்தில் தெரிந்துகொள்ளவியலாத அவற்றின் மீதான பயம் பரவசம் என்பவையெல்லாம் ஏற்கனவே வெளிச்சம் என்கிற ஒன்றை அறிந்திருப்பவருக்குத் தானேயொழிய பாலமுருகனின் கதைமாந்தர்களுக்கல்ல. ஏனென்றால் அவர்கள் வெளிச்சம் என்பதை வாழ்நாளில் ஒருபோதும் கண்டவர்களல்ல. எனவே அவர்கள் இருளில் பிறந்து இருளிலேயே வளர்ந்து வாழ்ந்து அதிலேயே மடிந்து ஆகக்கடைசியில் அந்த இருளுக்குள்ளேயே புதைந்தும் போகிறவர்களாக இருக்கிறார்கள். வெளிச்சத்துக்குள் நுழையும் தருணங்களில்கூட அதுதான் வெளிச்சம் என்பதை முன்பின் அறிந்திராத காரணத்தால் அவர்கள் கூசும் கண்களை மூடி அவ்விடத்தை இருளாலடித்து தமக்கிசைவாக்கிக் கொண்ட பின்பே இயல்புநிலைக்குத் திரும்புமளவுக்கு அவர்கள் இருள்வயப்பட்டிருக்கிறார்கள்.

 

கிட்டாதாயின் வெட்டெனவோ சட்டெனவோ மறந்துவிட அவர்களொன்றும் துறவிகளல்ல. வெளிச்சத்தின் மீதான அவர்களது தணியாத ஆவல் அது கிடைக்கவே போவதில்லை என்பதனால் தீராப்பகையாகவும் மாறிவிடுவதில்லை. ஆனால் அவர்களது பிரார்த்தனைகள் ஒளியுமிழும் தேவதைகளை எதிர்பார்த்தல்ல. மஞ்சள் வண்ண இருளைப்போல எப்போதும் அணையாத தீப்பந்தங்களையும் மண்ணெண்ணெய் விளக்குகளையுமே வேண்டுதலாய் கொண்டிருக்கின்றனர். அவர்களது அதிகபட்சக் கனவான ஜெனரேட்டர் விளக்குகளும்கூட கருமையாய் ஒளிர்பவை என்பது புனைவல்ல, வாழ்க்கை. ஆமாம், அவர்களது வாழ்க்கை இருள்மயமானது. அந்த இருளின் வயது இரண்டு நூற்றாண்டுகள்.

2.

‘உலகெங்கும் தமிழர்கள் இருக்கிறார்கள், மலேசியாவில் மட்டும்தான் வாழ்கிறார்கள்’ என்று ஒருமுறை அண்ணா சொன்னாராம். எப்படி வாழ்கிறார்கள் என்று அவரும் சொல்லவில்லை, ஏனோ அவரிடம் யாரும் கேட்கவுமில்லை. கை தட்டுவதற்கே நேரம் போதாதபோது கேள்வியாவது பதிலாவது? ஆனால் பாலமுருகன் தன் கதைமாந்தர்கள் வழியே இந்த கேள்விகளையும் பதில்களையும் முன்பின்னாகவும் அடுக்குகள் மாற்றியும் முரணொழுங்கிலும் சொல்ல முயன்றிருக்கிறார்.

தமிழ்நாட்டின் இண்டுஇடுக்கு சிற்றூர்களைச் சேர்ந்த எளிய மனிதர்கள் நாகை, ராமேஸ்வரம், தூத்துக்குடி போன்ற துறைமுகங்கள் வழியே உலகின் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பிரிட்டிஷாராலும் பிரான்சினராலும் கொண்டு செல்லப்பட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்ததுதான் மலேசியத்தமிழரது வரலாறும். அப்படியான மலேசியத் தமிழரது வரலாற்றின் மிகத்தொடக்ககால உளவியல் போக்குகளின் வகைமாதிரிகளே பாலமுருகனின் கதைமாந்தர்களாக இருக்கிறார்கள்.

இந்தியாவைப் போலவே மலேசியாவையும் காலனியாகக் கொண்டிருந்த பிரிட்டிஷார் அங்கு ரப்பர் தோட்டங்களை உருவாக்கவும், தோட்டங்களையும் துறைமுகங்களையும் இணைப்பதற்கான சாலைகளையும் பாலங்களையும் நிர்மாணிப்பதற்காகவும் இங்கிருந்து உழைப்பாளிகளை கொண்டு சென்றனர். எங்கு கோண்டுபோய் சேர்க்கப்போகிறார்கள் என்கிற விவரமே தெரியாமல் கப்பலுக்குள் அடைபட்ட அந்தக்கணத்தில் மனதிற்குள் ஏற்பட்ட வெறுமையும் நிச்சயமற்றத்தன்மையும் அவர்களது மனதில் என்றென்றைக்குமான இருளாக கவிந்திருக்கிறது. பக்கத்து ஊரைக்கூட பார்த்திராத அவர்கள் நாடுகடந்து கடல் தாண்டி மலேய மண்ணில் மனிதச்சுவடே அதுவரை பட்டிராத பாகங்களிலெல்லாம் தமது முதலடிப் பதித்திருக்கின்றனர். கண்ணுக்கெட்டியவரை காடாகிப் பரந்திருந்த அந்நிலப்பரப்பில்தான் இனி என்றென்றைக்கும் தாங்களும் தங்களது சந்ததிகளும் கிடந்தழியப் போகிறோம் என்றுணர்ந்தவர்கள் கண்ணில் அன்றைக்கு அப்பிய இருள் இன்னும் விலகவேயில்லை என்பதற்கான எழுத்தாவணங்களில் ஒன்றாக பாலமுருகன் கதைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். (‘கதவச் சாத்துடி கண்ணு கூசுது’ என்று வெளிச்சத்தைக் காண்பதற்கு அஞ்சி ஒரு கதையில் முறையிடுகிறவனும், அம்பாம் பாசா தோட்டத்து இருளுக்குள் புழங்கியே பழகிவிட்டதால் நகரத்து தங்கும் விடுதியறையில் விளக்குகளை அணைத்துவிட்டு இருளுக்குள் படுத்து நிம்மதியடைகிறவனாக இன்னொரு கதையில் வருகிறவனும் ஒரே மனநிலையின் இருவேறு பிரதிகள்).

 

விலங்குகளின் இடமான அடர்க்காடுகளுக்குள் மனிதர்கள் நுழையும்போது உயிராபத்திலிருந்து தற்காத்துக்கொள்வதுதான் முதற்பெரும் சவால். அதிலும் அங்கேயே நிரந்தரமாய் வசிக்க நேரும்போது இந்த சவாலும் ஒவ்வொரு கணத்துக்குமானதாய் மாறிவிடுகிறது. எனவே அவர்கள் விலங்குகள் ஏறிவர முடியாத உயரத்திற்கு தரையில் மரத்தூண்களை நட்டு அவற்றின்மீது பரண்போன்ற கொட்டகைகளை அமைத்து வசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். முன்னிரவில் கொளுத்தப்படுகிற தீப்பந்தங்களையும் மண்ணெண்ணெய் விளக்குகளையும் விடியவிடிய எரியவிடுமளவுக்கு எண்ணெய் வளப்பமோ பொருள்வளப்பமோ அற்ற அவர்கள் இருளைப் போர்த்திக்கொண்டு நசநசக்கும் வியர்வையோடு விடிவதற்காக பதுங்கியிருந்திருக்கிறார்கள். விடிந்தால் மட்டுமென்ன, இரவின் மிச்சம்போல இருண்டுகிடக்கும் காடுகளுக்குள் புகும் அவர்களுள் எத்தனையோ பேர் ஒவ்வொரு நாளும் காணாமல் போயினர். ஆமாம் காடுகள் மனிதர்களை தின்று கொழுத்தன.

அச்சம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது, அதற்காக அடங்கிக்கிடந்துவிட முடிகிறதா என்ன? அந்த மக்கள் காடுகளுக்குள் அலைகிறார்கள். காடுகாடாக அலைகிறார்கள். தங்களது மரணத்தை தாங்களே தேடியலைவதுபோல இருக்கிறது அவர்களது அலைச்சல். காடுகள் வழிகளை மறக்கடித்து அவர்களை எங்கோ திசைமாற்றி கூட்டிப் போகின்றன. இப்படி மயக்கி கூட்டிப்போவதற்கென்றே பேய்களும் முனிகளும் மோகினிகளும் காடுகளுக்குள் வெவ்வேறு ரூபங்கொண்டு அவர்களை பின்தொடரவும் முன்வந்து மறிக்கவும் காத்திருக்கின்றன. ஆனாலுமென்ன, அவ்வளவு சேட்டைகளையும் கட்டுப் படுத்தவும் விரட்டியடிக்கவும் அங்கு திருநீறுடன் ஒரு சாமியாடி காத்திருக்கிறார். மட்டுமல்ல, வழிதப்பி அல்லாடுகிறவர்களை தானே வழியும் துணையுமாக வந்து பத்திரமாய் வீடு கொண்டு சேர்த்துவிட்டு மாயமாய் மறைந்துவிடுகிற நல்ல ஆவிகளும் காடுகளுக்குள் இருக்கத்தான் செய்கின்றன. காணாமல் போனவர்கள், காணாமல் போக்கடிக்கப்பட்டவர்கள், தூக்கத்திலேயே கொல்லப்பட்டவர்கள், காட்டு/நாட்டு விலங்குகளுக்கு இரையாகிப்போனவர்கள், சயாம் மரண ரயில்பாதை அமைக்க தூக்கிச் செல்லப்பட்டவர்கள், வெள்ளை வேன்களில் பிடித்துச் செல்லப்பட்டவர்கள், ஒரிஜினல் மற்றும் போலி என்கவுண்டர்களில் போட்டுத்தள்ளப்பட்டவர்கள், பதுங்குக்குழிகளிலேயே புதைந்துபோனவர்கள் என்று பலவந்தமாக உயிர் பறிக்கப் பட்டவர்கள் மீது இரக்கக்கொண்ட மக்கள் அவர்களை ஆவிகளாக்கி தம்மோடு சேர்த்துக் கொள்கின்றனர்.

ஒரு மர்மத்தின் விடையாக இன்னொரு மர்மம் அல்லது ஒரு மர்மத்தை இன்னொரு மர்மமே வந்து விளக்கிவிடுவது போன்று தெரிந்தாலும் ஆகக்கடைசியில் காட்டுவாழ்க்கை மர்மங்களாலேயே சூழப்பட்டதாய் இருக்கிறது. இருள் ஏற்படுத்திய மரணங்களையும் மரணங்கள் ஏற்படுத்திய இருளையும் எதிர்கொள்ளும் வகையறியாது அல்லது அதையே இயல்பாக ஏற்றுக்கொண்ட தோட்டக்காடுகளுக்குள் தனது பால்யத்தை கழிக்க நேர்ந்த பாலமுருகனின் ஆழ்மனப்பதிவுகளே இத்தொகுப்பின் கதைகளாக வெளிப்பட்டுள்ளன. இருளில் தொலைந்தவர்களின் துர்க்கனவுகள் என்ற ஒரு கதையைத்தான், இருளினை இழையிழையாகப் பிரித்தும் கோர்த்தும் காட்டுவதுபோல 12 கதைகளாக அவர் எழுதிப் பார்த்திருப்பதாக தோன்றுகிறது. ஒவ்வொரு கதையிலும் வெவ்வெறு இடத்தில் நின்றுகொண்டு அவர் தன் கதையைத்தான் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார் என்பதற்கான தடயங்கள் கதைக்குள்ளேயே இருக்கின்றன. பழைய பட்டணத்தின் மரணக்குறிப்புகள் என்ற இத்தொகுப்பின் கடைசிக்கதையில் தனது தந்தையின் பெயரை நேரடியாக குறிப்பிடுவதை ஒரு துப்பாக வைத்துக்கொண்டு இந்தக் கண்ணியை பிடிக்கமுடியும். ஆனால் அவ்வாறான யூகங்களை விடுத்து கதைகளை அதனதன் அளவில் தனித்துப் பார்த்தாலும் காடன்றி வேறொன்றறியாத சிறார்களின் உலகே அவரது கதைகளாகி இருப்பதையும், அவர் கதைகளுக்கு வெளியே தன்னை நிறுத்திக் கொள்ள தொழில்நுட்பரீதியாக எவ்வித முனைப்பும் கொள்ளவில்லை என்பதை அறிய முடியும்.

உடும்புக்கார தாத்தா, நல்லம்மா பாட்டி, சைக்கிளில் உட்காரவைத்துக்கொண்டு காடு சுற்றும் தாத்தா, விளக்கைப் பற்றியே பினாத்திக் கொண்டு செத்துப்போகிற அம்மாச்சி பாட்டி, ஊரடங்கின பின்பு கிணற்றோடு பேசுகிற தாத்தா, அந்தக் கிணற்றை எட்டிப் பார்க்கவும் அனுமதிக்காத பாட்டி என்று வருகிறவர்களை கதாபாத்திரமாக குறுக்குவதா கதையாக விரிப்பதா? பாட்டிகளும் தாத்தாக்களும் கதைசொல்லும் இயந்திரங்களல்ல, அவர்கள்தான் கதைகளாக இருக்கிறார்கள் என்று படிக்கத் தெரிந்திருக்கிறது பாலமுருகனுக்கு.

3.

தோட்டக்காடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் இடைத்தங்கல் முகாம்களைப் போன்ற கம்போங் / கம்பத்தில் (கிராமங்கள்) தமிழர்களின் வாழ்க்கை மேலும் சிக்கலானதாகவும் சவாலானதாகவும் மாறுகிறது. தோட்டக்காட்டிலிருந்து விடுபட்டு விட்டார்கள் என்றாலும் மரணமும் இருளும் காணாமல் போதலும் அவர்களை நிழலெனத் தொடர்வது குறித்த பதற்றம் கதைகளுக்குள் இருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை புலப்பெயர்வும் முற்றுப்பெற்றுவிடவில்லை. பூர்வீகத்திலிருந்து பெயர்ந்துவந்த அவர்கள் இன்னமும் நிலைகொள்ளவியலாமல் மலேசியா முழுக்க அலைந்து கொண்டே இருப்பது குறித்த துயரம் கதைகளுக்கிடையேயான பொதுத்தன்மையாக இருக்கிறது.

தோட்டக்காடுகளிலும் கம்போங்கிலும் சாகாமலும் தொலைந்துபோகாமலும் எஞ்சியவர்களை வரவழைத்து காணாமல் போக்கடிக்கவோ அல்லது சாகடிக்கவோ பட்டணங்கள் காத்திருக்கின்றன. மீனா அக்காவும் தனசேகர் அப்பாவும் மட்டுமா அங்க காணாமல் போகிறார்கள்? வருகிற ஒவ்வொருவரும் காணாமல் போகிறார்கள் அல்லது இயல்பு திரிந்து வேறொன்றாகிறார்கள். மனநலம் குன்றியவர்கள், பாலியல் தொழிலாளர்கள், மொடாக்குடியர்கள், பிச்சைக்காரர்கள், நம்பர் தாள் விற்பவர்கள், உறங்கும் குழந்தையை விட்டுவிட்டு அகாலத்தில் பிரியும் தந்தையர்கள், அப்பா முகம் காணும் ஏக்கத்தில் வதங்கும் குழந்தைகள், கிறுக்குத்தேவன்கள் என்று பலபக்கமிருந்து வந்து சேரும் இவர்கள் பட்டணங்களின் உதிரிகளாக உழன்றலைகிறார்கள். உடல் வளர்ச்சிக் குன்றிய பூச்சாண்டி, யார் கண்ணிலும் படாதவாறு சாத்திய அறைக்குள்ளேயே படுத்தப் படுக்கையாய் கிடக்கும் அவனது தந்தை, பஸ்கட்டணம் செலுத்தமுடியாமல் ஒளிந்துகொள்ள முயற்சித்து தவறி விழுந்து செத்துப்போகிற மாணவன், வயிற்றுக்குள் சுடுகாடு இருப்பதாய் பிதற்றுத் திரிகிற இளைஞன், கணவனின் புறக்கணிப்பை இடையறாத செல்போன் உரையாடல் வழியே கடக்க முனையும் பெண், குற்றவுணர்ச்சியில் மடிந்துகொள்ளும் அவளது கணவன் என வருகிறவர்களும்கூட அவரவர் இருப்பில் உதிரிகள்தான். இந்த உதிரிகளின் குரலாக இருந்து எழுதி தியாகச் செம்மலாகிவிடும் பேராசையற்ற பாலமுருகன் அந்த உதிரிகளில் ஒருவராக கரைந்து எழுதியிருக்கிறார். மலேயாவில் தமிழர்கள் உதிரிகள் என்றால், அந்த தமிழர்களில் உதிரிகள் எவரோ அவர்களின் கதைகள் இவை.

ஆதவன் தீட்சண்யா, 2015

Share Button

About The Author

One Response so far.

  1. Raj Sathya says:

    Bala deserves this comments.The story is well analysed by the powerful and popular Tamil Writer.Keep up your writings Bala.