• சிறுகதை: சாவித் துவாரம்

  முனியாண்டி வெகுநேரம் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார். கதவு திறக்கப்பட்டதும் காலில் விழுந்திட முடிவு செய்துவிட்டார். ஓராயி பவுடர் பூசும் சத்தம் கேட்டது. சரக் சரக் என ஒட்டத் தடுமாறும் பவுடரை முகத்தில் அவள் தேய்க்கும் சத்தம். அவளுக்குப் பிடித்தது அந்தச் சிவப்பு நிற டப்பாவில் இருக்கும் ‘பேபி பவுடர்’தான். அதைப் பூசிக் கொண்டு அவள் வெளியே வரும்போது இப்பொழுதுதான் தொட்டிலிலிருந்து எகிறிக் குதித்து நடந்து வரும் குழந்தையைப் போல தெரிவாள். அதற்கே முனியாண்டி தவம் கிடக்க வேண்டும்.

  கதவைத் திறக்கும்போதே அதில் கோபம் ஓலமிட்டது. ஒரு பாதி கதவு பலகை சுவரில் மோதி கூச்சலிட்டது.

  “எங்க மங்கு சாமான் கழுவியாச்சா?”

  முனியாண்டிக்கு அப்பொழுதுதான் ஞாபகத்திற்கு எட்டியது. பேசனில் காலையில் சாப்பிட்ட தட்டுகள் அப்படியே ஈ மொய்க்கக் கிடந்தன. கோபத்தைத் தணிக்க வழித் தேடினால் அவளுடைய கோபம் மேலும் உச்சாணியில் போய் நின்று கொண்டதுதான் மிச்சம். முனியாண்டி சமையலறைக்கு ஓடிப் போய் தட்டுகளை எல்லாம் அவசரம் அவசரமாகக் கழுவினார்.

  இன்று ஓராயிக்குப் பிடித்த ‘டோரேமோன்’ கார்ட்டூன் சரியாக மதியம் 1.00 மணிக்குப் போடப்படும். அதைச் சில வேளையில் அவள் மறந்துவிடுவாள். இன்று ஞாபகப்படுத்தி சரியான நேரத்தில் தொலைக்காட்சியைத் திறந்து அவளை மகிழ்ச்சிப்படுத்தலாம் என முனியாண்டி திட்டம் தீட்டினார். தட்டுகளை எடுத்து அடுக்கும்போது ஒரு பதற்றம் கைகளில் இருந்தது. அந்த நேரம் பார்த்து ஒரு தட்டு கீழே விழ வேண்டுமா?

  ஒரு சில்வர் தட்டு கீழே விழும்போது அதன் விளைவு வெறும் சத்தம் மட்டும் இல்லை என்று அன்றைக்குத்தான் முனியாண்டிக்கு விளங்கியது.

  “ஒரு தட்டு ஒழுங்கா அடுக்கத் தெரியல? என்ன மனுசன் நீ?”

  இப்படியாகப் பல வார்த்தைகள் பல்லாயிரம் தட்டுகள் விழுந்து வெளிப்படும் இரைச்சலைவிட கொடூரமாகச் சீறிப் பாய்ந்து வந்தன. ஒரு கட்டம் முனியாண்டிக்குத் தலை ‘கிர்ர்ர்ர்ர்’ என அதிர்ந்தது.

  மீண்டும் தட்டைக் கழுவிவிட்டு அலமாரியில் அடுக்கும்போது ஒரு குழந்தையைக் கைத்தாங்கலாகத் தூக்கும் கவனம் அவரிடம் இருந்தது. ஓராயிக்குச் சுத்தம் என்றால் மிகவும் முக்கியம். ஒரு சோற்று பருக்கையைப் பார்த்துவிட்டாலும் அவள் கத்துவாள். தரை ஈரமாக இருக்கக்கூடாது. சதா வீட்டைத் துடைத்துக் கொண்டே இருப்பாள். சட்டென்று இரவில் எழுந்து தரையைத் தடவிப் பார்த்துவிட்டு மீண்டும் உறங்கிவிடுவாள். அவளுடைய மிகப் பெரிய கவலை வீட்டின் சுத்தம் மட்டுமே. அதனாலேயே ஒரு பாயை விரித்துத் தரையில்தான் படுத்துக் கொள்வாள்.

  இரண்டுமாடி வீடு. ஐந்து அறைகள். எல்லாம் விலையுயர்ந்த பொருட்கள். முனியாண்டி நடக்கும்போதுகூட ஒவ்வொரு அடியாகப் பார்த்து நிதானித்துதான் நடப்பார். சிறு அலம்பலுக்குக்கூட ஏதாவது ஒரு பொருள் கீழே விழுந்தாலும் அதன் விலை ஆயிரம் ரிங்கிட்டாக இருக்கும். ஓராயி பஞ்சு நாற்காலியின் ஓரத்தில் கவனத்துடன் அமர்ந்திருந்தாள். அது அவள் உடல் அளவிற்குக் கொஞ்சமும் பொருந்தாத பெரிய நாற்காலி. அவள் உடல் மெலிந்தவள். நிரம்ப சாப்பிட மாட்டாள். தட்டில் கால் பங்குக்கூட சோரு இருக்காது. காற்றை சுவாசித்து வாழும் ஞானி அவள். முனியாண்டியைத் திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து அவள் உடல் உப்பி அவர் பார்த்ததில்லை.

  இப்பொழுது தொலைகாட்சியைத் திறந்தால் ஓராயியை அதிர்ச்சியில் ஆழ்த்த சரியாக இருக்கும் என முனியாண்டி முடிவு செய்தார். வரவேற்பறைக்கு வந்ததும் தூர இயக்கியைத் தேடினார். அது அப்படித்தான் எங்காவது ஒளிந்து கொள்ளும். நாற்காலியின் அடியிலோ, மேசைகளின் இடுக்கிலோ கிடக்கும். முனியாண்டி குனிந்து நிமிர்ந்து அதைத் தேடி எடுப்பதற்குள் டோரேமோன் சூப்பர்மேன் ஆகி பறந்திருக்கும். அவதியுடன் தொலைகாட்சியைத் திறக்கும்போது ‘டோரேமோன்’ ஓடிக் கொண்டிருந்தது.

  “அய்ய்ய்ய் டோரே! டோரே!” என அவள் துள்ளிக் குதித்தாள். முனியாண்டியின் முகத்தில் ஏதையோ சாதித்துவிட்டப் பூரிப்பு. ஒய்யாரமாகத் தரையிலிருந்து நாற்காலியில் அமர்ந்தார். கால் மேல் காலிட்டுக் கொண்டு பற்கள் தெரிய இழித்துக் கொண்டிருந்தார்.

  “என்ன இது?” சட்டென ஓராயி அப்படிக் கேட்பாள் என முனியாண்டி நினைக்கவில்லை. முனியாண்டி கால்களை இறக்கிவிட்டு அவள் பேச்சுக்கு அடங்கினார்.

  ஓராயி கைகளைத் தட்டிக் கொண்டு கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தாள். இடையிடையே முனியாண்டியை ஓரக் கண்ணில் பார்த்துக் கொண்டாள். இன்றைய நாள் ஓராயினுடையது. நாளை முனியாண்டி. ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒருவரையொருவர் கொண்டாடிக் கொள்வார்கள்.

  ஓராயி கார்ட்டூன் பார்த்து முடிப்பதற்குள் முனியாண்டி சமையல் வேலையில் இறங்கிவிட்டார். இருவருக்கு மட்டும் என்பதால் அதிகமாகச் சமைக்க மாட்டார்கள். இரவில் மட்டுமே அனைவருக்கும் உணவைத் தயார் செய்ய வேண்டும். ஆகவே, முனியாண்டி முதலில் இரண்டு முட்டைகளை உடைத்துக் கரண்டியால் அடித்தார். சத்தம் அதிகம் வராமல் நிதானமாகச் செய்தார்.

  மதிய உணவிற்குப் பிறகு ஓராயி சன்னல் கதவில் அமர்ந்து கொண்டாள். அவளுக்கு வெளி என்றால் மிகவும் பிடிக்கும். முன்பு காட்டிலும் மேட்டிலும் வேலை செய்தவள். சன்னல் கதவைத் திறந்ததும் கம்பிகளினூடாகக் காற்று ஊடுபாய்ந்து உள்ளே பரவியது. ஓராயிக்கு மனம் சில்லேன்று இருந்தது. அப்படியே சிறிது நேரம் உறங்கினாள். முனியாண்டி வேலையெல்லாம் முடிந்ததும் அவளுக்கு அருகில் அமர்ந்து கொண்டார். ஓராயி ஒரு குழந்தையாகி உறங்குவதையே கவனித்துக் கொண்டிருந்தார். கண்களைச் சுற்றிய கருவளையம் அவளுடைய கண்களுக்கு மாட்டிவிட்ட ஆபரணத்தைப் போல மின்னியது.

  எப்பொழுது அசந்தார் எனத் தெரியவில்லை. கண்கள் அயர்ந்தன. முனியாண்டி ஒரு பாலைவனத்தில் இருக்கிறார். ஓராயி அதிசயமாக எப்பொழுதாவது பூக்கும் ஒரு பூவைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறாள். அவள் ஓடுவது ஒரு கானல்நீரில் கரைகிறது. பலம் கொண்டு கத்துகிறார். ஓராயி ஓராயி என மனத்தின் ஆழத்திலிருந்து குரல் எழுகிறது.

  “ஏய்ய் கெழவி!”

  சட்டென இருவருக்கும் விழிப்பு. முன் கதவின் சாவித் துவாரத்தில் சாவி நுழைக்கப்படும் ஓசை. ஓராயி எழுந்து வைப்பறைக்கு அருகில் இருக்கும் தன் இடத்தில் போய் அமர்ந்து கொண்டாள். தரை மட்டும் சில்லேன்று இருந்தது. தடவி பார்த்துக் கொண்டாள். கொஞ்சம்கூட ‘ஈரமில்லாத’ பல்லிங்குத் தரை.

  • கே.பாலமுருகன்
  Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *