• சிறுகதை: ‘டைகர்’ அணி

  “சொல்லு முனியாண்டி… இப்ப நம்ம ‘டைகர்’ குழு எப்படி இருக்கு?”

  அவர் அதைக் கேட்பார் என நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. முற்றத்தில் வெகுநேரம் அமர்ந்திருந்து அப்பொழுதுதான் அமைதியிழந்து ஒரு சிட்டுக்குருவி தகரத்திலிருந்த சந்தின் வழி தப்பித்தோடியது. தலையைத் தூக்கி மேலே பார்த்தேன்.

  “வீடுன்னா இருட்டா இருக்கக் கூடாது, மல்லிகா  சொல்லும்… அதான்”

  அவர் கொண்டு வந்து வைத்திருந்த தேநீர் குவளையைப் பார்த்தேன். மனம் கொஞ்சம் படப்படப்பாக இருந்தது.

  “முனியாண்டி உன் வீடு மாதிரி நினைச்சுக்கோ. தேத்தண்ணிய குடி”

  மீண்டும் சடசடத்துக் கொண்டு ஒரு சிட்டுக்குருவி வீட்டினுள்ளே நுழைந்தது. வீட்டில் பெரும்பாலும் பொருள்களே இல்லாததால் அதன் சிறிய அசைவும் பெருகி எதிரொலித்துக் கொண்டிருந்தது.

  “ஏய்ய்ய் அம்மா… என்ன கோபமா? இன்னிக்கு ஒன்னும் இல்லயே”

  அச்சிட்டுக்குருவியிடம் துரைசாமி வாத்தியார் என்னவோ சொல்ல அதுவும் சட்டென தலையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டது.

  “சொல்லுப்பா அந்த டைகர் குழுக்கு இப்ப யாரு கெப்டன்?”

  பள்ளிக்கூடம் இருக்கும் வரிசையிலேயே தொங்கல் வீட்டில்தான் துரைசாமி வாத்தியார் இருக்கிறார். அவருடன் பாதி ஆயுள் அங்கேயே இருந்த அவருடைய மனைவி மல்லிகா அம்மா இறந்த பிறகுதான் அவரால் இருப்புக் கொள்ள முடியவில்லை. சதா காலமும் யாரும் இல்லாத வீட்டில் மல்லிகா அம்மாவை அழைத்துக் கொண்டே இருந்தார். அக்குரலை, அவ்வழைப்பைக் கேட்கும்போதெல்லாம் மனம் நடுங்கும்.

  வீட்டைத் தாண்டிப் போகும் எல்லோரையும் துரைசாமி வாத்தியார் அழைத்துப் பேசத் தொடங்கிய ஒரு மதிய நேரத்தில் அவருடைய வீட்டிற்குப் போயிருந்தேன். என்னை உள்ளே உட்கார வைத்துவிட்டு ஒரு தேநீர் கொண்டு வந்தார். அவருடைய நடையில் மல்லிகா அம்மாவைப் பார்க்க முடிந்ததில் சட்டென ஆச்சர்யம்.

  அன்றைய மாலைவரை என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். கொஞ்சம்கூட அவர் ஓயவில்லை. துரைசாமி வாத்தியார்தான் ‘டைகர்’ அணியை உருவாக்கியவர். அப்பொழுது எங்கள் மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கை கொண்ட மாணவர்கள் பயிலும் சிறிய பள்ளிகளில் காற்பந்து அணியெல்லாம் இருக்காது. அத்தனை மாணவர்கள் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கும். ஆகவே, மாவட்டக் காற்பந்து போட்டிகளிலெல்லாம் சிறிய பள்ளிகள் கலந்து கொள்ளாது.

  துரைசாமி வாத்தியார் அப்பள்ளிக்கு வேலைக்கு வந்த இரண்டாவது வருடத்திலேயே அங்குள்ள சிறிய பள்ளிகளிலிருந்து விளையாட்டாளர்களைக் கண்டறியத் துவங்கினார். அவர்கள் அனைவரையும் இணைத்து ஒரு குழுவாக்கினார்.

  “நம்ம சின்ன பள்ளிகள்னா எதையுமே செய்ய முடியாதா? ஒரு முறை மோதி பார்ப்போம். ஜெயிக்கலனா பரவால. ஆனால், நம்மள கடைசி வரைக்கும் ஒன்னுமே செய்ய முடியாதவங்கனு நினைச்ச அத்தனை பேருடைய எண்ணத்தையும் மாத்தறோம் பாத்தீங்களா? அதான் நம்மளோட வெற்றி!”

  அந்த உச்சி வெய்யிலில் கிம் சேங் பள்ளிக்கூடத்தின் திடலில் நிற்க வைத்து துரைசாமி வாத்தியார் சொன்னது இன்னமும் என்னால் மறக்க முடியாது. இப்பொழுது காதில் ஒலிக்கப்பட்டது போன்று இன்னமும் தெளிவாகக் கேட்கும் வசனம் அது.

  அதன் பிறகு, கிம் சேங் தமிழ்ப்பள்ளியிலிருந்து இரண்டு மாணவர்கள், நானும் என் நண்பன் முரளியும், பெட்னோக் தமிழ்ப்பள்ளியிலிருந்து சுந்தர், ஸ்காப்ரோ தமிழ்ப்பள்ளியிலிருந்து சிவாவும் மணிமுத்துவும், மாலாவ் தமிழ்ப்பள்ளியிலிருந்து அரசும் ரவியும், குப்பாங் தமிழ்ப்பள்ளியிலிருந்து சேகரும் முத்துவும் ‘டைகர்’ அணியில் முதலில் சேர்ந்தவர்கள்.

  துரைசாமி வாத்தியார் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமைகளிலும் கோலா கெட்டிலிலுள்ள பொதுத் திடலுக்கு எங்களை அழைத்து வருவார். அப்பொழுது அவர் புரோட்டன் சாகா வைத்திருந்தார். நானும் முரளியும் தான் முதலில் ஏறுவோம். ஆகவே, எங்கள் இருவருக்கும் முன் இருக்கை கிடைத்துவிடும். மற்றவர்களை வழியில் ஏற்றிக் கொள்வார். அப்பொழுது முன் இருக்கையில் துரைசாமி வாத்தியாருடன் உட்கார்ந்து வரும்போது உலகக் கிண்ணத்தை வென்றுவிட்ட பெருமை முகத்தில் தெரியும்.

  கோலா கெட்டில் பொதுத் திடலில் பஞ்சுமிட்டாய் அப்பொழுது பிரபலம். அதுவும் சனிக்கிழமைகளில் நிறைய வரிசை கடைகள் அங்கு முளைத்துவிடும். நாசி லெமாக், பொறித்த கெரோப்போக்கள், அதில் பஞ்சு மிட்டாயும் அடக்கம். பயிற்சி முடிந்ததும் எல்லோரும் பஞ்சு மிட்டாய்க்கு நிற்போம். அடம் பிடித்து அழாவிட்டாலும் எங்கள் முகங்கள் காட்டிக் கொடுத்துவிடும். துரைசாமி வாத்தியார் காற்சட்டைக்குள்ளும் வாகனத்தின் மூலை முடுக்கெல்லாம் சில்லறைகளைத் தேடி எப்படியும் எல்லோருக்கும் இல்லாவிட்டாலும் ஒன்றிரண்டு பஞ்சுமிட்டாய் கொடுத்துவிட்டு பகிர்ந்து சாப்பிடும் நற்பண்பைப் பற்றி வழிநெடுக பிரசங்கம் நடத்திக் கொண்டு வருவார். கேட்டக் களைப்பில் பஞ்சுமிட்டாய் சாப்பிடாமலேயே முரளி தூங்கிவிடுவான்.

  துரைசாமி வாத்தியாரைப் போல ஒருவரை அப்பொழுது யாரும் பார்த்திருக்க வாய்பில்லை. எங்களை வீட்டில் வந்துவிடும் போதெல்லாம் இறங்கி வந்து எங்கள் பெற்றோரிடம் எங்களின் திறமைகளைப் புகழ்ந்து பேசிவிட்டுப் போவார். எங்களுக்கும் கொஞ்சம் நம்பிக்கையாக இருந்தது. டைகர் அணி மெல்ல வளர்ந்தது. எங்களுடைய பயிற்சி வெள்ளிக்கிழமைக்கும் தாவியது. முரளித்தான் கோல் கீப்பர். அவனுக்கு மட்டும் கூடுதல் பயிற்சி தேவைபட்டது. அதே சமயம் நாள் முழுக்க கொஞ்சம் தன்னம்பிக்கை இழந்தவனைப் போல இருப்பான்.

  “டேய், கோழி பிடிக்கப் போலாம் ஓகேவா?”

  எனச் சொல்லிவிட்டு அன்று அவனை மட்டும் கிம் சேங் கம்பத்திற்குக் கோழிப் பிடிக்க அழைத்துச் சென்றார். அப்பொழுது அக்கம்பம்பத்தில் கோழிப் பிடிப்பது ஒரு விளையாட்டாக இருந்தது. கோழி என்பது நம் அகம்பாவம் என்றும் அதனை அடக்க முடியாமல்தான் மனிதன் வாழ்நாள் முழுவதும் அல்லல்படுகிறான் என்றும் ஒரு வழிவழியான நம்பிக்கை ஆகும். கோழி பரப்பரப்பானது. அது ஓடும்போது அதன் அசைவைக் கணிப்பது சிரமமாகும். முரளிக்கு முதலில் ஒரு பாடத்தைக் கற்பிக்க வேண்டும் என்றுதான் துரைசாமி வாத்தியார் அவனை அங்கு அழைத்துப் போனார்.

  ஒரு மணி நேரம் சோர்ந்து போகும் அளவிற்கு முரளி தாவிக் குதித்து ஓடி விழுந்து கோழியைத் துரத்தினான். கடைசியாகப் பிடிக்க முடியாமல் மீண்டும் துரைசாமி வாத்தியாரிடம் நாக்கைத் தள்ளிக் கொண்டு வந்தான். பின்னந்தலையில் அடித்து மீண்டும் அனுப்பினார். அடுத்த அரைமணி நேரத்தில் கோழியுடன் வந்து நின்றான். பெருமூச்சுடன் முகத்திலிருந்து வியர்வை குடகுடமாக வழிந்து கொண்டிருந்தது.

  “அவ்ளதாண்டா… எதை நீ செய்ய முடியாதுனு நினைக்கிறியோ அதோட வலி, வேதனை எல்லாம் இவ்ள நேரம்தான். இப்பப் பிடிச்சிட்ட பாத்தியா? அவ்ளதான்…”

  முரளி அப்பொழுது அழுதுவிட்டேன் என என்னிடம் சொல்லும்போதே அழுதான். என்னவென்று தெரியவில்லை எனச் சொல்லி சொல்லி அழுதான். அதன் பிறகு அவனிடம் நிறையவே மாற்றம் இருந்தது. எங்கள் ‘டைகர்’ அணியின் தலைவனாகவும் நியமிக்கப்பட்டான். கோல் கம்பத்தில் நின்று கொண்டு எங்கள் அனைவரையும் விரட்டும் குரல் அவனிடம் இருந்தது. கோழிப் பிடிக்கச் சென்ற நாளிலிருந்து அவனுடைய பேச்சும் மாறிப் போயின.

  “டேய்ய் அவனை அங்கயெ அமுக்கு…”

  “பந்தெ பாஞ்சு அமுத்துடா…”

  “பந்தெ ஏன் கால்லேந்து பறக்க விடறெ…நிப்பாட்டு”

  கோழிப் பிடித்தான் முரளி என் எல்லோரும் கேலி செய்தனர். ஆனால், தலைவனாக்கப்பட்டதிலிருந்து அவன் கண்களில் எப்பொழுதும் ஒரு வெறி மட்டுமே இருந்தது. அவன் கண்கள் சதா ஏதாவது ஒரு பந்தை உதைத்துக் கொண்டும் பிடித்துக் கொண்டும் இருந்தன. கெடா மாநில காற்பந்து போட்டிக்கு முந்தய நாள் இரவில் அவன் பேசும்போது அதனை நெருக்கமாகக் கவனித்தேன்.

  “நாளைக்கு நம்ம ஜெயிக்கப் போறமானு தெரில ஆனா… பெரிய ஸ்கூல் அணியை ஏதாச்சம் ஒன்னு நம்மக்கிட்ட தோக்கணும்டா. அப்புறம் தெரியும்…”

  எனக்கும் அதே எண்ணம்தான் மனத்தில் விடாமல் கொப்பளித்துக் கொண்டிருந்தன. முதன்முறையாக சிறிய பள்ளிகள் இணைந்து அமைத்திருக்கும் காற்பந்து அணி. இனி காலம் முழுவதும் இதைப் பேசப் போகிறார்கள். எதையாவது சாதித்துக் காட்ட வேண்டும் என மனம் துடித்துக் கொண்டே இருந்தது.

  டைகர் அணிக்கு காற்பந்து சட்டை இல்லை என துரைசாமி வாத்தியார் ரொம்பவும் கவலைப்பட்டார். எங்கேங்கோ உதவிகள் கேட்டுப் பார்த்தார். அச்சமயம் யாரிடமிருந்தும் பதில் இல்லை. மறுநாள், காலையிலேயே அவர் ஒரு பெரிய துணி மூட்டையுடன் வந்து சேர்ந்தார். அதில் வெள்ளை சட்டைகள் இருந்தன.

  “இதுதாண்டா கிடைச்சது. ஜேர்சிலாம் வாங்க காசு இல்ல. இதை வச்சு வெளையாடுங்க”

  எல்லோரும் மகிழ்ச்சியுடன் அந்த வெள்ளை சட்டைகளை அணிந்து கொண்டு விளையாட்டுக்குத் தயாரானோம். அப்பொழுது ‘எட்டு வெள்ளி பூட்டு’ எங்கள் மத்தியில் பிரபலம். எல்லா கடைகளிலும் விற்கும் மலிவு காற்பந்து காலணி. ஓரிரண்டு விளையாட்டுக்கு மேல் தாங்காது என்றாலும் அப்பொழுது அதை அணிந்திருப்பதே பெரிய கௌரமாக இருக்கும்.

  “நல்லா கேட்டுக்குங்கடா! பந்தெ இறக்கி விளையாடுங்க. கேம் உங்க கொண்ட்ரோல்ல இருக்கற மாதிரி தட்டி வெளையாடுங்க… முரளி… நீதான் எல்லாத்துக்கு சவுண்ட் பண்ணனும். பேர் சொல்லிக் கத்தி கூப்டுங்க…”

  விளையாட்டு ஆரம்பிக்கும்வரை துரைசாமி வாத்தியார் ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தார். அவர் கண்களில் உறக்கம் தேங்கிக் கிடந்தது. அதையெல்லாமும் தாண்டி யாரிடமோ இன்று எதையோ நிரூபித்துக் காட்ட வேண்டும் என்கிற தீர்மானமும் அவரிடம் தெரிந்தது.

  விசில் ஊதியதும் எல்லோரும் திடலில் கூடினோம். டைகர் அணி உற்சாகத்துடன் திடலில் இறங்கியது. எங்களை எல்லோரும் வேடிக்கையாகப் பார்த்தார்கள். தூரத்தில் யாரோ கிண்டல் செய்யும் வார்த்தைகள்கூட எந்த ஒளிவுமின்றி காதில் தெளிவாக வந்து விழுந்தது.

  “டேய்.. கம்பத்துலெ கோழி பிடிக்கிறவன்லாம் வந்துருக்கானுங்க. இவனுங்கெ எல்லாம் ஒரே ஸ்கூல் இல்ல தெரியுமா?…”

  எங்களுடன் மோத களம் இறங்கிய அப்பெரிய பள்ளியின் ஆதரவாளர்கள் பெரும் கூச்சலிட்டனர். பேரோசையுடன் அப்பள்ளியின் விளையாட்டாளர்கள் திடலுக்குள் நுழைந்தனர். நாங்கள் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு திடல் அதிரும்வரை கத்தினோம். விளையாட்டுத் தொடங்கியது.

  …………………………

  “தண்ணியெ எடுத்துக் குடிப்பா… என்ன முனியாண்டி இப்டி இளைச்சிப் போய்ட்டே?”

  சட்டென நினைவுகள் முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் துரைசாமி வாத்தியாரின் குரலின் மீது வந்து குவிந்தன.

  “அப்படில்லாம் ஒன்னும் இல்ல சார். இப்ப வேலை சிங்கப்பூர்ல… அதான் அலைச்சர் சார்…”

  “ஆமாம்… இப்பலாம் சம்பாரிக்க வெளிலத்தான் போகணும்… இங்கக்கூட எந்தப் பையனும் காணோம். எல்லாம் எங்கயோ போய்ட்டானுங்க…”

  அமைதியாக இருந்தவர் தொலைக்காட்சியைத் திறந்தார்.

  “இப்பெ கேம் போட்டிருப்பானுங்க… தவறாமல் பாத்துடுவேன்”

  தொலைகாட்சியில் இரண்டு அணிகள் மோதிக் கொண்டிருந்தன.

  “அவன் யாரு? ஏதோ உலக விளையாட்டுக்காரனாம். ஆனால், பந்தெ விட்டுட்டானா ஓடறானா பாத்தியா? அப்படியெ நடப்பான்… இவன்லாம் உலக விளையாட்டுக்காரன்… 80 டிகிரில வர்ற பந்தெ பின்னங்கால்ல நிப்பாட்டெ தெரில… அப்புறம் என்ன விளையாட்டு?”

  “டேய்ய் முரளி! 10 மீட்டர் கோல் போஸ்க்கு வெளில நிண்டனா, ஒரு பந்து 80 டிகிரில வந்தா உன்னால கைல பிடிக்கவே முடியாதுடா… எகிறி பின்னங்கால்ல நிப்பாட்டு… அன்னிக்குச் சொல்லிக் கொடுத்தனெ அந்த மாதிரி”

  அன்று இடைவேளை விளையாட்டுக்குப் பிறகு துரைசாமி வாத்தியார் முரளியிடம் இதைச் சொன்னார். நான் அமைதியாக இருந்தேன். இப்பொழுதெல்லாம் நான் பந்து விளையாடுவதே இல்லை என்பதால் அவர் சொன்ன விமர்சனம் சட்டென மனத்தில் நுழைய மறுத்தது.

  “சரிங்க சார் நான் கெளம்புறென்… இன்னொரு நாள் கண்டிப்பா வர்றேன்…”

  “சரிப்பா. அப்பெப்ப சாரை வந்து பாத்துட்டுப் போ. எவனுமே வர்றது இல்ல. பாதி பேரு ஞாபகத்துலே இல்ல.. தண்ணிய குடிக்கலையா?”

  மெதுவாக அவர் கொண்டு வந்து வைத்தக் குவளையை எடுத்தேன். அவர் கொண்டு வந்து வைக்கும்போதே அக்குவளைக் காலியாகத்தான் இருந்தது என எனக்குத் தெரியும். குடிப்பதைப் போல பாவனை செய்யும்போது மனம் கனமாக இருந்தது. வெளியேறும் முன் மீண்டும் எங்கிருந்தோ ஒரு சிட்டுக்குருவி தகரத்தைத் தாண்டி வீட்டில் நுழைந்து அங்குமிங்குமாகச் சடசடத்துக் கொண்டிருந்தது.

  “தம்பி ஒரு உதவி செய்றியா? இந்தப் பள்ளிக்கூடத்துல உனக்குத் தெரிஞ்சு யாராச்சம் இருக்காங்கலா? சாயங்கால நேரம் பந்து விளையாடறாங்க. ஏதாச்சம் சொல்லித் தரலாம்னு ஆசையா இருக்கும். ஆனா, நான் தான் ரிட்டாயர் ஆய்ட்டேன்ல…சேத்துக்குவாங்களானு தெரில…நம்ம டைகர் அணியைப் பத்தி யாருக்குமே தெரிலப்பா”

  முட்டிக் கொண்டு வந்த கண்ணீரை ஏன் நிறுத்தமுடியவில்லை என அப்பொழுதும் எனக்கு விளங்கவில்லை. ஒன்றுமே பேசாமல் வந்துவிட்டேன்.

  • கே.பாலமுருகன்
  Share Button

3 Responsesso far.

 1. புனிதா says:

  ஒளிந்து கிடக்கும்
  திறமைகளை வெளிக்கொணரும் துரைசாமி போன்ற ஆசான்களுக்கு அகம் நிறைந்த பாராட்டுகள்.
  இருப்பினும்
  கட்டுக்கடங்காத
  திறமைகளை கண்டறிய…கணினி வேலைகள் தடையாக இருப்பதை எண்ணியும் வருந்துகிறோம்.

 2. புனிதா says:

  கதைக்கருவும் கதையோட்டமும் அருமை நண்பரே.பாராட்டுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *