Dangal – பெண்களின் மீதான அடக்குமுறைகளை வெல்லுதல்

அமீர் கான் அவர்கள் தயாரிக்கும் அனைத்து படங்களும் சமூக அக்கறையும் கலை எழுச்சியுமிக்க படைப்பாக இருக்கும் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படத்தைப் பற்றி வேறு என்ன சொல்வது? இந்திய சினிமாவையே பெருமைப்பட வைத்துள்ளது. இயக்கம், இசை, ஒளிப்பதிவு, கலை, நடிப்பு, திரைக்கதை என அனைத்திலும் ஆய்வுப்பூர்வமாகவும் தெளிவாகவும் படத்தைத் தயாரித்துள்ளார்கள்.

இந்தியக் கிராமங்களில், மூலை முடுக்குகளில், சமூகத்தின் அடியாழத்தில், திறமையான பெண்கள் நம்பிக்கையுடன் திரைக்குப் பின்னால் காத்திருக்கிறார்கள். அவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்கிற அகத்தூண்டலைப் படம் மசாலாத்தனங்கள், பிரச்சாரப் போக்குகள் இன்றி மிகவும் நேர்மையாக முன்வைத்துள்ளது. சபாஷ். ஓர் உண்மை கதையைப் படமாக்குவதில் இருக்கும் அனைத்து சிக்கல்களையும் இலாவகமாகத் தவிர்த்து இதனை ஒரு அசலான படைப்பாக வழங்கியிருக்கிறார்கள். நம்பிக்கை தூண்டல்களை முன்னெடுக்கும் படங்களில் வரும் வழக்கமான காட்சிகளைக்கூட அமீர் கான் நிராகரித்துவிட்டுப் படத்தைச் சுமக்கும் கதைக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கியுள்ளார்.

பெரும்பான்மையான ஆண்களை முன்னெடுக்கும் குடும்பங்களில் ஆணாதிக்க சமூகங்களில் அடுத்த தலைமுறையின் ஆழமனத்திலும் பெண்களுக்கு எதிரான சிந்தனைகளே மெல்ல விதைக்கப்படுகின்றன. வீட்டில் தம்பி எத்தனை சோம்பேறித்தனமாகவும் இருக்கலாம்; ஆனால், அதே வீட்டில் வாழும் தங்கையோ அக்காவோ  எல்லோருக்கும் முன் எழுந்து வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும். தவறினால் அத்தனை சாபங்களையும் பெறுவார்கள். இது குடும்ப நடைமுறை என அனைவரின் மனத்திலும் விதைக்கப்படுவதாலேயே அக்குடும்பத்தால் பயிற்சிப் பெற்று வளரும் ஓர் ஆண் தன் குடும்பத்தையும் ஆணாதிக்கம் சார்ந்து கட்டமைக்கிறான்.

அப்படிப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்து வரும் அப்பாத்தான் அமீர் கான். தன்னுடைய குத்து சண்டை இலட்சியங்களை அடைய ஓர் ஆண் வாரிசுத்தான் வேண்டும் என விடாப்பிடியாக முயல்கிறார். ஆனால், தொடர்ச்சியாக நான்கு பெண் குழந்தைகளே பிறக்கின்றன. தன்னுடைய கனவுகள் சிதைந்துவிட்டதை எண்ணி வருத்தத்துடன் குடும்பத் தலைவராக அமிழ்கிறார். சட்டென தன் பெண் குழந்தைகளுக்கு இயல்பாகவே குத்து சண்டைக்கான திறமையும் வலிமையும் இருப்பதை உணர்கிறார். அடுத்த நிமிடமே அவர்கள் இருவரையும் குத்து சண்டையையில் ஈடுப்படுத்த சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் பெண்களுக்கான விதிமுறைகளையெல்லாம் மீறுகிறார். பெண் குழந்தைகளை அடக்கியாளும் வகையிலான நம்பிக்கைகளை உடைத்தெறிகிறார். பெண்களுக்கு நீண்ட கூந்தல் வேண்டும் எனும் பாரம்பரியமான தடைகளை எல்லாம் தாண்டுகிறார். இறுதியில், பெண்களை அடக்கும் மிகவும் மோசமான ஒரு சமூக/குடும்பப் பின்னணியைக் கொண்டிருக்கும் அமீர் கான் அவற்றிலிருந்து விடுப்பட்டு இரு பெண் பிள்ளைகளையும் ஒரு தேசமே பெருமைப்படும் அளவிற்கு நிறுத்துகிறார்.

தந்தை வழி சமூகத்தின்  அடக்குமுறைகள் தொடர்பான அனைத்து  கற்பிதங்களுக்கும் எதிராக ஒரு புதிய தந்தையாக, இந்தியப் பெரும்பான்மை பொதுபுத்திகளுக்கு மாற்றான தந்தையாக உருவாகி நிற்கிறார் அமீர் கான். படத்தில் தனக்கு வேண்டிய உரிய இடங்களில் மட்டும் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி கதைக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கியிருக்கிறார். இதனைத் தமிழ் சினிமா நடிகர்கள் நிச்சயம் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு பெண் தனிமையிலும் இடர்களை வெல்ல துணிய வேண்டும்; தன்னை இழிவாக மதிப்பிடும் சமூகத்தின் முன் வெற்றி பெற்றுக் காட்ட வேண்டும். பெண்கள் சமையலறைக்குரியவர்கள் எனும் பாரம்பரியமான ஒடுக்குமுறை பார்வைகளுக்கு எதிராக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதனை முதன்மையாகப் பதிவு செய்கிறது. படம் பிரச்சாரத்தனங்களுக்கு இடம் கொடுக்காமல் யதார்த்தமாகக் கதையைச் சுமந்து வெளிப்பட்டுள்ளது என்றே சொல்லலாம். கலை எழுச்சிக்கும் சமூக அக்கறைக்கும் மத்தியில் ஒரு புனைவை அதுவும் 2012ஆம் ஆண்டில் காமன்வேல்த் போட்டியில் நடந்த உண்மை சம்பவத்தை அசலான கதையாக ஒரு கலைப் படைப்பாக முன்வைத்த இயக்குனரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

2016ஆம் ஆண்டின் சிறந்த படம் எனக் கேட்டால், ‘விசாரணை’ படத்தையும் ‘டங்கல்’ படத்தையுமே முன்வைக்க முடியும்.

-கே.பாலமுருகன்

 

 

Share Button

About The Author

Comments are closed.