• சிறுகதை: பூட்டு

  சிறியதாக இன்னும் ஒரு பூட்டு போதும் என முடிவாகிவிட்டதும் உடனே ‘ஆ மேங்’ கடைக்கு இறங்கினேன். மூன்றாவது மாடியிலிருந்து கீழே இறங்கி எதிர்ப்புறம் இருக்கும் பெரிய சாலையைக் கடந்துபோனால் இருக்கும் ஓரே ஒட்டுக் கடை அதுதான்.

  அப்பாவிற்குப் பூட்டென்றால் மிகவும் பிடிக்கும். சதா காலமும் அவருடைய மோட்டார் வண்டியிலும் சிறிய வைப்புப் பெட்டியிலும் பூட்டுகள் இருக்கும். எதையாவது பூட்டியப்படியேதான் இருப்பார். அம்மாவின் அலமாரி, அவருடைய அலமாரி, ஒரு கதவு உடைந்து பாதி சாய்ந்து கிடக்கும் தாத்தாவின் அலமாரி என ஒரு சமயத்தில் அலமாரிக்கெல்லாம் பூட்டுப் போடுவார். அவசரத்திற்கு எதையுமே அவர் அனுமதியில்லாமல் எடுக்க முடியாது. சாவி தொலைந்த சமயத்தில் அவர்தான் அதனை உடைக்கவும் செய்வார். இழுத்துக் கட்டி ஒட்ட வைத்து மீண்டும் பூட்டுவார்.

  மற்ற சில சமயங்களில் சாமி மேடையிலுள்ள இழுவையைப் பூட்டி வைப்பார். அதில் ஊதுபத்திகளும் சூடங்களும் மட்டுமே இருக்கும். கேட்டால் அவர் உழைத்து வாங்கியது எனக் கத்துவார்.

  “ஏன்பா எப்பவும் பூட்டிக்கிட்டே இருக்கீங்க?” என ஒருமுறை கேட்டேவிட்டேன்.

  அக்கேள்வியைக் கேட்டதற்கு என் வாய்க்கேற்ற ஒரு பூட்டு அவர் கற்பனையில் ஓடிக் கொண்டிருக்கும் என என்னால் அப்பொழுது யூகிக்க முடிந்தது. ஆனால், அவர் அப்படியெல்லாம் செய்யவில்லை. சிறுவயதில் சீனனின் பூட்டுக் கடையில் தான் வேலை செய்ததாகச் சொல்லி சமாளித்தார். சிலநாள் அம்மாவையும் அறைக்குள் வைத்துப் பூட்டிவிடுவார். நாங்கள் கேட்டால் அம்மா தியானத்தில் இருக்கிறார் எனச் சொல்வார். ஒருநாள் கடந்து மறுநாள் இரவுவரை அம்மா அறைக்குள்தான் இருப்பார்.

  வீட்டு வாசலுக்கு மட்டும் இரண்டு பூட்டுகள். ஆனால், வீட்டில் அப்படியொன்றும் இல்லை. ஆனாலும், அப்பா இரண்டு பூட்டுகளையும் பூட்டிவிட்டு நான்குமுறையாவது இழுத்துப் பார்ப்பார். அம்மா கேட்கும்போதெல்லாம் ‘ரெடிமெட்டாக’ ஒரு அறையும் காத்திருக்கும். சிலவேளைகளில் கீழே இறங்கி மோட்டார்வரை வந்துவிட்டு, கதவைப் பூட்டிவிட்டோமா எனப் பார்ப்பதற்காக மீண்டும் மேலே ஓடுவார். உலகிலேயே மிகப் பெரிய பூட்டொன்று அப்பொழுது மட்டும் மலேசியாவில் இருந்திருந்தால்  அப்பா அதனைக் கொண்டு ஒட்டு மொத்த வீட்டையே மொத்தமாகப் பூட்டியிருப்பார்.

  அம்மா இறந்தவுடன் அப்பா அளவுக்கதிகமாகத் தொல்லையாகியிருந்தார். வீட்டுக்கு வெளியே வந்து தேவையில்லாமல் பக்கத்து வீட்டு ஆட்களையும் எதிரில் வருபவர்களையும் பார்த்துக் கெட்ட வார்த்தையில் கத்துவார். பலமுறை யார் அடித்தது எனத் தெரியாமல் முகத்தில் காயத்துடன் வீட்டுக்கு வெளியில் உள்ள வரந்தாவில் விழுந்து கிடப்பார். வேலை முடிந்து இருண்டு கிடக்கும் வீட்டை நோக்கி வரும் எனக்கு அது அழுத்தத்தையும் வருத்தத்தையும் கலந்து கொடுத்தது.

  கடைக்குள் இருந்த ஆ மேங்கின் மகனுக்கு என்னை நன்றாகத் தெரியும். கடைக்குள் நுழைந்ததும் கொஞ்சம் தரமான பூட்டே நல்லது என மனத்தில் தோன்றியது.

  “வாவ் செக்காராங் அவாக் சுடா மூலாக்கா இனி மச்சாம்?” என அவன் வேடிக்கையாகக் கேட்டான்.

  அப்பாத்தான் ஆ மேங் காலத்திலிருந்தே பூட்டு வாடிக்கையாளர். அவர் வந்தாலே பெரும்பாலான சமயங்களில் வாங்கவில்லை என்றாலும் பூட்டுகளை வெறுமனே தடவிப் பார்த்துவிட்டுப் போவார் என அவர்களுக்குத் தெரியும்.

  தரமான கொஞ்சம் சிறியதான ஒரு பூட்டை வாங்கிக் கொண்டு வெளியேறினேன். வீட்டுக்குள் நுழைந்ததும் அப்பா அவருடைய அறையிலுள்ள கிழட்டு கட்டிலில் சுருங்கிக் கிடந்ததைப் பார்த்தேன். எப்பொழுதாவது திடீரென எதையாவது போட்டு உடைப்பார் அல்லது கத்திக் கொண்டே முன்கதவைப் பிடித்து உலுக்குவார். வயதாகிவிட்டால் அப்படித்தான் என அக்கம் பக்கத்தில் சொல்லும்போதெல்லாம் அம்மாவை நினைத்துக் கொள்வேன்.

  சில மாதங்களுக்கு முன்புவரை அறையின் மூலையில் கிடந்த தடித்த சங்கிலி இப்பொழுது அங்கே இல்லை. ஆனால், எப்பொழுது அவ்வறைக்குள் நுழைந்தாலும் அது அங்குத்தான் இருப்பதைப் போல தோன்றும். அம்மாவின் இறப்பிற்குப் பிறகு அதை அம்மாவின் அலமாரிக்குக் கீழ் ஒரு திருப்பிடித்த பழைய பூட்டுடன் சேர்த்துக் கண்டெடுத்த போது என் மனம் நடுங்கியது. உடைந்து அன்றையநாள் முழுவதும் அழுதேன்.

  ‘ஸ்ப்ரீங்’ தொங்கிப் போய் கிடந்த அக்கட்டிலில் படுத்திருந்த அப்பாவைப் பார்த்தேன். அப்பாவிற்கு அப்பொழுது அதிகமாக மூச்சிரைத்தது. வெளியே வைத்திருந்த கஞ்சி தட்டை அவரின் கட்டிலுக்கு அருகில் வைக்கும்போது தொலைப்பேசி மீண்டும் அலறியது. சிங்கப்பூர் நண்பனின் அழைப்பு. ஜொகூரில் தங்கியிருக்கிறான். இன்று முழுவதும் ஐந்துமுறை அழைத்துவிட்டான். அவருடைய இரும்புக் கட்டிலை முடிந்தவரை தள்ளி சுவரினோரம் இருத்தினேன். அப்பொழுதுதான் அது விலகாது. அவர் அறைக்குள் மட்டும் மஞ்சள் நிற சிறிய விளக்கை எரியவிட்டேன். மற்ற இடங்களில் எரிந்து கொண்டிருந்த விளக்குகளை அடைத்துவிட்டேன்.

  கடைசியாகச் சன்னலின் வழியாகக் கையைவிட்டு முன்கதவை உள்நோக்கிப் பூட்டினேன். புதியதாக வாங்கி வந்த பூட்டு சட்டென பிடித்துக் கொண்டது. நாற்றம் அடிக்கத் துவங்கும் சமயத்தில் உடைத்தால் உடனே உடைந்து கொள்ளும் அளவிற்காகவாவது அது சிறிய பூட்டாக இருக்க வேண்டும் எனக் கவனமாக இருந்தேன்.

  எனக்கு ஒன்பது வயதிருக்கும்போது நான் பார்த்திருக்கிறேன். அது அத்தனை காலங்களுக்குப் பின் ஒருநாள் சட்டென ஞாபகக் கதவைத் தட்டும் என நினைக்கவே இல்லை. அம்மாவின் அறையில் கண்டெடுத்த அந்தக் கறைப்படிந்த சங்கிலியும் திருப்பிடித்தப் பூட்டும் மனத்தில் அப்படியே கிடந்தன. தோளில் தொங்கிக் கொண்டிருந்த துணிப்பை மட்டுமே கணக்க, கீழே இறங்கிக் கொண்டிருந்தேன்.

  • கே.பாலமுருகன்
  Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *