சிறுகதை: பேபி குட்டி

கடைசியாகத்தான் பெரிய மாமா வந்தார். அதுவரை வீடு ஒரு கனத்த துயரத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்து இப்பொழுது தளரவிட்டதைப் போல உடைந்தது. அப்பா கதறி அழும்போது உடன் யாராலும் அழாமல் இருக்க முடியவில்லை. இதுவரை எதற்குமே சட்டென அழாத ஒருவர். அப்படி அழுது கதறும்போது உடல் சிறுத்துக் குழந்தையாகி எல்லோரின் மடியிலும் விழுகிறார்.

மாணிக்கம் பக்கத்து வீட்டு ஆள். அப்பாவின் நெருங்கிய உலகமே அவர்தான். அவருக்குச் சொல்லும்படியாக நண்பர்கள் இல்லை. ஒரு வீடு தள்ளிக்கூட யார் இருக்கிறார்கள் என அப்பாவிற்குத் தெரியாது. மாணிக்கம் அப்பாவைப் பிடித்து ஓர் இடத்தில் உட்கார வைக்கும்போது அவர் வேட்டி கழன்றுவதைப் போல இருந்தது.

“யப்பா…தலைய வடக்காலே வைக்கனும்…தூக்குங்க,” என நெற்றி நிறைய திருநீர் பூசி முகத்தை மறைத்திருந்தவர் கூறினார். அவர்தான் பெரியசாமி. இரண்டு வயது குழந்தையின் மரணம் யாரையும் சமாதானப்படுத்தக்கூடியதில்லை. வருவோர் போவோர் அனைவரும் புலம்பியபடியே இருந்தனர். ஆகக் கடைசி வார்த்தையாக ஒரு புலம்பலையே விட்டுப் போய்க்கொண்டிருந்தனர். வீட்டில் அவன் கடைசி பையன். பின்கட்டிலிருந்து முன்வாசலுக்கு ஓடிவரும் சிறிய இடைவெளியில் சட்டென முடிந்துவிட்ட வாழ்க்கை. இத்துனை அவரசமான முடிவு.

“டேய் சாக வேண்டிய வயசாடா இது…என்ன விட்டுவிட்டுப் போய்ட்டியேடா,” என அப்பா மீண்டும் தரையை அடித்துக் கொண்டு அழுதார்.

பேபி குட்டி தலை விரித்த கோலமாய் அப்பொழுதுதான் வெளியில் வந்தாள். பேபி குட்டிக்கு 92 வயது. அப்பாவின் அம்மா. பொக்கை வாய். கண்கள் இரண்டும் ஒடிந்து உள்ளே சொருகிக் கிடந்தன. பேசுவதைச் சட்டென புரிந்துகொள்ள முடியாது. ஒரு சொல்லை உச்சரிக்கவே நிதானமாக அடுக்குவார். அவருடன் உரையாடப் பொறுமை தேவைப்படும். ஆனால் ஓயாமல் வேலை செய்து கொண்டே இருப்பார்.

மெலிந்துபோன தோள். அதன் மேலே எப்பொழுதும் தொங்கும் ஒரு கலர் துண்டு. வெளுத்தக் கைலி. தாடைவரை நீண்டு தொங்கும் காதுகள். ஆனால் . தூரத்தில் வருபவர்களையும் பேசுபவர்களையும் அவளால் உன்னிப்பாகக் கேட்கப் பார்க்க முடியும். அவள் யாரையும் பொருட்படுத்தியதே இல்லை. சாமி அறைக்குப் பக்கத்தில்தான் படுத்திருப்பாள், ஆனால், இதுவரை சாமியை வணங்கியதே கிடையாது. திடிரென சாமிப் படங்களையே கவனித்துக் கொண்டிருப்பாள். பிறகு மீண்டும் தன் இடத்திற்கு வந்துவிடுவாள்.

“அடியே பேபி குட்டி உன் பேரன பாத்தயா?” என அவர் வயதை ஒத்த மூக்குத்தி கிழவி தூரத்திலிருந்து அரற்றிக் கொண்டே வீட்டுக்குள் வந்தாள்.

பேபி குட்டி வீட்டுக்கு வெளியில் வந்து ஓரமாய் நின்றிருந்த விளக்கமாறை எடுத்து வாசலைப் பெருக்கத் துவங்கினாள். அது அவரின் அன்றாட வேலை. எந்தச் சலனமும் இல்லாமல் ஏற்கனவே சுத்தமாக இருந்த வாசலைப் பெருக்கினாள். அவளால் அவளுடைய வேலைகளைச் செய்யாமல் இருக்க முடியாது.

“இந்தக் கெழவிக்கு எத்தன வயசாகுது…போய் சேர வேண்டியதெல்லாம் நல்ல திடக்காத்தரமா இருக்கு…கடவுளுக்கு என்ன கேடு? இந்தச் சின்ன பையனைக் கொண்டு போய்ட்டாரு,” வந்தவர்களில் யாரோ சொன்னதை எல்லோரும் கேட்டனர்.

அவர்களில் சிலர்  இப்பொழுது பேபி குட்டியை வைத்தக் கண் வாங்காமல்  கவனித்தனர். ஒரு சிறு கவனம் திரும்புதல் அது. மரணத்திலிருந்து வாழ்வுக்குத் திரும்பும் கணம். அதுவரை சோகமாக இருந்தவர்கள் அதுவரை புலம்பியவர்கள் இப்பொழுது நிமிர்ந்து உட்கார்ந்தனர். பேபி குட்டி இரு கால்களையும் அகட்டி உட்கார்ந்தவாறு தரையைப் பெருக்கினாள். அது அவளுக்கு எந்த அசௌகரிகத்தையும் கொடுக்கவில்லை.

“இந்த வயசுலையும் இதுனாலே நல்லா ஆரோக்கியமா இருக்க முடியுது?”

“ஆமாம்….92 வயசுகிட்ட”

பேபி குட்டி பெருக்குவதை நிறுத்திவிட்டு அங்கே இருந்த நாற்காலிகளை அடுக்கத் துவங்கினாள். ஒவ்வொரு நாற்காலியையும் அவளால் இயல்பாகத் தூக்கி நகர்த்த முடிந்தது. உடலில் இருந்த முதுமை செயலில் குறைவாக இருந்தது.

“ஏய்ய் பாட்டி.. அங்க போய் உக்காரு.. யேன் தேவை இல்லாத வேல செஞ்சிகிட்டு இருக்க?” பெரியசாமிக்கு உதவியாக வந்தவர் கத்தினார்.

பேபி குட்டி அதனைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. எவ்வளவு சோற்களைக் கோர்த்துத் திரட்டி பேபி குட்டி காதில் திணித்தாலும் அது அவளுடைய மண்டைக்குப் போய் சேராது. அவள் அவளது உலகத்தில் இயங்கிக் கொண்டே இருப்பாள். ஏற்கனவே அடுக்கப்பட்டிருந்த நாற்காலிகளைத் தூக்கிக் கொண்டு போய் வேறு இடத்தில் அடுக்கத் துவங்கினாள்.

பேபி குட்டியின் உண்மையான பெயர் குட்டியம்மாள். ஆனால் அப்பொழுதெல்லாம் பெண் குழந்தை பிறந்தால் பேபி என்றும் ஆண் குழந்தை பிறந்தால் போய் என்றும் அடைப்பெயரிட்டு அழைப்பார்கள். அப்படியே தொடர்ந்து அழைத்து குட்டியம்மாள் பேபி குட்டியானாள்.

சுந்தரி அத்தை வந்து சேர்ந்த பிறகு வீடு மீண்டும் அலறத் துவங்கியது. தம்பியை 2 மாதம் தூக்கி வளர்த்தவள் அவள்தான். தேம்பி தேம்பி அழுததில் சட்டென மூர்ச்சையற்று விழுந்தாள். சிறிது நேரம் எல்லோரும் பதறிப் போயினர். தண்ணீரை முகத்தில் அடித்து அவளை ஓர் ஓரமாக உட்கார வைத்தார்கள். முகம் தொங்கிப் போய்க் கிடந்தது.

“யப்பா சொந்தக்காரனுங்க எல்லாம் எண்ணை வைக்கலாம்,” எனப் பெரியசாமி சொன்னதும் படுத்திருந்த அத்தை திடீரென எழுந்து தம்பியின் பெட்டியருகே ஓடினாள்.  அவள் அப்படி ஓடும்போது ஓர் ஆணாக மாறியிருந்தாள். கால்கள் இரண்டையும் பரப்பியபடி ஓடினாள். அவள் அப்படிச் செய்பவள் அல்ல. வீட்டில் மகன்கள் இருந்தாலே சத்தமாகப் பேசவோ தனது இயல்பான பதற்றத்தையோ காட்ட விரும்பாதவள்.

“மகேனு மகேனு ஐயாவு வந்துருடா…அம்மாவெ விட்டுப் போவாதடா,” எனப் பெட்டியின் வலப்பக்கத்தில் சரிந்தாள். அதுவரை நாற்காலியை அடுக்கிக் கொண்டிருந்த பேபி குட்டிக்குச் அத்தையின் அலறல் கேட்டது. அத்தை பேபி குட்டிக்குக் கடைசி மகள். பாசமாக வளர்ந்தவள். ஆனால் ஒரு காலத்திற்குப் பிறகு பேபி குட்டியை அவள் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. ஒரு சடங்கிற்காக மட்டுமே பேபி குட்டிக்கு மாதம் கொஞ்சம் பணம் தருவாள்.

பேபி குட்டி தட்டுத் தடுமாறி அத்தையிடம் போனாள். அவள் பெட்டியைக் கூட கவனிக்கவில்லை. அவளால் அமர்ந்திருப்பவர்களையும் தரையையும் மட்டுமே அதிகப்படியாகக் கவனிக்க முடியும். கூன் வளைந்து நடப்பவளுக்கு அது மட்டுமே சாத்தியம். அத்தையின் அருகே அமர்ந்துகொண்டு அவளுடைய தலையை வருடினாள். விழியோரம் இலேசாகக் கண்ணீர் முட்டிக்கொண்டு கிடந்தது.

“சின்ன பையன்..இன்னும் உலகத்தையே பாக்காத்தவன்,” எனப் பேபி குட்டியிடமிருந்து தன்னை விடுவித்த அத்தை மீண்டும் கதறி அழுதாள். பேபி குட்டி அத்தையின் கையை விட மறுத்தாள். கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். அதில் ஒரு முரட்டுத்தனம் தெரிந்தது.

“கையெ விடு,” அழுகையினூடாக அத்தைத் திமிறி முனகினாள்.

பேபி குட்டி சுருங்கிய இரு கைகளையும் முட்டிக்களுக்கிடையே குவித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். எல்லோரும் பேபி குட்டியையும் அத்தையும் கவனித்தனர். சன்னமான புலம்பல்கள் ஓங்கி ஒலித்துப் பிறகு மீண்டும் ஓய்ந்தன.

“குமாரு கெழவியெ கூட்டிட்டுப் போ” குமார் தம்பிக்கு மூத்தவன். பேபி குட்டியைப் பிடித்து மேலே தூக்கினான். அவள் வர மறுத்தவள் போல முரடு பிடித்தாள்.

“பாட்டி ஏஞ்சி வா,” எனப் பதிலுக்கு அவனும் பலமாக இழுத்தான்.

பேபி குட்டி மெலிந்தவள். 30 கிலோ கிராம்கூட இருக்க மாட்டாள். ஏதோ முனகியவாறு அவனுடைய இழுப்புக்குப் போனாள். குழந்தைகளின் மரணம் எந்தத் தத்துவத்தாலும் நிகர் செய்ய இயலாதது. ஒரு குழந்தையின் மரணத்திற்கு முன் அனைத்து மனங்களும் குழந்தையாகிவிடுகின்றன. தம்பி இப்பொழுதுதான் பெட்டிக்குள் ஒளிந்துகொள்ள சென்றதைப் போல படுத்திருந்தான். அது விளையாட்டு. இன்னும் சிறிது நேரத்தில் அது முடிந்துவிடும் என அனைவரின் மனமும் படப்படத்துக் கொண்டிருந்தன.

“டேய் வீட்டு நிம்மதியயெ கொண்டு போய்ட்டான்டா,” மீண்டும் அத்தை புலம்பினாள். அவள் குரல் சோர்வுற்றிருந்தது. தம்பி ஒரே ஒரு சிரிப்பில் அனைத்து இறுக்கங்களையும் உடைப்பவன். நம் வேலைகளையும் விட்டுவிட்டு உடனே கவனிக்கக்கூடிய அலட்டலே இல்லாத மெல்லிய சிரிப்பு. குழி விழும் கன்னங்கள். சிறுத்த கைகள்.

பேபி குட்டிக்கும் அவனுக்கு நடக்கும் சண்டை வீட்டிலேயே பிரபலமானவை. வீடு முழுக்க அவனைத் துரத்திக் கொண்டு பேபி குட்டி ஓயாமல் ஓடுவாள். அவளிடமிருந்து ஒளிந்து கொள்வதே தம்பியின் மகத்தான விளையாட்டாக இருக்கும். பேபி குட்டி கொஞ்ச நேரம் உறங்கிவிட்டாலும் அவள் பொக்கை வாயில் எதையாவது சொருகி விடுவான். அவள் திணறிக் கொண்டு எழுந்து பார்ப்பாள்.

“நீ என்னிக்காவது என்னைக் கொன்னுருவடா,” என அதையும் முழுமையாக உச்சரிக்க முடியாமல் பேபி குட்டியின் வாய்க்குள்ளே கரைந்துவிடும்.

குமார் பேபி குட்டியை வீட்டின் ஓர் ஓரத்தில் உட்கார வைத்துவிட்டு மீண்டும் வாசலுக்கு வந்தான். பெட்டியை வாசலில் கிடத்தியிருந்தார்கள். பிண ஊர்தி வந்ததும் வீடு மீண்டும் பரப்பரபானது. அவ்வளவாகப் பழக்கமில்லாத தூரத்து நண்பர்களும் சொந்த வீட்டின் சோகத்தைப் போல உணர்ந்தனர்.

பேபி குட்டி அவ்விடத்தை விட்டு மீண்டும் வாசலுக்கு வந்தாள். ஆங்காங்கே சிதறிக் கிடந்த சப்பாத்துகளை எடுத்து அடுக்கத் துவங்கினாள். குனிந்து குனிந்து அவள் பெருக்கி சப்பாத்துகளை அடுக்குவதைச் சிலர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“அந்தக் கெழவியெ இழுத்துட்டுப் போய் கட்டி வச்சாத்தான் என்ன? சனியன் மாதிரி நடந்துக்குது,” துரை வாத்தியார் அப்படிச் சொல்வார் என யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.

துரை வாத்தியார் அப்பாவின் ஆசிரியர். இந்த வீட்டில் அதிகம் உரிமையுள்ள மனிதர். எல்லாம் விழாக்காலங்களிலும் இந்த வீட்டில்தான் இருப்பார். ஒரு முக்கியமான விருந்தாளி என்றே சொல்லலாம். ஒரு வருடத்தில் கைவிட்டு எண்ணக்கூடிய அனைத்து பண்டிகைகளின்போதும் தவறாமல் வந்து தன் உறவைப் புதுப்பித்துவிட்டுப் போய்விடுவார். அவருக்கும் 50 வயது இருக்கும். எல்லோரும் அவருக்குக் கொஞ்சம் அடங்கிப் போவர்.

“டேய் குமாரு இதை இழுத்துப் போய் வீட்டுக்குள்ள உடு.. சாக வேண்டிய வயசுலே..உசுரே வாங்குது,” என அவர் சொன்னதும் உடனே குமார் எழுந்து நின்றான். எல்லோரும் பேபி குட்டியை அசூசையாகப் பார்த்தனர். குமார் மீண்டும் பேபி குட்டியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான்.

அவளுக்கு வீட்டில் ஒரு மூலை உண்டு. சாமி அறைக்குப் பக்கத்தில் இருக்கும் சிறிய இடைவேளி. அங்குத்தான்  எல்லாம் வேலைகளும் முடிந்த பிறகு அவள் நாள் முழுக்க இருப்பாள். வெறுமனே கவனித்துக் கொண்டிருப்பாள். எதுவுமே இல்லாத ஒன்றை அவள் கவனித்துக் கொண்டே இருப்பாள். அவளால் வெகுநேரம் ஓர் இடத்தில் அமரவும் முடியாது.

“பாட்டி இங்கையே இரு.. போற வரைக்கும் வந்திடாத,”என அதட்டிவிட்டு குமார் வாசலுக்குப் போனான்.

எல்லாம் சடங்கும் முடிந்த பிறகு பெட்டியைத் தூக்கினர். கனத்த மனங்களால் அதைப் பார்க்க இயலவில்லை. எல்லோரும் வாய்விட்டு அழுதனர். அப்பா சாலையிலெயே படுத்துப் புரண்டார்.

வீட்டில் இருந்தவர்கள் எல்லோரும் வெளியில் போனதுடன் பேபி குட்டி எழுந்தாள். மெதுவாக நடந்து சென்று நாற்காலிக்குப் பின்னால் ஒளிந்தாள். பிறகு எழுந்துபோய் அறைக்கதவிற்குப் பின்னால் ஒளிந்தாள். அவள் வழக்கம்போல தம்பியைத் துரத்துவதைப் போல அவனுடைய பெயரை உச்சரித்துக் கொண்டே வீட்டுக்குள் ஓடத் துவங்கினாள்.

–    கே.பாலமுருகன், March 2014

 
சமீபத்தில் வாசித்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று இது. ஒரு குழந்தையின் மரணம். அந்த இழப்பின் பின்னணியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இன்னொரு குழந்தைமையை எவரும் கவனிப்பதேயில்லை. மேலும் முதுமை என்பது மரணத்தின் இன்னொரு வடிவம். ஆகவே அதை சபிக்கிறார்கள், பழிக்கிறார்கள். – jeyamohan
Share Button

About The Author

3 Responses so far.

  1. Chitra says:

    அருமையான கதை நகர்வு..முதுமை எல்லொரும் கடக்க வேண்டிய நிலை இருப்பினும் அதனை இளமை எத்தனைக் கேவலமாக நடத்துகிறது.
    …அறிந்தும் அறியாமல் செய்யும் உதாசீனம் நாளை சாபக்கேடாகும் என்பது மனிதர்கள் மறந்த நிலையைச் சித்தரிக்கும் கதை…நல்லதொரு சிந்தனைக்கு வித்து..

  2. Harinipriya says:

    Super

  3. Sindhu Priya says:

    Miga arumaiyanaa kathai. Sirantha karuthu velipaadu. Nandru