சிறுகதை: மஞ்சள் நிறத் தேவதையின் மரணக்குறிப்புகள்

 

download

1

சரவணன் கண்களைத் திறந்ததும் முனியாண்டியின் படுக்கைக் காலியாகியிருந்ததைப் பார்த்தான்.  நான்கு நாட்களுக்கு முந்தைய ஓர் இரவில் 9.00 மணிவரை முனியாண்டி தனது தேவதைகளுடன் இங்குதானே இருந்தார் என்ற வியப்புடன் சரவணன் சோம்பலேறிய கண்களுடன் அறையின் சின்ன இருட்டில் இலேசாகத் திறந்திருக்கும் ஜன்னல் பக்கமாகப் பார்த்தான். முனியாண்டியின் அந்த நீல நிறச் சட்டை தொங்கிக் கொண்டிருக்கும் கறுத்த ஆணி இன்னமும் காலியாகச் சுவரில் ஒட்டிக் கொண்டிருந்தது.

“அப்பா. .  காராக் ஹைவேலெ(Karak Highway) வந்துகிட்டு இருக்கும் போதுதான் அந்தப் பச்ச கலரு தேவதயெ பாத்தென்யா. .  அது கைய கூப்பிக்கிட்டுப் பாவமா நின்டுக்கிட்டு இருந்துச்சு… அதுக்குக் குடும்பமே இல்லயாம்… அனாதயாதான் வாழுதாம், அதான் இப்படி ஊர் ஊரா சுத்துதாம், நேத்து அதெ கூட்டியாந்து சிரம்பான்ல உட்டுட்டு வந்துட்டேன். .  மறுபடியும் எப்ப வேணும்னாலும் கூப்டும்யா”

சரவணம் சிறிது நேரம் அந்த ஜன்னலின் விளிம்பில் கைகளை வைத்துக் கொண்டு அப்பா அன்று சொன்னதையே மனத்தில் அசைப்போட்டவாறே வெளிமுற்றத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வீட்டைச் சுற்றிலும் பச்சை வர்ணத்தில் தேவதைகள் ஒளிந்து கொண்டு விளையாடுவது போலவே இருந்தது. எதிர்புறத்தில் நின்று கொண்டிருந்த ஒர் உயரமான செடியின் மீது  ஏறி கொண்டு “பாப்பாயே சாலமோன். .  பூங் பூங். . பீ. . பீ” என்று கத்திக் கொண்டே பச்சை தேவதையுடன் முனியாண்டி ஏதோ ஒரு தூரத்துத் தேசத்துக்குப் பறந்து போய்விட்டதாகச் சரவணன் நினைத்துக் கொண்டிருந்த கனத்தில் இயலாமைகளின் கரங்கள் அவனை இறுக்கியது.

“ஐயா. .  நாளைக்கு அப்பா ஒன்ன குருவிக் கடைக்குக் கூட்டிட்டுப் போறேன், ஒரு சிட்டுக் குருவி வாங்கிக்கலாம். அப்பறம் தேட்டருக்குப் போய் பைடர்மேன் படம் பாக்கலாம், என்னா ஓகே வா?”

அதே ஜன்னல் இலேசாகத் திறந்திருக்க, வானத்தைச் சிறிய ஓட்டையின் வழியாக இருவரும் பார்த்தப்படி படுத்திருந்தபோது முனியாண்டியால் உதிர்த்துவிடப்பட்ட வார்த்தைகள். வழக்கமான பூச்சாண்டி வார்த்தைகள். சோம்பலுடன் வெறுமனே ஜன்னல் கம்பிகளின் இடுக்குகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்தான் சரவணன். தொடர்ந்து மூன்று நாட்களின் சோம்பல் அவன் முகத்தில்.கண்களின் பார்வை மங்கிப் போயிருந்தது.

இன்று மதிய வெயில் பொழுதில்  கொஞ்சமாக வீட்டினுள் நுழையும் வெயிலுடன் தாராளமாக உறைய வேண்டும், பக்கத்து வீட்டு சீனக் கிழவனின் குருவி சத்தங்களைக் கேட்டு வெறுப்படைய வேண்டும், பிறகு ஆகக் கடைசியாக தொலைக்காட்சியில் போடும் கார்ட்டூன்களுடன் சமாதானம் தேடிக் கொள்ள வேண்டும். இவையணைத்தையும் பக்குவமடையாத சரவணன் செய்யவேண்டுமென்பதில்தான் ஆச்சர்யம்.

“டேய் சரவணா! ஏஞ்சிட்டியா? படுக்கய மடிச்சிட்டு வெளிய வா, அப்படியே போட்டுட்டு வந்துறாதெ”

சரவணன் எழுந்து திடமாக நின்று கொள்ள முயற்சி செய்தான். சோம்பலின் பிடி அவனை மேலும் தளர்த்தியது. வலது கையால் எட்டாத முதுகின் ஓர் ஓரத்தைச் சிரமப்பட்டுச் சொரிந்து கொண்டே படுக்கையிலிருந்து போர்வையை இழுத்தான். படுக்கையின் மேல் விரிப்பை ஒழுங்குப்படுத்தும் பொழுது, அறையின் வெண் கூரையைப் பார்த்துக் கொண்டான்.

“அப்பா தூங்கிக்கிட்டே இருப்பென்டா, திடிர்னு இந்த மேல இருக்கெ கூரைலாம் தொறந்துக்கும்…  வெளில இருக்கே நிலா, அதோட வெளிச்சம் அப்படியே கீழ எறங்கி வர, அதுலேந்து ஒரு வெள்ளக்கலரு தேவத வரும்யா… அதுதான் அப்பா மாரான்க்கு(Maran) ஒரு தடவ ஆள் எறக்கிட்டு வரும் போது பாத்த தேவத. அது மனுசாளுங்கள ஆபத்துல காப்பாத்துற தேவதயா… அது அப்பாகூட கூட்டாளி ஆச்சு. அதுக்கப்பறம் அது என்னய வந்து அப்பப்பெ கூட்டிட்டுப் போயிரும்யா, அத ஏத்திகிட்டு ஆளுங்கள காப்பத்த போயிருவன்யா. .  முடியாதுனு சொன்னா அவ்ளதான்”

கூரைகள் களையாமல் அப்படியேதான் இருந்தன. மறுபடியும் பார்வையைக் கீழே இறக்கிப் படுக்கையைச் சுத்தப்படுத்துவதில் தீவிரப்படுத்திக் கொண்டான். முயற்சி செய்து பார்த்தான். கண்களின் விளிம்பில் கண்ணீரின் உரசல்.

“இன்னும் என்னாடா பண்ற? ஏஞ்சிட்டியா இல்லயா? வீட்டுப் பாடலாம் இருந்தா குளிச்சிட்டு வந்து செய்யு”

அறையிலிருந்து வெளியேறி உடலில் சாத்தியிருந்த வானீர் ஒழுகிய போர்வையுடன் வரவேற்பறைக்குச் சென்று கொண்டிருந்தான். எப்பொழுதும் முனியாண்டியின் நீலக் கோடுகலுள்ள துணிப்பையுடன் ஒடுங்கி கிடக்கும் மேஜை அன்றும் காலியாக இருந்தது.  முனியாண்டி எப்பொழுதோ கழற்றிப் போட்டிருந்த வெள்ளைப் பணியன் மட்டும் நாற்காலியில் தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் சரவணனுக்குத் திடிர் அழுகை, எல்லாவற்றையும் மீறிய வெளிப்பாடு. அத்துனைக் கணமானதாக இல்லாவிட்டாலும் அந்த அழுகை அவனை உடைத்துக் கொண்டு திமிறியது.

அந்தப் பணியனையும் எடுத்துக் கொண்டு குளியறையின் நுழைவாயிலுள்ள வக்குளில் போர்வையோடு சேர்த்துப் போட்டுவிட்டு அம்மாவைப் பார்த்தான்.

“ஏன்மா அப்பா எங்கமா போனாரு? இவ்ள நாளாச்சு?”

“அன்னிக்கு விடியக் காலைலே போய்ட்டாரு. . வேலயா”

“அப்பா எந்தத் தேவத கூடமா போய்ட்டாரு? நீ பாத்தியா?”

“அட இவன் ஒருத்தன், போய் குளிடா மொத”

அம்மாவுடைய முனகல் விரிந்து ஓய்வதற்குள், சரவணன் குளியலறையின் கதவை மூடிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் வக்குளின் பக்கத்தில் அவனுடைய கலர் துண்டு வந்து விழும் சத்தம் கேட்கிறது. தொட்டியில் தண்ணீர் நிரம்பியிருந்தது. தொட்டியை எட்டிப் பார்த்தான். அவனுடைய பிம்பம், அதையும் கடந்து சிறியதாய் அல்லது ஒரு மையப் புள்ளியாய் முனியாண்டியின் தேவதைகளின் பிம்பமும் தெரிந்து கொண்டிருந்தன.

“அப்பா குளிச்சிகிட்டே இருப்பேன், திடிர்னு காணாமெ போயிருவேன்யா. .  நீ டியுசனுக்குப் போய்ட்டு வருவ, அப்பா இருக்க மாட்டேன், அது எப்படி? அதான்யா நம்ப வீட்டு பாத்ரூம்ல இருக்கெ தொட்டி? அதுலதான் அப்பா ஒரு மஞ்சக் கலரு தேவதயெ ஒளிச்சி வச்சிருக்கேன். அது ஒரு சீக்குப் பிடிச்ச தேவதயா. அப்பப்ப சீக்கு வந்துரும். அப்பறம் பயங்கரமா அழுந்துகிட்டு இருக்கும். அத நான்தான் கூட்டிக்கிட்டு கெந்திங் மலைக்குப்(Genthing Highlands) போயிட்டு வரனும். அங்கதான் அதுக்கு மருந்து இருக்குயா. அப்படியே அப்பாவெ வந்து கூட்டிட்டுப் போயிரும், ரெண்டு பேரும் இந்தத் தொட்டியில பூந்து அப்படியே போயிருவோம்”

சரவணன் மீண்டும் தொட்டியைப் பார்த்தான். அவன் மட்டும்தான் எக்கிக் கொண்டிருந்தது மிக நெருக்கத்தில் தெரிந்தது. தண்ணீரில் வீழ்ந்து கொண்டிருந்த நிழல் பிம்பம் ஒரு சிறிய இருளைப் பூசிக் கொண்டு நெளிந்து கொண்டிருந்தது.

குளித்து முடிக்கும்வரை தொட்டித் தண்ணீரில் எந்தச் சிறு சலனமும் ஏற்பட்டுவிடக் கூடாது. மறுகனமே ஒரு துள்ளலுடன் தொட்டியைப் பார்த்து ஏமாந்து போவான். மீண்டும் மீண்டும் அவன் மட்டும்தான் தொட்டித் தண்ணீரின் எதிர் பிம்பத்தில்.

“மா நான் டியுசனுக்குப் போலமா. .  அப்பா எப்பமா வருவாரு?”

“டியுசனுக்குப் போலயா? ஆமாண்டா, ஒனக்குக் காசு கட்டறது, என்னாத்துக்குத் தண்டத்துக்கா?”

“இல்லமா, அப்பா எந்தத் தேவத கூடமா போய்ட்டாரு?”

அவள் பதிலேதும் கூறாமல் சலித்துக் கொண்டே சமையலறைக்கு நகர்ந்துவிட்டாள். சரவணன் ஈர உடலுடன் அறைக்குள் நுழைந்ததும் கூரையை எட்டிப் பார்த்தான். ஜன்னல் விளிம்புகளைப் பார்த்தான். கட்டிலுக்கடியில் பார்த்தான். பிறகு 3ஆம் ஆண்டு பாடப் புத்தகங்களைத் தயார்ப்படுத்தி டியுஷன் புத்தகப் பையில் திணித்தான்.

அறையில் எந்தப் பக்கங்களிலும் சிறு சலனமாவது கேட்டு விடாதா என்ற ஏக்கம் சரவணனுக்கு மனம் முழுவதும் நிரம்பியிருந்தது. தேவதைகள் எந்த நேரத்திலும் சிறு சலனத்தையாவது உருவாக்கி விடக்கூடிய சாத்தியங்களை நம்பியிருந்தான். கதவைத் திறந்து கொண்டு சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது யாரோ தூரத்திலிருந்து அழைப்பது போலவே இருந்தது.

“ஐயா சரவணா! அப்பா தேவதைங்க கூட பறந்துகிட்டு இருக்கேன்யா, வந்துருவேன்”

 

2

இரவு மணி 8 இருக்கும். எந்தச் சலனமும் இல்லாத ஒரு சோர்வான பொழுது. முனியாண்டி உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்.

“சரவணன் தூங்கிட்டானா?”

“அவன் மொதயே தூங்கிட்டான். .  போன வியாழக்கெழமெ ஏதோ சொல்லிட்டுப் போய்ட்டிங்க போல, எங்கயோ கூட்டிட்டுப் போறேனு, ஒரே நச்சரிப்பு”

“சாப்ட்டானா?”

“சாப்ட்டான், அவன் கிட்ட கண்டதுயும் சொல்லி வைக்காதிங்க, தொல்ல தாங்கல”

நீலக் கோடுகலுள்ள துணிப்பையை எடுத்து மேஜையில் போட்டுவிட்டு, வெள்ளை பணியனைக் கழற்றி நாற்காலியில் தொங்கவிட்டார்.

“எத்தன நாள் ட்ரிப்ங்க? மாரானா?”

“இல்ல. கோலேஜ் பிள்ளிங்க, 3 நாளு யூ.கே.ஏம்ல அப்பறம் மலாக்கால ஒரு நாளு. நேத்து ராத்திரி புடுராயா போய்ட்டேன். அங்கேந்து 25 பேர ஏத்திகிட்டு சிரம்பான்ல டிரிப் அடிச்சிட்டுதான் வர்றேன். மறுபடியும் 12 மணிக்கு புடுராயா போகணும்”

“ஏங்க மறுபடியும்?”

“பஸ் பத்தலயாம். எக்ஸ்ட்ரா பஸ் தேவபடுதாம், சுங்கைப்பட்டாணிக்குத்தான்.12 மணிக்கு”

“எப்ப வருவீங்க? அப்படியே நம்ப மணிமாறன் வீட்டுக்குப் போய்ட்டு வாங்க”

“2 நாள் ஆவும் போல, அலோஸ்டாருக்குப் போயிட்டுதான் வருவேன்”

மிகவும் சாதாரணமாகப் பயணக் குறிப்புகளை வழக்கம் போல அவசரமாக ஒப்பித்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்ததும், சுவரில் ஏதோ கிறுக்கியிருந்ததைப் பார்த்தார். எழுத்துக் கூட்டித்தான் படித்தார்.

“அப்பாவோட சீக்கு தேவத” என்று பெரியதும் சிறியதுமான எழுத்தில் வர்ணப் பென்சிலில் எழுதியிருந்தது. இலேசான புன்முறுவலுடன் தொட்டித் தண்ணிரை சின்ன வாளியில் சேகரித்து உடலை நனைக்கும் போது, உடலின் பின்புறப் பாகத்தில் அனைத்திலும் பயங்கரமான எரிச்சல். பழகிப் போன அதே எரிச்சல்தான். சமாளித்துக் கொண்டு குளித்து முடித்ததும், அரை தூக்கத்தில் கவிதா மேஜையில் உணவைத் தயார்ப்படுத்திவிட்டு நாற்காலியில் சாய்ந்திருந்தது தெரிந்தது.

அறைக்குள் நுழைவதற்குக் கொஞ்சம் தயங்கினார் முனியாண்டி. சரவணன் நல்ல உறக்கத்தில் இருப்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே கால்களின் நகர்வை மெதுவாக்கிக் கொண்டே உள்ளே நுழைந்தார். அந்த ஜன்னல் கம்பிகளின் விளிம்புகளிலும் ஏதோ கிறுக்கியிருந்தது. சரியாகக் கவனிக்கவில்லை. உடைகளை எடுப்பதற்கு அலமாரியைத் திறந்தார். அலமாரியின் மறுமுனையில் இருந்த கண்ணாடியில் உடலைப் பார்த்துக் கொண்டார். அரை நிர்வானமாக, சோர்ந்து போயிருந்த தேகம். முதுகில் யாரோ ஏறி அமர்ந்து கொண்டிருப்பது போலவே இருந்தது. எவ்வளவு முயன்றும் உதற முடியாத ஒரு கணமான உணர்வு.

“அம்மா. .  ஆஆஆ” கால்களை நன்றாக உதறிக் கொண்டு நிமிர்ந்தார். இடுப்பை வளைத்து உடலைப் பலமாக நெளித்துக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தார். கவிதா இன்னமும் அரை தூக்கத்தில்தான் கிடந்தாள்.

“கவிதா! கவிதா! பார்லி தண்ணி இருக்கா?”

“இருக்குங்க. யேன் ஒடம்பு சூடா?”

“எரிச்சல் தாங்கல போ. 7-8 மணி நேரம் ஏக்கோன்லே போனா, அதான். சுங்கை பீசி ஹைவேலெ எறங்கி, மூத்திரம் பேஞ்சப்ப, மஞ்சள் மஞ்சள்னு போது. எரிச்சலு தாங்கல போ”

பார்லி தண்ணீரைக் குடித்துவிட்டு, அவசரமாகவே சாப்பிட்டார். நீலக் கோடுகலுள்ள துணிப்பையில் புதிய மாற்று உடைகளை எடுத்துத் திணித்துக் கொண்டிருந்தாள் கவிதா. பிறகு முனியாண்டி உடலை நாற்காலியில் சிறிது நேரம் அமர்த்தி தூக்கத்தில் தொலைந்து போக தயார்ப்படுத்திக் கொண்டார். காற்றாடி அந்தரத்தில் சுழன்று கொண்டிருப்பது போல ஒரு பிரமையில் அமிழ்ந்து கொண்டிருந்தார். கால்களில் கருநாகங்கள் வீழ்ந்து ஊர்ந்து செல்வது போலவே இருந்தது.

வெகு சமீபத்தில் தெரு விளக்குகளும் காடுகளும் இருளும் அதையும் கடந்து யாரோ சிலர்

(45 பேருக்கு மேல்) முதுகில் அமர்ந்திருப்பது போலவே பிரக்ஞை. ஏதோ ஒரு பயங்கர மிருகம் ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் தலைகள் முனியாண்டியை உரசுகிறது. உடல் இரு பக்கங்களிலும் இடைவிடாது அசைந்து கொள்வதை விரும்புகிறது. கால்களை உதறிக் கொண்டே ஒரு திடிர் விழிப்பு.

“யேங்க என்னாச்சு?”

“ச்சே. .  ஏதோ கனவு போல”

மீண்டும் உறக்கம். கவிதா துணிப்பையைத் தயார்ப்படுத்திவிட்டு முனியாண்டியின் எதிரில் வந்து அமர்ந்தாள். உறக்கத்தில் ஆழ்ந்து போய் கிடந்த முனியாண்டியைப் பார்த்தாள். அவருடைய கைகள் மெல்லிய அதிர்ச்சியை எப்பொழுதும் சுமந்திருந்தன. சிறு அசைவுகள். உதறிக் கொள்கிறது. கால்கள் எதையோ மிதிக்கும் பாவனையில் மேலேயும் கீழேயும் தொடர்ந்து அசைந்து கொண்டிருக்கின்றன.

மறுபடியும் அவர் விழித்துக் கொண்ட போது, மணி 11 ஆகியிருந்தது. எழுந்து முகத்தைக் கழுவிக் கொண்ட பின் அறைக்குள் நுழைந்தார். சரவணன் உறங்கிக் கொண்டுதான் இருந்தான். ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த “பஸ் எக்ஸ்பிரேஸ் சேர்வீஸ்” என்ற எழுத்துகளைப் பதித்திருந்த நீல நிறச் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டார்.

வேளியேறுவதற்கு முன், சரவணனை எட்டிப் பார்த்தார். ஆழ்ந்த உறக்கத்தில் தொலைந்து போயிருந்தான் சரவணன். முகத்திற்கு அருகில் போய் அவனுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, தலையைக் கோதிவிட்டார். சரவணனின் முகம் சோம்பலில் சுருங்கிப் போயிருந்தது. எழுந்து நிமிரும் போது முதுகில் அந்தக் கணமான உணர்வு. இன்னமும் விட்டு விலகாமல் கணத்துக் கொண்டிருந்தது.

“சரி கவிதா, போய்ட்டு வரேன். போனோனெ போன் போடறேன். கதவ சாத்திக்க. அப்பா வருவாரா?”

“நாளைக்கு வரேனு சொன்னாருங்க”

“ஒகே. அப்பனா பாத்துக்க. சரி…”

கதவை அடைத்துவிட்டு கவிதா உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள். இருளடைத்துக் கொண்டிருந்த வெளி. நீண்ட மௌனம் முனியாண்டி காணாமல் போய் கொண்டிருந்தார்.

 

3

சரவணன் மீண்டும் காலையில் எழுந்ததும், முனியாண்டியின் நீல நிறச் சட்டை தொங்கிக் கிடக்கும் ஆணி காலியாக இருந்ததைப் பார்த்தான். எழுந்து திடமாக நின்று கொள்ள முயற்சி செய்தான். ஜன்னலின் விளிம்பில் கைகளை வைத்துக் கொண்டே அகலத் திறந்து விரிந்து கிடக்கும் பச்சை வெளியைப் பார்த்தான்.

கவிதாவின் வழக்கமான அழைப்புகள் நிகழாதவரையில் சிறிது நேரம் சோம்பலின் பிடியில் தாராளமாகக் கிடக்கலாம் என்று விரும்பியிருந்தான்.

“டேய் ஏஞ்சிட்டியா? போர்வையெ மடிச்சி வச்சிட்டு வெளிய வா…இன்னிக்கும் அப்பா வந்துருவாறா வந்துருவாறானு கேட்டுத் தொல்ல பண்ணாதெ… தாத்தா கூட கடைக்குப் போயிட்டு வரலாம்”

சரவணனுக்குக் கோபம் பீறிட்டுக் கொண்டு வந்தது. அறையிலிருந்து வெளியேறி அவசரமாகக் குளியலறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக் கொண்டான். தண்ணீர் தொட்டியில் தலையை நுழைத்து வேகமாக கத்தினான்.

“ஏய் மஞ்சக் கலரு தேவத, அப்பாவெ இன்னிக்கு ஒழுங்கா அனுப்பி விட்டுடு….எங்க அப்பா வேணும்…விளங்குதா உனக்கு?”

இறுகி தளர்ந்து மேலெழும்பி தேவைதைகளாக மனிதனாக மனிதப் பிண்டமாக உருமாறி உருகுலைந்த சரவணன் அந்தத் தண்ணீர் தொட்டிக்குள் ஆத்திரத்துடன் குதித்தான்.

முடிவு

ஆக்கம்: கே. பாலமுருகன்

Share Button

About The Author

Comments are closed.