கைவிடப்பட்ட ஒரு பேனாவின் கதை

art-ink-pen-23590017

அரைமயக்கத்தில் இருக்கும் சிறு பட்டணத்தில் கைவிடப்பட்ட ஒரு பேனாவின் கதை இது. சரியாக மாலை 4.00 மணியைப் போல ஒரு சீன சாப்பாட்டுக் கடையில் அப்பேனா கைவிடப்பட்டது. ‘பார்க்கர்’ பேனா. மூடியில் ஒரு சிறிய கோடு. உடலில் பாதி மை மிச்சமாக இருந்திருக்கக்கூடும். யார் அதனுடைய முதலாளி என்றெல்லாம் தெரியவில்லை.

சப்பாட்டுக் கடையின் மிச்ச உணவை எடுக்க வரும் ஒரு கிழவர் அங்கே வந்தார். வெகுநேரம் அந்தப் பேனா இருந்த மேசையையே கவனித்துக் கொண்டிருந்தார். அவர் அப்படியொரு விலையுயர்ந்த பேனாவைத் தொட்டுப் பார்த்ததே இல்லை. அக்கடையில் அவருக்கு எடுக்க அனுமதிக்கப்பட்டது மிச்ச மீதிகள் மட்டுமே. சாப்பாட்டு தட்டின் அருகே இருந்த அந்தப் பேனாவின் மீதான கவனம் கிழவருக்குக் குறையவே இல்லை.

எப்படியும் எடுத்து விடலாம் என்று நினைத்து சரியாக மாலை 5.30க்கு அப்பேனாவின் மீது கிழவர் கையை வைத்தார். அவர் பின்னந்தலையில் ஒரு தடிப்பான கை விழுந்தது. அடுத்த கணம் அந்தக் கிழவர் நாற்காலியில் மோதி கீழே விழுந்தார். கடை முதலாளி கத்தினான். ஆள் இருந்ததால் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு உள்ளே போய்விட்டான். அந்தப் பேனா அங்கேத்தான் இருந்தது. தன் தோளில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு நெகிழிப் பையில் மிச்சமாகக் கிடைத்த நாசி ஆயாம் சோற்றை உள்ளே கொட்டிவிட்டு ஒருமுறை அப்பேனாவை ஏக்கத்துடன் பார்த்தார் கிழவர்.

இரவு மணி 8.00 வரை அப்பேனா மேசையிலேயேதான் இருந்தது. அதன் பிறகு அம்மேசைக்கு யாரும் வந்ததாகவும் தெரியவில்லை. சீனன் கடையை 10.00 மணிக்கு அடைத்துவிடுவான். அதுவரை அமைதியாக இருந்த கடை சட்டென இரவு வேலை முடிந்து வந்தவர்களால் பரப்பரப்பானது. அந்தப் பேனா இருந்த மேசையில் இரண்டு வெவ்வேறு தம்பதிகள் வந்து அமர்ந்தனர்.

ஆளுக்கொரு ‘சூப்’, கோழிப் பிரட்டல் எனத் தொடர்ந்து உணவுகள் வந்து கொண்டே இருந்தன. வலது பக்கத்தில் இருந்த சீனத்திக்கு அப்பேனா பிடித்திருந்தது. அதன் உடல், கருப்பு நிறம், மஞ்சள் பல்ப் ஒளி பட்டு அது உடலில் ஏற்படும் பளப்பளப்பு என அப்பேனாவைத் திருட்டுத்தனமாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். அது அங்கிருக்கும் இன்னொரு தம்பதியினரின் பேனா என அவள் நம்பினாள். வெறுமனே பார்த்திருந்துவிட்டு அவர்களும் எழுந்து போய்விட்டார்கள்.

கடையை அடைக்கும் நேரம் நெருங்கியது. கடையில் வேலை செய்யும் இந்தோனேசியா பெண் மேசைகளைத் துடைக்கத் துவங்கினாள். ஆகக் கடைசியாக அப்பேனாவின் மீது உட்கார வந்த ஈயைத் தான் வைத்திருந்த மேசை துணியாள் சட்டென கோபம் பொங்கியவளாக அடித்து விரட்டிவிட்டு மீதம் இருந்த மேசையை மௌனமாகத் துடைக்கத் துவங்கினாள். கைவிடப்பட்ட அப்பேனா அப்படியே இருந்தது.

– கே.பாலமுருகன்

Share Button

About The Author

Comments are closed.