சிறுகதை: Torch Light – டார்ச் லைட்

Document-page-001 (3)

“சார் கரண்டு இல்ல சார்… இந்த நேரத்துல வந்துருக்கீங்க? என்ன ஆச்சி?”

முனியாண்டி அண்ணன் கையில் வைத்திருந்த டார்ச் லைட்டை என் கண்களுக்கு நேராகக் காட்டினார். கண்கள் கூசியதில் தலையை வேறு திசையில் திருப்பியவாறு பதிலளித்தேன்.

“முக்கியமான பைலு விட்டுட்டேன். நாளைக்கு மீட்டிங்க்கு அது இல்லாமல் போனனா அப்புறம் தலைமை ஆசிரியர் ஏசுவாரு…அதான் எடுத்துப் போலாம்னு வந்தென்”

என் பதிலை அவர் கேட்டாரா எனக்கூட தெரியவில்லை. வெளிச்சத்தைக் கக்கத் தடுமாறிய டார்ச் லைட்டை உள்ளங்கையில் வைத்துத் தட்டிக் கொண்டிருந்தார்.

“சரிங்க சார்… இருங்க”

பள்ளியின் தகறக் கதவை அவர் இழுக்க அந்தக் கும்மிருட்டில் அக்கதவு தறதறவென கதறியது. முனியாண்டி அண்ணன் அப்பள்ளியின் பாதுகாவலராக 10 வருடங்களாக வேலை செய்து வருகிறார். கதவைத் திறக்கும்போதும் பள்ளியைச் சுற்றி வலம் வரும்போதும் எப்பொழுதுமே உடனே காட்டுவதற்காக உதட்டிலேயே புன்னகையைக் குவித்து வைத்திருப்பார். யாரைப் பார்த்தாலும் உடனே ஒரு சிரிப்பு. அன்றாடம் எதிர்க்கொள்ளும் போதெல்லாம் பார்த்து பார்த்து சலித்த சிரிப்பு சில சமயங்களில் வெறுப்பை உருவாக்கியதுண்டு.

“கரண்டு இல்ல சார்… எப்படித் தேடுவீங்க?”

சொன்னதையே மீண்டும் சொல்லிவிட்டு கையிலிருந்த டார்ச் லைட்டை எடுத்து என்னிடம் நீட்டினார். கைப்பிடிக்கு வசதியான டார்ச் லைட். இதற்கு முன் டார்ச் லைட்டை எப்பொழுது கடைசியாகப் பயன்படுத்தினேன் எனக் கூட ஞாபகமில்லாத அளவிற்கு அதற்கும் எனக்கும் தூரமாகியிருப்பதை உணர முடிந்தது. டார்ச் லைட்டின் தலை கொஞ்சம் தளர்ந்திருந்தது. வெளிச்சமும் மங்கியிருந்தது.

“அதைக் கொஞ்சம் கைல வச்சி தட்டுனா சரியா வரும் சார்”

“சரிங்கண்ணெ. நான் தேடிட்டுப் போறேன்”

“நான் ஏதும் கூட வரட்டா சார்?”

“இல்லணெ…பரவால. அது எங்க வச்சன்னே தெரியல… தேடணும்”

முதல் கட்டிடத்திற்குச் செல்லும் படிக்கு முன் வந்து நிற்கும்போது பள்ளிக்கூடமே இருண்டிருந்தது. அதற்குமுன் பள்ளிக்கூடத்தை இருட்டில் பார்த்ததில்லை. எப்பொழுதும் மாணவர்களின் கூச்சலும் ஆர்பாட்டமும் ஆசிரியர்களின் தனித்த குரல்களும் நடமாட்டங்களும் நிறைந்த ஒரு பள்ளியின் வெளிக்குள் யாருமற்ற ஒரு சூழலில் நுழைகிறேன். காட்டுப்பூச்சிகளின் விடாமல் ஒலிக்கும் ரிங்காரம் மட்டும் அந்த இருளை அடர்த்தியாக்கிக் கொண்டேயிருந்தது.

அந்தக் கோப்பை உடனே தேடியாக வேண்டும். மணி 10.00ஐத் தாண்டி வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. இவ்வேளையில் நான் இங்கு வந்தது பாதுகாவலர் முனியாண்டிக்கு அசூசையாக இருந்திருக்கலாம். நான் போகும்வரை அவர் அவருக்கே உரிய நாற்காலியில் ஆயாசமாகச் சாய முடியாது; வாங்கி வைத்திருக்கும் நாசி லெமாக்வைச் சுவைக்க முடியாது; தன் அறைக்குள் பதுக்கி வைத்திருக்கும் வானொலியைச் சத்தமாகத் திறந்துவிட முடியாது; கம்போங்கில் இருக்கும் மற்ற சக நண்பர்களை வரவழைத்து கதைகள் பேச முடியாது. இவை அனைத்தையும் அவர் விருப்பப்படி செய்ய நான் இங்கிருந்து போயாக வேண்டும்.

உடனே படியேறி மேல் மாடிக்குச் சென்றேன். தூரத்தில் கம்பத்தில் யாரோ சிலரின் வீட்டில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்திகள் அவ்வீட்டின் உருவங்களின் அசைவுகளைச் சிறியதும் பெரியதுமாகக் காட்டி மிரட்டிக் கொண்டிருந்தன. அதுவொரு இருண்ட கம்பம். பெரும்பாலானோர் இங்கிருந்து மாறி போய்விட்டார்கள். காட்டுப்பகுதி என்பதால் நாளாக நாளாக ஆட்கள் குறைந்து கொண்டிருந்தனர். இருப்பினும் அன்று ஏனோ ஆட்கள் இருக்கிறார்கள் என்பது மனத்திற்கு சௌகரிகமாக இருந்தது.

முதலில் அலுவலகத்தின் கதவைத் திறக்க நினைத்தேன். டார்ச் லைட்டைப் பூட்டின் மீது பாய்ச்சினேன். சாவியைப் பிடிக்கத் தடுமாறியதால் முதலில் பூட்டைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சாவித் துவாரத்தை உற்று நோக்கினேன். ஒரு கையாலே பூட்டைத் திறந்து கதவை உள்ளே தள்ளினேன். ‘கிரேங்ங்ங்’ என ஒரு குழந்தையைப் போன்று முனகி வழிவிட்டது. நான் தேடி வந்த கோப்பைத் தலைமை ஆசிரியரின் கதவுக்கு அருகே இருக்கும் பெட்டியில் வைத்திருக்கக்கூடும். டார்ச் லைட்டின் விளக்குப் போக போக மங்கிக் கொண்டே வந்தது.

“இந்தச் சனியன் வேற…ஒழுங்கா வேலை செய்ய மாட்டுது”

இம்முறை ஓங்கி கைவிளக்கை உள்ளங்கையில் அடித்தேன். அடித்த வேகத்தில் அதன் தலை கழன்று எங்கோ உருண்டோடியது. வெளிச்சம் சிதறி கரைந்தது. கொஞ்ச நேரத்தில் இருள் சூழ்ந்து கொண்டது. பாக்கெட்டில் இருந்த கைப்பேசியை எடுத்து அதன் வெளிச்சத்தைக் கொண்டு நான் இருக்கும் இடத்தைச் சுதாரிப்பதற்குள் எங்கோ ஒரு குரல் கேட்டது. அக்குரல் பின்னர் பலரின் குரலாக மாறியது. கைப்பேசியின் கம்மியான வெளிச்சத்தைக் கொண்டு சுற்றிலும் தேடினேன். யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. ஆனால், எங்கோ சன்னமாகக் குரல்கள் மட்டும் கேட்டன. யாருமற்ற சூழல் என்பதாகத்தான் நம்பியிருந்தேன். மனம் கணத்து ஒரு ஜடப்பொருளாகி உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருந்தது. சுவரில் காது வைத்தால் ஒருவேளை அச்சத்தத்தின் ஆதாரத்தைக் கண்டுபிடிக்க முடியும் எனத் தோன்றியது. மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு சுவரில் வலது காதை வைத்தேன். பக்கத்தில் இருக்கும் முதலாம் ஆண்டு வகுப்பறையிலிருந்துதான் அச்சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

மெதுவாக அலுவலகத்தை விட்டு வெளியில் வந்தேன். முதலாம் ஆண்டு வகுப்பறை மற்றதைக் காட்டிலும் கொஞ்சம் சிறியது. மொத்தம் 15க்கும் குறைவான மாணவர்களே கடந்த 6 வருடங்களாகப் பதியப்பட்டு வருவதால் ஏற்கனவே வைப்பறையாக இருந்த இவ்வறையை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கானதாக மாற்றிவிட்டோம். 3 மேசைகள் தாராளமாக ஒரு வரிசையில் போட முடிந்த பரப்பளவு. கரும்பலகையில் மட்டும் வானத்தின் வெளிச்சம் குறைவில்லாமல் படர்ந்திருந்தது. சத்தம் அங்கிருந்து வருவதை நன்றாகக் கேட்க முடிந்தது.

பதற்றமாக இருந்தாலும் வகுப்பறைக்குள் நுழைந்தேன். கொஞ்ச நேரத்திலேயே அது மாணவர்களின் குரல்கள் என அறிய முடிந்தது. நடுக்கம் மனத்தின் மொத்த பரப்பையும் அதிரச் செய்தது. இருள் அறை முழுவதும் பரவி நின்றது. வெளியில் இருக்கும் யாவற்றையும் பார்க்க முடியவில்லை. வெளியே இல்லாமல் ஓர் ஒற்றை அறையாக மட்டுமே அது மாறிக் கொண்டிருந்தது. வெட்டவெளிக்கு நடுவே ஒரே ஒரு அறை. எதையும் அழுத்தமாகச் சுதாரிக்க இயலவில்லை. கம்பம் இல்லை. மெழுகுவர்த்திகளும் இல்லை. வெளியில் இருக்கும் முனியாண்டி அண்ணனை அழைக்க முயன்றேன். சத்தம் எழவில்லை. இருள் என்னைச் சுற்றி பெரும் சுவராக எழுந்து கொண்டிருந்தது. சுற்றிலும் எதையும் கவனிக்கவும் முடியவில்லை.

காற்றை அலசினேன். எதாவது தட்டுப்பட்டால் அதன் வழி வெளியே ஓடிவிட எத்தனித்தேன். கைகள் காற்றில் உலாவி ஓய்ந்தன. உடல் கனமாகிக் கொண்டே இருந்தது. தூரத்தில் சட்டென கரும்பலகை மீண்டும் பார்வையில் பட்டது. அதன் ஓரத்தில் டார்ச் லைட் விட்டு விட்டு எரிந்து கொண்டிருந்தது. யாரோ இப்பொழுதுதான் அங்கு அதைத் தூக்கி வீசியதைப் போல உருண்டு சமநிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. உடலை நிதானப்படுத்திக் கொண்டு டார்ச் லைட்டைக் கையிலெடுத்து அறையெங்கும் காட்டினேன். சுவர்களில் பெயர்கள் மட்டுமே பொறிக்கப்பட்டிருந்தன. ஏதேதோ பெயர்கள். ஒரு சிலவற்றை ஞாபகப்படுத்த முடிந்தது. அவை என் மாணவர்களின் பெயர்கள்.

ஒவ்வொரு பெயர்களுக்கும் பின் ஏதோ ஒரு நினைவு மனத்தை அழுத்தியது. பின்னே நகர்ந்தபோது ஒரு மேசை தடுக்கிக் கீழே விழுந்தேன். உருவத்தில் சிறுத்த ஒரு பையன் கீழே முட்டி காலிட்டு அழுதபடி என்னைக் கவனித்துக் கொண்டிருந்தான். அவன் கையெல்லாம் வீங்கீயிருந்தன.

“என்னடா ஆச்சு? ஏன் இங்க இருக்க?”

“சார்…மூனு வருசத்துக்கு முன்ன இதே இடம்…ஞாபகம் இருக்கா சார்? என்னை முட்டிப் போட வச்சு கையிலெ அடிச்சிங்களே? பாடம் செய்யலைனு. ஞாபகம் இருக்கா சார்?”

“டேய் டேய்..வேணும்னே அடிக்கலடா. உன் நல்லதுக்குத்தானே அடிச்சென்…”

“சார்! நீங்க அடிச்சது தப்பு இல்ல. அன்னிக்கு என்ன நீங்க பேசவிட்டிருக்கலாம். நான் வேணும்னே பாடம் செய்யாமல் வரல சார். வீட்டுல அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டெ. முடில சார். அப்பா வீட்டை விட்டு அடிச்சி விரட்டிட்டாரு. எங்க சார் போவோம்? ரோட்டுலெ படுத்துக் கெடந்துட்டு மறுநாள் ஸ்கூலுக்கு வந்தெ என்ன நீங்க அப்படி அடிச்சிருக்கலாமா சார்?”

ஓங்கி மனத்தை யாரோ மிதிக்கும் கணம் உள்ளுக்குள் இறங்கியது. மனம் எழ முடியாமல் தடுமாறி மேலும் ஏதோ ஓர் ஆழத்தில் சரிந்தது. டார்ச் லைட்டை மேசைக்கு வலது புறம் கேட்ட சத்தத்தை நோக்கிக் காட்டினேன். சட்டை வெளியே எடுத்துவிடப்பட்ட நிலையில் புத்தகப்பையை மாட்டிக் கொண்டு ஒரு பையன் சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான். அவன் கண்களில் பயம் மட்டுமே மீந்திருந்தது. அப்பயத்தைக் கண்டு எனக்கும் பீதி உண்டானது. உயிரை நுனிவரை பிடித்து நிற்கும் பயம். அவன் உடலில் உள்ள மொத்த பலத்தையும் சேர்த்து ஓர் ஒற்றை பயத்தைக் கண்களில் தாங்கி நின்றிருந்தான். ஒரு விரலால் தொட்டாலே உடைந்து வீழ்ந்துவிடும் அளவுக்கு உறைந்திருந்தான்.

“டேய்! நீ வினோத் தானே? என்னடா ஆச்சு? ஏண்டா இப்படி இருக்கெ?”

“சார்…என் கண்ணெ பாருங்க. பயம் சார். பயம் ஒரு பேய் மாதிரி என்னெ தின்னுது. தினம் தினம் நடுங்கி பார்த்திருக்கீங்களா? என் கண்ணெ பாருங்க சார்”

“ஏண்டா பயப்படுறெ?”

“சார் இந்தப் பயம்…உங்கனாலெத்தான் சார். உங்கள பாத்தாலெ நடுங்குது. நீங்க வந்துட்டுப் போற வரைக்கும் உயிரெ கழுட்டிக் கையுல வச்சிருப்பன் சார்… உங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் சார். எத்தனையோ நாள் பேச நெனைச்சு வருவேன் சார்… ஆனா நீங்க… முடியல சார்”

சட்டென அவனும் காணாமல் போனான். ஒன்றும் புரியாமல் கையில் வைத்திருந்த டார்ச் லைட்டைச் சுவரில் காட்டினேன். என் எதிரே ஒரு பழைய கண்ணாடி தொங்கிக் கொண்டிருந்தது. யாரும் பயன்படுத்தாமல் பலநாள் விடப்பட்ட கண்ணாடி. அருகே சென்று என் உருவத்தைப் பார்த்தேன். பேயொன்று நின்று கொண்டிருப்பதைப் போல தென்பட்டது. பேய், இருட்டுப் பேய். இருளை விழுங்கி நிற்கும் பேய். இருளாகி நிற்கும் பேய். எனக்கு என்னைப் பார்க்க முதன் முதலாய் ஆச்சர்யமாக இருந்தது. தலையே சுற்றிக் கொண்டு வந்தது.

சட்டென சுவர் இரண்டாகப் பிளந்து ஒரு பெரும் இருளை நோக்கி சென்று கொண்டிருந்தது. என்னையறிமால் கால்கள் நடக்கத் துவங்கின. உடல் என் ஆணைக்காகக் காத்திருக்கவில்லை. யாரோ இயக்கிக் கொண்டிருந்தார்கள். வெறும் குரல்கள். என்னை இழுத்துச் சென்று கொண்டிருந்தன. சற்று முன்பிருந்த பள்ளிக்கூடத்தின் எந்த அடையாளமும் அங்கு இல்லை. முனியாண்டி அண்ணன், சுற்று வட்டார மக்களின் வீடுகள் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. ஓர் இருண்ட பாதை. தூரத்தில் ஒரு வெளிச்சம். என் கையிலிருந்த டார்ச் லைட் மட்டும் பிரகாசமாக அவ்விருளை உடைத்து உள்நோக்கிப் படர்ந்து கொண்டிருந்தது. இருள் எப்பொழுதுமான நிஜம் என மனம் சொல்லிக் கொண்டே இருந்தது.

இருண்ட பாதை எங்கோ நடந்து கொண்டிருந்தேன். வழிநெடுகிலும் அறையும் சத்தமும் படீர் படீர் என அடிக்கும் ஒலியும் அழும் குரல்களும் கேட்டுக் கொண்டே இருந்தன. அழும் குரல்களில் கெஞ்சல்களும் மன்னிப்பும் மாறி மாறி தத்தளித்துக் கொண்டிருந்தன.

சட்டென ஒரு மேசைக்கு முன் அமர்ந்திருந்தேன். முனகிக் கொண்டிருந்த நாற்காலி. கையில் டார்ச் லைட்.

“நல்லா பிடிங்க சார். சார்!!! கையில தட்டுங்க லைட்டு வரும். சார்! கேக்குதா?”

குரல் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. எனக்கு முன்னே இருந்த கரும்பலகை மெல்ல மறைந்து வானம் தெரிந்தது. மேசை நாற்காலி மறைந்து படிக்கட்டு மட்டும் தெரிந்தது. யாரோ முதுகில் கையை வைத்தது நினைவுக்கு எட்டியது.

“சார்! என்ன சார்? ஏன் இங்க உக்காந்துட்டீங்க? லைட்டு பெரச்சன பண்ணுதா?”

முனியாண்டி அண்ணன் நின்றிருந்தார். படிக்கட்டில் எப்பொழுது அமர்ந்தேன் என ஞாபகம் இல்லை. என்ன நடந்தது என்பதும் குழப்பமாக இருந்தது. பள்ளிக்கூடம் இருட்டில் மூழ்கியிருந்தது. எழுந்து நின்றேன். கையிலிருந்த டார்ச் லைட்டை எடுத்துத் தட்டினேன். அதிலிருந்த பாய்ந்த வெளிச்சம் மனம் முழுவதும் பிரகாசத்துடன் பரவியது.

  • ஆக்கம்: கே.பாலமுருகன்
Share Button

About The Author

One Response so far.

  1. காந்தி முருகன் says:

    பேய்மை வகை கதைப்போல் அமைந்தாலும் உண்மையின் உருவகத்தைப் புனைவுகளாக வடிவமைத்திருக்கிறார் எழுத்தாளர்.மாணவர்கள் உளவியலை உணர்ந்து செயல்படும் சூழல்களில் பள்ளிக்கூடம் பரந்த விரிப்பில் கட்டற்ற வானத்தை விரித்தும் செல்கிறது.மாணவர்களை தோழமைகளாக்கி அன்பிலும் அரவணைப்பிலும் கண்டித்து அவர்களது வாழ்க்கை சிறந்திடல் வேண்டும்.புரிதல்கள் நிகழும் இடத்தில் எண்ணங்கள்,முயற்சிகள் யாவும் வெற்றியை அளித்திடும்.