• சிறுகதை: விசாரிப்பு

  heart-1920x1080

  அன்று பெரியசாமி தாத்தாவைப் பார்க்க முடியவில்லை. காலையில் தன் கேள்விகளுடன் தயார்நிலையில் இருக்கும் அடுத்த வீட்டுத் தாத்தாவின் நாற்காலி காலியாக இருந்தது. ஆச்சர்யமாகவும் நிரம்ப மகிழ்ச்சியாகவும் இருந்தது. அமைதியான ஒரு காலையை அன்று தரிசிக்கிறேன். குறிப்பாக விசாரிப்புகள் இல்லாத காலை.

  எங்கள் வீட்டு மரத்திலிருந்து ஓர் இலை விழுந்தாலும் பெரியசாமி தாத்தாவிடம் சொல்லியாக வேண்டும். அதற்கும் ஒரு நான்கு கேள்விகள் வைத்திருப்பார். அவருடைய வீட்டுக்கு வெளியே மரத்தால் ஆன பெரிய நாற்காலியும் ஒரு மேசையும் போடப்பட்டிருக்கும். இரண்டு வீட்டுக்கும் ஒரு பொத்தல் கம்பி வேலி மட்டுமே. நாற்காலியை வேலிக்கு அருகாமையில் போட்டுக் கொண்டு நாள்தோறும் எங்கள் வீட்டையே பார்த்துக் கொண்டிருப்பார்.

  வீட்டிலிருந்து வெளியேறும் எல்லாரிடமும் எதையாவது விசாரிப்பார். அவருக்குத் தெரியாமல் எங்கள் வீட்டில் ஓர் அணுவும் அசையக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். அதில் அப்பாத்தான் பாவம். அவரிடம் சிக்கி சிதறிவிடுவார். வேலைக்குத் தாமதமாகிவிடும் என்கிற பதற்றமும் பதில் சொல்ல முடியாமல் நகர முடியாத சங்கடமும் சேர்த்து அவரை அழுத்தும். அதை அப்படியே முகத்தில் காட்டிக் கொண்டு நிற்பார்.

  “முனுசாமி! நேத்து என்னடா வீட்டுக்குள்ள ஏதோ சத்தம்?”

  “முனுசாமி! உன் பெரிய மயன் என்னிக்கு வருவான்?”

  “முனுசாமி! மோட்டர்லேந்து எண்ணெ ஒழுகிட்டே இருக்கு போல?”

  எங்கள் வீட்டைவிட்டு வெளியேறும் யாவரும் முதலில் தலையை மட்டும் விட்டு இராமசாமி தாத்தா இருக்கும் இடத்தைக் கவனிப்பதுண்டு. பிறகொரு நாட்களில் எல்லாருக்கும் இப்பழக்கம் தொற்றிக் கொண்டது. ஆனால், இராமசாமி தாத்தா காலையில் எங்களுக்கெல்லாம் முன்பே எழுந்து நாற்காலிக்கு வந்துவிடுவார்.

  “அந்த மனுசன் என்னா நம்ம வீட்டு ஜாகாவா? இதெல்லாம் ஓவரா இல்ல? அவரு மகன்கிட்ட சொல்லி வச்சுடு. எனக்கு மண்டைக்கு மணி அடிச்சிச்சினா அவ்ளத்தான்”

  அப்பாவுக்கும் அம்மாவிற்கும் வீட்டுச் சண்டை உள்மோதும். பெரியசாமி தாத்தா சலனமே இல்லாமல் எங்கள் வீட்டு வாசலையே பார்த்துக் கொண்டிருப்பார். பெரும்பான்மையான நேரத்தில் அவர் கேள்விகள் எனக்கு எரிச்சலாக இருந்தாலும் அவருடைய இருப்பு அதைவிட எரிச்சலூட்டும். ஒருமுறை தாங்கமுடியாமல் கேட்டுவிட்டேன். ஆனால், அவர் கேட்டதாகத் தெரியவில்லை. அடுத்த கேள்விக்கு வந்துவிட்டார்.

  பெரியசாமி தாத்தாவிற்கு ஒரே மகன். வீட்டில் அவருடைய மகனும் அவருடைய மருமகளும் மட்டும்தான். அவர்களுக்குக் குழந்தை இல்லை. வீட்டில் பகல் முழுவதும் அவருக்கு வேலை இல்லை. பெரியசாமியின் மனைவி ஆச்சியம்மா இறந்த நான்காண்டுகளில் அவர் கற்று கொண்ட ஒரே வித்தை வேடிக்கை. வேடிக்கை பார்ப்பது. ஒரு தியானத்தைப் போன்று நிதானமானது அது.

  தாத்தாவின் வேட்டி எப்பொழுதும் வேலியில் அத்துமீறி தொங்கும். பாதிக்கு மேல் எங்கள் வீட்டுச் சுவரில் இறக்கியப்படித்தான் அவர் காயப்போடுவார். பல சமயங்களில் அது வேலி தாண்டி எங்கள் வீட்டின் தரையில் விழுந்துவிடும். அதை எடுத்துக் கொடுக்க சதா எங்களை அழைத்துக் கொண்டிருப்பார். அப்படி எடுக்க வெளியில் வந்தால் மாட்டிக் கொள்வோம். ஒரு ஐந்து நிமிடமாவது பேசிவிட்டுத்தான் அனுப்புவார். அப்பா வீட்டில் கொஞ்சம் சத்தம் போட்டுப் பேசிவிட்டால், அதன் பிறகு வெளியில் வரும் எல்லாரிடமும் பெரியசாமி தாத்தா அப்பா சத்தம் போட்டதைப் பற்றி விசாரிப்பார்.

  “டேய்! ஏண்டா உன் அப்பன் அப்படிக் கத்துறான்?”

  “ஏம்மா உன் மனுசன் அப்படி இருக்கான்? அவனுக்கு என்ன பெரச்சன?”

  இப்படிக் கேள்விகள் நாக்காக நீண்டு எங்களை வழித்துத் தீர்த்துவிடும். பெரும் எரிச்சல் மண்டைக்குள் நுழைந்து குடையும். கடவுள் என்னைக் காது கேளாமல் படைத்திருந்தால் என்னவென்று தோன்றும். இப்படிச் சில நாட்களுக்குப் பிறகுத்தான் அப்பாவிற்கு ஒரு யோசனை தோன்றியது. வீட்டின் பின்பக்கக் வேலியில் ஒரு பெரிய பொத்தலைப் போட்டு அதனைப் பிரித்து கதவாக்கினார். அப்பா மட்டும் பின்வழியில் வீட்டுக்குள் வரத் துவங்கியது ஆச்சர்யமாக இருந்தது. வீடு நெருங்கியதும் மோட்டாரை அடைத்துவிட்டு சத்தமே இல்லாமல் பின்வாசல் வழியாக உள்ளே வந்துவிடுவார்.

  “என்னப்பா முனுசாமியெ ஆளே காணம்? எங்கப் போய்ட்டான்?”

  உங்களுக்கென்ன எனக் கேட்கும் தோன்றும். அப்பாவை வெளியாள் யாராவது அவன் இவன் எனச் சொல்லிக் கூப்பிட்டால் எனக்குக் கோபம் வந்துவிடும். வார்த்தைகளை மென்று அதன் உக்கிரத்தைக் கண்களில் காட்டுவேன். சிலர் புரிந்து கொள்வார்கள். இராமசாமி தாத்தா அதற்குச் சளைத்தவர் அல்ல. அடுத்த கேள்வியை அவர் தனது தொண்டைக்குள் உற்பத்தி செய்து கொண்டிருப்பார். விட்டால் போதும் என ஓடி வந்துவிடுவேன்.

  அப்படிப்பட்ட தாத்தா அன்று வெளியில் வரவே இல்லை. மனம் ஒரு பக்கம் அவர் காலம் முடிந்து போயிருக்கலாம் என நினைக்கத் தூண்டியது. படுக்கையிலேயே அவர் நேற்றைய இரவில் தன் உயிரை விட்டிருக்கலாம். அதை யாரும் இன்னும் கவனிக்கவில்லை. சாயங்காலம் வரும்போது இங்கொரு பந்தல் போடப்பட்டிருக்கக்கூடும். கூப்பாடும் அழுகையுமான ஒரு பொழுது இன்னும் சிறிது நேரத்தில் இவ்விடத்தைச் சூழ்ந்து கொள்ளும். அப்பாவிடம் சொல்லி பின்வேலியை மீண்டும் அடைக்கச் சொல்லிவிடலாம்.

  நேற்றைய இரவு நெஞ்சுவலி வந்து அப்பா பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஒருவேளை அந்த நெஞ்சுவலி இந்தத் தாத்தாவினால்கூட வந்திருக்கலாம் எனத் தோன்றியது. அம்மாவை மீண்டும் ஏற்றிக் கொண்டு வந்து வீட்டில்விட மருத்துவமனைக்குக் கிளம்பினேன். போகும்போது பெரியசாமி தாத்தாவின் ஒரு வேட்டி எங்கள் வீட்டில் விழுந்து கிடந்ததைப் பார்த்தேன்.

  அப்பாவிடம் ஆறுதல் சொல்லிவிட்டு அம்மாவை அழைத்து வீட்டுக்கு விட வரும் வழியில் பெரியசாமி தாத்தா வியர்த்துக் கொட்ட வெயிலில் நின்றிருப்பதைக் கண்டேன். மோட்டார் என்னையறியாமல் அவர் பக்கமாகப் போய் நின்றது.

  “என்னடா மகேன்? அப்பா ஆஸ்பித்திரில இருக்கானாம்? காலையிலெ கிளம்பி வந்தென் பாக்கலாம்னு. எடம் தெரிலடா. யாரும் ஒழுங்கா சொல்ல மாட்டறாங்க. நடந்தெ வந்து கொஞ்சம் அப்படியெ தலை கிர்ர்ர்னு ஆச்சு. அப்பா எப்படி இருக்கான்?”

  கேள்விகளுடன் நின்றிருந்தார் பெரியசாமி தாத்தா.

  • கே.பாலமுருகன்

   

  Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *