குழந்தைகள் சினிமா: தனிமை குழந்தைகளின் எதிரி

“ஜப்பானிய சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் விநோதமான ஒரு பழக்கம் தொடங்கியிருந்த காலக்கட்டம். ஒரு தனிமையான அறைக்குள் தன்னைச் சுயமாக அடைத்துக்கொண்டு வீட்டிலுள்ள மனிதர்களைச் சந்திக்காமல், பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாமல் 9 வருடத்திற்கு மேலாக சுயவதைக்கு ஆளாகியிருந்தார்கள். இவர்களை ஜப்பானிய அரசு ‘hikikoman’ என அடையாளப்படுத்தியது.

lonely kid 2

ஒவ்வொரு வீட்டிலும் நாம் அடிக்கடி வீட்டிற்கு வெளியேயும் அல்லது வீட்டிற்குள்ளேயும் பரவலாகக் காணமுடியாத குழந்தைகள் இருக்கவே செய்கிறார்கள். உறவுக்காரர்கள் நண்பர்கள் வீடு தேடி வரும்போது அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டு நம் பார்வையிலிருந்து நீங்கிவிடும் குழந்தைகளைப் பார்த்ததுண்டா? அவர்கள் எப்பொழுதும் சமூகத்திடமிருந்தும் சக மனிதர்களிடமிருந்தும் தனித்திருக்கவே விரும்புகிறார்கள். அவர்களுக்கு மிகவும் நெருக்கமான தேர்வுகள் உள்ளன. தன் அறை மேசை, அறை ஓவியங்கள், தன்னுடைய தலையணை என அவர்களின் உலகத்தைச் சுருக்கிக்கொண்டு அதிலிருந்து வெளிவராமல் நாள் முழுக்க மௌனத்தைத் தரிசித்தப்படியே தனக்குண்டான வேலையில் மூழ்கிக்கிடப்பார்கள். இதைத்தான் anti-social syndrome என்கிறார்கள். இது ஒருவகையான மன அமைப்பு பிரச்சனை என்றும் உளவியல் தீர்க்கமாக நம்புகிறது.

இதே பிரச்சனையைக் கல்வி உலகம் ‘introvert’ என அடையாளப்படுத்துகிறது. யாருடனும் பேசுவதற்கும் பழகுவதற்கும் தன்னம்பிக்கையற்ற மனநிலையைக் கொண்டிருக்கும் மாணவர்களையும் தைரியமாகக் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள முடியாமல் தன்னைத் தானே பதுக்கிக்கொள்ளும் மாணவர்களையும் அப்படி வகைப்படுத்துவார்கள். Introvert and anti social syndrome இரண்டும் ஒரு குழந்தைக்கு மன அளவில் நோய்க்குறிகளை ஏற்படுத்தும் பிரச்சனைகளே. என் வாழ்நாளில் அப்படியொரு சமூகத் தொடர்பு முரண் கொண்ட சில நண்பர்களைச் சிறுபிராயத்தில் சந்தித்துண்டு.

முதலாவது: பேய்வீட்டில் இருந்த முகுந்தன்

நாங்கள்  கம்பத்தில் மூன்று வருடங்கள் தங்கியிருந்தபோது எங்களுக்கு எதிர்வீட்டில் ஒரு மிகப்பெரிய பேய் வீடு இருந்தது. மற்ற வீடுகளைக் காட்டிலும் இந்த வீடு பரவலான நிலத்தையும் விநோதமான வீட்டுக் கட்டுமானத்தையும் கொண்டிருந்தது. வீட்டின் முன்வாசல் இரும்பு கதவிலிருந்து அந்த வீட்டின் வாசல் கதவிற்கு சராசரி ஒரு சிறுவன் ஓடினால் போய் சேர்வதற்கு எப்படியும் இரண்டு நிமிடங்கள் ஆகிவிடும். வீடுகள் இருந்த தெருவைக் கவனிக்காதபடிக்கு வாசல் கதவு வேறு பக்கமாக அமைக்கப்பட்டிருந்த விதம் வித்தியாசமாக இருந்தது. இது போன்ற வாசலைப் பார்க்கும்போதெல்லாம் அந்த வீட்டு மனிதர்கள் யாரிடமிருந்தோ தள்ளி இருக்கவே விரும்புகிறார்கள் எனத் தோன்றும்.

முகுந்தனின் வீடும் அப்படித்தான் எங்களிடமிருந்து விலகியிருந்தது. மதியம் பள்ளி முடிந்து முகுந்தன் முன்வாசல் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டு வாசலுக்கு ஓடிவருவேன். புத்தகப்பையைத் தலையில் மாட்டிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்துகொண்டிருக்கும் அவனுடைய புறமுதுகில் விழும் என் பார்வை அதற்கு மேல் நீளாது. மறுநாள் அதிகாலையில் வீட்டிற்கு முன் வந்து நிற்கும் பேருந்தில் ஏறுவதற்கு மட்டுமே மீண்டும் வெளியே வரும் முகுந்தனின் மீது சட்டென ஆர்வம் கூடியது. அவனிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட வேண்டுமென இலட்சியம் கொண்டிருந்தேன். ஆனால் ஒவ்வொருமுறையும் எனக்கும் அவனுக்கும் மத்தியில் விழுந்துகிடந்த சோம்பலான மதியத்தைத் தவிர வேறொன்றுமில்லாமல் நகர்ந்தது காலம். முகுந்தனின் அப்பா வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அவன் சிறுவயதாக இருக்கும்போதே அவர் சிங்கப்பூர் வேலைக்குச் சென்றுவிட்டாராம். அவனுக்கு அப்பாவை நீங்கிய வாழ்வில் சுவாரஷ்யம் இல்லாமல் போயிருக்கக்கூடும். அவனை அவன் சுருக்கிக்கொள்ள இதுவும் காரணமாக இருக்கலாம்.

காலையில் வேலைக்குப் போய்விட்டு இரவில் வீடு திரும்பும் அவனின் அம்மாவும் அவர்களுடன் இருக்கும் ஒரு தாத்தாவும் என அந்தப் பேய் வீட்டின் மனிதர்கள் மிகவும் சொற்பமானவர்களே. அவனின் அப்பா இருக்கும்போது அவருடைய நண்பர்கள் அடிக்கடி வீட்டுப் பக்கம் வருவது மாலையில் அந்தப் பெரிய இடத்தில் எல்லோரும் பூப்பந்து விளையாடுவது எனப் பேய்வீடு எப்பொழுதும் ஆள்நடமாட்டங்களுடன் பரப்பரப்பாகத்தான் இருந்திருக்கிறது. அவர் வெளிநாட்டிற்குச் சென்றவுடன் பெரிய வீடு பேய்வீடானாது. குடும்பத் தலைவர் இல்லாத வீடு எப்படி இருக்க வேண்டும் என இந்த ஆணாதிக்க சமூகம் வரையறுத்து வைத்திருப்பதைப் போலவே சிறுக சிறுக அவர்களின் வீடும் அப்படியே மாறிப்போனது. இரவு குறிப்பிட்ட நேரத்திற்குள் எல்லோரும் வீட்டுக்குள் இருக்க வேண்டும், முன்வாசல் கதவை எப்பொழுதும் சாத்தியே வைத்திருக்க வேண்டும், வெளியாட்கள் வாசலைத் தாண்டி உள்ளே வந்து பேசக்கூடாது என ஆண்கள் இல்லாத வீட்டிற்கு இப்படிப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றன. சமூகத்தை உற்றுக் கவனிக்கும் ஒருவன் அடையக்கூடிய புரிதல் இது.

முகுந்தனும் அவனுடைய அம்மாவும் இப்படித்தான் சமூகத்திடமிருந்து விலகியிருக்கத் துவங்கினார்கள். முகுந்தன் பள்ளி பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்குள் நுழைவதற்கு முன் தன் வீட்டு நிலத்தின் மண்ணைப் பார்த்து ஏதோ பேசிக்கொண்டே போவதைக் கவனித்திருக்கிறேன். அவன் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறான் என அப்பொழுது தெரியாததால் அவனுக்குப் பேய்ப் பிடித்திருக்கிறது என நானும் பலரிடம் சொல்லியிருக்கிறேன். அவனுடன் பேச முடியாமல் போன என் இயலாமைக்கு நியாயம் கற்பிக்க நான் ஏற்படுத்திக்கொண்ட வதந்தி அது. தினம் அவனுடைய வருகையைத் தரிசிக்க அல்லது கவனிக்க எனக்கு ஆவல் இருந்தது.

முகுந்தன் வீட்டுக்கு வெளியில் வந்து விளையாடியதும் கிடையாது. அவனுக்கென்று எந்த விளையாட்டும் இல்லை. ஒரு கொடூரமான தனிமையை அணைத்துக்கொண்டு அவனுடைய மர்மமான அறையிலேயே அவன் மௌனித்திருக்கக்கூடும். தெருவிலிருந்து வீட்டின் எல்லை கொண்டிருக்கும் தூரம் அவனைப் பற்றி அனுமானிக்க விடாதப்படிக்குத் தடையாக இருந்தது. தூரத்தைக் கடந்து முகுந்தனை அடையாத எனது பொழுதுகள் தீர்ந்துபோக அங்கிருந்து நாங்கள் வேறொரு இடத்திற்கு மாறி வந்துவிட்டிருந்தோம். என்றாவது தனிமையில் அமர்ந்திருக்கும் யாரையாவது சந்திக்க நேர்ந்தால் முகுந்தனின் ஞாபகம் வரும்.

இரண்டாவது: மேட்டு வீட்டுக் குழந்தைகள்

lonely kid 1

கம்போங் ராஜாவில் கொஞ்ச காலம் வசிக்கும்போது எங்களின் கம்பத்திற்கு அருகாமையில் நான்கைந்து வீடுகள் ஒன்றாக மேட்டில் இருந்தன. அதை மேட்டு வீடு எனத்தான் அழைத்துப் பழகியிருந்தோம். அம்மாவிற்குப் பழக்கமான ஒரு பாட்டி அங்கு இருப்பதால் எப்பொழுதாவது அங்குச் சென்று வருவேன். அந்தப் பாட்டி பலருக்குக் கடன் கொடுத்திருப்பதால் அடிக்கடி மேட்டு வீட்டைவிட்டு கடன் வசூலிக்கவே வெளியே வருவார். அம்மா கூட்டுப் பணத்தைக் கட்டுவதற்காக அங்கே செல்லும்போது நானும் மேடேறி அவருடன் செல்வேன். அங்குள்ள நான்கு வீடுகளுமே எப்பொழுதும் இருளில்தான் கிடக்கும். பாட்டி வீட்டுக்கு வெளியிலுள்ள பெரிய நாற்காலியில் அமர்ந்துகொண்டு அவருடைய கணக்கு புத்தகத்தைச் சரிப்பார்த்துக் கொண்டிருப்பார். அவரை நான் அங்கு 5 முறை பார்த்திருக்கிறேன். ஒவ்வொருமுறையும் அவர் அந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு அதே புத்தகத்தைச் சரிப்பார்த்துக்கொண்டிருப்பார். இந்தக் காட்சி என்றுமே மாறியதில்லை.

அங்குள்ள எல்லாம் வீடுகளும் நீண்ட மௌனத்தில் உறைந்திருக்கும். மனிதர்களின் அசைவே இல்லாத அமைதி. பாட்டி மட்டும் பக்கத்து வீட்டில் மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் அடிக்கடி கடன் வாங்கி வாழ்வை நகர்த்தக்கூடிய சூழல் என்பதாலும் அவர்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியில் வரமாட்டார்கள் எனச் சொன்னார். முன்கதவு பூட்டிக்கிடக்கும் அந்த வீட்டைப் பார்த்தேன். கதவு முழுக்க குழந்தைகளின் நகம் சுரண்டிய வடுக்கள் இருந்தன. ஒருமுறை பாட்டியைப் பார்க்க அங்குச் சென்றபோது, சன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுமியைப் பார்த்தேன். என்னைக் கண்டதும் அவளுடைய கண்கள் அகல விரிந்தன. ஆச்சர்யமாக என்னைப் பார்த்தவள் சட்டென சன்னலைச் சாத்திவிட்டு உள்ளே போய்விட்டாள். அவளுக்குப் பின்புறத்தில் தெரிந்த அறை பயங்கர இருளில் அடைந்துகிடந்தது.

கடைசியாகப் பார்த்த அவள் பார்வையை இப்பொழுது மீண்டும் மீட்டுணரும்போது அது மனிதர்களைப் பார்த்து மிரளும் ஒரு பயத்தையும் பதற்றத்தையும் கொண்டிருந்ததை உணர முடிகிறது. அவளுடைய வீட்டின் பெரியவர்கள் தன் இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள வீட்டில் வளரும் குழந்தைகளை அறைக்குள்ளே வைத்திருக்கிறார்கள். அறைக்குள்ளேயே விளையாடிக்கொண்டு, படுத்துறங்கி, அறைச்சுவரில் கிறுக்கிக் கொண்டு பகலைப் பற்றியும் வெளியில் இருக்கும் உலகத்தைப் பற்றியும் எந்தக் கவலையுமில்லாமல் இருக்கிறார்கள். இப்படி வாழும் குழந்தைகள் சமூகத்திடமிருந்து நீக்கப்பட்டு வளர்க்கப்படுகிறார்கள். தூரமாக ஓடுவது பற்றியும் மனிதர்கள் எத்தனை விதமாகச் சிரிக்கிறார்கள் என்பதைப் பற்றியும் தெரியாமல் அந்த மேட்டு வீட்டுக் குழந்தைகள் இருந்திருக்கிறார்கள் எனச் சொன்னால் யாராவது நம்புவார்களா?

தாய்லாந்து சினிமா

குழந்தைகளின் வாழ்வையும் அவர்களின் அகச்சிக்கலையும் அமானுடமான முறையில் சினிமாவின் வழி பதிவு செய்து உலகக் கவனத்தை ஈர்க்கும்வகையில் செயலாற்றி வருவது தாய்லாந்து சினிமா துறையாகும். கொரியாவிற்கு அடுத்து பேய்ப்படங்களை அதன் கூர்மையான அவதானிப்புடன் தரமாக வாழ்வுடன் மிகவும் நெருக்கமாகக் கொண்டு வந்து பூதக்கண்ணாடியில் காட்டி அச்சுறுத்தும் தொழில்நுட்ப கலை வேலைப்பாடுகள் தாய்லாந்து சினிமா நுட்பங்களில் ஒன்றாகும்.

2010 ஆம் ஆண்டு ’13 beleve’ and ‘the body’ போன்ற பிரபலமான படங்களை இயக்கிய இயக்குனரின் மூன்றாவது படைப்பாக வெளிவந்த படம்தான் பேய்ப்பிடித்த அறை (haunted room). ஜப்பானில் சிறுவர்களுக்கு நிகழ்ந்த மனநோய் குறித்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டப் படம் இது. ஆகையால் ஜப்பானிய நிலப்பரப்பின் தாக்கமும் அங்குள்ள குழந்தைகளின் அக மன வளர்ச்சி பற்றிய குறிப்புகளும் மேற்கோளாக எடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.

கதையின் மையப்பாத்திரங்கள் சொற்பமானவர்களே. ஒரு சூன்யமான வீட்டுக்குள் நடப்பதுதான் கதை. அதுவும் நாம் படத்தின் சில காட்சிகளில் மட்டுமே பார்க்க முடிந்த சிறுவனான ‘தொன்’தான் கதையின் மையம். தொலைக்காட்சி நடிகையான sinjai plengpanich கணவனைப் பிரிந்து தன் மகனுடன் வாழ்பவள். இரவில் ஆபாச சீடிக்களை விற்பனை செய்பவளாகவும் வருகிறாள். அவளுக்கு மிக நெருக்கமான நண்பன் ஒருவன் இருக்கிறான். அவனை அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்குச் செல்லும் மூலமே நம்மையும் இயக்குனர் அவளின் சூன்யம் அடர்ந்த வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறார்.

வீடு முழுக்க அமானுடமான அதிர்வு இருந்துகொண்டே இருக்கிறது. வீட்டினுள் வரும் நண்பனிடம் அறைக்குள் கடந்த 5 வருடமாக தன்னை அடைத்துக்கொண்டு உள்ளேயே இருக்கும் மகனைப் பற்றி சொல்லத் துவங்குகிறாள். அவனுக்கு இது வித்தியான ஒன்றாகத் தோன்றுகிறது. அதிர்ச்சியுடன் மாடி அறையில் கேட்கும் அவளுடைய மகனின் காலடி ஓசைகளைக் கூர்மையாகக் கேட்கிறான். அவனால் அதைப் பொருத்துக்கொள்ள முடியாமல், ‘எப்படி அவளுடைய மகன் இந்த நிலைக்கு வந்தான்’ எனக் கேட்டுக்கொண்டே இருக்கிறான். திடீரென ஒருநாள் தனக்கு வீடியோ கேம்ஸ் விளையாட வேண்டும் ஆகையால் தனிமையில் இருக்க வேண்டும் என உள்ளே நுழைந்தவன் அதன் பிறகு வெளியே வரவில்லை எனப் பதிலளிக்கிறாள். பலமுறை அவனை அங்கிருந்து வெளியாக்க அவள் செய்த முயற்சிகள் தோல்வியடைகின்றன. கூர்மையான கத்தியை கையின் நரம்பில் அழுத்திப் பிடித்துக்கொண்டு தன்னை வெளியாக்க முயன்ற அம்மாவின் செயலைத் தற்கொலை மிரட்டலின் மூலம் தடுத்துவிடுகிறான்.

அவளுக்கும் மகனுக்கும் இடையில் கடந்த 5 வருடமாக எந்த உரையாடலும் நிகழ்வதில்லை. கதவுக்கடியில் ஒரு தாளில் எழுதி வைத்தே இருவரும் பேசிக்கொள்கிறார்கள். அவனது அறை சன்னல்கள் எல்லாம் நாளிதழ்களால் மூடப்பட்டிருக்கின்றன. இருளைத் தின்று தீர்த்து 5 வருடம் உள்ளேயே கிடப்பதால் மிகவும் மூர்க்கமாக வளர்வதாகப் படத்தில் அவ்வப்போது காட்டப்படுகிறது. ஜப்பானில் இதுபோன்ற மனநோய்க்குறிகளைத் தற்கொலைக்கு வித்திடும் ஒரு பயங்கரமான மனச்சிதைவு எனச் சொல்கிறார்கள். ஜப்பானிய மரபில் தற்கொலை என்பது கௌரமான ஒன்றாகும் என வரலாற்றில் படித்ததுண்டு. தற்கொலை செய்துகொள்வதை அவர்கள் உன்னதமாகப் போற்றுகிறார்கள். போர் வீரர்கள் தன்னுடைய முதுமை காலத்தில் நோயின் வலி தாளாமல் தனது சமுராய் கத்தியிலேயே தன் உயிரை மாய்த்துக்கொண்டதுண்டு எனப் பல கதைகள் உள்ளன. ஆகையால் ஜப்பானில் கண்டறியப்பட்ட இந்தப் பழக்கமும் மனநோயும் இப்படத்தில் உக்கிரமாகவே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

மீண்டும் அவளுடைய வீட்டிற்கு வரும் அந்த நண்பன், அறையில் அடைந்து கிடக்கும் அவளுடைய மகனுடன் நட்பு கொண்டு அவனை வெளியாக்க முடியும் எனக் கூறுகிறான். அதன்படியே அவனது அறையை நோக்கி இருவரும் மாடியேறும் இடம் மிகவும் பயங்கரமானவை. ஒரு நிசப்தத்தை நோக்கி நம்மையும் நகர்த்துவது நடுக்கமாக இருக்கிறது. அவனுடைய அறையின் கதவுக்கு முன் நின்று அவனுடைய அம்மா அவனை அழைத்துப் பார்க்கிறாள். தன்னுடைய நண்பன் அவனுடன் நட்புக்கொள்ள ஆசைப்படுவதாகக் கூறுகிறாள். தன் அம்மா தன்னைக் காட்டிக்கொடுத்துவிட்டாள் எனக் கோபமடைகிறான் தொன். ஒரு துண்டு கடிதம் மட்டும் கதவுக்கடியிலிருந்து இரத்தக்கரையுடன் வருகிறது. ‘என்னை நெருங்க முயற்சிக்காதே நீ என் அம்மா இல்லை’ என அந்தத் தாளில் எழுதப்பட்டிருக்கிறது. அதைக் கண்ட அவள் கதறி அழுகிறாள். அந்தத் துண்டு கடிதத்துடன் அவனுடைய பெருவிரலும் துண்டிக்கப்பட்டு வைக்கப்பட்டிருப்பது மேலும் அதிர்ச்சியைக் கூட்டுகிறது.

சிறிது நேரத்தில் அவனுடைய அறைக்கதவு திறக்கப்படுகிறது. அவள் படியில் தவறி சரிந்துவிழ அம்மாவின் நண்பன் மட்டும் மகனிடம் மாட்டிக்கொள்கிறான். கையில் கத்தியுடன் வெளியே வரும் அவன், பாய்ந்து அம்மாவின் நண்பனின் உடலைப் பாகம் பாகமாக வெட்டுகிறான். படத்தின் இந்தக் கட்டம் மகனின் சிக்குண்ட உலகத்தையும் தனிமையும் மனச்சிதவின் உச்சத்தையும் காட்டுகிறது. இப்படிப் பல பேரைக் கொன்று அறைக்கு மேலேயுள்ள தனிப்பகுதியில் சாக்கில் கட்டிப் போட்டுவிடுகிறார்கள். அவள் வசிக்கும் வீட்டைச் சுற்றியுள்ளவர்கள் அவளது மகனைப் பற்றியும் அந்த அறையில் நிகழும் மர்ம சத்தங்களையும் நகர்வுகளையும் கேட்கத் துவங்குகிறார்கள். அவள் வீட்டுக்கு வந்து காணாமல் போனவர்களைக் காவல்துறை ஒரு பக்கம் தேடிக்கொண்டிருக்க, அவளுடைய முன்னால் கணவன் ஒருநாள் வீடு தேடி வருகிறான். படத்தில் இந்தக் கட்டம்தான் முக்கியமான திருப்பத்தைக் கொண்டிருக்கிறது. அதுவரை அவளுடைய (அம்மாவின்) பார்வையிலிருந்து காட்டப்பட்ட படம் இப்பொழுதும் மெல்ல உடைந்து நம் பக்கம் திரும்புகிறது.

உள்ளே நுழையும் கணவனைப் பார்த்து தன் மகனைத் தன்னிடமிருந்து பிரிக்க முயற்சி செய்யாதே எனக் கத்துகிறாள். அவளின் உடலைப் பிடித்து உலுக்கும் கணவன் ‘என்ன கனவுலகத்தில் இருக்கிறாயா?’ எனக் கேட்டுவிட்டு வரவேற்பறையின் கூரையில் தெரியும் ஓட்டையைப் பார்க்கிறான். உண்மை கதை மீண்டும் பின்னோக்கி செல்கிறது. சில வருடங்களுக்கு முன்னால் இதே வீடு கணவன் மனைவி சண்டையில் பிளவுற்றுக்கிடக்கிறது. எந்நேரமும் அவர்களுக்கிடையே விவாதங்களும் சண்டையும் அதிகரித்துக்கொண்டிருக்க அவளுடைய மகன் தொன் அவனை அறைக்குள்ளேயே அடைத்துக்கொள்கிறான். பெற்றோரின் கவனிப்பும் அக்கறையும் கிடைக்காமல் திடீரென ஒருநாள் இந்த முடிவுக்கு வந்து அறைக்குள் தன்னைச் சாத்திக்கொள்கிறான். அதன் பிறகு மகனை நெருங்க முடியாமல் அவள் தவிக்கிறாள். அவன் தன்னைப் பார்க்கவில்லையென்றாலும் பரவாயில்லை, ஆனால் கணவனின் நிழல்கூட அவன் மீது படக்கூடாது என எச்சரிக்கையாக இருக்கிறாள்.

ஒருநாள் இருவருக்குமிடையே கடுமையான சர்ச்சை ஏற்படுகிறது. பிரிவதற்கு முடிவெடுக்கும் அவர்கள் மகனை யார் பார்த்துக்கொள்வது என விவாதிக்கத் துவங்குகிறார்கள். பதற்றமடையும் அம்மா, தன் மகனைத் தன்னிடமே வைத்துக்கொள்வதற்காக கணவனைத் துப்பாக்கியில் சுட்டுக் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறாள். இவர்களின் கைக்கலப்பை அறைக்குள்ளிருந்துகொண்டு ஓட்டையின் வழியாக மகன் தொன் பார்த்துக்கொண்டிருக்கிறான். வீட்டில் நிகழும் பிரச்சனைகளைப் பிள்ளைகள் இப்படித்தான் ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். துப்பாக்கியைப் பறிக்க முயலும் கணவனிடமிருந்து தப்பிக்க துப்பாக்கி முனையை அழுத்துகிறாள் அம்மா. அந்தநேரம் பார்த்து துப்பாக்கி மேற்கூரையை நோக்கி பார்க்க, குண்டு பாய்ச்சப்படுகிறது. மேல்மாடி அறையிலிருந்துகொண்டு இவையனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த மகனின் கண்ணில் குண்டு பாய்ந்து அவன் அங்கேயே இறக்கிறான்.

படத்தில் காட்டப்படாத முதல் பாதி இதுதான். மகனின் மரணம். அதன் பிறகு மகனைக் கொன்றதற்காக அவள் மனம் சிதைகிறாள். மகன் இறந்துவிட்டதை இருவரும் மறைத்துவிடுகிறார்கள். காலம் நகர மகன் அறைக்குள்ளேயே இருக்கிறான் என அவள் நம்புவதோடு அனைவரையும் நம்ப வைப்பது கதையின் மற்றொரு பகுதி. கதையின் முதல் பாதியின் அடுக்குகளில் மர்மமாக ஒளிந்துகிடந்தது சிதைந்துவிட்ட அம்மாவின் மனப்பிரமை மட்டுமே. அதன் மூலம் அறைக்குள் அடைந்துகிடக்கும் தன் மகனை உருவகித்து நமக்கும் பிறருக்கும் அவள் குற்றவாளி அல்ல என நிருபிக்க முயல்கிறாள்.

இதில் முகத்தைக் காட்டாமல் நடித்திருக்கும் சிறுவன் தொன், அம்மாவாக நடித்திருக்கும் sinjai plengpanich இருவரும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இசையும் ஒளிப்பதிவும் அறையின் மௌனத்தையும் வீட்டின் அமானுடனத்தையும் மிகக் கூர்மையாகக் காட்சிப்படுத்தி வலுவைச் சேர்த்துள்ளன.

ஜப்பானில் நிகழ்ந்த இந்தக் கொடூரங்களுக்குப் பின்னணியில் ஒரு திகில் கதையை நுழைத்துப் பார்த்து நமக்கு அச்சத்தையும் விழிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர். குழந்தைகள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வதன் மூலம் பெரியவர்களுக்குக் கடுமையான தண்டனைகளைத் தர முயல்கிறார்கள். வீட்டில் நிகழும் கொடுமைகளுக்கு முன் அவர்கள் நிகழ்த்தும் வன்முறையே ஜப்பானில் நடந்த இதுபோன்ற விநோதமான பழக்கங்கள்தான். அவர்களின் பொழுதுகளைச் சூன்யமாக்கும் எந்தக் காரியத்தையும் செய்யாமல் இருப்பதே அவர்களை மனரீதியில் காப்பாற்ற நாம் செய்யும் முக்கியமான பங்கு என்பதை உணர்கிறேன். ஒரு குழந்தை தன்னை ஓர் அறையில் தொடர்ந்து அடைத்துக்கொள்கிறது என்றால் அதற்கு இரண்டே காரணங்கள் மட்டுமே இருக்கக்கூடும் என்பதை நமக்குப் படம் காட்டுகிறது. Anti social syndrome or japan’s hikikoman.

குழந்தைகளின் அறைக்குள்ளிருந்து தனிமையின் சுவாசம் கேட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களின் வன்மமான மனநிலை சுவரில் கொடூரமாகக் கிறுக்கப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களில் தெரிகிறது. ஒழுங்கற்றுக் களைந்துகிடக்கும் அவர்களின் அறையில் எங்கோ யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைத்திருக்கக்கூடும் பெரியவர்களின் மீதான வெருப்பையும் கோபத்தையும்.

கே.பாலமுருகன்

(Teernthu Pogaatha venkaddigal)

Share Button

About The Author

Comments are closed.