துஞ்சல்: இருண்ட மனங்களுக்கிடையே அகவழிப் பயணம்

10154219_120401111688660_6989347643782688864_n

புனைவுகளைப் பற்றி பேசும்போது எனக்கு எப்பொழுதும் ஒரு தயக்கம் ஏற்படுவதுண்டு. சிறுகதைகள் சொற்களின் ஊடாக மனத்துடன் நூதனமாக உரையாடக்கூடியவை. உரையாடல் என்று சொல்வதைக் காட்டிலும் ஒரு முணுமுணுப்பு என வைத்துக் கொள்ளலாம். மனங்களில் அழுந்தி கிடக்கும் மௌனங்களுக்குத் திறவுக்கோளாக, சொல்லப்படாமல் வெகுநாள் தவித்துக் கொண்டிருந்த மன இருள்களின் மீது பாய்ச்சப்படும் வெளிச்சமாக ஒரு சிறுகதை வளர்ந்து வாசகப் பரப்பில் நிற்கிறது. அதனை எதிர்க்கொள்ளும் ஒரு வாசக மனம் தன்னுள்ளும் இருக்கும் ஏதோ ஒரு புள்ளியுடன் இணைகிறது. தன்னையும் திறக்கிறது.

ஒரு சிறுகதையின் மூலமாக ஒரு வாசகன் தன்னைக் காண்கிறான்; கதையினுள்ளே ஒரு அகவழிப் பயணத்தை மேற்கொள்கிறான். இதனை எப்படிச் செதுக்கி ஒரு அறிவார்ந்த விமர்சனமாக முன்வைப்பது எனத் தடுமாற்றமாக உள்ளது. ஆகவே, நானும் ஒரு நல்ல வாசகன்தான் என்ற தைரியத்தில் என்னைத் திறந்திவிட்ட பகுதிக்குள்ளிருந்து சு.யுவராஜனின் ‘துஞ்சல்’ சிறுகதையைப் பற்றி உரையாடுகிறேன்.

அம்மாவைத் தேடி 8 வயது தம்பியும் 10 வயது அண்ணனும் விடிவதற்கு முன்பான அரையிருளில் தோட்டத்திற்குப் புறப்படுகிறார்கள். அவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு அன்பு இல்லத்தில் தன் அம்மாவால் சேர்த்துவிடப்பட்டவர்கள். அப்பாவின் மரணத்திற்குப் பிறகு அம்மா தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார். நன்றாக வளர்ந்துவிட்ட இவர்கள் இருவரையும் ஒருவேளை அவரால் சமாளிக்க முடியாமல் போயிருக்கலாம். அன்பு இல்லத்தில் சேர்த்துவிட்டுக் கருணையே இல்லாமல் போய்விடுகிறார். ஒரு வருடம் வந்து அவர்களைப் பார்க்கவும் இல்லை.

யுவராஜன் காட்டும் அந்த அன்பு இல்லத்திற்கும் எனக்குமே நெருங்கிய தொடர்புண்டு. நாங்கள் அவ்வன்பு இல்லம் இருந்த பகுதியில் இருந்த காலத்தில் அம்மா அங்குத்தான் காய்கறிகள் வெட்டும் வேலை செய்தார். ஒவ்வொருநாளும் காலையில் நானும் அம்மாவும் அங்குச் செல்ல பெரிய சாலையிலிருந்து இப்பொழுது இருக்கும் ஓர் ஆசிரியர் கழகத்தின் பணியாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பின் ஓரமோடும் காட்டு வழியாகத்தான் போய் வருவோம்.

போய்க்கொண்டிருக்கும்போதே கித்தா கொட்டைகள் வெடித்து விழும். சத்தம் கேட்டத் திசைக்கு ஓடி சட்டென கித்தா கொட்டையைப் பொறுக்கிக் கொள்வேன். அப்பயணம் ஒரு காட்டுவழிப் பயணமாக இருந்தாலும் அதன் எல்லை எங்குப் போய் முடியும் என்பது தெரிவதனாலேயே அம்மாவும் நானும் எவ்விதப் பயமும் இல்லாமல் பயணிப்போம். அம்மா ஏதும் பேசாமலே எதையாவது நினைத்துக் கொண்டே நடந்து வருவார். வாழ்க்கை அவரை மிகவும் மௌனமாக்கி வைத்திருந்த ஒரு காலக்கட்டம் அது. எதையாவது ஒரு விளையாட்டைக் கண்டுப்பிடித்து விளையாடிக் கொண்டே அந்த அன்பு இல்லத்தை அடைந்துவிடுவேன்.

அதன் பிறகு அங்குள்ள சிறுவர்களுடன் ஓடியாடி திரிவேன். சைக்கிள் போட்டி, ஊஞ்சலாட்டம், ‘ஆச்சிக்கா’ என பகல் நீளும். அப்பொழுது அங்கிருந்த சிறுவர்களுக்குத் தங்கள் வீடுகள் குறித்த ஏக்கங்கள் முகத்திலும் மனத்திலும் மீந்திருப்பதை அவர்கள் சொல்லும் கதைகளின் வழியாக அறிந்து கொள்வேன். அப்பொழுது அதனை அழுத்தமாக உணரும் மனநிலை இல்லாவிட்டாலும் இப்பொழுது வாசித்த ‘துஞ்சல்’ கதையின் வழியாக அவ்வாழ்க்கைக்குள் மீண்டும் ஒரு அகவழிப் பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது. அந்த அன்பு இல்லத்தைவிட்டுத் தப்பியோடிய சிறுவர்களின் கதைகளையும் பிறகாலத்தில் நாங்கள் கேள்விப்பட்டதுண்டு.

துஞ்சல் நம்முடன் பேசுவது குற்றச்சாட்டல்ல; ஒரு வாழ்க்கை. கைவிடப்பட்ட இரண்டு சிறுவர்களின் மனக்கொந்தளிப்பு. சிறியவன் அழுகையின் மூலம் அதனை வெளிப்படுத்துகிறான். பெரியவன் இறுக எழுப்பிக் கொண்ட தன்மூப்பின் வழி வெளிப்படுத்துகிறான். இரண்டுமே அம்மா என்கிற இருப்பின் தகர்க்க முடியாத வெவ்வேறு விளைவுகளே. எத்தனை ஆறுதல் சொன்னாலும், எத்தனை வியாக்கியானம் செய்தாலும், எத்தனை விவாதங்கள் செய்தாலும் அம்மா என்கிற உணர்வு; அம்மா என்கிற இருப்பு; அம்மா என்கிற தேடல் சமூகத்தின் பூர்வீகப் பழக்கமாக, அசைக்க முடியாத தேவையாக வழிவழியாகக் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனைத் துஞ்சல் ஒரு பயணமாகக் காட்டி நிற்கிறது.

இன்னொரு பக்கம் அத்தனை பூர்வீக புரிதல்களையும் உடைத்துக் கொண்டு துஞ்சல் காட்டும் அம்மா, நானும் சாதாரணப் பெண் தான் என வெளிப்படுகிறாள். அம்மா என்பதன் மீது இச்சமூகம் கட்டியெழுப்பியிருக்கும் அத்தனை பண்பாட்டுச் சுவர்களையும் தாண்டி யாருக்கும் உகந்தவையல்லாத; சமூக எரிச்சலுக்கு ஆளாகும் ஓர் எல்லைக்குள்ளிருந்து துஞ்சல் கதை காட்டும் அம்மா நிற்கிறார். ஒரு கணம் சிறுகதை அகத்தின் மன இருள்களைத் தீண்டுகிறது. இறுகக் கெட்டிப்போயிருந்த பல புரிதல்களை அசைக்கிறது. ஒரு சிறுகதை படித்து முடித்த பிறகு நம்மை ஏதாவது செய்திருக்க வேண்டும் அல்லவா? இக்கதையின் கடைசிப் பகுதி ஏற்படுத்திய அதிர்வலைகள் சாதாரணமாகத் தெரியவில்லை. இதுதான் வாழ்க்கை; இவ்வளவுத்தான் மனிதர்கள்; போங்கடா எனக் கதை முடிகிறது.

பல இடங்களில் சு.யுவராஜன் தன் அழகியல் நிரம்பிய காட்சிப்படுத்துதலின் வழியாகக் கதைவெளியை நெருக்கமாக்கிக் காட்டுகிறார். இச்சிறுகதை யுவராஜன் இவ்வருடம் எழுதியது என்பதால் அவருக்குள் இருக்கும் கதைச்சொல்லி இன்னும் கூர்மையான மனவெழுச்சியுடன் இருக்கிறான் என்பதை உணரவும் முடிந்தது.

இக்கதை மிகச் சிறந்த கதையா என எனக்குச் சொல்லத் தெரியவில்லை ஆனால், இக்கதையின் வெளிச்சம் என் வாழ்க்கையின் ஒரு பகுதியைக் காட்டிவிடுவதன் மூலம் என் வாசக மனத்தில் ஓர் எல்லைக்குள் சிறு அதிர்வை உண்டு செய்கிறது. வாசிக்கும் பலருக்கும் என்னைப் போல் அல்லாமல் வேறு சில திறப்புகளை; வேறு புள்ளியில் வேறொரு அனுபவத்தைக் கொடுக்கக்கூடும் என நினைக்கிறேன். இக்கதை ஓர் அகவழிப் பயணத்திற்கு நம்மைத் தயார்ப்படுத்துகிறது என்பதை மட்டும் கொஞ்சம் உரிமையுடன் சொல்லத் தோன்றுகிறது.

-கே.பாலமுருகன்

Share Button

About The Author

Comments are closed.