• முருகையா ஆசிரியர்

  aid1482964-728px-Become-a-Teacher-in-Alabama-Step-1-Version-2

  இரண்டு வீடு தள்ளி இருந்த ஆசிரியர் முருகையா சட்டென பள்ளிக்கூடம் மாறிப் போவார் என நாங்கள் யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. லாரியில் ஒவ்வொரு பொருளாக ஆட்கள் ஏற்றிக் கொண்டிருந்தனர். என் வகுப்பு நண்பன் சிவாநந்தன் அவருடைய புத்தகங்களை பிடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டே வெளியே வந்தான். அவனைப் பார்த்ததும் என் கண்கள் கலங்கின. முருகையா ஆசிரியர் தோட்டத்தைவிட்டுப் போவது ஒரு பொய்யான செய்தியாக இருக்க வேண்டும் என நம்பிக் கொண்டே ஓடி வந்தது பொய்த்துவிட்டது.

  நாங்கள் இருந்த தோட்டம் அப்பொழுது பட்டணத்தைவிட்டு ஒதுக்குப்புறமாகத்தான் இருந்தது. முருகையா ஆசிரியர் வேறு மாநிலத்திலிருந்து எங்கள் தோட்டத்திற்கு வந்திருந்தார். தோட்டத்து பள்ளியில் வேலை செய்யும் எல்லாம் ஆசிரியர்களும் வழக்கமாக பெரிய தாத்தா வீட்டில்தான் தங்குவார்கள்.

  தோட்டத்தில் பெரிய தாத்தா வாடகை வீடு என்பது ஐந்து அறைகள் கொண்டது. ஆனால், தாத்தா அப்பே கடைக்குப் பின்புறமுள்ள சிறிய வீட்டில்தான் இருந்தார். வாடகை வீடு பள்ளியையொட்டி இருந்தபடியால் ஆசிரியர்களுக்கு வசதியாக இருக்கும்.

  “டேய்ய்.. முனியாண்டி! இங்க வாடா? உனக்கு ஒரு புத்தகம் கொடுக்கணும்னு நெனைச்சென். இரு தேடிப் பார்க்குறன்”

  முருகையா ஆசிரியர் என் அப்பாவைப் போலத்தான். அழைக்கும்போதும் அதில் ஒரு நெருக்கம் இருக்கும். என்னை மட்டுமல்ல; வகுப்பில் இருக்கும் யாவரையும் அவர் நெருக்கமாகவே உணர்ந்தார்.

  “இந்தாடா! இதைப் படி. நல்ல நாவல். உனக்குக் கதை சொல்ற ஆற்றல் இருக்கு. கதைகளை விரும்பிப் படி. நல்ல எழுதுவ. நல்லா வருவ. அந்த ராஜாராம் பையனோட சேர்ந்து ஊர் சுத்தாதெ. புரியுதா?”

  அவர் அதட்டும்போது கொஞ்சமும் பயமில்லை. கவலை தொண்டைவரை அடைத்து நின்றது. இனி யாரும் இத்தனை அக்கறையோடு கண்டிக்கப்போவதும் இல்லை; அழைக்கப்போவதும் இல்லை. லாரி பொருள்களை ஏற்றியப் பிறகு மேலும் கொடூரமாக உறுமியது.

  “சார்! திரும்பி வருவீங்களா?”

  “டேய் முனியாண்டி! இந்தத் தோட்டத்துல ஒரு நல்ல பந்து விளையாட்டு குழுவை உருவாக்குங்க. இப்பயெ விளையாடுங்க. உங்களால முடியும்டா. நான் எங்க ஊருல தோட்டத்துக்கு விளையாடிருக்கென். அதுல ஒரு பெருமை இருக்குடா. புரியுதா?”

  அதற்குமேல் அவர் வேறு ஏதும் பேச விரும்பவில்லை. மேற்கொண்டு பேசினால் அவரும் அழுதுவிடுவார் என்கிற பயம் அவருக்கு வந்திருக்கலாம். வீட்டை இழுத்துப் பூட்டிவிட்டு சாவியைப் பெரிய தாத்தாவிடம் கொடுக்கக் கிளம்பினார். உடன் வந்தவர்கள் லாரியில் ஏறிக் கொண்டனர். அவர் நடந்தே போனார். என்ன செய்வதென்று தெரியாமல் அவர் பின்னாலேயே நடந்தேன். கால்களும் மனத்தும் கணத்தன.

  “முனியாண்டி! வீட்டுக்குப் போடா. என்ன வேணும்?”

  அவர் அப்படிக் கேட்டிருக்கக்கூடாது. அழத் தொடங்கினேன். அழுகை உடைந்து ஓடியது. வாய் கோணியது.

  “டேய்! இங்க வாடா. ஏண்டா அழுவுற? எங்கடா நான் செத்தா போய்ட்டேன்? வருவேண்டா. ஆசிரியர் வேலைனா அப்படித்தான். ஊருக்கு ஊரு மாறிக்கிட்டே இருப்போம். சார் வீடு எங்க இருக்கோ அங்கயே போனும்டா. நீ உங்க வீட்டோட இருக்க. நான் மட்டும் எங்க வீட்டை விட்டுட்டு இவ்ள தூரம் இவ்ள காலம் இருக்கணுமா?”

  “உங்க வீடு எங்க சார் இருக்கு?”

  “வேற மாநிலம்டா. நான் மலாக்கா. படிச்சிட்டு இங்க வேலைக்கு வந்துட்டென். இப்பொ நாலு வருசமா ஆச்சு. திரும்பிப் போறேன்…”
  “நாங்கலாம் எங்கயும் போகமாட்டமா? இங்கயேத்தான் இருப்பமா?”

  “முனியாண்டி! வாழ்ற இடம் முக்கியம் இல்ல. எங்க வேணும்னாலும் வாழலாம். எல்லாமே அனுபவம். போய்கிட்டே இரு. மாற்றம் முக்கியம். புரியுதா? சார் இந்த உலகத்தைவிட்டுப் போகல. இந்த மாநிலத்தை விட்டுத்தான் போறேன். நீயே ஒரு நாள் என்னைப் பாக்க வருவெ…”

  பெரிய தாத்தா வீடுவரை அவர் சொல்லியதையே நினைத்துக் கொண்டு உடன் சென்றேன். சாவியைக் கொடுத்துவிட்டு முருகையா ஆசிரியர் லாரியில் ஏறிக் கொண்டார். எப்பொழுதும் தோட்டத்தில் லாரியோ தண்ணீர் வண்டியோ வந்தால் உடன் ஓடுவது வழக்கம். அதுவும் தோட்டத்து பழைய கங்காணி வீடுவரைத்தான் ஓடுவோம். அதற்கு மேல் பெரிய சாலை வந்துவிடும். அன்று சிறுவர்கள் யாரும் இல்லை. உடன் நண்பர்கள் இல்லாமல் தனியே யாரும் ஓடியதில்லை. லாரி உறுமிக் கொண்டே நகர்ந்தது.

  கொஞ்சம் தூரம் முருகையா ஆசிரியர் பார்க்காதவாறு இடதுவாக்கில் ஓடினேன். லாரி கங்காணி வீட்டைத் தாண்டிக் கொண்டிருந்தது.

  -கே.பாலமுருகன்

  Share Button

One Responseso far.

 1. கதை நன்றாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *