சிறுகதை: அரிவாள்

2185442044_20ce21b26c_z

பாசார் முனியாண்டி கோவிலில் முனியாண்டி பிடித்திருந்த அரிவாள் காணாமல் போனதிலிருந்துதான் அவர்களுக்குப் பீதி கண்டது. அரிவாள் இல்லாத முனியாண்டி வெறும் கையுடன் இருந்தார். அதுவரை பாசார் கம்பத்தில் திமிருடன் சுற்றிக் கொண்டிருந்த சூரும் அவன் வீட்டில் செத்துக் கிடந்தான்.

முனியாண்டியை அரிவாள் இல்லாமல் பார்ப்பது எல்லோருக்கும் சங்கடமாகவும் தீட்டாகவும் தோன்றியது. மேட்டு வீட்டு சுப்பிரமணியம் மாலையில் கோவிலுக்குப் போய் விளக்கைக் கொளுத்திவிட்டு சாமி ஆடுவதையும் நிறுத்திக் கொண்டார். முனியாண்டியை மஞ்சள் துணியால் கட்டி மூடினார்கள். கோவில் வெளிச்சமில்லாமல் கிடந்தது. பாசார் கம்பத்தில் நுழைந்ததும் குறுக்குப் பாதையில் ஒரு பழைய வண்டி இருக்கும். அதுவொரு தள்ளு வண்டி. எத்தனையோ வருடத்திற்கு முன் யாரோ போட்டுவிட்டுப் போனது. கருவடைந்து திருப்பிடித்து மண்ணோடு மக்கியும் போய்விட்டது. ஒரு சில இரும்புகள் மட்டும் வெளியே பிளந்து கிடக்கும். அதற்குப் பின்னால் உள்ள முனியாண்டியை எல்லோரும் பாசார் முனியாண்டி என்றுத்தான் அழைப்பார்கள்.

கோவிலுக்குள் சுவர் இருக்காது. வெறும் தூண்கள் மட்டும்தான். அதுவும் பெரியசாமி காலத்தில் அவருடைய முயற்சியால் கட்டப்பட்டது. அதற்கும் முன் கையில் அரிவாளுடன் வெட்ட வெயிலில் கூரையில்லாமல் முனியாண்டி நின்றிருப்பார். வெய்யிலில் வெளுத்துப் போன முனியாண்டியை வருடம் ஒருமுறை சாயம் பூசி பொங்கல் தினத்தில் பூஜை செய்துவிடுவார்கள். அதுவும் பெரியசாமி குடும்பத்தினர்தான் பொறுப்பு. இப்பொழுது கொஞ்சம் வசதி வந்ததும் கோவில் இழுத்துக் கட்டப்பட்டு கூரையும் தூண்களும் கட்டப்பட்டன. பாசார் கம்பத்திற்குள் நுழைந்ததும் ஆக்ரோஷமான திமிர் பார்வையுடன் கோபத்தைக் கக்கிக் கொண்டிருக்கும் முனியாண்டியைக் கண்டு பயப்படாமல் இருக்க மாட்டார்கள்.

இரவில் கம்பத்தில் காய்ச்சல் வந்தவர்களுக்கு சுப்பிரமணியம்தான் சாட்டையடிப்பார். இரண்டுமுறை வலிக்காதபடி சடங்கிற்குச் சாட்டையை முனியாண்டியின் அரிவாளிலிருந்து எடுத்து காய்ச்சல் கண்டவர்களின் முதுகில் அடிப்பார். சாட்டை மாலை நேரத்தில் முனியாண்டியின் அரிவாளில் தொங்கவிடப்பட்டிருக்கும். மாலை பூஜைக்கு வரும் சுப்பிரமணியம் அதனை எடுத்து அரிவாளில் மாட்டுவார். அப்பொழுது அதற்குத் தனி சக்தி கிடைப்பதாக நம்பிக்கை.

சாட்டையின் பிடியில் கருப்புத் துணி மொத்தமாக வைத்துக் கட்டப்பட்டிருக்கும். அதன் நுனியில் ஒரு சிவப்புத் துணியும் அதில் எப்பொழுதும் திர்நீர் வாசமும் வீசும். சாட்டை முருக்கேறி விறைப்பாக இருக்கும். யாருக்காவது பேய் பிடித்துவிட்டால் முனியாண்டி கோவிலில் வைத்து சுப்பிரமணியம் சாட்டையால் அடிக்கும்போது பார்க்கும் எல்லோருக்கும் வலிக்கும். சாட்டையடி வாங்கி மயங்கி விழுந்தவர்க்குப் பேய் போனதோ இல்லையோ உயிர் பாதி போய்விட்டிருக்கும்.

கம்பீரமாகக் கையில் அரிவாளுடன் நிற்கும் முனியாண்டியின் முன் எந்தப் பேயும் பயந்தோடிவிடும் என நம்புவதால் அவரின் அரிவாளில் தொங்கவிடப்பட்டிருக்கும் சாட்டையின் மகிமை எல்லோருக்கும் தெரியும். சுப்பிரமணி அதனைக் கையில் எடுத்து விலாசும்போது முனியாண்டியாக மாறிவிடுவார். கண்கள் இரண்டையும் உருட்டிக் கொண்டும் நாக்கை வெளியில் நீட்டிக் கொண்டும் கத்துவார். அவருடைய பெருத்த கைகளிலிருந்து நரம்புகள் புடைத்துக் கொண்டு தெரியும். அப்படி அவர் சாட்டையுடன் நிற்கும்போதுதான் நிறைய பேருக்குக் காய்ச்சல் கூடி வேறு வழியில்லாமல் பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

பாசார் முனியாண்டியின் கையில் இருக்கும் அரிவாள் கொஞ்சம் பிரசித்திப் பெற்றது. பெரியசாமியும் அவர் குடும்பத்தாரும் ஒவ்வொரு வருடம் அரிவாளை முனியாண்டியின் கையிலிருந்து உருவி அதனை எண்ணெயில் ஊற வைப்பார்கள். அரிவாளை அப்படிச் சாதாரணமாக உருவியெடுக்கவும் முடியாது. ஒரு வருடம் முனியாண்டியின் கையில் இருந்த அரிவாள். ஒரு குழந்தையின் கையிலிருந்து ஒரு பொம்மையை அத்தனை சாதாரணமாகப் பிடுங்கிவிட முடியாது. முதலில் அதற்குச் சிரிப்புக் காட்ட வேண்டும். அதன் கவனத்தைப் பொம்மையிலிருந்து வேறு பக்கம் மாற்ற வேண்டும். குழந்தை அறியாத கணத்தில் அதன் கையிலிருக்கும் பொம்மையை எடுக்க வேண்டும். பொறுமை இல்லாதவர்களால் அப்படிச் செய்ய முடியாது. முனியாண்டியின் கையிலிருக்கும் அரிவாளும் அப்படித்தான். யாரும் தொடக்கூட மாட்டார்கள். அது தலையில் இருக்கும் கிரிடத்தைப் போன்று.

பெரியசாமி அல்லது சுப்பிரமணி மட்டுமே அதை ஒரு தெய்வக் காரியமாக நினைத்து செய்வார்கள். ஓரிரு நாள் எண்ணெயில் ஊறிய கத்திக்குப் பின்னர் சாயம் பூசுவார்கள். அதன் பளபளப்பு கூடிவிடும். பின்னர், பெரியசாமியின் மகன் அரிவாளில் பட்டையை வரைவான். மூன்று கோடுகள், நடுவில் ஒரு சிவப்பு வட்டம். அரிவாள் ஜோடிகப்படுவதுகூட அன்றைய தினத்தில் பெரிய விழாவாக இருக்கும். தப்படிக்க பாசார் பையன்கள் நான்கு பேர் வந்துவிடுவார்கள். முருகேசனின் குரல் கேட்டால் பாசார் பெண்களுக்கு அருள் வந்திவிடும். அந்த அளவுக்கு கனீரென்ற குரல். தன்னுடைய குரலிலேயே உடுக்கை அடிக்கும் சக்தி முருகேசனுக்கு மட்டுமே உண்டு. முருகேசன் பாட, தப்படித் தெறிக்கும். பெரியசாமி முனியாண்டிக்குப் படையல் வைத்துவிட்டு அவரை ஆசுவாசப்படுத்திவிட்டு அரிவாளை உருவுவார். கைகள் நடுங்கும். ஒரு மாபெரும் வீரன் உறங்கிக் கொண்டிருக்கும்போது அவனுடைய இடைவாரிலிருந்து அவனுடைய கூர்மையான கத்தியை உருவும்போது உருவாகும் பயம் பெரியசாமியைத் தாக்கும். மற்ற ஆளாக இருந்தால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாது. உடல் சூடேறி இறந்துவிடுவார்கள் என நம்பப்படுகிறது. ஆகையால்தான், பெரியசாமி அக்காரியத்தைச் செய்கிறார்.

அரிவாளை உருவியுடன் பாசாரில் இன்னொரு வழக்கம் உண்டு. அரிவாள் இல்லாத முனியாண்டியைக் கம்பத்தில் யாரும் பார்க்கக்கூடாது. ஆகவே, அவரை ஒரு மஞ்சள் துணியால் கட்டி மூடிவிடுவார்கள். ஒவ்வொரு வருடமும் இரண்டு நாட்கள் மட்டும் முனியாண்டி அப்படி இருப்பார். அவ்வழியே போகும் யாவரும் கோவிலைத் திரும்பிப் பார்க்கக்கூடாது. அப்படி இரண்டு நாட்கள் முனியாண்டி அரிவாள் இல்லாமல் இருக்கும் நாட்களில்தான் கம்பத்தில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதும் கெட்ட கனவுகள் தோன்றுவதும் ஏற்படும். மக்கள் பீதியில் இருப்பார்கள். இப்பொழுது முனியாண்டியின் கையிருந்த அரிவாள் திடீரென காணமல் போனதும் சூரு செத்துப் போனதும் கம்பமே அதிர்ந்து போனது. எல்லோரையும் பயம் பிடித்துக் கொண்டது.

சூரு காந்திராவின் பையன். 37 வயதில் கஞ்சா கடத்தி பாசாரிலேயே பிடிப்பட்டான். பத்து வருடங்கள் கமுண்டிங் சிறையிலேயே காலத்தைத் தள்ளிவிட்டு மீண்டும் வந்தபோது பாசாரில் அவன் மீது ஒரு பயம் இருந்தது. அந்தப் பயம் அவன் சிறைக்குப் போய் வந்ததால் இல்லை. காந்திராவ் பாசாரில் செய்ததாகச் சொல்லப்படும் மூன்று மர்மக் கொலைகளை யாரும் மறக்கவில்லை. வழிவழியாக அப்பயம் எல்லோரின் மீதும் திணிக்கப்பட்டே வந்தது.

காந்திராவின் மனைவி ஓடிப்போனதும் அன்றைய இரவே அவருடைய மனைவியுடன் ஓடியவனின் அப்பாவையும் அவன் இரண்டு தம்பிகளையும் யாரோ கொலை செய்துவிட்டார்கள். வீட்டுக்குள் கழுத்தறுப்பட்டு கிடந்தவர்களின் உடல்களை இரத்த வெள்ளித்திலிருந்து மீட்டார்கள். அப்பொழுது காந்திராவ் தலைமறைவானவர்தான். இன்றுவரை அவர் வரவே இல்லை. ஆகையால்தான், அவருடைய மகன் மீது எல்லோருக்குள்ளும் ஒரு தவிர்க்க முடியாத பயம் ஒட்டிக் கொண்டிருந்தது. அவன் எங்கு இருந்தாலும் சுருட்டு வாசம் வீசிக் கொண்டே இருக்கும். சுருட்டு அவனுக்கு ஆறாவது விரல் மாதிரி உடலிலேயே இருக்கும். காதில் செருகியிருப்பான்; விரலுக்கு இடையில் வைத்திருப்பான்; புகைக்காமல் அவன் வாயில் வெறுமனே நஞ்சு கிடக்கும். அவனையும் சுருட்டையும் பிரிக்க முடியாது.

சிறையிலிருந்து சூரு வந்து ஆறு மாதமாகியும் அவனை யாரும் ஒரு கேள்வி கேட்கவில்லை. கிடைக்கும் வேலைகளைச் செய்து கொண்டு கம்பத்தில் திரிந்து கொண்டிருந்தான்.

சரசு வீட்டில் அவளுக்கும் கணவனுக்கும் சண்டை வந்த நாளில்தான் சூருவின் சுயரூபம் வெளிப்பட்டது. அன்றைய இரவில் சரசு வீட்டில் நடந்ததை வைத்து சூரு யார் எனத் தெரிந்து கொண்டார்கள்.

“ஏய் சனியனே! எவன் கூட கூத்தடிக்கறியோ அடிச்சிக்கோ. ஆனா, வீட்டுலேந்து போய்ரு. உன்ன வச்சிக்க என்னால முடியாதுடி”

சரசுடைய கணவன் இராமசாமி அவளின் முடியைக் கொத்தாகப் பிடித்து வெளியே கொண்டு வந்து போட்டான்.

“சொல்லு வேற என்ன இருக்கு? ஒரு மனசாட்சி இருக்கா உனக்கு? தினத்திக்கும் சாப்பாட்டுக்கு வழி செஞ்சேன்ல. குடிச்சிட்டு வந்து வாய்க்கு வந்த மாதிரி பேசுறீயே உங்கம்மா உன்ன எந்த நேரத்துலே பெத்தா?”

இராமசாமிக்கு அம்மாவைப் பற்றி பேசியதும் கோபம் தலைக்கேறியது. மேசையில் இருந்த மைலோ டின்னை எடுத்து வீசினான். அவ்வளவுத்தான். சரசின் புருவத்தைப் பிளந்தது. சாலையிலேயே கதறிக் கொண்டு விழுந்தாள். இராமசாமியின் வீட்டுப் பக்கத்தில் தனியாக இருந்த சூரு வெளியில் வந்தான். கட்டம் போட்ட கைலி அப்பொழுது ஆண்கள் மத்தியில் பிரபலம். சூரு வெளுத்தக் கைலியை மடுத்துவிட்டு சுருட்டைப் புகைத்துக் கொண்டிருந்தான். சரசின் அழுகையும் கதறலும் சாபமும் அவனுக்குள் ஏதோ செய்தது.

“டேய் நாயே! கட்டையிலெ போறவனே. குட்டிசோரா போய்ருவடா…என் மண்டய உடைச்சிட்டெ இல்ல…மவனே உனக்கு இருக்குடா”

இராமசாமி வெளியில் வரவே இல்லை. அவளை விலாசிவிட்டு உள்ளே போனவனின் சத்தமே இல்லை. சரசு முடியை விரித்துவிட்டு கால்களை உதறிக் கொண்டு சாபமிட்டாள். ஆக்ரோஷமான அவளுடைய குரல் உடைந்தது. சூரு கால்களை அகட்டி குத்திட்டான். சுருட்டை இன்னும் வேகமாகப் புகைத்தான். அவன் கண்கள் செத்திருந்தன. நாக்கு வரண்டிருந்தது.

“ஆம்பள நாய்ங்களா. உங்களுக்கு என்ன திமிருடா. பொம்பளையே போட்டு அடிக்கிறியெ ஆம்பளயாடா நீ?”

அன்று சரசைத் தரதரவென அவள் வீட்டுக்குள் இழுத்துக் கொண்டு போன சூரு அவள் கணவனின் காதை அறுத்துவிட்டான். சரசு சூரைக் காட்டிக்கொடுக்கவில்லை. பின்னர் அந்த வீட்டில் என்ன நடந்தது என யாருக்கும் முழுமையாகத் தெரியவில்லை. பெரியசாமியை அடித்து மலத்தொட்டியில் வைத்து முக்கினான் சூரு என சரசின் மூலம் தகவல் வெளியானதும் வதந்தியாகவே இருந்தது.

பிறகொருநாள் சரசின் கணவன் வீட்டை விட்டே ஓடிவிட்டான். தனியாக இருந்த சரசை சூரு எடுத்துக் கொண்டான் என்றும் பேசிக் கொண்டார்கள். அத்தனை நாட்கள் அமைதியாக இருந்த சூரு செய்த இந்தக் காரியத்தைக் கண்டு எல்லோரும் மேலும் பயந்தார்கள். அவனுக்குத் தனி பலம் இருப்பதாகவும் அவன் ஒரு வெறிநாய் என்றும் பேசிக்கொண்டார்கள். காந்திராவின் கொலைவெறி அவனிடம் இருப்பதாகவும் சொல்லிக் கொண்டார்கள்.

“முனியாண்டி சாமித்தாண்டா இந்தக் கம்பத்தைக் காப்பாத்தெ இந்த சூரு பையன கொன்னுட்டாரு…இல்லாட்டினா இந்த சரசை வச்சுருந்தான்லே…அவளே முனியாண்டியோட அரிவாள்ல வெட்டிக் கொன்னுட்டு ஓடிட்டா போல ஓடுகாலி…”

“சும்மா சொல்லாதீங்க சாமி. தினமும் அவளைப் போட்டு அடிச்சி சாப்பாடு கொடுக்காமல் கொடும பண்ணான் இந்த சூரு…சாமி கோவம் வரும் அவளுக்கு. அதான் முனியாண்டி அவ உடம்புல இறங்கி முடிச்சிட்டாரு”

சுப்பிரமணியும் பட்டையப்பனும் வீதியிலே கத்தி சண்டையிட்டுக் கொண்டனர். தொய்வடைந்த கிடந்த கம்பம் மெல்ல விழித்தது. பக்கத்துக் கம்பத்தில் போய் பாசார் முனியாண்டிக்கு அரிவாள் செய்து வர பெரியசாமி கிளம்பினார். அதற்கு முன் மஞ்சள் துணியால் கட்டப்பட்டிருக்கும் முனியாண்டி சாமியிடம் அனுமதி கேட்டு வரக் கோவிலுக்குச் சென்றார். கோவிலில் இருள் கவிழ்ந்திருந்த்து. பாசார் முனியாண்டியின் முகம் உயிர்ப்பில்லாமல் சோகம் கவிழ்ந்த முகத்தைப் பெரியசாமி பார்த்ததும் பதறினார்.

கோபத்தைக் கழற்றி வைத்துவிட்டு வந்த குழந்தையாய் முனியாண்டி நின்றிருந்தார். அங்கிருந்து பெரியசாமி வெளியேறும்போது சூரு வந்தால் வீசும் சுருட்டு வாசம் சட்டென சூழ்ந்து கொண்டது.

கே.பாலமுருகன்
(Malaigal.com)

Share Button

About The Author

One Response so far.

  1. காந்தி முருகன் says:

    அறியாமையின் பிடியிலிருக்கும் சமூகத்தின் நிலையைப் பல்வேறு கோணங்களில் சித்தரித்திருக்கும் சிறுகதை. மூடநம்பிக்கை, அவநம்பிக்கை, பயம்,கோபம் போன்ற அறியாமையின் விளிம்பில் பட்டு திரிந்து கிடக்கும் பீசார் கம்பத்து மக்கள் முணியாண்டி காவல் தெய்வத்தின் பால் மூடநம்பிக்கைகளைக் கொண்டு தங்கள் தினசரி வாழ்வில் நடக்கும் அசௌஎரியமான விடயங்களில் வாழ்ந்து வருகின்றனர்.இது இன்றவும் நம் சமூகத்தில் சிக்கலான ஒன்றுதான். அதைக் கலைய முற்பட்டிருக்கும் ஆசிரியருக்குப் பாராட்டுகள்.