• சர்ச்சை: ஆசிரியர்களும் இன்னொரு தோட்டக்காரர்களே

  susunan bilik darjah

  “சட்டையெல்லாம் சாயத்துடன், வியர்வை வடிந்து கொட்டும் முகத்துடன், கருவடைந்த கண்களுடன் பள்ளிக்கூடத்தில் நீங்கள் ஒருவரை சந்தித்தால் அவர் தோட்டக்காரர் என நினைத்துவிடாதீர்கள். அவர்கள் ஆசிரியராகக்கூட இருக்கலாம்.”

  வருடம் தொடங்குவதற்கு முன்பே தன் விடுமுறையிலோ அல்லது விடுமுறையின் இறுதியிலோ தனக்கு வழங்கப்பட்டிருக்கும் வகுப்பறைக்குச் சாயம் பூசி, ஜோடித்து, அதற்கான அனைத்து வேலைகளையும் செய்து புதுப்பித்தல் பணியை மேற்கொள்வது ஆசிரியர்கள்தான். மேலும், பல பள்ளிகளில் அக்குறிப்பிட்ட ஆசிரியர்களே தனது சொந்த பணத்தைச் செலவிட்டு ஒரு வகுப்பறையை உருவாக்குகிறார்கள்.

  நாம் வேலை செய்யும் அலுவலகத்தை நம் சொந்த செலவில்தான் புதுப்பிக்கிறோமா? ஆனால், தனக்கு வழங்கப்பட்டிருக்கும் வகுப்பறையைத் தன் சொந்த செலவில் சொந்த உழைப்பில் உருவாக்குவதுதான் ஆசிரியரின் பணியாக இருக்கின்றது. 7 லீட்டர் சாயம் ரிங்கிட் மலேசியா 35.00 வெள்ளியாகிறது என்றால் ஒரு வகுப்பறைக்கு 7 லீட்டருக்கு மேலேயே தேவைப்படும் சூழல் உண்டு. ஆசிரியர்கள் காலாட்டிக் கொண்டிருக்கிறார்கள் எனச் சொல்லும் அத்தனை பேரும் வருட இறுதியில் அவர்கள் வகுப்பறையைச் செதுக்கும் உழைப்பை ஒருமுறை வந்து கவனியுங்கள்.

  12468128_569755399838697_1829164002_n

  அதுவும் இந்த முறை 21 ஆம் நூற்றாண்டுக்கேற்ப வகுப்பறையை வித்தியாசமாக உருவாக்கப் பல ஆசிரியர்கள் விடுமுறைக்கே செல்லாமல் ஒவ்வொரு கணமும் வகுப்பறையை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். இதைத் தியாகம் எனச் சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால், இதை ஒரு பணிச்சுமையாக நினைக்காமல் முகம் சுழிக்காமல் நம் பிள்ளைகள் நல்ல சூழலில் படிக்க வேண்டும் எனும் சிந்தனையுடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை எனப் புரிந்து கொள்ள வேண்டும். பள்ளியின் முதல் நாளில் உங்கள் பிள்ளைகளை வகுப்பறையில் விடும்போது ஒரு முறை அங்கு வீசும் சாயத்தின் வாசத்தையும் அதனூடாக வீசும் ஆசிரியர்களின் வியர்வையின் வாசத்தையும் முகர்ந்து பாருங்கள்.

  பாராட்டப்பட வேண்டிய விசயங்கள்:

  ஒரு சில பள்ளி நிர்வாகம் ஆசிரியருக்குத் துணையாகச் சில தோட்டக்காரர்களை நியமித்து வகுப்பறை உருவாக்கும் பணியை மேற்கொள்கிறார்கள். ஆசிரியர்கள் திட்டமிட அதற்கான வேலைகளைச் செய்யப் பணியாளர்களைப் பள்ளி நிர்வாகம் தருகிறது. உண்மையில் அதுபோன்ற நிர்வாகத்தைப் பாராட்ட வேண்டும்.

  அடுத்து, வகுப்பறையை உருவாக்கும் செலவில் சில பள்ளி நிர்வாகம் கொஞ்சம் அல்லது பாதியை ஏற்றுக்கொள்கிறது. அனைத்து ஆசிரியர்களும் பணக்காரர்கள் அல்ல; பலரும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே என்கிற எண்ணம் அப்பள்ளி நிர்வாகத்திற்கு உண்டு. தன்னிடம் வேலை செய்யும் பணியாளர்களைப் புரிந்து கொள்வதின் மூலம் ஒரு நிர்வாகம் சிறந்த தலைமைத்துவப்பண்பைப் பெறுகிறது என்றே நினைக்கிறேன். இதையும் நிச்சயம் நாம் பாராட்ட வேண்டும்.

  இன்னும் சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே இறங்கி ஆசிரியர்களுக்கு உதவுகிறார்கள். சோஷலிசம். ஏற்ற தாழ்வற்ற தலைமைத்துவம். பாராட்டப்பட வேண்டிய உதாரணமாகும். ஆண்டு முழுவதும் ஓர் ஆசிரியரின் உண்மையான உழைப்பைப் பெற ஒரு நிர்வாகம் தட்டிக் கொடுத்து வேலை பெறும் உத்தியையும் அங்கீகரிக்கும் மனத்தையும் பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் எவ்வளவு போராடினாலும் ஆசியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் ஓர் இடைவெளி இருந்து கொண்டிருக்கவே செய்யும்.

  • கே.பாலமுருகன்
  Share Button

4 Responsesso far.

 1. Santhakumar says:

  அருமை!உண்மை “

 2. புவனேஸ்வரி says:

  உண்மையை அருமையாகப் பறைசாற்றியுள்ளீர்கள் ஐயா.தமிழ் பள்ளிகளும் உருமாற்றம் பெற்றுள்ளன என்பதை இவ்வகை வகுப்பறைகள் மெய்பிக்கும்.

 3. கவிதா கணேசன் says:

  அருமையான விமர்சனம். பாராட்டுகள்

 4. MUNIANDY RAJ says:

  தங்கள் கருத்து முற்றிலும் உண்மை. அதுவும் ஆசிரியர்களில் பெரும்பாலோர் தங்கள் சொந்த செலவிலேயே குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து வந்து இந்த வகுப்பறை புதுப்பித்தலில் ஈடுபடுவது கண்கூடு. மிகச் சரியாக தங்கள் கருத்தைப் பதிந்துள்ளீர்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *