• கூமோன் – நேரமும் அறிவும் ஒரு விவாதம்

  1958ஆம் ஆண்டில் ஜப்பான் ஓசாக்காவில் கூமோன் வகுப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. ‘தோரு கூமோன்’ தன் மூத்த மகனின் கணிதப் பிரச்சனையைத் தீர்க்கக் கண்டுப்பிடிக்கப்பட்ட இந்த கூமோன் முறை பின்னாளில் சமூகக் கல்வியியலில் தனித்த இடம் பிடித்து உலகம் முழுவதும் 48 நாடுகளில் பரவியது. இன்று கோடிக் கணக்கில் கூமோன் நிலையங்களில் மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

  மலேசியாவில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் மேல்தட்டு மனிதர்களும் கூமோன் நிலையங்களின் வாசலில் நின்று கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது கேட்டாலும் கணித அறிவிற்குக் கூமோனே சிறந்தது என எல்லோரும் சாதாரணமாக நம்புவதை உணர முடிகிறது. நாம் வாழும் காலத்தின் முடிவு செய்யப்பட்டஅறிவிற்கு அடிப்பணிவதைப் போல மக்கள் கூமோனை எந்தக் கேள்விகளுமின்றி முழுவதுமாக நம்புகிறார்கள். அறிவு சார்ந்த தர்க்கங்கள் சமூகத்தில் எழுவது மிகக் குறைவே. எல்லாம்விதமான பிரச்சனைகளையும் உணர்வு தளத்தில் வைத்துப் பேசும் சூழலில் அறிவுக்கான போர் நடைபெறுவதே இல்லை. இதுபோன்ற சமூகம் மிக இயல்பாக சுலபமாகப் புகழ்ச்சியின் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கும் ஒன்றிடம் சரணடைந்துவிடுவது இயல்பானதே. கூமோன் தெற்கிழக்காசியா நாடுகளில் புகுந்து தன் புகழிடத்தைத் தேடிக் கொண்டதும் இப்படித்தான் எனக் கருதுகிறேன்.

  the_ultimate_kumon_review

  மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் கூமோன் பயிற்றுனராகப் பணியாற்றி பின்னர் அதிலிருந்து முற்றிலுமாக விலகிய காரலாய்ன் முக்கிசா அவர்கள் எழுதிய ‘The ultimate Kumon Review’ ஒட்டுமொத்தமாகக் கூமோன் கல்வி முறையைத் தர்க்கம் செய்து விமர்சிக்கும் நூலாகும். கூமோனின் நல்லது கெட்டது என்ற அடிப்படையில் அதனைத் தேர்வு செய்யலாமா வேண்டாமா எனத் தீர்மாணிக்கப் பெற்றோர்களுக்கு ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் வழங்குகிறார். அப்புத்தகம் பல நாடுகளில் கவனம் பெற்றவையாகும். காரலாய்ன் அவர்கள் தன் மகனைக் கூமோனில் மூன்று வருடம் படிக்க வைத்த அனுபவத்திலிருந்தும் மூன்று வருடம் கூமோன் பயிற்றுனராக இருந்த அனுபவத்திலும் இந்த நூலை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

  கூமோன் நம் குழுந்தைகளை என்ன செய்கிறது?

  கூமோன் பயிற்சியை மேற்கொள்ளும் குழந்தைகளுக்குக் குறிப்பிட்ட நேரம் வழங்கப்படுகிறது. அந்த நேரத்திற்குள்ளேயே அவர்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அக்கணக்குகளைச் செய்து முடித்தாக வேண்டும். நம் தேர்வு முறை இப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்க முயல்வதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆறாம் ஆண்டு தேர்வில் 40 கணக்குகளைக் கொடுக்கப்பட்ட சொற்பமான நேரத்தில் செய்து முடித்தாக வேண்டும் என்பது கட்டளை ஆகும். ஆனால், பெரும்பான்மையான மாணவர்களால் அந்த ஒரு மணி நேரத்திற்குள் 40 கணக்குகளை முடிக்கச் சிரமங்களை எதிர்நோக்குவது எல்லாம் பள்ளிகளிலும் இருக்கும் ஒரு பொதுவான சிக்கலாகும். ஆக, இயல்பாகவே தேர்வு என்பது நேரம் குறித்த, நேரத்தைக் கையாளும் திறன் குறித்த தேவையை உருவாக்குகிறது.

  கெட்டிக்கார மாணவர்களாக இருப்பினும் குறித்த நேரத்திற்குள் தேர்வை எழுதி முடிக்கவில்லை என்றால் புள்ளிகள் சரிய வாய்ப்புள்ளது. ஒன்றாம் ஆண்டு முதலே நேரம் குறித்த ஓர் அச்சம் இங்கிருந்து ஆரம்பமாகிறது. எனது பள்ளிப் பருவத்தில் தேர்வு மண்டபத்தின் சுவரில் தொங்கும் கடிகாரமே எனது முதல் எதிரி. பரீட்சை எழுதி முடிக்கும்வரை கடிகாரத்தின் மீது ஒரு கூடுதல் கவனம் இருக்கும். கைகளின் நடுக்கம் குறையாமலேயே தேர்வை எழுதி முடித்திருப்பேன். இளங்கலைப்பட்டப்படிப்பு வரை அது தொடரவே செய்கின்றன. எழுதி முடிக்கும்வரை நேரத்தோடு ஒரு பந்தயமே நடந்து விடுகிறது. கல்வி நேரத்தோடு பிணைக்கப்பட்டது எப்பொழுது நடந்திருக்கும்? கால சுழற்சியோடு ஒரு மிகப் பெரிய மனப்போராட்டமே நடத்திவிட்டுத்தான் ஒவ்வொரு மாணவர்களும் தேர்வு மண்டபத்தைவிட்டு வெளியேறுகிறார்கள். அறிவிலிருந்து தகவலை உருவி தாளில் கொட்டித் தீர்ப்பதற்கு நேரம் வழங்கப்படுகிறது. அந்நேரத்தின் ஓட்டத்தை/ நகர்ச்சியைக் கண்டு மனம் இயல்பாகவே பதற்றமும் நிலைதடுமாற்றமும் கொள்கிறது.

  எட்டு வயது நிரம்பிய எனது உறவினர் மகள் அன்று கூமோன் பயிற்சிகளைச் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். இடையில் அவள் என்னிடம் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. நான் கேட்டக் கேள்விக்கும் அவளிடம் பதில் இல்லை. சைகையில் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு எதையோ பதற்றமாகச் செய்து கொண்டிருந்தாள். அவளுடைய வலது கைக்குப் பக்கத்தில் கைக்கடிகாரம் இருந்தது. ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை பதற்றமான கண்களுடன் அக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டாள். இலேசாக வியர்த்த நெற்றி, கைகளில் அவசரம் ஏற்படுத்திய நடுக்கம், அன்று அவள் எனக்கு எட்டு வயது சிறுமியாகத் தெரியவில்லை. நேரம் குறித்தான கட்டுப்பாடுகள் குழந்தைகளின் மனத்திற்குள் ஒரு கலவரத்தை ஏற்படுத்துவதை யாராவது மறுக்க முடியுமா?

  ஒரு மணி நேரப் பாடத்திற்குள் அன்றைய பாட நோக்கத்தை அடைய ஓர் ஆசிரியர் உருவாக்கும் நேரப் பந்தயமும் இங்குக் கவனத்தில் கொண்டாக வேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரு நேர கடப்பாடு இருப்பதைத் தவிர்க்க முடியாதுதான். குறிப்பாக ஓர் ஆண்டில் ஒரு மாணவன் அடைய வேண்டிய திறன்கள் முன்பே வகுக்கப்படுவதை மேற்கோளாகக் காட்டலாம். ஆனால், அது ஆசிரியரால் தீர்மானிக்கப்படுபவை. பந்தயமாக இல்லாவிட்டாலும் திட்டத்திற்கேற்ப நகர்த்த முடிந்தவை. பரீட்சை என்பது அப்படியல்ல.

  அறிவை நோக்கி குழந்தைகளைத் துரத்தும் சமூகம்

  மேற்கண்ட சூழலில் கூமோன் என்பதை ஒரு நிறைவான வழிமுறை என என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அரசு தேர்வின் மூலம் உருவாக்கும் நேரம் குறித்தான ஒரு பதற்றத்தையே கூமோனும் வழங்குவதாகத் தோன்றியது. அறிவு ரீதியில் சிறுவர்களை ஒரு படி மேலே உயர்த்தப் பயிற்சியளிக்கும் கூமோன், கணிதப் பாடத்தில் வழிமுறைகளைளற்ற விரைவான பதிலளிக்கும் முறையைத் தூண்டும் உத்தியையே பிரதானமானக் கொண்டுள்ளது. உடனடியாகக் கூடுதல் அறிவைப் பெற்றுவிட குழந்தைகளைத் துரத்தும் சூழலை இலாவகமாகக் கூமோன் அமைத்துக் கொடுக்கிறது. பரிச்சார்த்த முறையில் இதனை முயன்றும் பார்க்கலாம்.

  விரைவு உணைவைப் போல, விரைவு இரயிலைப் போல நகர் வாழ்க்கை எல்லாவற்றுக்கும் உடனடி தீர்வு, உடனடி வளர்ச்சி, உடனடி மாற்றம் என்பதை நோக்கியே இன்றைய வாழ்க்கைச் சூழல் விரைகிறது. இன்று விதைத்து நாளை அறுவடை செய்தாக வேண்டிய எதிர்ப்பார்ப்பையே நகர் வாழ்க்கை விட்டுச் செல்கிறது. பிள்ளைகளின் கல்வியிலும் பெற்றோர்கள் அவசரமான சூழலை நோக்கியே ஓடுகிறார்கள். தன் பிள்ளை இரண்டாம் ஆண்டிலேயே ஆறாம் ஆண்டு மாணவனுக்குரிய பாடத்திட்ட அறிவைப் பெற்றிருக்க வேண்டும் எனப் பேராசை கொள்கிறார்கள். அறிவை வற்புறுத்தி திணிப்பது ஆபத்தே.

  ஒரு ஐந்தாம் ஆண்டு மாணவன் பல்கலைக்கழக மாணவர்களுக்குரிய கணக்குகளுக்கான தீர்வைச் செய்ய முடிந்தால் அவனை அதிபுத்திசாலி என சமூகம் ஆச்சர்யமாகப் பார்க்கிறது. ஆனால், தன் வயதிற்குரிய ஐந்தாம் ஆண்டு கணக்குகளைத் திறம்பட செய்ய முடிந்த11 வயது மாணவனை அவனுக்குக் கீழாக வைத்துப் பார்க்கப் பழக்குகிறது. அறிவை எதன் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்க்கிறோம்? கல்வி வரையறுத்துக் கொடுத்திருக்கும் பாடத்திட்டத்தைக் கொண்டுத்தான் அறிவையும் அறிவாளியையும் தீர்மானிக்கப் போகிறோமா? பாடத்திட்டத்தைத் தாண்டிய உலகியல் அனுபவ அறிவு குறித்தான சிந்தனைக்கு இங்கு இடமில்லாமல் போய்விட்டது.

  பாடத்திட்டம் என்பது பொதுவானது. வயதையும் அந்த வயதிற்குரிய அறிவையும் உண்மையில் அத்தனை துல்லியமாக முடிவு செய்துவிட முடியாது. வயதிற்கு மிஞ்சிய அறிவுடன் இருப்பவனை உன் வயதிற்கு மீறி பேசாதே எனச் சொல்வது ஒரு பக்கமும், வயதைத் தாண்டிய கல்வியியல் தொடர்பான சிக்கலைக் களைபவனை மிகச் சிறந்த அறிவாளி எனப் பாராட்டுவது ஒரு பக்கமும் சமன் இல்லாமல் சமூகத்தில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆறாம் ஆண்டு மாணவன் பல்கலைக்கழகப் படிப்பிலுள்ள சிக்கலைத் தீர்க்க முடிந்தால் எந்தப் பக்கலைக்கழகமும் அவனுக்கு இளங்கலைப்பட்டப்படிப்பிற்கான சான்றிதழைக் கொடுத்துவிடாது என்பதையும் கவனிக்கவும்.

  வாழ்க்கை குறித்து சட்டென முதிர்ச்சியான ஒரு கருத்தை முன்வைக்கும் மாணவனை வயதிற்கு மீறிய பேச்சு என மட்டுப்படுத்துவதை நானே பல சூழ்நிலைகளில் பார்த்திருக்கிறேன். அதுவே தன் வயதிற்கு மீறிய பெரும் கணக்கை ஒரு மாணவன் செய்வதை வைத்து அவன் அறிவைப் பாராட்டி மதிப்பீடுவதையும் பார்த்திருக்கிறேன். அறிவு எப்படி முடிவு செய்யப்படுகிறது? வரையறுத்து வழங்கப்பட்டிருக்கும் பாடத்திட்டத்தை ஒரு மாணவன் பின்பற்றுவதும் அதனை மிஞ்சுவதுமே அவன் அறிவைத் தீர்மானிக்கப் பாவிக்கப்படும் கருவியாகத் திகழ்கின்றன. மற்றப்படி கேட்டு வாசித்து உணரும் வாழ்க்கை/உலகியல் தொடர்பான எந்தக் கூடுதலான அறிவையும் இச்சமூகம் அங்கீகரிக்கத் தயாராக இல்லை.

  கூமோன் மிக விரைவாகக் கணக்கைச் செய்யும் இயந்திரங்களை உருவாக்கித் தள்ளுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. இன்றைய பெருநகர் சூழலிருந்து வரும் பெற்றோர்களுக்கு இக்கருத்து முரணாகத் தோன்றலாம். ஆனால், கூமோன் கல்வி நிலையங்களில் பணியாற்றிய ஒரு அமெரிக்கர் கூமோன் குறித்துப் பெற்றோர்கள் உடனடி முடிவை எடுக்காமல் விவாதிக்கத் தூண்டும் வகையில் ஒரு நூல் எழுதுகிறார் என்றால் அதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறேன்.

  எல்லோரும் ஓடுகிறார்கள்; நாமும் அதை நோக்கி ஓடுவோம் என்ற முடிவுக்கு வருவதைத் தவிர்த்து விட்டு இந்த நவீன சமூகம் வழங்கும் இதுபோன்ற விடயங்களையும் அதன் நன்மை தீமைகளையும் சமமாக உற்று நோக்கும் ஆற்றலைப் பெற்றோர்கள் பெற்றிருக்க வேண்டும். ஒரு சமூகத்தின் பெரும்பான்யையினர் ஆதரிக்கிறார்கள் என்றால் அது கட்டாயம் நம் வீட்டுப் பிள்ளைகளுக்கும் உகந்ததாக இருக்கும் எனச் சிந்திக்காமல் அதன் பின்னே ஓடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இது பந்தயம் அல்ல.

  -கே.பாலமுருகன்

  Share Button

One Responseso far.

 1. வனராஜன் says:

  குமோன் கணித கல்வியை மிகவும் சிறப்பாக அலசியிருக்கிறீர்கள் திரு.பாலா,உங்களின் இந்த ஆய்வு இந்தியர்கள் உன்னிப்பாக கவனிக்க பட வேண்டிய ஒன்று, வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *