கட்டுரைகள்

காக்கா முட்டை- அ.ராமசாமி அவர்களின் விமர்சனப் போக்குடன் ஒரு கண்ணோட்டம்

//இரக்கமற்ற நிலையில் குறுகிய இடங்களில் மூத்திர நெடியும்,அடைத்து வைக்கப்பட்ட பொருள்களும், சதா வெயில் தீண்டும் வெற்றுக் கூரைகளும் என ஆற்றோரங்களிலும் குப்பங்களிலும் தன் குடிசை வீட்டில் கிடைக்கும் சிறிய இடத்தில் வாழ்ந்து கழிக்கும் அடிமட்ட வேலைகள் செய்து, நகரத்தின் விளிம்பில் கண்டுக்கொள்ளப்படாமல் தவிக்கும் விளிம்புநிலை மனிதர்கள் உலகமயமாக்கலின் முன் எப்படிப் பாதிப்பிற்குள்ளாகிறார்கள் என்பதை ‘காக்கா முட்டை’ சொல்லிச் செல்கிறது.// அம்ருதா இதழில் பிரசுரமான எனது திரைவிமர்சனத்தின் நீக்கப்பட்ட பகுதி.

திரைப்படங்களை அதன் அரசியல் போக்குடன் அது தொட்டுப் பேசும் சமூக சூழலுடன், படமாக்குவதிலுள்ள தமிழ்ச்சினிமாவின் உள்ளார்ந்த நிலைபாடுகளுடன் இணைத்தே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஒரு தமிழ் சினிமாவை அது பேசும் நிஜத்துடன் முழுவதுமாகப் பொறுத்திப் பார்க்க முனையும்போது ஒரு சராசரி பொதுபார்வையாளனுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. அது எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் ஒரு முழுமைக்கான நெருக்கம் அப்படத்தில் எதிர்பார்க்கும் அளவில் இருக்காது. ஆனால், அப்படத்தின் நேர்மை என்ன என்பதைத் தீர்மானிக்கும்போது, இயக்குனர், தயாரிப்பாளர், பொது அரசியல் என்பதனை ஒட்டி விமர்சிக்க இயல்கிறது.

ஒரு சினிமா உருவாவதன் பின்னணியிலுள்ள நிகழ்வு, புனைவு இவையிரண்டையும் ஆய்வாளர் அ.ராமசாமி ‘ஒளிநிழல் உலகம்’ எனும் தன் சினிமா கட்டுரை நூலில் இதனை விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். நான் அதனை விமர்சனப்பூர்வமான பார்வையுடன் அணுகி பார்க்கிறேன். எல்லாம் சினிமாக்கள்ளும் ஒரு நிகழ்வை மையப்படுத்தி புனைவொன்றை உருவாக்குகிறது. அப்புனைவு அப்படத்தின் நிகழ்வுடன் ஒட்டியும் அல்லது ஒட்டாமலும் போக வாய்ப்புண்டு. எடுத்துக்காட்டாக ‘சென்னை அன்புடன் வரவேற்கிறது’ எனும் படத்தின் நிகழ்வு என்னவென்றால் சென்னை நகர் சூழலில் கிராமங்களிலிருந்து வந்து வேலை செய்யும் மேன்ஷன்வாசிகளின் அலைக்கழிக்கப்படும் வாழ்க்கை. அந்த நிகழ்வை/கருத்தை மையமாகக் கொண்டு அத்தகைய சில நண்பர்களின் மேன்ஷன் வாழ்க்கை புனைவாகக் கட்டியெழுப்பப்படுகிறது. ஆனால், இப்படத்தின் வெற்றி என்னவென்றால் இயக்குனர் ஏற்படுத்திய புனைவு அவருடைய சினிமா கருத்துடன்/நிகழ்வுடன் எந்த நெருடலும் இல்லாமல் இயந்து நிற்கிறது. உண்மைக்கு மிக நெருக்கத்தில் புனைவைக் கொண்டு வைக்கிறார். மையத்தைவிட்டு விலகாமல் அவ்வாழ்க்கையுடன் நம் பொதுபுத்தியும் அலைக்கழிக்கப்படுகின்றது.

ஆனால், காக்கா முட்டை சினிமாவின் நிலைபாடு வேறுப்பட்டிருக்கிறது. அப்படம் இரண்டு நிலையில் பயணிக்கிறது. ஒன்று அப்படத்தின் கருத்து/நிகழ்வு. மிகவும் தெளிவாகவும் விமர்சனப் போக்குடன் உருவாக்கப்பட்ட பகுதியாகும். உலகமயமாக்கலுக்கு எதிரான ஒரு மனநிலையை உருவாக்க முயலும் இடம். இயக்குனர் சமூகத்தின் அடுக்குகளில் நுழைந்து தனிநகர் எனும் ஒரு பாவனையை உருவாக்க முயலும் பன்னாட்டு முதலாளிகளின் சுரண்டல்களைப் படத்தின் மூலம் முன்வைக்கிறார். உலகமயமாக்கல் சாமர்த்தியமாக அடித்தட்டு மக்களிடம் திணிக்கப்படுவதையும் கவனப்படுத்துகிறது. எது அழகு, எது அழகின்மை, எது ஆரோக்கியம் எது ஆரோக்கியமின்மை, எது உவப்பு, எது உவப்பின்மை எனத் தொடர்ந்து புதிய இரசனைகளை உருவாக்குகிறது. ஆனால், படத்தின் புனைவில் சிக்கல் இருப்பதாக உணர்கிறேன்.

மேற்சொன்ன கருத்தை முன்னிறுத்த அந்தப் படம் எடுத்துக் கொண்ட புனைவில் இயக்குனர் மேலும் நேர்மையைக் காட்டியிருக்கலாம். இதுதான் பலரின் ஆதங்கமும்கூட. மேலும் இப்பகுதி ஒன்றை முன்வைத்து முற்றிலுமாக ‘காக்கா முட்டையை’ தவிர்க்க நினைக்கும் போக்கும் அல்லது அதனை வழிந்து அரசியலாக்கும் போக்கும் நிலவுவதைக் கவனிக்க முடிகிறது. தமிழ் சினிமாவின் படமாக்கும் போக்கிலுள்ள நிலைபாடுகளையும், அதோடு இயந்துபோய் வெளிப்படும் இயக்குனர்களின் பொதுபுத்தியையும் கவனித்தால் புரியும். களத்தை 1000% நிஜமாக்கிக் காட்ட அது ஆவணப்படம் கிடையாது. ஆவணப்படத்தில் உண்மையைப் புனைவு செய்ய இயலாது. அது நாடகத்தனமாகிவிடும். ஆனால், சினிமாவில் வழக்கமாக உண்மைகளை புனைவு செய்வார்கள். யதார்த்தம் என்ற ஒன்று சினிமாவில் கிடையாது. எவ்வித யதார்த்தமாக இருப்பினும் சினிமாவில் மீண்டும் மீண்டும் ஒத்திகைப்பார்க்கப்பட்டு, சரிச்செய்யப்பட்டு காட்சியாக்கப்படுகிறது. அப்படிப் பார்க்கப்படும்போது யதார்த்தம் ஒரு மாயத்தன்மையாகிவிடுகிறது. அழகியல் எனும் விசயம் கருத்துடன் புனைவை முரண்பட செய்துவிடுகிறது. அழகியலை வழிந்து நுழைத்து சினிமாவாக்கிறார்கள். காக்கா முட்டையின் இயக்குனரின் கருத்து ஆழமானது; ஆனால், அவர் அதனைப் புனைவுடன் இணைக்கும்போது தான் நம்பும் சினிமா அழகியலை விடாமல் மிகைப்படுத்தி உள்ளே கொண்டு வருகிறார் என்பதில்தால் பிரச்சனையே. அது உண்மையின் நியாயங்களின் மீது சாயத்தைப் பூசிவிடும்; வாழ்வின் நிதர்சனங்களின் மீது ஒரு கவர்ச்சிமிக்க ப்ரேமை மாட்டிவிட்டுவிடும். இதனை இலாவகமாகக் கையாள முயல்வதே இயக்குனரின் திறமை. ஆனால், தமிழ் சினிமா இயக்குனர்களின் முக்கியமான பிரச்சனையும் இதுதான்.

பாலா இயக்கிய பரதேசி படத்தின் நிகழ்வு அல்லது கருத்து என்பது வரலாற்றுப்பூர்வமானது. இந்திய கிராமங்களிலிருந்து தேயிலைத் தோட்டத்தொழிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் இருண்ட கதைகள். ஆனால், அதனைப் புனைவுடன் இணைக்கும்போது புனைவில் பாலாவின் இயலாமை அரசியல் வெளிப்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. ஆகவே, திடீரென சுதாரிக்கும்முன் அவசரமாக உருவாகி நிற்கும் நகரின் பலநிலை மனிதர்களின் நுகர்வு வெறியாட்டத்தை விமர்சித்ததில் காக்கா முட்டை படம் முக்கியம் இடம் பெறுகிறது.

அ.ராமசாமி ஐயாவின் நிகழ்வுக்கும் புனைவுக்குமான கூற்றை நன்கு ஆராய்ந்தால் சினிமாவின் மீதான விமர்சனப்போக்கை விரிவாக்கிப் பார்க்க முடியும் என நினைக்கிறேன். நான் அறிந்தவரையில் யமுனா இராஜேந்திரன அவர்களையும், அ.ராமசாமி அவர்களையும் ஒரு தேர்ந்த சினிமா விமர்சகர்களாகக் கருதுகிறேன். அம்ருதாவில் வெளிவந்த அ.ராமசாமியின் ‘காக்கா முட்டை’ திரைவிமர்சனம் கவனித்தக்க ஒன்றாகும். கலை வாழ்க்கையை அப்பட்டமாகக் காட்ட வேண்டும் என்பதே ஒரு நினைப்புத்தான் அல்லது கருதுகோள். வாழ்க்கையைக் காட்டுவதில் ஒரு கலையின் வெற்றி எந்தளவில் நிலை கொள்கிறது என்பதனை அலசுவதே சரியான பார்வையாக இருக்கும் என கருதுகிறேன். கலை என்பதே வாழ்க்கையை மீண்டும் மீண்டும் ஒத்திகை செய்து, பயிற்சி செய்து, புனைவாக்கிக் காட்டும் ஓர் உத்தியென்றே படுகிறது. இதுதான் கலையின் நிலைபாடு என நினைக்கிறேன். இது, இப்புரிதல் முரண்படலாம்; இப்போதைக்கான ஓர் ஒத்திசைவை உண்டாக்கலாம். ஆனால் நிலையானது இல்லை என்று மட்டும் நம்புகிறேன்.

– கே.பாலமுருகன்

Share Button

One Response so far.

  1. kannan says:

    பாலா இயக்கிய பரதேசி படத்தின் நிகழ்வு அல்லது கருத்து என்பது வரலாற்றுப்பூர்வமானது. இந்திய கிராமங்களிலிருந்து தேயிலைத் தோட்டத்தொழிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் இருண்ட கதைகள். ஆனால், அதனைப் புனைவுடன் இணைக்கும்போது புனைவில் பாலாவின் இயலாமை அரசியல் வெளிப்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. ஆகவே, திடீரென சுதாரிக்கும்முன் அவசரமாக உருவாகி நிற்கும் நகரின் பலநிலை மனிதர்களின் நுகர்வு வெறியாட்டத்தை விமர்சித்ததில் காக்கா முட்டை படம் முக்கியம் இடம் பெறுகிறது.

Leave a Reply to kannan Cancel reply