கவிதைகள்

கவிதை: 1. இன்னொரு நாள்

இன்னொரு நாள்களுக்குள்
கண்ணீருடன் ஒளிந்திருக்கிறது
வாழ்க்கைக்கான ஒத்திவைப்பு.

இன்னொருநாள்
வரலாம் என்கிற சமாதானம்.
இன்னொருநாள் சரியாகிவிடும்
என்கிற எதிர்ப்பார்ப்பு
இன்னொருநாள் சந்திக்கலாம்
என்கிற முடிவு.
தெரியாத இன்னொருநாள்
எத்தனை தெரிந்த நாள்களுக்கு
வடிக்காலைத் திறக்கிறது.

இன்னொருநாள் என்பது
மனங்களின் ஓரம்
நிறுத்தப்படும்
பொய்க்கால் குதிரை.

இன்னொருநாள் என்பது
வானத்தை நோக்கி
கலையும்
சிறுவன் தவறவிட்ட
ஓர் ஒற்றைப் பலூன்.

2. பூட்டிய வீடு

பூட்டிய வீட்டின் முன்
நிற்கும்போது
சட்டென யாரோ
அழைக்கிறார்கள்.
அது உடலற்ற குரலாக
எப்பொழுதோ யாரோ
உரைத்த கோபமாகவோ
சிணுங்களாகவோ
பெயர்களாகவோ அழுகையாகவோ
இருக்கலாம்.

விட்டுப்போனவர்களின்
கடைசி குரல்
வருடக்கணக்கில்
சுற்றியலைந்து
ஓய்ந்து
ஆவியிழந்து
அர்த்தமற்று
நசுங்கி நசிந்து
திடீரென ஒலிக்கின்றன.
வயதாகி உயிர் சோர்ந்த
மூதாட்டியின் வயோதிக
இரும்பலென.

பூட்டிய வீடுகளில்
எப்பொழுதும் ஒரு
கருப்புப் பூனை
உலாவிக் கொண்டிருக்கிறது.

பூட்டிய வீட்டில்
காய்ந்த இலைகள்
எப்படியும் காற்றடித்து
விழுந்துவிடுகின்றன.

பூட்டிய வீட்டில்
காலம் உறைந்து
திக்பிரமை பிடித்து
சிறைப்பட்டுக் கிடக்கிறது.

பூட்டிய வீடுகளுக்கென
சில சோகங்கள் உள்ளன.
சிறுக நரைப்படிந்த கதவுகளில்
ஒளி துளையிடத் துவங்குகின்றது.

பூட்டிய வீட்டை
முன்பொருமுறை
கடைசியாகப் பூட்டும்போது
அதற்கு முன் அங்கொரு
கரப்பான்பூச்சி கொல்லப்பட்டிருக்கலாம்
வெகுநாள் வாழ்ந்து யாராவது செத்திருக்கலாம்
கடன்தொல்லையால் காற்றாடியில்
தூக்கு கயிறு கட்டப்பட்டிருக்கலாம்
வீட்டிலிருந்து யாராவது சொல்லிக்கொள்ளாமல்
ஓடிப்போயிருக்கலாம்
குழந்தையொன்று பிறந்து சிரித்திருக்கலாம்.

பூட்டிய வீடு
பூட்டியபடியே இருக்கின்றது.

கே.பாலமுருகன்

Share Button

Leave a Reply